facebook

வியாழன், ஜூலை 29, 2010

மலைச்சாமி

                
                                                 
இங்கு சவுதியில் Al gosaibi, Al zamil, Kanoo, Olayan, Jufali, Ali Reza ஆகிய ஐந்தாறு பெரிய கம்பெனிகள் இருக்கின்றன. அவைகள் எல்லாம் ஒன்று சேர்ந்தால் செமி கவர்ன்மெண்ட் என்று சொல்வார்கள். அந்த கம்பெனி ஒன்றில் தான் நம்ம மலைச்சாமி வீட்டு டிரைவர் வேலை பார்த்து வருகிறார். இவரின் பூர்வீகம் மதுரை என்றாலும் வசிப்பிடம் தற்போதைய மதரசாப் பட்டணம். நாங்கள் அவரை செல்லமாக சாமி என்றே அழைப்போம்

பெரியக் கம்பெனி வீட்டு டிரைவர் ஆகையால் சம்பளம் மூவாயிரம் ரியாலுக்கு குறையாமல் வாங்கினார். பெரிய அளவில் படிப்பு இல்லா விட்டாலும் விவரமா பேசுவார். மற்றவர்களை அவர் சொல்லி நகையாடியது கிடையாது. ஆனால் மற்றவகளின் கிண்டல் பேச்சுகளில் வகையாக மாட்டிக் கொள்வார்.

இரவு எத்தனை மணியானாலும் எங்கள் ரூமை கடந்து போகும் போது, போனில் கூப்பிட்டு “ஒரு சுலைமானி போட்டு வைங்க”(பால் கலக்காத டீக்கு அந்த பேர்) என்று சொல்லி குடித்து விட்டு தான் போவார்.

இந்த மாதிரி மேல் மட்டத்து குடும்பங்களில் எல்லாம்
மட்டன் கறி கிலோக் கணக்கில் வாங்க மாட்டார்கள்.
முழு ஆடுகள் தான். இவர் தான் போய் அறுத்து, வெட்டி
வாங்கி வருவார். இப்படி தான் ஒரு நாள் எங்களுக் கெல்லாம் லீவு நாளாக இருந்ததால் எங்களையும் தன் கூட வரச் சொன்னார். சரி சும்மா தானே இருக்கோம் என்று எங்களின் இரண்டு மூன்று நண்பர்களையும் சேர்த்து அழைத்துக் கொண்டு போனோம்.

அவர் நேராக அரபுகாரனிடம் சென்று ஏதேதோ
சொல்லி விலைபேசி ஒரு ஆட்டை வாங்கி வெட்டச் சொல்லிவிட்டார். எட்டி நின்றதால் அவர் என்ன பேசினாரென்று எங்களுக்கு விளங்கல. இருந்தாலும் நம்மில் கூட வந்த கிண்டல் புடுச்ச நண்பர் ஒருவர் "சாமி ஆட்டுக் கறியில் முடி ஒட்டிக் கிட்டா
அது அவ்வளவா நல்லா இருக்காது. அதனால முடி ஒட்டாம வெட்டிக் கொடு என்று அரபுக்காரனிடம் போய் சொல்லு" என்று சொல்ல, அவரும் இவர்களின் கிண்டலை கவனிக்காமல் போய்க் கொண்டிருந்தார்.

நாங்கள் அவருக்குத் தெரியாமல் பின்னாடியே போனோம். அவர் அந்த அரபுக்காரனிடம், தன் முழங் கையை நீட்டி,  இன்னொரு கை விரலால் தொட்டுக் காட்டி, "மேரா போலோ.. (B)பால் டச் நை கரோ"   என்றார். (நான் சொல்கிறேன் முடி படாம வெட்டிக்  கொடு என்று அர்த்தமாம்)  நாங்க ளெல்லாம் விழுந்து புரண்டு சிரித்தோமே யொழிய, சாமி சளைக்கவில்லை. "ஏப்பா
நான் சொன்னது அவனுக்கு வெளங்குனுச்சு, அவன் சொன்னது எனக்கு வெளங்கிடுச்சு, போவியளா" என்பார் முத்தாய்ப்பாக..

இனி சாமியோடு ஒட்டிய அவரது சொந்த நிகழ்வுகளுக்குள்  பேசிக் கொண்டே போகலாம்
வாங்க!!

சாமிக்கு சவுதியிலேயே வாழ்க்கை ஓடிக் கொண்டி ருக்கிற காரணத்தினாலும், இங்கு பழகியவர்களின் ஈர்ப்பினாலும் முதல் குழந்தை பிறந்தவுடன் (இப்போதைக்கு முந்திய மன்னரின் பெயரான) ஃபஹத் என்ற பெயரை  வைத்து விட்டார். நாங்கள் ஏனென்று கேட்ட  போது "இந்த மண் தான் என்னை செழி
செழிப்பாக வாழ வைத்தது, இதற்கு நானென்ன கைம்மாறு செய்தேன்" என்பார் இந்த படிக்காத மேதை.

இரண்டாவது பிரசவத்தின் போது ரெட்டைக் குழந்தை
பிறந்ததால், பிரசவம் பார்த்த டாக்டரின் பெயரான மேரி
என்று பெண் குழந்தைக்கும், இன்னொரு ஆண் குழந்தைக்கு தனது குல சாமியின் பெயரையும் வைத்து விட்டார்.

இவைகளுக்கு குடும்பத்தில் எதிர்ப்புகள் இருந்த போதும்,
அவைகளை புறம் தள்ளி வைத்து விட்டே சமாளித்து வந்தார். பிள்ளைகள் வளர்ந்து ஸ்கூல் படிப்பை எட்டும் வரை...!

அதன் பின் தான் குழந்தைகளை ஸ்கூலில் சேர்த்த போது சின்ன சின்னதாய் பிரச்சினைகள் முளைக்கத் தொடங்கின. ஃபஹத், மேரி என்கிற பெயர்களை மாற்றச் சொல்கிறார்கள் என்று வந்து சொன்னார். ஏன்?

அது மாதிரி பெயர்கள் வைக்கக் கூடாதா??


                                               

சனி, ஜூலை 24, 2010

ஜாடை மாடை

                                                                             


                   
  ஜாடை மாடை

உலகிலுள்ள மதங்களில், சம்மதம் இருக்கிறதே, அதை வாங்குவது தான் ரொம்ப கடினம்ங்க. அதுவும் பெண்களிடமிருந்து! ஏன்னா இந்த பெண்கள் இருக்காங்களே ரொம்ப அழுத்தம்ங்க... இதை தஹிரியமா சொல்றதுக்கிடையில் நமக்கு ஒரு படபடப்புங்க. ஸ்ஸ்ஸ்ஸ் அப்பப்பா.. இருங்க சொல்றேன். உங்க கிட்ட சொல்லாம வேற யார் கிட்ட போய் சொல்லப் போறேன். சப்போட்டுக்கு இந்த ரங்க்ஸ் களெல்லாம் கூட ரெடியா இருக்கீங்களாய்யா. அப்புறம் டீல்ல உட்டுபுடாதீங்க சொல்லிப்புட்டேன் ஆமா!.

நமக்கு டூட்டி இருக்கே அது காலையில் 8.30க்கு ஆரம்பித்து 11.30 க்கு முடியும்ங்க. திரும்ப மாலையில் 4.00 மணிக்கு ஆரம்பித்து 8.00 மணிக்கு முடியும்ங்க. அவ்வளவு தானே அதுக்கு ஏன் இவ்வளவு பில்டப்பு ன்னு நீங்க கேட்கிறது கேக்குதுங்க.

காலையில் 8.30 மணி டூட்டிக்கி போறதுக்கு எத்தனை மணிக்கி முழிக்கணும்ங்க. 6 மணி, 7 மணி... ஊஹும், 7.30 மணிக்கி தாங்க முழிப்பேன். அது தப்பாங்க. தனி மனித சுதந்திரம்னு ஒன்னு இருக்கூங்கல்லோ. அதுல யாரையும் தலையிட அனுமதிக்க மாட்டேங்க.. இருங்க காதுல உழுந்துடப் போவுது. மெதுவாவே பேசிக்கிவோம். ஹி.. ஹி..

சரி நாங்க 7.30 மணிக்கி எந்திரிக்கிறோம்ல அப்ப அவுக எத்தனை மணிக்கி எந்திரிக்கனும் எங்களுக்கு முன்னாடி தானே. ஹஹ்ஹா. அது தான் இங்க கிடையாது. அவுக எங்களுக்கப்புரம் பத்து பதினைந்து நிமிஷம் கழித்து தான் எந்திரிப்பாங்கலாம். இது மட்டும் என்ன நியாயம்ங்க! அப்ப ஆரம்பிக்கிற பூபாளம் தான் நேபாளம் வரைக்கும் போவும்!

அதுக்கப்புறம் தான் நமக்கு வேண்டிய டீயிலிருந்து காபி வரைக்கும் ப்ரெடிலிருந்து சாண்ட்விட்ச் வரைக்கும் தயார் செஞ்சு கொடுப்பாங்க. இதுக்கு உள்ள அலட்டல் இருக்கே யப்பா.. (நாமெல்லாம் இதை செய்தால் எவ்வளவு நேரமாகுமென்று உங்களுக்கே தெரியும் பத்து அல்லது பதினைந்து நிமிஷமாகுமா?)

நமக்கு இந்த பாத்ரூம் போனா இருந்தமா, குளிச்சமான்னு வரத்தெரியாதுங்க.. அங்க போய் உட்காந்தா தான் தனி ராஜ்யமான சிந்தனை ஒன்று உருவாகும் பாருங்க. அங்கே யாரும் நம்மை அசச்சுக்க முடியாதுல. ஆனாலும் உள்ளே போனது வெளியே வர நம்மை அசைக்கிற அசைப்பில்...,, அத சொல்லிப்புடனும்ங்க..

அதுக்கப்புறம் தான் நம்ம ராஜாங்கமே ஆரம்பமாவுதுங்க. குளிச்சிப்புட்டு வந்து பார்த்தா புறப்படுறதுக்கு இன்னும் மிச்சம் பதினஞ்சே பதினஞ்சு நிமிஷம் பாக்கி இருக்கும். இதுல மனுஷன் என்னென்ன செய்ய முடியும். ஷேவிங் பண்ணனும், மேக்கப் கீக்கப் டிரஸ் எல்லாம் போட்டு ரெடியாகனுமா இல்ல பசியாரனுமா. எல்லாமே மனசுக்குள் TOM & JERRY மாதிரி ஓடும். அப்ப தாங்க உதவிக்கி வந்து நிப்பாங்க GIANT மாதிரி.. (இருக்கத்தா பின்னே)

நான் பாட்டுக்கு ஷேவிங் செய்துக்கிட்டிருக்கும் போது ஒண்ணுமே பேசாம இட்லியோ தோசையோ பிசைந்து தீத்தி விட ஆரம்பிப்பாங்க. (என்னா இருந்தாலும் கரிசனம்!) அப்ப தான் அவுகளுக்கு யாராவது நம்ம சொந்த பந்தம் பேசிய, நடந்த சில சம்பவங்கள், நாம வாங்கிக் கொடுக்காத பூ புஷ்பம், தங்க நகைகள், புடவை இத்யாதிகள் + எல்லாம் ஞாபகம் வந்து -வரா விட்டாலும் வந்து- (நாம ஷேவிங் பண்றப்ப முகம் அப்படி இப்படி திருப்புவமா- அப்ப) “ஒழுங்கா சாப்பாட்டை வாங்கிக்கிறது கிடையாது” என்று ஒரு இடி. நான் வாயில வாங்கிய சாப்பட்டை வாயில வச்சுக்கிட்டு அதை எப்படிங்க உங்களிடம் சொல்லிக் காட்ட முடியும். சொல்லுங்க..!!

இதுல அவுக வைக்கும் சாம்பார் (கமா) ரசத்துக்கும், முட்டைக் குழம்புக்கும், கோழி, ஆடு, மீன் நண்டு, இரால் குருமா வகையறாக்களுக்கும் (நல்லாதனிக்கும்) நல்லா இல்லைன்னாலும்,, நல்லா இருக்கு, சுவையா இருக்குன்னு தான் சொல்லோனும். சொல்லலைன்னா...? அட சொல்லித்தான் பாருங்களேன். அன்னைக்கி உங்களுக்கு என்னா நடக்கும்னு நான் சொல்ல மாட்டேன்னு சொல்ல மாட்டேன். என்னா வில்லத்தனம்..??

ஆமா நாங்கல்லாம் கேட்கிறோம் (இதுலயாவது ஒத்துமையா குரல் கொடுங்கய்யா) மாசா மாசம் சம்பளம் வாங்கி கொண்டு வந்து உங்க கையில் தானே கொடுக்கிறோம், அதுக்கு நீங்க பாராட்டுப் பத்திரம் ஏதும் கொடுக்கணும்னு எதிர் பார்க்கிறோமா? இல்லை என்னைக்காவது நீங்க வாங்க சொல்லிய பொருட்களை எவ்வளவு சிரமப் பட்டு வாங்கி வந்தாலும், நல்லபடியா நாலு வார்த்தை, வேணாங்க..... ஒரு சிரிப்பு.. இல்லையே.. அது ஏங்க ஒரு மாதிரியா முகத்தை வச்சுக்கிட்டு, ஹூக்கும் என்ற சத்ததோட தோளில்வேறு ஒரு இடி இடிச்சுக்கிட்டு போறீங்க.. அதாவது பரவாயில்லை ஏங்க அந்த சவுண்ட் வேறு கொடுக்கனுமா.. ஒரு வேளை அது எதுக்குன்னு எனக்கு தான் புரியலையோ?



                                                                                         

திங்கள், ஜூலை 19, 2010

“கஜானா”...!


 

                                                                          


“க..ஜா..னா”...!

முன்பு ஒரு கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த சமயம் அங்கே மெஸ் வசதி எல்லாம் கிடையாது. சாப்பாட்டுக்கு காசு கொடுத்துடுவாங்க. நாம தான் சமைச்சு சாப்பிட்டுக்கணும். ஆனா அங்கே சமைச்சுக்கிறதுக்கென்று காமனா பெரிய கிச்சன் ஒன்று இருக்கும். அதில் தான் எல்லோரும் சமச்சுக்கனும்.

சவுதி வந்த புதிது ஆகையால் சுத்தமாய் ஹிந்தி அரபி தெரியாது என்பது கூடுதல் தகவல். இந்தியர்களாகிய நாம் வெளிநாடு வந்த பின் தான் அதை உணருகிறோம் என்பதும் வருந்தத் தக்க விஷயம் அல்லாமல் வேறென்ன!

எல்லோரும் ஆளாளுக்கு டைம் முறையில் ஷிப்ட்டு போட்டு சமயலறையில் சமைப்போம். ஏனென்றால் அங்கிருந்தது ரெண்டே ரெண்டு காஸ் அடுப்பு தான்.

அன்றைக்கு டூட்டி முடிந்து ரூமுக்கு வந்து சமைக்க சாமான்களை எடுத்துக் கொண்டு கிச்சனுக்கு போய் சமைக்கலாம் என்றால் அந்த நேரம் பார்த்து ஒரு ஹிந்திக்காரன் சமைத்துக் கொண்டிருந்தான். இன்னொரு அடுப்பிலும் வேறு நாட்டுக்காரன் சமைத்துக் கொண்டிருந்தான்.  என்ன செய்வது நேரமாகிக் கொண்டிருக்கிறது. பசி வேறு லேசாக வயிற்றில் எட்டிப் பார்க்க ஆரம்பித்தது.

(இதில் முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால், நாம் சமைக்க வில்லை யென்றால் கேம்ப்பில் சாப்பிட எதுவும் கிடைக்காது. சுற்றுப் பட்டி கண்ணுக் கெட்டிய௦ தூரம் 20 KM வரை எந்த கடையும் கிடையாது)

நான் அந்த ஹிந்திக்காரன் எப்ப நகருவான் என்று பார்த்துக் கொண்டிருந்த சமயம், அவனுடைய பிரெண்ட் வந்து அந்த அடுப்பை ஆக்குபை பண்ணிக் கொண்டான். (அப்பவே அவனுகளெல்லாம் ஒன்னாக் கூடிட்டாணுக. நாம தான் இன்னமும் தமிழ் பேசி ஒன்னு மண்ணு என்று சொல்லி மண்ணா போறோமோ தெரியலை ! )

எனக்கு வந்ததே கோவம். (அது தான் நமக்கு வருமே! ) ஹிந்திக் காரனிடம் ஏதேதோ தெரிந்த ஜாடை மாடை கோரணி யெல்லாம் காட்டியும் அந்த வெளங்காதவனுக்கு வெளங்கல! (இப்படி சொல்லி தப்பிச்சிக்குவோம்ல) பேச்சு பேச்சாக இருக்க வாய் வார்த்தை முற்ற ஓங்கி அவன் செவிட்டில் விட்டேன் பாருங்க.. அடிச்ச அப்புறம் தான் தெரியுது அடிசிட்டோமோன்னு.. அவன் முகம் மிளகாய் பத்து போட்ட மாதிரி சிவந்து போச்சுங்க! இதை அவன் பிரெண்ட் பார்த்து.... சாட்சியாகி விட்டான்.

சுற்றி ரகளைப் பண்ணி கூட்டத்தை கூட்டிபுட்டாணுவ, பய புள்ளைக.. அடங்க கொக்கா மக்கா.. எனக்கு கை கால் உதறல் எடுத்துடுச்சு. பசியால் மட்டுமல்ல,, இந்த சம்பவத்தாலும்..ஆமாங்க இந்த சண்டை வம்புன்னாவே நமக்கு கொஞ்சம் பயம் தாங்க!!

பஞ்சாயத்த கூட்டி இந்த பக்கிக  ஃபோர்மேன்   ஃபைவ்மேன்  வாட்ச்மேன் வழியா கேம்ப் பாஸாம்  (அவனென்ன எங்க பாஸ் மாதிரி பெரிய அடாவடியா! கேட்கிறேன். ஓஹோன்னனாம்) அங்கிட்டு வரைக்கும் செய்தி போய்டிச்சு!! போச்சா... நமக்கு இன்னைக்கி ஆட்டம் காலி, சீட்ட கிழிக்கப் போறானுவ. ஊரப் பாக்கப் போய் சேர வேண்டியது தான் மவனே.. மனசில் ஒரு புள்ளி தோன்றி மறைந்தது. (எல்லாம் ஒரு simapthy தானுங்க!)

மறுநாக் காலை கோர்டில் ஜட்ஜ்மெண்ட்.  ஃபோர்மேன் ராஜஸ்தானி! கேம்ப் பாஸ் சூடானி! ரெண்டு “னி”யும் சேர்ந்து நம்மை சட்னியாக்கப் போறானுவ என்ற உணர்வே என்னை உள்ளுக்குள் சங்கடப் படுத்தியது. இரவு தூக்கத்துக்கும் விழிப்புக்கு மிடையில் தான் அந்த யோசனை தோன்றியது. (யார் சொல்லிக் கொடுத்தது என்று கேட்கபடாது)

அடித்தவனையே அரவணைத்துக் கொண்டா.? (யோசனை பரவாயில்லையே என்று என்னை நானே முதுகில் தட்டிக் கொள்ளாத குறை! ) அவன் ரூமுக்கு போனேன். என்னை அவன் அங்கே எதிர் பார்க்கவில்லை. மிரண்டு போய் எழுந்து நின்றான். அப்ப தான் அவனே எதிர்பாராத  வண்ணம் அவன் கையைப் பிடித்து (அடடா கையை தாங்க..!)

நமக்கு தெரிந்த.. (ஹிந்தி அரபியில்) கெஞ்சினேன்,, ஏன் உளறினேன் என்றே வைத்துக் கொள்ளுங்களேன்)

ஹம் பி கிறு கிறு

(நானும் பேசினேன்)

தும் பி கிறு கிறு

(நீயும் பேசினாய்)

சோச்சு கரு கரு

(யோசிச்சுப் பாரு)

மெஹர்பானி கரு கரு

(கருணைக் காட்டு)

(இந்த கிறு கிறு என்ற வார்த்தை அரபி மொழியில் ரொம்ப பேசுறான், பேசுறேன், பேசினேன் என்பது மாதிரி பொருள் கொள்ளலாம்)

நான் பேசிய ஹிந்தியைப் பார்த்து அவன் மிரண்டே போனாலும், புரிந்துக் கொண்டான். அன்றிலிருந்து அவன் நம்ம தோஸ்த் ஆகிவிட்டாலும், எதிரில் நான் வரும் போது விஷ் பண்ணினாலும், நாலு தப்படி விலகியே நடந்து போகிறான்...ஏங்க??
@#@#@#@#@#@#@#@#@#@#@#@#@#@#@#@#@#@#@#@#@

விரைவில்...!
                                                                                                                


                                                     
"தங்க மீன் கதைகள்"...

"ஜென் கதைகள்" ....

                              
        உங்கள் "ஆஹா பக்கங்களில்!!

Sponsered by :

@ ஜெய்லானி
@ செ.சரவணக்குமார்
@ அஹமத் இர்ஷாத்

 இணைந்து வழங்குபவர்கள்:
                  
                      ஆக்கமும் ஊக்கமும் தரும்

   சக வலைப்  பதிவு நண்பர்கள்.! தோழியர்கள்.!

செவ்வாய், ஜூலை 06, 2010

உயிர் போகும் வழி!!

சிரிப்பூ..
இந்த சிரிப்பு இருக்கிறதே உங்களுள் பூவாகி புன்னகையாகி சந்தோஷமாகி, உங்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும். ஆகவே புன்னகையை எப்போதும் உங்கள் முகத்தில் பொக்கிஷமாய் சேமித்து வையுங்கள். அதை கொண்டு எதை வேண்டுமானாலும் உட்கார்ந்த இடத்தில் இருந்தே சாதித்துக் கொள்ளலாம். ஆம்.. நீங்கள் நினைக்கிற மாதிரி எல்லாமே.

நான் இப்ப சொல்ல வர்றது அதைப் பற்றியல்ல.

எங்களின் நிறுவனதிற்காக இன்னொரு I T நிறுவனத்திலிருந்து பணி செய்ய வருபவர் தான் டேனியல் வர்கிஸ் அவரை எப்போதும் "வர்கிஸ் - வர்கிஸ்" என்று தான் அழைப்பார்கள். என்ன பெயர் சுருக்கமோ என்னமோ எனக்கு இந்த மாதிரி எல்லாம் கூப்பிட பிடிக்காது. முழுப் பெயர் சொல்லி அழைத்தால் தான் திருப்தி.

இந்த வர்கிஸ் இருக்கிறாரே மகா புத்திசாலி. எப்போதும் பேசுவதை பேசிக்கொண்டு சிரிப்பாய் முகத்தை வைத்துக் கொண்டு காரியமே கண்ணா இருப்பார். அவர் ஆபீசில் வந்து உட்கார்ந்து வேலைப் பார்க்க ஆரம்பித்தாலே பூப்பூத்துக் குலுங்குவது போலிருக்கும். அப்படியாப்பட்ட கனிவு, எல்லாம் தெரிந்தும் ஒரு பணிவு. கம்பியூட்டரின் விவரம் தெரியாதவர்களை கிட்ட அழைத்து பொறுமையாய் விளக்கி விளங்க வைப்பது இவரது ஸ்பெசாலிட்டி. கம்பியூட்டரில் என்ன ட்ரபுள் வைரஸ் இன்ன பிற வஸ்துகள் புகுந்தாலும் இவர் கை வைத்தால் குப்பைத் தொட்டி தான் அதற்கு வசிப்பிடம்.

இப்படி கல கலப்பாய் சுறு சுறுப்பாய் வந்து போய்க்கொண்டிருந்த வர்கிஸ் ஸீ யூ சொல்லி விட்டுப் போனவர் தான், மறு நாள் I C U வில் இருப்பதாக செய்தி வந்த பின்னர் தான் என்னாச்சு... ஆமாம் நீங்கள் நினைக்கிற மாதிரி தான் நாங்களும் பரிதவித்து கேட்டோம்.
                                                                                           

 





எந்த ஹாஸ்பிடலில் இருக்கிறார், என்ன ட்ரீட்மெண்ட் கொடுக்கிறார்கள் எதுவுமே தெரியவில்லை. தெரிந்தால் மட்டும் என்ன செய்து விட முடியும். பிரே பண்ணுவதை தவிர... ஒரு நாள் ரெண்டு நாளல்ல மூன்று மாதங்கள் ஓட்டமாய் ஓடிப்போனது தெரியவில்லை.

எல்லோரும் அவரவர் வேலையை கவனித்துக் கொண்டிருக்கும் போது அன்று மலர்ச்சியாய் பளிச்சென்று ஆபீசுக்குள் நுழைந்தார் வர்கிஸ், ஆபீஸ் அல்லோல கல்லோலலப் பட்டது, ஆளாள் அவரை இழுத்தணைத்து முத்த மிட்டு கரிசனையாய் விசாரிப்பும், பாசமான அரவணைப் புமாய்.. எல்லோருக்கும் சந்தோசம்.

ஆனாலும் ஏன்.. என்ன.. எப்படியானது கேட்க ஆவல் தான் எனக்கு. ஏதும் நினைப்பாரோ? இருந்தாலும் நிலைக் கொள்ளாமல் கேட்டே விட்டேன்.

அதைப் பற்றி டேனியல் வர்கிஸ் நம்மோடு ..

மூன்று இடத்தில் நான் உயிர் பிழைத்து வந்திருக்கிறேன் என்று மெல்ல சொல்ல ஆரம்பித்தார்

அன்று இங்கே வந்து உங்களை எல்லாம் பார்த்து விட்டு
வீட்டுக்கு போகும் வழியில் ஒரு நண்பரையும் பார்த்து விட்டு போகும் போது தான், தலை பாரமாய் மயக்கம் வருவது போல் உணர்ந்தேன். காரின் வேகத்தை சட்டென்று குறைத்து ஓரமாய் நிறுத்திவிட்டு, உடனே ஹாஸ்பிடலுக்கு போன் செய்து என் கார் நிற்குமிடத்தையும், எனது நிலையையும் விவரித்தேன். அதே போல் என் மனைவிக்கும், அவள் பதறாமல் எப்படி எல்லாம் வார்த்தையால் மெழுக முடியுமோ அப்படியோர் பதவிசாகப் பேசினேன். அவள் பதிலுக்கு காத்திராமல் கட் பண்ணினேன். ஆம்புலன்ஸ் என் இருக்குமிடம் தேடி பறந்து வந்து என்னை அள்ளிப் போட்டுக் கொண்டு ஹாஸ்பிடல் விரைந்தது.

என்னை ஸ்கேன் மற்றும் எல்லா டெஸ்டும் எடுத்து “ப்ரைனில் நீர்க் கட்டிக்கொண்டு” இருப்பது தெரிய வந்து உடனே ஆபரேஷன் பண்ணனும் இல்லாவிட்டால் என்று உயிருக்கு விலைப் பேசிக் கொண்டிருந்தார்கள். இந் நிலையில் கேரண்டீ கையெழுத்து போடனுமாமே,, யார்ப் போடுவார்கள். ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அப்ப தான் முன் வந்தார் Dr.அஹமது இப்ராஹீம். அவரை எனக்கு முன்பே தெரியும் என்று கையெழுத்தும் போட்டு ஆபரேஷன் ரூமுக்கும் அழைத்துப் போனது தான் எனக்கு தெரியும். கண்விழித்து பார்க்கும் போதும் யாரையும் எனக்கு தெரியலை! தலையில் சின்னதா ஒரு ஆபரேஷன் சார். எல்லாம் மறந்து போச்சு.

கொஞ்சம் கொஞ்சமாய்..அந்த தெரபி, கொஞ்சம் கொஞ்சமாய்...இந்த தெரபி என்று என் நினைவுகளை கொடுக்கக் கொடுக்க பத்து நாள் சென்ற பின்னரே என் மனைவியின் முகம் நினைவில் வர ஆரம்பித்தது. எல்லார் முகமும், அவர்களோடு பேசியது பழகியது நினைவுக்கு கொண்டு வர ஒரு மாதத்திற்கு மேலாகிப் போனது என்று விவரித்துக் கொண்டே போனார்.

நாங்கள் பிரமிப்பாய் அவரையே பார்த்துக் கொண்டிருந்தோம். என்ன மனிதர் இவர்..!!

எனக்கு முதலில் மயக்கம் வந்த போதே நான் சுதாரிப்பு இல்லாமல் நான் ஓட்டிப் போன கார் எங்காவது மோதி ஆக்சிடென்ட்டாகி இருந்தாலும் அப்போதே போயிருப்பேன். இரண்டாவது கேரண்டீ கையெழுத்துப் போட ஆளில்லா விட்டாலும் போய் சேர்ந்திருப்பேன். எனக்கு எந்த ஞாபகமும் வராமல் போயிருந்தாலும் முழுமையாய் நான் போன மாதிரி தானே, என்றார். உண்மைதானே!

யாருக்கு வரும் அந்த துணிச்சல். தைரியம் என்றால் என்ன என்பதை டேனியல் வர்கிஸ் நமக்கு சொல்லாமல் சொல்லிவிட்டார்!
                                            

வெள்ளி, ஜூலை 02, 2010

ஜெய்லானி தந்த தங்க மகன் விருது


ஜெய்லானி கூறியது...

//உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளுங்கள்//


மிக்க நன்றி சார்! நானென்ன அவ்வளவு பிரபல பதிவராவா ஆயிட்டேன் பாஸ்! கூச்சமா இருக்கு. இருந்தாலும் ரெண்டு கைகளாலும் பெற்றுக் கொண்டேன் தல! வரவேற்பு அறையிலும் வச்சிட்டேன். நீங்களும் அப்பப்ப வந்து கண்கானிச்சுங்க. யாரும் லவட்டிக்கிட்டு போய்டப் போறாங்க. ஏன்னா இது இருபத்தி நாலு அல்ல உங்க வெயிட்டுக்கு பகரமான கேரட் விருதல்லவா!! அடுத்தது என்ன பிளாட்டினாமா பாஸ் ஹி..ஹி..!


அன்பையும் நட்பையும் வெளிப் படுத்த எனக்கு வேறு வார்த்தைகள் தெரியல.. எல்லாம் வல்ல இறைவன் நம்மை எப்பவாவது, எங்கையாவது, சந்திக்க வைத்தால்.. அப்ப நிறைய நேரில்..

பிரியங்களுடன்

எம் அப்துல் காதர்