facebook

திங்கள், ஜனவரி 31, 2011

பரங்கிப்பேட்டை சாப்பாட்டுக் கடை...!!!


"பரங்கிப்பேட்டை சாப்பாட்டுக்கடை"

இந்த மாதம் நான் வலையிட்ட "புத்தூர் சாப்பாட்டுக்கடை" பதிவை
பார்த்து விட்டு, தல ஜெய்லானி தங்கள் ஊர் (பரங்கிபேட்டை)
சாப்பாட்டு வகைகளைப் பற்றி தானே இயற்றி, தானே பாடி, எனக்கு
U-tube பில் அனுப்பியிருந்தார். அந்த பாடலின் பதிவையும், அவரது
குரல் வளத்தையும் நீங்களே கேட்டுச்  சொல்லுங்க!! வாழ்க தல...
ஹி..ஹி..!! (ஊர்காரர்கள் கோபிக்காமல் இருப்பார்களாக!! :-)

ஊ..ஊ..ஊ.. ஊசிக் குறிப்பு :

(இது வான்ஸ், பூஸார் ஆகியோர்களுக்கு ரொம்ப காது குளிரும்
என்று எதிர்பார்க்கப்படுகிறது!! மற்றவர்கள் தாராளமாய் (கருத்து தெரிவிக்கலாம்) ஏன் கும்மளாம்...!! க்கி..க்கி..)


***********************************************************

நன்றி சொல்லும் நேரம்..!!

நேற்று முழுக்க லீவில் வீட்டில்தானிருந்தேன். நெட் லைன்
வேலை செய்யவில்லை. ஒரே கொண்டாட்டம் ச்சே...
திண்டாட்டம் தான். டிவி புரோகிராம் பார்க்கலாமென்றால் பேசாம
போத்திக்கிட்டு தூங்கலாம். வெளியில் போகணும் என்று நினைத்-
தாலும் நிரம்ப குளிராய் இருந்தது நிஜம். வேணும்னா இங்குள்ளவர்-
களை கேட்டுத்தான் பாருங்களேன். வரி வரியாய் புலம்புவார்கள்.

ஆனால் இங்குள்ள (சவுதி) தம்மாம் முனிசிபாலிட்டியை (பலதியா)
கொஞ்சம் புகழ்ந்து தானாகனும். ஏனென்றால் இந்த குளிர் நேரத்-
துக்கு இதமாய் குளிப்பதற்கு சுடு தண்ணியை பைப் லைனில்
அனுப்புகிறார்கள். நெஜம்மா... நம்புங்க!! தம்மாம் மெயின் சிட்டியில்
உள்ள எங்கள் ஏரியாவில் நாள் முழுக்க சுடு தண்ணிதான்
வருகிறது.

இந்த குளிர் நாளில் இரண்டு மூன்று அல்லது நான்கு மாதம்
வரை ஹீட்டர் உதவி அவசியம் தேவைப்படும். இந்த வருடம் என்னவென்றால் குளிர் ஆரம்பித்த, சென்ற மாதத்திற்கு முந்திய மாதத்திலிருந்து இதே மாதிரி தான் வெந்நீர் வந்துக் கொண்டி
ருக்கிறது. நாங்கள் ஹீட்டரே யூஸ் பண்ணுவதில்லை.  சூடென்றால் அப்படியொரு சூடு. பக்கெட்டில் பிடித்து வைத்திருக்கும் குளிர்ந்த
நீரை இதனோடு கலந்து தான் குளிக்கிறோம் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

மற்ற ஏரியாவிலெல்லாம் அப்படியில்லையென தெரிவிக்கிறார்கள்.
இந்த வருடம் எங்களுக்கு இது புதுசாய் தெரிகிறது. நன்றி தம்மாம் முனிசிபாலிட்டிக்கு!!

மற்ற ஊரில் - மற்ற நாட்டில் - உள்ளவர்கள் இதைப் படிக்கும்போது
இது மாதிரி உங்கள் பகுதிகளிலும் இருப்பின் தெரியப்படுத்துங்கள்.
தமிழ் நாட்டில் பைப்பில் நீரே வராமல் உள்ள பகுதியில் உள்ளவர்கள் தயவு செய்து கண்பட்டு விடாதீர்கள்.ஹி..ஹி..நீங்கள் அப்படியெல்லாம் செய்ய மாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும். இருந்தாலும் சும்மா!! லுலுவாயிக்கு!!

**********************************************************************************
 
மீனவர் பிரச்சினை:  ஒன்று படுவோம்!! வென்று காட்டுவோம் !!

மீனவர்களுக்காக தமிழக இணைய நண்பர்கள் ட்விட்டரிலும், பேஸ்புக்கிலும் கொடுத்த ஆதரவுக்குரல் ஒட்டு மொத்த
ஊடகங்களையும் திரும்பி பார்க்கவைத்துள்ளது. இது நம்
முயற்சிக்கு கிடைத்த முதல் வெற்றி!!
 
இணையம் என்பது அரட்டைக்காக மட்டுமல்ல அதன் மூலம் சமூகத்துக்காகவும் குரல் கொடுக்கமுடியும் என நிருபித்துக்
காட்டிய அனைவருக்கும் நன்றிகள்!!.

இத்துடன் சேர்த்து தமிழக மீனவர்களை காக்க இணையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள புகார் கடிதத்தில் உங்களது கையெழுத்-
தையும் சேர்த்து விடுங்கள். 1 லட்சம் கையெழுத்து இருந்தால்
அரசின் கவனத்தை ஈர்க்கமுடியும் என்பதால் விரைந்து
செயல்பட்டு உங்களது கையெழுத்தை இணைத்து மீனவர்களின்
நலனில் பங்கு கொள்ளுங்கள்.

கையெழுத்திட கீழுள்ள இணைப்பை சொடுக்குங்கள்.

http://www.petitiononline.com/TNfisher/

வெள்ளி, ஜனவரி 28, 2011

“திசைகள் தோறும் துலங்கிய நட்சத்திரம்”


ஒரு அமைச்சரிடம் அப்படியென்ன மற்றவர்கள் பார்வையில்
பளிச்சிடும் வெளிப்பாடுகள் இருக்கப் போகின்றது என்று
எண்ணும் ஒரு சிலருக்காக அல்ல, நம்மில் பலரும் கற்றுக்
கொள்ள வேண்டிய பாடங்கள் அண்மையில் மறைந்த
(Dr.Ghazi al Gosaibi) “டாக்டர் காஸி அல் கொஸைபி”யிடம் நிரம்பவே காணப்படுவதென்னவோ உண்மை.

அவரின் வெளிப்படையான பேச்சில் எப்போதும் உண்மையும்
கிண்டலும் தொனிக்கும். “ஒரு நூலில் திருடினால் அதற்குப்
பெயர் திருட்டு. பல நூல்களில் திருடினால் அதற்குப் பெயர்
ஆய்வு” என்று அவர் ஒரு முறை சொல்லியிருக்கிறார்.
அவரைப் பற்றி நீங்களும் கொஞ்சம் தெரிந்து வைத்துக்
கொள்ளுங்கள். இது கொஞ்சமல்ல.. கொஞ்சம் நீளம் அவ்வளவே!!

நன்றி : அஷ்ரஃப் சிஹாப்தீன் (நாட்டவிழி நெய்தல்)

நன்றி: “ஞானம்” - சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டுச் சிறப்பிதழ்

“திசைகள் தோறும் துலங்கிய நட்சத்திரம்”

“நான் பேராசிரியர் பதவி வகித்த நாட்களில் எந்தவொரு
குப்பையையும் ஆய்வு என ஏற்பதற்கு என்னிடமிருந்து ஒரு
மேற்கோளை எடுத்தாள்வதே போதுமானதாயிருந்தது.”

கேலிக்குரியதும் கேவலத்துக்குரியதும் அவ்வப்போது நடப்பது
மான மேற்குறிப்பிடப்பட்ட பல்கலைக் கழகப் பின்னணியைப்
பகிரங்கச் சொற்பொழிவில் தைரியமாகச் சொல்ல அண்மையில்
மறைந்த (Dr.Ghazi al Gosaibi) “டாக்டர் காஸி அல் கொஸைபி”யைப்
போல் வேறு ஒருவரை நாம் காண முடியாது.
பல்கலைக் கழகப் பேராசிரியராக இருந்த போது மட்டுமல்ல, பிரிட்டனுக்கான சவுதி  அரேபியத் தூதுவாராகப் பணியாற்றிய
போதும் அந்தப் பதவியைத் தாண்டி அவர் இப்படித்தான் நடந்து கொண்டார். அயாத் அக்ராஸ் என்ற பலஸ்தீனியத் தற்கொலைதாரி இளைஞன் இஸ்ரேலிய பல்பொருளங்காடியில் தன்னை வெடிக்க
வைத்த போது “நீ ஓர் உயிர்த் தியாகி” என்று அவனுக்கு இரங்கல்
கவிதை எழுதினார் அவர். அந்தக் கவிதை பிரிட்டனின் சீற்றத்தைக் கிளறியது. முழு மத்திய கிழக்கு அரசியல் அரங்கிலும் அதிர்வை ஏற்படுத்தியது.

அந்த இளைஞனை ‘சுவர்க்கத்தின் மணவாளன்’, ‘கிரிமினல்களுக்கு
எதிராக எழுந்தவன்’, ‘புன்னகையுடன் மரணத்தை முத்தமிட்டவன்’ என்றெல்லாம் அக்கவிதையில் போற்றியிருந்தார் கொஸைபி.
அதேவேளை செப்டம்பர் 11 அமெரிக்க வர்த்தக மையத்
தாக்குதலை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. ‘வரம்பு மீறிய
கொடுமை’ என்று அதை வர்ணித்தார். அதுதான் கொஸைபி.

காஸி அல் கொஸைபி சவுதி அரேபியாவின் 'அல்ஹஸா'வில்
1940-ல் பிறந்தார். தந்தையார் ஒரு வணிகர். தாயார் மெக்காவில்
'காத்திப்' குடும்பத்தைச் சேர்ந்தவர். கொஸைபி ஒன்பது மாதக்
குழந்தையாக இருந்த போது தனது தாயை இழந்தவர். பிறகு
பாட்டியின் வளர்ப்பில் விடப்பட்டார். அவரது முதல் ஐந்து
வருடங்கள் ஹபுஃப் நகரில் கழிந்தது. அவரது கல்வி நலன்
கருதி பஹ்ரெய்னுக்கு எடுத்துச் செல்லப்பட்டார். அங்கிருந்து
1961-ல் கெய்ரோ சென்று சட்டக் கல்வி பயின்றார். பின்னர்
கலிபோர்னியாப் பல்கலைக் கழகத்தில் ஆங்கிலத்திலும் சர்வதேச உறவுகளிலும் முதுகலைப் பட்டத்தைப் பெற்றபின் லண்டன்
பல்கலைக் கழகத்தில் அரசியல் விஞ்ஞானத்தில் டாக்டர் பட்டம்
பெற்றார்.

“இளம் வயதிலிருந்து அல் கொஸைபியிடம் ஒரு கனவு இருந்தது. உலகத்தின் கண்ணீர் துடைப்பதும் அதைப் புன்னகைகளால்
நிரப்புவதுமே அது. அதற்காகத்தான் அவர் இயங்கினார். இதற்காக
நான்கு படிகளை அவர் வைத்திருந்தார். (1) திட்டமிடல் (2) ஏற்பாடு
செய்தல் (3) செயற்படுதல் (4) அதைத் தொடர்தல் ஆகியனவே அந்த நான்குமாகும். இதற்காக அவர் ஒரு திறவுச் சொல்லை வைத்திருந்-
தார். அந்தச் சொல் - ‘ஹோம்வேர்க்’. எந்த ஒரு பொறுப்பை
எடுத்துக் கொண்டாலும் அதற்காகத் தன்னைத் தயார்படுத்திக் கொள்வதிலும் அது குறித்து விசாலமாகத் தெரிந்து கொள்வதிலும்
அந்த வீட்டு வேலை - ‘ஹோம் வேர்க்’ அவருக்கு உதவிற்று”
என்கிறார் முகம்மது அல் அலி ஜிப்ரி.

1984 முதல் 1992 வரை பஹ்ரெய்னிலும் 1992-லிருந்து 2002-வரையில் பிரிட்டனிலும் சவுதி அரேபியாவின் தூதுவராகப் பணிசெய்த
கொஸைபி மரணிக்கும் வரை தொழிற்துறை அமைச்சராகக்
கடமை செய்தார். சவூதி இளைஞர்கள் இலகுவானதும் அதிக
பணம் கிடைக்கக் கூடியதுமான தொழில்களையே நாடுவதாகச்
சொன்ன கொஸைபி, 2008ம் ஆண்டு ஜித்தாவில் ஒரு "fast food"
கடையில் மூன்று மணிநேரம் வேலை செய்து காட்டினார்.
பொதுவாக சவுதியில் இவ்வாறான தொழில்களில் வெளி-
நாட்டவரே ஈடுபட்டு வந்திருந்தனர். அவரது இவ்வாறான நடவடிக்கைகளில் தடாலடிச் செயற்பாடோ அரசியல்
ஸ்டண்டோ இருப்பதில்லை என்பதுதான் சிறப்பு.

இறுக்கம் கொண்ட அரச ஆட்சியில் உள்ள சவுதி  மக்களது
பிரச்சினைகள் எண்ணங்கள் குறித்து வெளிப்படையாகப் பேசும்
தன்மை அவரிடம் இருந்தது. இதனால் பரந்த அளவில் சிந்திப்பவர்
களாலும் படித்தவர்களாலும் மிகவும் விரும்பப்பட்ட மனிதராக
இருந்தார்.

அமைச்சராக, அரச நிறுவனங்களின் தலைவராக, இராஜ
தந்திரியாக, பேராசிரியராக என்றெல்லாம் அவரது வாழ்நாளில்
பெரும் பகுதி நிர்வாகம் செய்வதிலேயே கழிந்து போயிருக்கிறது.
இந்த அனுபவங்கள் குறித்து 300 பக்கங்களில் அவர் எழுதிய நூல்
தான் “வாழ்நாளெல்லாம் நிர்வாகம்.” நிர்வாகத்தை இரண்டு
விதமாக அவர் வகைப்படுத்தினார்.

ஒன்று சார்புப் பார்வையுடன் கூடியது. மற்றையது, எதிர்ப்பார்வை கொண்டது. அவர் எதிர்ப் பார்வை கொண்ட நிர்வாக முறையையே தேர்ந்தெடுத்தார். அதாவது எதிரிகளை உருவாக்குவதன் மூலம்
தன்னைக் கூர்மைப்படுத்திச் செயலூக்கத்தில் தள்ளுவது அவரது நோக்கமாக இருந்திருக்கலாம்.

முடிவெடுப்பது, நேரக்கட்டுப்பாடு ஆகியவற்றில் அவர் மிகவும் கறாரானவராக இருந்தார். “உங்கள் பிள்ளை வெளியே சென்று விளையாடுவதற்கு அனுமதி கேட்டால் 'ஆம்' அல்லது 'இல்லை'
என்று சொல்வதற்கு ஐந்து நிமிடங்கள் கூட நீங்கள் தாமதிக்கக்
கூடாது” என்கிறார் கொஸைபி.

அவர் அமைச்சராக இருந்த வேளை அவரைச் சந்திப்பதற்கு
வழங்கப்பட்ட நேரத்தை விட ஒரு மணி நேரம் தாமதமாக வந்த
ராஜாங்க வட்டாரத்தின் முக்கியஸ்தர் ஒருவர் அதற்காக மன்னிப்புக் கேட்கும் மனநிலையில் கூட இல்லாததை அவதானித்தார் கொஸைபி. கடைசியில் அவரது நோக்கம் நிறைவேறாமலேயே திரும்பிச் செல்ல நேர்ந்தது.

1965-ல் ரியாதிலுள்ள கிங் (SAUD) சவுத் பல்கலைக்கழகத்தில்
பொது நிர்வாகம் கற்பிப்பதற்கு கொஸைபி அழைக்கப்பட்டார்.
பொறுப்பேற்பதற்கு முன்னர் பிரின்ஸியிடம் அவர் வைத்த
வேண்டுகோள், ‘பாடத்தை ஒன்று நீங்கள் எடுக்க வேண்டும்
அல்லது நான் எடுக்க வேண்டும்’ என்பதுதான். நிர்வாகம் என்பது
ஒரு நாட்டின் நாடி நரம்பு. ஆளுக்காள் ஒவ்வொரு கருத்தைத்
திணித்து மாணவர்களைத் திணறடித்தால் அது நாட்டுக்குக் கேடு
என்பதை உணர்ந்தே அவர் இவ்வாறு சொல்லியிருக்க வேண்டும். கடைசியில் ‘நீங்களே படிப்பியுங்கள்’ என்று புன்சிரிப்புடன்
பிரின்ஸிபால் அனுமதி கொடுத்தார்.

1974-ல் சவுதி  ரயில்வேயின் அமைச்சராக அவர் நியமிக்கப்
பட்டவுடன் அவர் செய்த முதற் காரியம் ஏற்கனவே அப்பதவி
வகித்த அமைச்சர்களைச் சந்தித்து விபரங்களைப் பெற்றுக் கொண்டதுதான். காரியாலயத்தில் ஏற்கனவே கூட்டங்களில்
எடுக்கப்பட்ட அனைத்துத் தீர்மானங்கள், குறிப்புகள் அனைத்தை
யும் அள்ளிக் கொண்டு வீட்டுக்குச் சென்று ‘ஹோம் வேர்க்’
செய்தார். தனிப்பட்ட யாருடைய நலன் குறித்தும் கவனம்
செலுத்தப்படக் கூடாது என்பதே அவரது பணிப்புரையாக
இருந்தது.

தொழிற்துறை மற்றும் மின்சாரத் துறை அமைச்சராக 1975-ல் பதவியேற்றார் அல்கொஸைபி. இரண்டு அமைச்சுப் பொறுப்புக்-
களை அவர் வகித்துக் கொண்டிருக்கும் போதே 1982-ல் பதில்
சுகாதார அமைச்சராகவும் நியமிக்கப்பட்டமையானது அவரது
செயற்திறமைக்கும் நேர்மைக்கும் நல்ல எடுத்துக்காட்டாகும்.
1984-ல் "வாங்கி விற்கப்பட்ட ஒரு பேழை" என்ற அவரது கவிதை
யொன்று நேரடியாக அரச மட்டத்தின் ஊழல்களை உடைத்-
தெறிந்தது. அது சவுதியில் ஒரு தீயைக் கிளப்பி விட்டது. அந்த
வேளை அவரிடம் மூன்று அமைச்சுக்கள் இருந்தன என்பது
குறித்துக் கொள்ளப்பட வேண்டியது.

சவுதி பாதுகாப்புத் துறையிலும் அவர் ஓர் ஆலோசகராக
விளங்கினார். 1965-ம் ஆண்டில் ஏமனில் நிலை கொண்டிருந்த
எகிப்தியப் படையினரோடு சுமுகப் பேச்சுவார்த்தை நடத்திய
சவுதி அரேபியக் குழுவின் ஆலோசகராக நியமிக்கப்பட்டவர்
கொஸைபி. கிட்டத்தட்ட ஏழு மாதங்கள் ரியாத், கெய்ரோ, சனா
ஆகிய நகரங்களுக்கிடையில் ஓய்வில்லாமல் ஓடித்திரிந்து
உள்ளார். எகிப்துக்கும் ஏமனுக்குமிடையிலான போர்ச்சூழலுக்குள்
துப்பாக்கி ரவைகளூடாக சமாதானத்தை ஏந்திச்சென்று பெரும் பணியாற்றினார்.

இவை எல்லாவற்றையும் விட மேலாக அரபுலகம் காஸி அல் கொஸைபியைக் கொண்டாடுவதற்குக் காரணம் அவர் தன்னிகரற்ற கவிஞராகத் திகழ்ந்தார் என்பதுதான். அவர் எழுதி வெளியிட்ட
நாற்பதுக்கு மேற்பட்ட நூல்களில் அநேகமானவை கவிதை
நூல்கள். அவர் மத்திய கிழக்கின் சிறந்த கவிஞராகவும் நாவலாசிரியராகவும் உலகம் முழுதும் அறியப்பட்டிருந்தார்.
எந்தப் பதவியை வகித்த போதும் அவ்வப்போது இலக்கியச் சொற்பொழிவுகளுக்காகப் பல்கலைக் கழகங்கள் அவரை
அழைத்துப் பயன்படுத்தி வந்தன.

கொஸைபி ஒரு பதவியிலிருந்து இன்னொரு பதவிக்கு மாறி
மாறி அனுப்பப்பட்டதையும் அந்தக் கால கட்டங்களையும்
பார்க்கும் போது அவர் ஒரு நேர்மையாளராக, மக்களினதும்
தேசத்தினதும் பக்கம் நின்று சிந்திப்பவராக இருந்திருக்கிறார்
என்பது புலனாகின்றது. அவரது எழுத்தினாலோ பேச்சினாலோ செயற்பாடுகளினாலோ உயர் மட்டத்தின் கருத்துக்கு மாற்றமான கருத்துடன் இருக்கிறார் என்று தெரிய வருகையில் வேறு ஒரு
பதவிக்கு மாற்றப்பட்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. ஆனால்
அவரை ஒழிக்கவோ தவிர்க்கவோ உயர் மட்டத்தினால் முடிய
வில்லை . இதுதான் கொஸைபியின் வெற்றி என்று சொல்ல
வேண்டும். மன்னராட்சி நிலவும் ஒரு தேசத்தின் அரசியலைப்
பொறுத்த வரை அரச குடும்பத்தில் பிறக்காத ஒரு தனிமனிதன்
தவிர்க்க முடியாத சக்தியாக ஆளுமை கொண்டிருப்பது அவ்வளவு எளிதான விடயமும் அல்ல.

சவுதியின் அரசின் அங்கமாக அவர் இயங்கிய போதும் அவரது
குரல் அவ்வப்போது தனித்துக் கேட்டது. அது நான் சுதந்திர-
மானவன், நான் கட்டுப்பாடுகளுக்குள் இல்லாதவன் என்பதைச்
சொல்லிக் கொண்டேயிருந்தது. அவரது கவிதைகளும்
நாவல்களும் இதைத்தான் பேசின. அதற்கு மேலாய் ஒரு
படைப்பாளியாக மட்டும் நின்று மத்திய கிழக்கின் அரசியல்,
மேற்குலகின் கபடத்தனங்கள், மத்திய கிழக்கு ஆட்சியாளர்களின் நாடகங்கள், பலஸ்தீனத்தின் துயர், சாதாரண மக்களின் வாழ்வு என்பவற்றையும் உரத்த குரலில் பேசின.

“ஒரு பெரிய நிறுவனத்தின் தலைவரை விட ஒரு மரக்கறி
வியாபாரி தன்னைச் சிறப்பானவனாக உணர வேண்டும். ஏனெனில் தொழிலாளர்கள்தாம் தேசத்தின் மிகப் பெரிய நம்பிக்கை. ஊடகங்கள் அவர்களுக்கு அழுத்தங்களை வழங்காமல் ஆதரவாகச் செயற்பட வேண்டும்” என்று அவர் கோரிக்கை விடுத்தார்.

அதிகார மட்டத்தில் அவர் செயற்பட்டுக் கொண்டிருந்த போதும்
அவரது கவிதை நூல்களில் ஒன்றிரண்டு அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டிருந்தது என்பது எத்தகைய வேடிக்கை. காஸி அல் கொஸைபியின் நூல்கள் மீதான தடை அவர் மரணிப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன்னர்தான் நீக்கப்பட்டது என்று Angry Arab News
சர்வீஸ்ஐச் சேர்ந்த லெபனானிய அமெரிக்கரான டாக்டர் அஸத்
அபூ கலீல் சொல்கிறார். அதாவது தடை நீக்கப்படும் போது
கொஸைபி மரணப்படுக்கையில் இருந்தார்.

கொஸைபி கடந்த வருடத்தின் (32-ம் வாரம்) அதாவது ஆகஸ்ட் பதினைந்தாம் தேதி ரியாத் - கிங் ஃபைஸல் விசேட ஹாஸ்பிடலில் காலமானார். மரணிக்கும் போது அவருக்கு வயது எழுபது. இந்த இழப்பானது அவரது மனைவிக்கும் அவரது ஒரே ஒரு மகளுக்கும்
மூன்று ஆண்பிள்ளைகளுக்கும் சவுதி மக்களுக்கும் மாத்திரமேயானது அல்ல.

உலகத்தின் பார்வையில் செல்வம் கொழிக்கும் தேசத்தில் களிப்பும் படாடோபமுமாய் வாழும் மனிதர்களுள் அறிவும் ஆழ் புலமையும்
பெற்றுச் சர்வதேச ராஜ தந்திரங்களை எதிர் கொள்ளும் வலிமை
யுடன் செயற்பட்டு வாழ்ந்து மறைந்த கொஸைபி உண்மையில் ஒரு மகானுபவர்தான். எந்தத் துறையில் அவர் காலடி எடுத்து
வைத்தாலும் அங்கு தேசத்தின் நலன், மக்களின் நலன், உலகத்தின்
நலன் என்கிற தனது முத்திரைகளைப் பதிப்பதில் அவர் வெற்றி
கண்டவர்.

சவுதி அரேபியாவைப் பொறுத்த வரை காஸி அல் கொஸைபியின் மரணத்துக்கும் இன்னொரு கொஸைபி உருவாவதற்குமான காலம்
மிக நீண்டதாக இருக்கப் போகிறது. புதிதாக உருவாகும் கொஸைபி-
களுக்கு மத்திய கிழக்கின் நலன், அங்கு அகதிகளாக அல்லல்படும் மனிதர்களது நலன் குறித்துச் சிந்திக்கவும் செயற்படவும் மேற்கத்திய நாடுகளுக்கு விலை போகாதிருக்கவுமான இதயத்தை வழங்குமாறு அவர்கள் பிரார்த்திக்க வேண்டும்.

அவரது மரணச் செய்திக்குப் பிறகு இணையத்தில் பலர் இரங்கல் குறிப்புக்களைத் தெரிவித்திருந்தார்கள். “எங்களது பரம்பரைக்கு
அரபுலகில் ஒரு நல்ல உண்மையான ரோல் மாடல் இல்லை-
யென்று நேற்றிரவு நான் எனது நண்பனிடம் சொன்னேன். அது
ரொம்பத் தப்பு. அந்தப் பெருமைக்குரியவர் இன்று நம்மை விட்டுச்
சென்று விட்டார்” என்று பஹ்ரெய்னிலிருந்து யாக்கூப் அல்
சிலைஸி என்ற நபர் குறிப்பிட்டிருந்தார்.

புதன், ஜனவரி 26, 2011

100-வது பதிவு ஒரு முன்னோட்டம்..!!


100-வது பதிவு ஒரு முன்னோட்டம்..!!

இன்று  நூறாவதுப் பதிவு எழுதப் போவதாக நினைத்துதூங்கிக் கொண்டிருக்கும் போதே, விழித்துக் கொண்டிருப்பதாக  ஒரு  கனவு  வந்ததுங்க!! (ஆரம்பிச்சுட்டாங்கைய்யா....!!! என்று நீங்க அலறுவது  கேட்குது... ஹி..ஹி.. நான் அப்படியாப் பட்ட ஆளா?? நீங்களே சொல்லுங்க!! யாரச் சொன்னாலும் என்னை நீங்க சொல்ல மாட்டீங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும்ஏன்னா? எல்லா  கமெண்ட்ஸிலும் என்னை நீங்க போட்டு  'குமுறுரத' வச்சு தான் அவ்வ்வ்வ்....!!!

இந்தியாவின் கறுப்புப் பணம் வெளிநாட்டில் இருப்பது   வெறும்
"இருபது லட்சத்து எழுபதாயிரம் கோடியாம்" (இதில் வருகிற
சைபரை எண்ணினாலே நாம பேஜாராகி விடுவோம்.பிறகு
அதை எழுதினால்...!! ) என்று பிரணாப் முகர்ஜி  சொன்ன போது,
தூங்கிய நாம் அப்படியே  தூங்கிக் கொண்டிருக்கக்  கூடாதான்னு  தொப்புன்னு  மயக்கம் போட்டு விழாத குறை!

இவங்களுக்கெல்லாம் தெரியாமலா நம் பணம் நாட்டை விட்டு  வெளியே போகும். இதுல நூத்தி   அறுபது கோடிய திரும்ப 
மீட்டுட்டாங்களாம். அதெப்படி??  நாமெல்லாம் அரசியல் பேசக்
கூடாது கூடாதுன்னு ஒதுங்கி போறதுனாலே தானே இவங்-
கல்லாம் இப்படி செய்ய ஆரம்பிசிருக்காங்க? நாமெல்லாம்
அரசியல் பேச ஆரம்பிசிட்டோம்னா? இவங்க நெலம என்னாகுறது.
சரி இனி நாமும் அரசியல் பேச ஆரம்பிக்கணும்ங்க!! அப்ப  தான்   சரியா  வருவாங்க !! அது தான்  எப்படி?? நீங்களே   சொல்லுங்க!! அவ்வ்வ்வ்....!!!

***********************************************************************************
துபாய்ல உள்ள ப்ரூஜ்  கலிஃபா டவர் டாப்புல உள்ள ஒரு ஆடம்பர ஹோட்டலில், காபி ஜூஸ் ஃப்ரீயா கொடுக்கிறாங்களாம். அதை
குடிக்க கூட்டம் அலைமோதுதாம். மேலே நின்னு உலகத்தைப்
பார்த்த மாதிரியும் ஆச்சு. காபி ஜூஸ் குடித்த மாதிரியும் ஆச்சு.
வெளியே வரும் போது மட்டும் குடித்ததற்கு இருநூறு திர்ஹம்
வாங்கிடுராங்கலாம். இதை வேற சன் நியூஸ்  சானல்ல 
பெருமையா  சொல்லிக்கிறாங்க.  ஏன் இதை துபாய், ஷார்ஜா, அல் அய்ன் பதிவர்களெல்லாம் கண்டுக்கவே மட்டேங்கிராங்க. பதிவுல
போட்டு கிழி கிழி என்று கிழிக்க வேண்டியது தானே!

ஒருவேளை ஏற்கனவே  போட்டு கிழிச்சிட்டாங்களோ!! நாம் தான்
படிக்காம விட்டுட்டோமோ. வேக வேகமா வந்து படிக்கிறதுல நாம
கில்லாடியாச்சே!! ஹி..ஹி..இருக்கும் இருக்கும். நம்ம பதிவர்-
கலெல்லாம் லேசுப்பட்டவர்களிலையே!! (பேச்சு பேச்சா இருக்கும்
போது வன்முறை நோ..ப்ளீஸ்!!)

***********************************************************************************
ரொம்ப நாளாச்சு என் நண்பர் ஒருவரைப் பார்த்து. எங்கள்
இருப்பிடத்திலிருந்து வெகு தூரமிருப்பதால், ரொம்ப
எடுத்தேத்தியாக இருந்தது. அதற்கான நேரம் இன்று தான்
வாய்த்தது. எனது 'மாணிக்க வாசகத்தை' அழைத்துக் கொண்டு
ரூமுக்குள் நுழைந்தவுடன் மாத்திரை மருந்து பட்டைகள்
மேசை முழுக்க இறைந்து கிடக்க, நண்பர் 'பிளாங்கெட்' போர்த்தி
தூங்கிக் கொண்டிருந்தார். பக்கத்து பெட் நண்பரிடம் விசாரித்தேன்.
"ரெண்டு நாளா காய்ச்சல் தலைவலி தங்கடம்" என்றார்.
"அப்படியா என்கிட்டே சொல்லவே இல்லையே?" என்றேன்.

(சொன்னா மட்டும்..?? மனசாட்சி எகிறியது!!) உண்மைதான்.
நானென்ன செய்து விட முடியும்??

"நான் பிறகு வர்றேன் இப்ப அவரை எழுப்ப வேணாம் தூங்கட்டும்"
என்று சொல்லிவிட்டு நகரும் போது, மாத்திரை பாக்கெட்டில்
தமிழில் எழுதியிருந்த வாசகம்  என்னை ஈர்த்தது. எடுத்துப் பார்த்தேன் "குலுறு-சல்ல கடுப்புக்கு" என்று கிறுக்கி கிறுக்கி எழுதியிருந்தது.

அந்த நண்பர், "நாங்க அப்படி தான் எழுதி வச்சுக்குவோம். பின்னாடி அதுமாதிரி (ஜுரம்) வரும் போது டொக்டர் மாரை தேடி போவ வேனாமில்லையிண்டு. நான் உங்க நண்பரிடம் 'கஞ்சுபராக்கு'
போடாமே பனியில் உட்ர்கார்ந்திருக்காதியோன்னு சொன்னேன். கேட்கிராறில்ல" என்று ஒரு பாட்டம் பேசி முடித்தார்.

'கஞ்சுபராக்கு' ன்னா என்ன எனக்கு விளங்கவில்லை. சிரிப்பு வேறு
வந்து தொலைத்தது!! அடக்கிக் கொண்டு அவரிடமே கேட்டேன்.
ஹி..ஹி.. ஆண்கள் உள்ளே போட்டுக் கொள்ளும் பனியனுக்கு
அவங்க ஊரில் அப்படி சொல்வாங்களாம். இது எந்த ஊர்
பாஷைங்கோ??

வெளியே வரும்போது பக்கத்து ரூமிலிருந்து யாரோ கதவை
திறந்து வெளியே போக சரேலென்று அந்த ரூமிலிருந்து
"மலர்கொள்ள வந்த தலைவா வா! மனம் கொள்ளவந்த இறைவா
வா!" பாடல் வரி காதில் விழுந்தது. ஆண்களை தலைவன், இறைவன் என்றெல்லாம் (ஹி..ஹி..!!)  வர்ணிக்கிறார்களே, அப்ப நல்லப் பாட்டாத்தானிருக்கும் என்று மனதில் சிலாகித்துக் கொண்டு
ஒரு கணம் திரும்பி டிவியை பார்த்தேன் அதில் ஜெயா டிவி
சிம்பல் தெரிந்தது!! அது என்ன படம், பாட்டின் தலைப்பு என்ன
என்று விளங்காவிட்டாலும், தலைவனை புகழ்ந்து பாடும்
பாடலெல்லாமா இந்த டிவியில் ஓடுகிறது என்று நினைத்துக் கொண்டேன்!!

டிஸ்கி : ஆமா மேலே வைத்திருக்கும் தலைப்புக்கும் நீங்க எழுதி
இருக்கும் மேட்டருக்கும் என்ன சம்பந்தம்னு கேட்டு யாரும்
கமெண்ட்ஸ் போட்டுடாதீங்க!! இது வெறும் முன்னோட்டம்னு
பேரு வைக்காம கொஞ்சம் லுக்கா  வைக்கலாமேன்னு தான்!!

சனி, ஜனவரி 22, 2011

"பல்லும் சொல்லும்"



பேராசிரியர்களுக்கு நகைச்சுவை நன்றாக வரும். நாங்கள் படித்த
ஜமால் முஹம்மது கல்லூரி பேராசிரியர்களில் ஒருவரான
முனைவர் M.M. ஷாஹுல் ஹமீது Ph.D., (Controller of Examination,
Jamal Mohamed College, Trichy) அவர்களின் 'பல்’சுவைப் பதிவை,
இங்கே பதிகிறேன்.


பல்லும் சொல்லும்..!!(Yours 'tooth'fully) 

ரொம்ப நாளா எனக்கு ஒரு சந்தேகம். "பல்லு போனால் சொல்லு
போச்சு" என்பார்கள். பல் போனால் எப்படி சொல் போகும்? நாவுக்கும் சொல்லுக்கும் தானே உறவு! பல்லுக்கும் சொல்லுக்கும் ...??

மூன்று மாதங்களாக ஆட்டங்கண்டிருந்த என் மூன்று பற்களை
எடுப்பதற்காக பல் மருத்துவமனைக்கு சென்றேன். பயங்கர கூட்டம்.
கடைசி வரிசையில் ஒரே ஒரு நாற்காலி - காலி, அதில் சென்ற-
மர்ந்தேன். சுவரை ஆக்ரமித்த படங்களும் விளம்பரங்களும்
கண்ணில் பட்டன. பல் பராமரிப்பு பற்றிய விவரங்கள், நீளமான
வெள்ளை நிறக் கோட்டு, நீல நிற டையுடன் டாக்டர் சொல்லும் அறிவுரைகளை சிகிச்சைக்கு முன்- சிகிச்சைக்குப் பின் எடுக்கப்-
பட்ட வாய் திறந்த படங்களை வாய் மூடாமல் பார்த்துக்
கொண்டிருந்தேன். அண்ணாந்து டிவியை பார்த்து கழுத்து
வலிக்க ஆரம்பித்தது. அசந்துப் போய் அலுத்துப் போய் கண்மூடி காத்திருந்தேன்.

"பல்லை உடைப்பேன்" "பல்லை பேத்திடுவேன்" "பல்லை தட்டி
கையில் (யார் கையில்?) கொடுத்திடுவேன்"... என்றெல்லாம்
கோபத்தில் கத்துவார்கள். பற்களை நோக்கி ஏன் இத்தனை கற்கள்? கொஞ்சமாக சிரித்தால் "பல்லிளிக்காதே" - அதிகம் சிரித்தால்
"பல்லைக் காட்டாதே" என்ற ஏவுகனைகள் வேறு. உடலில் எங்கு
வலித்தாலும், எரிச்சல் வந்தாலும், கோபம் வந்தாலும் பல்லைக்
கடித்து சகித்துக் கொள்வோம். நகத்தை பல்லால் கடித்துக் கடித்து துப்புவோரும் உண்டு. சிந்திக்கிறார்களாம்!

நாவைக் காக்க 32 பல் வீரர்கள். மிக்ஸியும், கிரைண்டரும் சேர்ந்த
ஒரு பற்படையே வாய்க்குள். இத்தனை வீரர்களையும் மீறி, நாவு
ஏதாவது சொல்லப் போய், வாங்கிக் கட்டிக் கொள்வதேன்னவோ
பற்கள்தான்! பாவம் ஒரு பக்கம், பழி ஒரு பக்கம்!!

பற்களில் தான் எத்தனை வகை! மழலையரின் பல்-அரிசிப்பல் ;
அழகிய பல்-முத்துப் பல் ; அழுகிய பல்-சொத்தைப் பல்; பெண்களில்
பல்லழகி உண்டு (ஹி..ஹி.!!) ஆண்களில் பல்லழகன் என்று
கேள்விப் பட்டதுண்டா? (ஹும்..!!) தெற்றுப்பல் என்ற அதிஷ்டப்பல்,
அறிவுப் பல் (விஸ்டம் டூத்) என்ற அறிவுக்கு அறவே தொடர்-
பில்லாத பல். சமீபகாலமாக ஊதாப் பல் (ப்ளு டூத்) என்ற தகவல்
பரிமாற்ற தொழில் நுட்பம் வேறு. அதற்கு ஏன் அந்த பெயர்?
அங்கே பல்லுக்கு என்ன வேலை தெரியவில்லை?

ஓ... இரண்டு மணி நேரம் தள்ளியாகிவிட்டது. இன்னும் எவ்வளவு
நேரம் ஆகுமோ என்று பெரு மூச்சு விடுகையில், அப்பாடா...
உள்ளே அழைக்கப்பட்டேன். அறையிலிருந்த ஒரு தினுசான
மெத்தைப் படுக்கையில் கவனமாக கால் நீட்டி படுத்தேன். வாயும்
மூக்கும் மூடிய அடையாளம் தெரியாத டாக்டர் தன வேலையை
ஆரம்பித்ததும், மெத்தை படுக்கை முள் படுக்கையானது!

'அ' வுக்கு அடுத்த எழுத்தை டாக்டர் சொல்ல, நான் திரும்ப சொல்ல,
 டாக்டர் மீண்டும் சொல்ல, நான் மீண்டும் சொல்ல, டாக்டர்
மீண்டும், நானும் மீண்டும், மீண்டும்.. ஆ..ஆ..ஆ.. சொல்லிச் சொல்லி,
என் வாய் கோட்டை வாய் போல் திறக்க... இம்சை தாளாமல் தவிக்கையில்... "ஏன் டாக்டர், நீங்கள் வெளியே நின்று கொண்டு
தானே பல்லை பிடுங்குவீர்கள்?" என்று அப்பாவித்தனமாக ஒருவர்
கேட்டது நினைவுக்கு வந்து, தாடை வலியை சிறிது மறக்கடித்தது.

பண்டிகைக்கு முதல் நாள் வீட்டை ஒட்டடை அடித்து, மூளை
முடுக்கு களையெல்லாம் துடைத்து, கறையெல்லாம் தேய்த்து,
தண்ணீரை பீய்ச்சி யடித்து சுத்தம் செயவார்களல்லவா? அடுத்த
அரைமணி நேரத்தில் என் வாய்க்குள் நடந்ததும் கிட்டத்தட்ட
அதுதான். அப்போதுதான் என் கால்களும் கைகளும் வளைந்து
ஆடிய, எந்த தாளத்துக்கும் பொருந்தாத, நர்த்தனம் அரங்கேறியது.

ஐந்து நிமிட ஓய்வுக்குப் பின் கையில் சிரிஞ்சோடும், வாயில்
பு(ண்)ன் சிரிப்போடும், டாக்டர் என்னை மீண்டும் நெருங்கினார்.
'வலிக்காது' என்று சொல்லி சுருக், சுருக், சுருக் என்று சுருக்கமாக
எகிரில் மூன்று இடத்தில் ஊசி போட்டார். "அவருக்கு வலிக்காது
என்று சொல்லியிருப்பார் போலிருக்கிறது!!".எனக்கு...? பொறுத்துக் கொள்வதைத் தவிர வேறு வழி? சிறிது நேரத்தில் மறத்துப்போன
எகிரிலிருந்து புல்லைப் பிடுங்குவதைப் போல், என் மூன்று
பற்களையும் பிடுங்கினார். பெருக்கெடுத்த இரத்த வெள்ளத்தை
பஞ்சணை போட்டு படாத பாடு பட்டு தடுத்து நிறுத்தினார். வாய்
நிறைந்த பஞ்சோடு வெளியே வந்த என்னைப் பார்த்து, வாய்
நிறைந்த சிரிப்போடு வரவேற்ற என் மனைவியைப் பார்க்க
வேண்டுமே....!!

சவுதியிலிருந்து அலைபேசியில் நலம் விசாரித்த என் மகன்,
"Fill up the blanks எப்போ?" என்றதும் எனக்கு ஒரு கணம் புரிய-
வில்லை. புதுப்பல் கட்டுவதைத்தான் தனக்கே உரிய பாணியில்
கேட்டது பிறகு தெரிந்துக் கொண்டேன்.

அடுத்த மூன்று நாட்கள் வாய் முழுக்க வெந்துப் போய், உண்ணவும் முடியாமல் குடிக்கவும் முடியாமல் நான் பட்ட அவஸ்தை தனிக்-
கதை. ஒரு வாரம் கழித்து (பொய்ப்) பல் கட்டும் படலம். ஒரு
வழியாக இருபது நாட்கள் பல்செட்டை பகலில் மாட்டி, இரவில்
கழற்றி மாட்டி கழிந்தது.

பல் வழியால் அவதியுற்றோரைக் கேளுங்கள் - தம் எதிரிக்கும்
இந்த வலி வரக் கூடாது என்பார்கள். பற்களிலிருந்து தலையின்
எல்லா திசைகளிலும் மின்னலாய் பாய்ந்த வலி அம்புகளை
சு(ச)கித்த அனுபவம்!!

மூன்று பற்கள் இல்லாமல் சரியாக பேச முடியவில்லை. குழறிக்
குழறி பேசவேண்டியதாயிற்று. இதுவே முப்பது பல் போனால்
என்னாகும்? "பல்லுபோனால் சொல்லு போச்சு" என்பது உண்மை.
இதை உணர்த்துவதற்கு நான் மூன்று பற்களை இழக்க வேண்டிய-
தாயிற்று!! முப்பது நாட்கள் கழித்து புதுப்பல் செட் கட்டி ஒரு
வழியாக செட்டில் ஆகி விட்டேன். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!

"ஆ..ஆ..ஆ" வில் ஆரம்பித்து ஈ..ஈ..ஈ..யில் முடிந்துள்ளது. பல்
கட்டியதும் சீராக இருக்கிறதா என்று அடிக்கடி கண்ணாடியில்
பார்த்துக் கொண்டதைச் சொல்கிறேன்.

அடுத்தநாள் என் மகனும் மருமகளும் அலைபேசியில் அழைத்து பல்கட்டியத்தை விசாரித்தபின், என் ஒரு வயது பேத்திக்கு மூன்று
பற்கள் முளைக்க ஆரம்பித்த செய்தியையும் சொல்லிவிட்டு,
"பாப்பாவுக்கும் மூன்று புதுப்பல் - அப்பாவுக்கும் மூன்று புதுப்பல்"
என்று பல் முளைத்ததையும், பல் எடுத்ததையும் முடிச்சிப் போட்டு கலாய்த்தார்கள். இருக்கட்டும் இருக்கட்டும் அவர்களுக்கும் இப்படி
ஒரு காலம் வராமலா போய்விடும்.

"பல் போனால் சொல் போகும்" - சரி. பல் விழுந்தால் புதிதாக கட்டிக் கொள்ளலாம். சொல் விழுந்தால் அள்ள முடியுமா? கவனம் தேவை!
கவனம் தேவை!! கவனம் தேவை!!

Yours toothfully,
Dr.M.M. Shahul Hameed Ph.d.,
mmsjmc@yahoo.co.in

நன்றி : ஆபிதீன் பக்கங்கள். + Gooooogle



புதன், ஜனவரி 19, 2011

சவுதியில் மழை...!!!



சவுதியில் மழை...!!!
(ரொம்ப முக்கியம் பாருங்க!!) அது மழை தானா என்பதை கன்ஃபர்ம்
செய்ய நாலு பேரை விசாரிக்க வேண்டியதாகிவிட்டது. செ.சரவணக்
குமார் சார், அக்பர் சார், பன்னி சார் ஆகியோர்களுக்கு அலைபேசி,
அவர்கள் சொன்ன பிறகு தான் அது ஊர்ஜிதமானது. பின்னரும்
நேற்று (மட்டும்) லீவில் இருந்த இளம்தூயவன் சார் வந்து சொன்ன
பிறகு தான் அந்த மழை குளிரானது. ஸ்ஸ்ஸ்... அப்பா...தாங்க முடியலையேன்னு யாரும் 'எஸ்' ஸாகிடக் கூடாது பாருங்க!
அதான் உங்கள சீட் நுனி வரைக்கும் கொண்டாந்து  சினிமா
கிளைமாக்ஸ் மாதிரி சஸ்பென்சா கட்டிப் போட்டிருக்கோம்! ஹி..ஹி.. 

மழை குளிருக்கெல்லாம் ஒரு பதிவான்னு யாரும் நம்மை
கேட்டுடக் கூடாது பாருங்க. ஹி..ஹி நாம அப்படியெல்லாம்
மொக்கப் போடுற ஆளா?? (அங்க யாருக்கோ காது நுனி சிவந்து புகைவருது!! மூக்கு நுனி வேக்குது!! (வரட்டும் வரட்டும் நாம எல்லாத்துக்கும் தயாரா தானே இருக்கோம்) அவ்வ்வ்வ்...!!!

ஏன் கடந்த ஒருவாரமா நீங்க பதிவே போடலைன்னு உலகம் முழுவதிலிருந்தும் ஒரே நச் நச்..ச்ச்!! சாட்டு, மெயில், மொபைலி
ன்னு அல்லோல கல்லோலப் பட்டுப் போச்சு! (யாரு கேப்பா
ஹி..ஹி.. நம்மை நாமே கேட்டுக் கொண்டால்தான் உண்டு!!)

இடையில் இந்த கக்கு மாணிக்கம் சார் வேற அன்புத் தொல்லை
தாங்க முடியலை!! டாக்குடர் பட்டம் தர்றேன்னு ஒரே அடம்.
கேட்க மாட்டேங்குறாங்கைய்யா..!! இந்த பதிவுலக அன்புத்
தொல்லைக்கு அளவே இல்லாமப் போச்சு!!


நன்று.. நன்று..!!

"சொல்லவந்த செய்தியை மட்டும் சொல்லிட்டு போய்டு 
இல்லாக்காட்டி பதிவுலகமே திரண்டு வந்து மொக்கிடும்னு
நீங்க சொல்றது கேக்குது மக்கள்ஸ்".

நன்று.. நன்று.. பார்ரா...!!



ஊரிலிருந்து ‘மகர்’ (மரியாதி) வந்திருக்கார். விசா ரினிவல்ஸ்.
ஜஸ்ட் ரெண்டு வாரம் தான் ஹாலிடே!! அவரோடு ஒரே ஊர்
சுற்றல்ஸ். சந்தோசம்ஸ். மகிழ்ச்சிஸ்.. அளவில்லாத இன்ன பிற
இத்யாதீஸ். இதோ கண்மூடி திறப்பது போல் நாள் ஓடிவிட்டது. வெள்ளிக்கிழமை அவரும் புறப்பட்டு விடுவார். பிறகு வலையுலக மக்கள்ஸ் தான் என் மக்கள்ஸ். நன் மக்கள்ஸ். ஒரு பிரிவில் சோகமென்றால், உங்களோடு அளவளாவி நேரம் செலவிடுவதில்
தனி மகிழ்ச்சிஸ் தானே!..... என்னான்றீங்க!!

இதுல ஒரு குரூப் வேற நம்மை வேவு பாக்குதுங்க. நான் யூத்தா யூத்தில்லையா என்பதை கண்டுபிடிக்க!! அதுவும் எப்படி தெரியுமா??
என் 'மகர்' என்ன படிக்கிறார்னு நான் சொல்லணுமாம்!! அத வச்சு
அவங்க  என் வயசை கண்டுபிடிக்கிறாங்களாம். ங்.. ங்கொய்யா.
நாமெல்லாம் அலாஸ்கா யுனிவர்சிட்டில அரிஸ்டாடிலப் பத்தி
எத்தன மொற படிச்சிருக்கோம்... சொல்வேனா.. சொல்வேனா..!!

தமிழ்மணத்தில் ஒத்தை அவார்ட், ரெட்டை அவார்ட்ஸ், முத்தான அவார்ட்ஸ் பெற்ற நம் அனைத்து  மக்கள்ஸுக்கும் எனது
வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

படித்ததை கற்றதை கேட்டதை எல்லாம் நினைவு படுத்தி
இன்னும் நிறைய எழுதி ‘ஆஸ்கர்’ வரை போய் வர வேண்டு
கிறேன். என்னது?? எழுத்துக்கு ஆஸ்கரெல்லாம் கிடையாதா?
பின்னே..?? இந்த ஆஸ்கர் ஆஸ்கர்ங்கறாங்களே அப்படின்னா
இன்னா சார்?? இசையைப் பத்தி எழுதுறவங்களுக்கும், படமெடுத்து
நம்மை ஓட விடுறவங்களுக்கு மட்டும் தான் ஆஸ்கரா??

எழுத்தாளர்களைக் கொண்டு தான் படமும், அவர்கள் எழுதும்
கற்பனை காட்சிகளுக்கு ஏற்பதான் பாடல்களும், இசையும்,
அவைகளோடு ஒன்றிணைகின்றன. ஆகவே நிறைய நிறையவே
சிந்தித்து எழுதும் எழுத்தாளர்களைப் பற்றியும் பரிசீலிக்கும்படி
ஆஸ்கர் கமிட்டிக்கு இதன் மூலம் பரிந்துரைக்கிறேன். ஙே...ஙே..??
ஏதோ நம்மால  முடிஞ்சது. வர்ட்ட்ட்டா...!!

படங்கள்ஸ் : நன்றிஸ்!! அரப் நியூஸ், கூகிள்ஸ்.

செவ்வாய், ஜனவரி 11, 2011

புத்தூர் சாப்பாட்டுக் கடை


புத்தூர் சாப்பாட்டுக் கடை

சென்னையிலிருந்து நாகூர் வந்து சேரும்வரை, திண்டிவனத்தில்
எங்கே தலைப்பாக்கட்டு பிரியாணி நல்லா இருக்கும் ; வடை
எங்கே நல்லா இருக்கும் ; போண்டா எங்கே நல்லா இருக்கும் ;
இரவு உணவு எங்கே நல்லா இருக்கும் ; டீ எங்கே குடித்தால்
டேஸ்டா இருக்கும் ; மல்லிகை பூவிலிருந்து பனங்கிழங்கு வரை ; கொய்யாப்பழத்திலிருந்து பட்டர் பிஸ்கட் வரை எங்கே சல்லீசாய்
தரமாய் கிடைக்கும் என்பன போன்ற விவரங்கள் பொதுவாகவே
எல்லா டிரைவர்களுக்கும் அத்துப்படி என்றாலும் எங்கள் வீட்டு
டிரைவர் 'சாதிக்'  கொஞ்சம் எக்ஸ்ட்ராடினரி. அவரும் நல்லா
'கட்டுக் கட்டுவார்'. நம்மையும் வற்புறுத்துவார். நம்மால் அவரோடு போட்டிப்போட முடியாதென்பது வேறு விஷயம்.

எத்தனையோ தடவை நாகூரிலிருந்து புறப்பட்டு சென்னைக்கு சென்றிருக்கிறேன் - வந்திருக்கிறேன். ஆனால் அந்த ஹோட்டல்
இருந்த இடம் எனக்குத் தெரியாது. இந்த தடவைத்தான் சென்னை யிலிருந்து திரும்பும் சமயம் சாதிக், "பகல் சாப்பாட்டை புத்தூரில் சாப்பிடுவது போல் அரேஞ் செய்து கொண்டு கிளம்புவோம்" என்று சொன்னார். "அப்படி என்ன அந்த ஹோட்டலில் விஷேசம் இருக்கு?"
என்று கேட்டேன். “நீங்க வந்து சாப்பிட்டு பாருங்க, அப்பத்தான்
உங்களுக்கு புரியும். நீங்களும் மற்றவர்களுக்கும் பரிந்துரைப்பீர்கள் மச்சான்" என்றார். என்னை அவர் அப்படித்தான் கூப்பிடுவார்.
ஏனென்றால் அவர் எங்கள் சொந்தக்காரார்.

                                                   சிக்கன் மீன் வறுவல்

மெர்சிடிஸ், ஸஃபாரி, டொயோடா, ஸ்விஃப்ட் என்று ஏகப்பட்ட
கார்களைப் பார்க்கும் போது நாம் ஏதோ ஃபைவ் ஸ்டார்
ஹோட்டலுக்குத் தான் சாப்பிட வந்திருக்கிறோமோ என்ற
பிரமையை ஏற்படுத்துகிறது. பகல் நேரங்களில் சாப்பிடுவதற்கு
கூட்டம்னா கூட்டம் அப்படி ஒரு கூட்டம் வந்து அப்புகிறது. அக்கம் பக்கத்து ஊர்களிலெல்லாம் ஆபீசில் வேலை செய்யும் அத்தனை
பேரும் கார் போட்டுக் கொண்டு வந்து  இங்கே சாப்பிட குழுமு-
கிறார்கள். கார் நிறுத்த இடமில்லாமல் அல்லாடுவதும் நடக்கிறது 
என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!

அது ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் மாதிரியாவுமில்லை.
சிம்பிளாய் இருக்கும் த்ரீ ஸ்டார் ஹோட்டல் மாதிரியாவுமில்லை. சாதாரணமாய் கான்கிரீட் கட்டடத்தில் இயங்கும் ஹோட்டல் மாதிரியாவுமில்லை. சொல்லப் போனால் இது சாப்பாடு ஹோட்டல்
தானா என்று கேட்குமளவுக்கு ஒரு குடிசை மாதிரி வேயப்பட்டு
ஹோட்டல் மாதிரியான அமைப்பில்  விஸ்தாரமாய் இருக்கிறது.
 
                                                  இறால் பொறியல்

மெயின் ரோட்டை ஒட்டியே இந்த ஹோட்டல் இருப்பதால் காரை
நிறுத்த கொஞ்ச தூரம் இடம் தேடி போட்டுவிட்டு நடந்து வர
வேண்டி இருக்கிறது. வாசலில் மிகப் பெரிய தவ்வாவை வைத்து
கூடை கூடையாய் இராலை கொட்டி பொறித்துக் கொண்டிருப்பதை பார்க்கும் போதே சாப்பிடனும் என்ற பசி கிளம்பிவிடுகிறது. அந்த
வாசனை ஊரையே தூக்குகிறது. பின்னர் இடையிடையே வஞ்சிர
மீனை ஸ்லைஸ் ஸ்லைசாக பொறிக்கிரார்கள். பார்க்கும் போதே
நாஊறுகிறது. அதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கணும்
என்று மனசு சொல்கிறது என்றாலும்...

உள்ளே நுழைந்தால் உட்கார இடம் பிடிக்கணுமே, ஆளாளுக்கு
ஒவ்வோர் டேபிளில் நின்றுக் கொண்டோம். எது காலியாகுமோ அதற்க்கருகில் எல்லோரும் ஒன்று கூடிக் கொள்வோம் என்பது
திட்டம்!! ரெண்டு மணிக்கு மேலாகிவிட்டதால் எது கிடைத்தாலும் சாப்பிடலாம் என்கிற நிலையில் பசியும், பொறிக்கும் வாசனையும்
நம்மை கிறங்கடிக்கிறது. ஒரு வழியாய் இடம் கிடைத்து உட்கார்ந்-
தாகி விட்டது. எல்லாமே சாதிக் தான் ஆர்டர் செய்தார். அவருக்குத்
தான் தெரியும் இங்கே எது டேஸ்டா இருக்குமென்று...!!

அருமையான அரிசியில் பளீரென்று சாப்பாடு. மீன் வறுவல், மீன்
சால்னா, கோழி குழம்பு, அதற்கு கூட்டு வகைகள் என்று ஏராளமாய் கொண்டு வந்து வைக்கிறார்கள். அதில் கீரை மசியல் எனக்கு
ரொம்ப இஷ்டமாய் இருந்தது. எல்லாம் போக இறால் பொறியலை
விட மனசில்லை. அதுவும் ஆளுக்கொரு ப்ளேட்.

எது கேட்டாலும், மற்ற ஹோட்டல்களில் பசியடங்கியதும் கொண்டு
வந்து கொடுப்பார்களே அதுமாதிரி இல்லாமல், கேட்டவுடன் தாமத மில்லாமல் கொண்டுவந்து கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள்.
இதை முக்கியமாய் குறிப்பிட்டுதான் ஆகவேண்டும்.

சவுதியில் கட்டி கட்டியாய் தயிரைப் பார்த்த எனக்கு, ஊரில் சில இடங்களில் சாப்பிடும் போது, சவுதியில் கிடைக்கும் மோர் மாதிரி
யான வெள்ளை வஸ்துவை கொடுத்து அதுதான் தயிர் என்பார்கள்.
வாயில் வைக்க விளங்காது. ஒரே புளிப்பாய் இருக்கும். இந்த ஹோட்டலில் தான் பெரிய பெரிய பக்கெட்டுகளில் தயிரை பாலம் பாலமாக வெட்டியெடுத்து கஸ்டமர்களுக்கு அள்ளிக் கொட்டுவதை,
அதுவும் போதும் போதும் என்று சொல்கிற அளவுக்கு, எல்லாமே
வயிறு நிறைந்த மாதிரி  மனசும் நிறைந்து போனதென்னவோ நிஜம்!

                                                       ஓனர் ஜெயராமன்  

வாசலுக்கு வந்து கல்லாபெட்டியருகே சர்வ் செய்தவர் கணக்குச்
சொல்லி காசைக்கொடுக்கும் போது நானூத்தி சில்லறையோ
ஐநூறோ கொடுத்த ஞாபகம். மற்ற நடுத்தர ஹோட்டல்களை
கம்பேர் செய்யும் போது நாங்கள் ஆறு பேர் சாப்பிட்டதற்கு
ரொம்ப மலிவானதாகவே தெரிந்தது. ஸோ, இதை மற்றவர்
களுக்கும் பரிந்துரைக்கலாமே என்று மனசுக்கும் பட்டது. இந்த
வழியாய் போகும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும் பட்சத்தில்,
குடிசை என்று யோசிக்காமல் ஒரு தடவை,  இங்கேயும் நுழைந்து
தான் பாருங்களேன்!

இடம் : "புத்தூர்" - சிதம்பரத்திற்கும் சீர்காழிக்கும் நடுவே, இங்கிட்டும் அங்கிட்டும் பதினைந்து கிலோமீட்டர், கொள்ளிடம் பாலத்தை
விட்டு இறங்கியதும் இருக்கிறது இந்த ஹோட்டல்!!


புதன், ஜனவரி 05, 2011

நண்பரைக் கண்டேன்..!!


நண்பரைக் கண்டேன்..!!

என் நண்பரில் ஒருவருக்கு உடல் நலமில்லை என்று தகவல்
வந்து போய் பார்க்க நேரமில்லை. எனக்கு சில நேரங்களில் மனதில் நோயாளி களை நாம் போய் டிஸ்டர்ப் செய்யக் கூடாது என்று
தோன்றும். ஆனால் நாம் போய்  பார்த்தால்  அவர்களுக்கு  மனதில்    ஆறுதலாக    இருக்கும்  என்று பெரியவர்கள்     சொன்னதை  மனதில்   கொண்டேன்.   இந்த     வாரம்   தான் அதற்குரிய  நேரம் கிடைத்தது.
கொஞ்சம் ஆப்பிள், கொஞ்சம் இதர பழங்கள், ஹார்லிக்ஸ் எல்லாம்
வாங்கி போட்டுக் கொண்டு போன போது வீட்டில் கச்சா முச்சா
வென்று அப்படி ஒரு கூட்டம்.

அப்படி உடம்புக்கு என்ன?

வயிற்று வலியாம்!

சரி   அதிலென்ன   பிரச்சினை?  வயிற்று   வலி   என்பது 
எல்லோருக்கும் வரக்  கூடிய   பொதுவான   பிரச்சினைதானே? 
இவருக்கு  மட்டும்   என்ன புதுசா என்று நான் நினைத்தது
அவருக்கு கேட்டிருக்க வேண்டும்.

அதை   டெலிபதி   என்பார்களே.   அப்படிஎன்றால்   நமக்கு   டெலிபதி
உணர்வு   ஏற்படுவதற்கு   பலகோடி   வாய்ப்புகள்   இருக்கு.  "சபாஷ்டா
தம்பி"  என்று என்னை நானே மனதிற்குள் பாராட்டிக்கொண்டு, அவர் சொல்லப் போகும் செய்தியை கேட்க உட்கார்ந்தேன். கச்சா முச்சா வெல்லாம் விலகி வீடு அமைதியானது.

“எனக்கு ஆரம்பத்தில் வாரம் ஒருமுறை தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்து  குளிக்கும் பழக்கம் இருந்தது. அது ஒரு நல்லப் பழக்கம் தான் உடம்பு இலேசாகும். கண்கள் குளிர்ச்சியாகும். தூங்கனும் என்று மனசு நினைத்தவுடன் படுத்தோம்னா தூக்கம் வந்துடும்”

"சரி இப்ப என்ன??"

“சவுதி போன பிறகு அந்த பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து போய் மாதம் ஒரு முறையாகிப் போனது”

“ம்ம்ம்”

"ஆனாக்கா பாருங்க, கல்யாணம் முடிஞ்ச பிறகு அந்த பழக்கமே நின்னு சுத்தமா போச்சு"

சரி அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்க நினைத்து, பல்லு வரை வந்ததை, உதட்டால் மூடி தடுத்துக் கொண்டேன்.

பிறகு அதை அவரே சொன்னார். அது தாம்பத்தியத்தில் ஏதோ
பிரைச்சினை வரும் என்று யாரோ சொன்னார்களாம்.

சரி நாம அதைப் பற்றி இப்ப பேச வரவில்லை. அவரின் உடல்
நலம் பற்றி விசாரித்து விட்டு எழுந்து விடலாம் என்று நினைத்த
எனக்கு அவர் ஒரு தியரியே நடத்தினார்.

“சவுதி வந்த பிறகு எண்ணெய் தேய்த்து குளிப்பதை எப்ப நிறுத்தி
னேனோ அப்பவே எனக்கு வயிற்று வலி தலைக் காட்ட
ஆரம்பித்தது. இது இந்த சூடான பூமியின் தட்பவெப்ப நிலையால் நிகழ்கிறதென்றே கருதினேன். குடும்பம் எந்தவிதத்திலும் கஷ்டப்
பட்டுவிடக் கூடாதென்பதற்காக, நேரத்திற்கு கூட சாப்பிடாமல்
சுழல ஆரம்பித்திருந்தேன்.

வயிற்றில் வலி வரும்போது ஆபீஸ் வேலை எதிலும் நாட்டம்
வராது. புரட்டி எடுக்கும். உட்கார விடாது. படுத்தால் தூக்கம் வராது. சாப்பிட்ட சாப்பாட்டை வாந்தி எடுத்து வயிறு காலியான பின்னரே
அந்த வலி விடும். அப்படியாப்பட்ட ஒரு அவஸ்தையை தந்துக் கொண்டிருந்தது. இதனால் எதையும் விரும்பி சாப்பிடும் எண்ணம்
குறைய ஆரம்பித்தது. வலி வரும் போது ஆலிவ் எண்ணையை
கொஞ்சம் எடுத்து தொப்புளைச் சுற்றி வயிற்றில், தடவினால்,
அல்லது தலையில் தடவினால் அந்த வலி நின்று போய்விடும்.
ஆனால் உடம்பு பலஹீனப்பட்டுப் போன மாதிரி ஃபீலிங்க்ஸ் வரும்.

இந்த நிலையில் ஒரு தடவை ஊருக்கு வந்தபோது தான்
அம்மா, "இப்படியே வலிவருது வலிவருதுன்னு வச்சுக்கிட்டே இருக்கீங்களே ஒரு எட்டு டாக்டரை போய் பார்த்து என்ன ஏது
என்று கேட்கலாம்ல" என்று சொன்னங்க.அவர்கள் சொல்வதும்
ஒரு விதத்தில் சரியானதாகவேப் பட்டது.

டாக்டரை கன்சல்ட் செய்த போது, ஆபரேஷன் செய்யணும்
வயிற்றை ஸ்கேன் எடுத்து வாங்க என்று எழுதிக் கொடுத்தார்.
ஸ்கேன் எடுக்க சென்ற போது, “எதற்கு இது?” என்று அந்த டாக்டர்
கேட்க, விவரம் சொன்னேன். “வயிற்று வலிக்கு எதற்கு ஆபரேஷன்”
என்று வினா எழுப்பினார். அப்ப மனசில் பொறி தட்டியது. இரண்டு டாக்டர்களுக்குள் ஏன் இந்த முரண்பாடு? ரிசல்டை வாங்கிக் கொண்டு வந்து விட்டேன்.

எனக்கு எப்பவுமே ஒரு குணம் உண்டு தம்பி. என் மனசுக்கு ஒத்து
போகிற விஷயங்களோடு தான் நானும் இயயைந்து போவேன். இல்லையேல் அது என்மனசோடு ஒட்டாது.

எங்களுடைய ஃபேமிலி டாக்டரிடம் கன்சல்ட் செய்யலாமென்றால் அப்பொழுது அவர் ஊருக்கு போயிருந்ததாலேயே மேற்படி
டாக்டர்களை பார்க்க வேண்டி இருந்தது. அவருடைய போன்
நம்பரை மறுநாள் தேடி எடுப்பதற்குள், தெய்வாதீனமாய் அவர்
ஊரிலிருந்து திரும்ப வந்து விட்டார்.

ரிசல்டை வாங்கி பார்த்து விட்டு "ஆபரேஷன் செய்து வலியை
எப்படி வெளியே எடுப்பாங்களாம். அந்த டாக்டரிடம் கேட்டீங்களா?"
என்றார். பின்னர்  "உடம்பில் எந்த காரணத்தைக் கொண்டும்
'கத்தி'யை வைக்காதீர்கள். அப்புறம் எல்லா காலத்திலும் நோய்
நோய் என்றே உங்கள் வாழ்க்கை ஆகிவிடும். இதை நான்
உங்களுக்கு முன்பே சொல்லியிருக்கிறேனே மறந்துட்டீங்களா?"
என்றார் கூலாக.

இந்த டாக்டரைப் பற்றி நிறைய சொல்லணும். ஆனா பதிவு
நீள்கிறது. இப்ப ரெண்டு வரியாவது சொல்லிவிடுகிறேன். பக்கா
டீசன்ட். நிறைய பணம் பண்ணனும் என்றெல்லாம் யோசிக்க
மாட்டார். சமயங்களில் நான் காசு கொடுத்தாக் கூட வாங்கவே
மாட்டார். போய் உடம்ப கவனிச்சிங்க என்பார்.அதனாலேயே சவூதியிலிருந்து வரும்போது ஒவ்வொரு தடவையாய் ஒரு
ஸ்டெத், ஒரு BP செக்கப் காம்போனன்ட் என்று அவருக்கு
தேவைப்படும் விஷயமாய் வாங்கி கொண்டு வந்து அவர்
மறுத்தாலும் வைத்து விட்டு போய் விடுவேன்.

'குலாம்அலி' அப்படி இப்படி என்று ரசனையாய் பாட்டு கேட்பார்.
“ரிடயர்ட் ஆர்மி கேம்பில்” காலை டூட்டி. மாலை கிளினிக் என்று
நூல் பிடித்த மாதிரி வாழ்க்கை. பிள்ளைகள் காலேஜில் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.

"சரி, நான் ஒரு ஹாஸ்பிடலுக்கு லெட்டர் தருகிறேன். அங்கே
போய் உங்களை ஒரு ஃபுல் உடல் செக்அப் செய்து கொண்டு
வாங்க. அப்பத்தான் உங்களுக்கும் மனசுக்கு திருப்தியாய் இருக்கும்". என்றார்.

நான் "ஆபரேஷன் ஏதும் ...!!" என்று வாய் திறந்தபோது,

"அப்படி அவசியம் என்றால் எனக்கு போன் பண்ணுங்கள் நான்
பேசிக்கிறேன்" என்று முடித்து விட்டு கிளம்பி விட்டார்.

சென்னைக்கு கிளம்பிவிட்டேன். அது ஒரு ஸ்டார் ஹாஸ்பிடல்.
வயிற்ரை காலியாக வைத்து எல்லா டெஸ்டும் முடிந்து ரிசல்ட்  
நார்மல் என்றாலும், OGD என்று சொல்லக் கூடிய (Oesophago Gastro
Duodenoscopy) டெஸ்டில் உங்களுக்கு வாய்வழி சென்று குடலை
அடையும் ட்யூபில் லேசான வளைவு இருப்பதால் நீங்கள்
சாப்பிடும் சாப்பாடு சீக்கிரம் ஜீரணமாகாமலும், அதே சமயம்
உணவு செரித்தாலும் கேஸ் ஏதும் உருவானால் முன் வழியாக
வோ பின்வழியாகவோ வெளியேற வாய்ப்பு மிகக் குறைவாக
இருப்பதால், அதுவே அங்கே தங்கி உங்களுக்கு வயிற்றில்
வலியைக் கொடுக்கிறது என்றார்கள். ஆகவே படுத்துறங்கும்
போது தலைப்பக்கம் சற்று உயரத்தை அதிகப்படுத்தி சற்றே
சரிவாகப் படுக்கச் சொன்னார்கள். தொடர்ச்சியாய் டெய்லி OMEZ
மாத்திரை எடுத்துக் கொள்ளச் சொன்னார்கள்.

அது உடம்புக்கும் மனதுக்கும் நல்லாவே இருந்தது. பின்னர்
அதுவே தொடர்ச்சியாய் மாத்திரை சாப்பிடுகிறோமே என்று
நிறுத்திப் பார்த்தேன். அதனால் தான் இப்ப வலி விட்டது" என்றார்.

கண்சிமிட்டாமல் அவர் சொல்வதையே பார்த்துக் கொண்டிருந்து
விட்டு "அப்புறம்..." என்றேன்.

"அப்புறமென்ன அதுவே Pantoprazole என்கிற (pantop -40) Tablet டாக
 மாற்றி தரப்பட்டது. சாப்பிடுகிறேன். அதிலும் குழப்பம் வந்து
திரும்ப வலி வந்தது".

"எப்படி??"

"சாப்பாட்டுக்கு முன் மாத்திரை சாப்பிடச் சொல்கிறார்களே என்று சாப்பாட்டு மேஜையில் உட்கார்ந்துக் கொண்டு,அந்த மாத்திரையை பிய்த்துப் போட்டுக் கொண்டு உடனே சாப்பிடுவேன். அப்பவும் அடுத்த அரை மணி நேரத்தில் வலி வர ஆரம்பித்தது"

"பிறகு என்னாச்சு ...??"

பின்னர் டாக்டரிடம் பேசிக் கொண்டிருக்கும் போது தான்,
"சாப்பாட்டுக்கு முன் என்பது, சாப்பிடும் ஒரு மணி நேரத்திற்கு
முன் அல்லது அரைமணி நேரத்திற்கு முன்னர் என்று கொள்ள
வேண்டும்" என்று முடித்தார்.உடம்பை கவனித்துக் கொள்ளச் சொல்லிவிட்டு விடைப்பெற்று கிளம்பி வந்தேன்.

டிஸ்கி :  அனுபவம்  என்பது   நம்மை   தேடிவரும்.   அல்லது   நாம்   
தேடி போகணும்.  அவரிடம்   பேசிக்   கொண்டிருந்த போது நமக்கு
ஒரு அனுபவம் கிடைத்தது.எவ்வளவு தான் குடும்பத்துக்காக
உழைத்தாலும் நேரத்துக்கு சாப்பிடனும், எந்த நோய் வந்தாலும்
நாமே ஒரு முடிவுக்கு வாராமல், அனுபவ டாக்டர்களை சந்தித்து கலந்தாலோசிக்கணும்!!




சனி, ஜனவரி 01, 2011

இனிய புத்தாண்டு (2011) விருந்து!!



புத்தாண்டு துவங்கும் இந்த இனிய நன்னாளில், எல்லோருக்கும்
நோயற்ற நிம்மதியான நல்வாழ்வையும், செல்வத்துடன் எல்லா
வளமும் பெற்று, மனதில் மகிழ்ச்சியுடனும், சந்தோஷத்துடனும்  
வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்த வண்ணம்...

ஆஹா பக்கங்கள்!!!




புத்தாண்டில் "சமையல் அட்டகாசங்கள்"  கொடுத்த விருது!!
மிக்க மகிழ்ச்சி ஜலீலாக்கா! நன்றி!!





புது வருடமென்றால் ஸ்வீட்- விருந்தில்லாமலா?? வாங்க..
வந்தது தான் வந்தீங்க ஒரு வாய் சாப்டுட்டு  போங்க...!!! :-)))