facebook

ஞாயிறு, பிப்ரவரி 17, 2013

பயணநாளில் ஒரு நாள்




பயணநாளில் ஒரு நாள்

-----------------------------------
சிதம்பரம் அண்ணாமலை நகரில் இருக்கும் எனது நண்பர் இக்பாலை சந்திப்பதாக ஏற்பாடு. நண்பரை சந்தித்து வெகு காலமாகிவிட்டது. அதோடு கூடவே புத்தூரில் உள்ள அண்ணன் ஜெயராமன் கடையில் பகல் சாப்பாட்டை ஒரு கட்டு கட்டலாம் என்றும் ஒரு திட்டம். ஆனால் கடை ஓனரின் தம்பி தங்கதுரை எனக்கு இங்கே பழக்கமாகிவிட்டார். இருந்தாலும் அவருடைய அலைபேசி நம்பரை வாங்காமல் வந்தது தப்பென்று அப்பொழுது புரிந்தது.

கார் புறப்பட்டு போகும் வழியில் தான் நினைவு வந்தது கடலூரில் நமது காசிம் பாய் வீட்டுக்கும் போனால் அவரும் சந்தோசப் படுவாரே அங்கும் ஒரு விசிட் அடித்து விடுவோம் என்று முடிவு செய்துக் கொண்டேன். மயிலாடுதுறை தாண்டிப் போகும் போது, டிரைவர் "பரங்கிப்பேட்டையில் ஒரு சின்ன வேலை இருக்கு, அஞ்சு நிமிசத்தில் முடித்து விட்டுப் போய் விடலாம்" என்றார். ஓகே done என்றேன். சமயங்களில் இப்படி இலக்கில்லாமல் போகிறேனோ என்று கூட மனம் யோசிக்கும்.


பரங்கிப்பேட்டை என்றவுடன், மனதில் பல்ப் பளிச்சிட்டது. நமது ஆஸ்தான பதிவர் + நண்பர் தான். இவருடைய நல்ல பழக்கம் என்னவென்றால் நாம் அலைபேசினால் எப்போதுமே பதில் பேசமாட்டார். இத்தனைக்கும் ரெண்டு சிம் இருக்கு. ஒரு நம்பர் 050 என்றும், மற்றொரு நம்பர் 055 என்று ஆரம்பித்து மீதி நம்பர் எல்லாம் இரண்டிலுமே ஒரே மாதிரி இருக்கும். ஃபேன்ஸி நம்பராக தேடித் பார்த்து வாங்கியதாக சொல்வார். வீடு கட்டிக் கொண்டிருந்தாரே கட்டி முடித்து விட்டாரா தெரியவில்லை. வீட்டுக்கு வந்தால் பரங்கிப்பேட்டை பிரியாணி நிச்சயம் என்பார். அவருடைய பதில் பேசாத அந்த நல்ல பழக்கத்தினால் அங்கும் போக முடியாமல் போய் விட்டது.

வண்டி பரங்கிப்பேட்டையில் ஒரு வீட்டின் வாசலில் நின்றவுடன் தான் நினவு கலைந்தது. டிரைவர், "இப்ப வந்துடுறேன்" என்று சொல்லிவிட்டுப் போனவர், உடனே வரவில்லை. அந்த வீட்டிலிருந்த அவரின் உறவினர் ஒருவர் தான் வெளியில் வந்து, எங்களை உள்ளே வந்து விட்டுப் போகச் சொல்லி வற்புறுத்தினார். சரி ரிலாக்ஸ் செய்துக் கொள்ளலாமே என்று எழுந்து போனோம்.

அங்கிருந்த ஊஞ்சலில் ஆடிக்கொண்டே டீ யை உறிஞ்சுகையில் அந்த நோட்டிஸ் கண்ணில் பட்டது. அந்த நோட்டிஸ் இங்கே உங்கள் பார்வைக்கு!



- பயணம் தொடரும்