facebook

கேரக்டர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கேரக்டர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, செப்டம்பர் 02, 2011

"ஆவு கெச்சேனு"



ஆவு கெச்சேனு


மணி என்றால் பணமென்றும், நேரமென்றும், பெல் என்றும் எல்லோருக்கும் தெரியும். ஆனால் நம்ம நண்பர் மணியை, மணி என்றே எல்லோரும் அழைப்போம். இந்த மணிக்கு ஓர வஞ்சனை, நுனி வஞ்சனை ஏதும் தெரியாது. யார் எந்த வேலை சொன்னாலும் செய்து கொண்டே இருப்பார். அவர் இங்கே அமீர் ஆபீசில் ஏஸி ரெஃப்ரிஜிரேஷன் பணியில் இருக்கிறார்

ஒருமுறை முறை டாய்லெட்டில் பிளஷ்அவுட் வேலை செய்யலை. மணியிடம் பேசிக் கொண்டிருந்த போது "யாரவது தெரிந்த ப்ளம்பர் இருந்தா அனுப்புங்க" என்று சொன்னேன். 'சரி' என்று சொன்னார். மறுநாள் டூட்டி முடிந்து வெளியே வரும்போது அவர் தான் நின்றுக் கொண்டிருந்தார். “என்ன மணி?” என்றேன். “வாங்க வீட்டுக்கு போகலாம்” என்றார். “அப்ப ப்ளம்பர்?? என்றேன். “வாங்க பார்த்துட்டு போய் கூட்டி வரலாம்” என்றார். “சரி” என்று கூட்டி போனேன்.

மணியை கூட்டிப் போய் டாய்லெட்டில் உள்ள பிரச்சினையை காட்டிவிட்டு, மணிக்கு டீ போடுங்க என்று சொல்லிவிட்டு, யாரோ போனில் கூப்பிட்டார்கள் அவர்களோடு பேசிக் கொண்டிருந்த போது, "இப்ப வர்றேன்" என்று சொல்லி வெளியே போனார். சரி ப்ளம்பரை கூப்பிடத் தான் போகிறார் என்று நினைத்துக் கொண்டேன். போய் விட்டு பையில் எதையோ வாங்கி வந்தார். "என்ன மணி ப்ளம்பர் எங்கே?" என்று கேட்டேன்.

"இதோ இப்ப வந்துடுவார்" என்றார். "சரி நீங்க இங்க வாங்க இந்த டீ யையும் பிஸ்கட்டையும் சாப்பிடுங்க" என்றேன். "இதோ ஒரு நிமிஷத்தில் வருகிறேன்" என்று டாய்லெட்டினுள் திரும்ப போய் விட்டார்.

அஞ்சு நிமிஷத்தில் "சார் இங்க வந்து பாருங்க!" என்றார். பிளஷ்அவுட்டை அழுத்திப் பார்க்கச் சொன்னார். அழுத்தினேன். தண்ணீர் சர்ர்ர் என்று பிய்த்துக் கொண்டு அடித்தது. பிரமிப்புடன் மணியைப் பார்த்து "இந்த வேலைய எப்ப கத்துக் கிட்டீங்க" என்று கேட்டேன். "நேரம் போகாத நேரத்தில் இந்த வேலையையும் கத்துக்கிட்டேன்" என்றார்.

பெருநாள் நெருங்கி கொண்டிருந்த நேரம். வீட்டில், "புது பேண்ட் இன்னும் தைக்கக் கொடுக்கலியா" என்று தினம் கேட்டுக் கொண்டே இருந்தாங்க. இன்னும் பேண்ட் பிட்டே எடுத்தப் பாடில்லை. எப்ப நேரம் கிடைத்து எப்ப தைக்க கொடுக்கிறது.

பிறகு தான் டைலர்ஸயே போய் பார்த்தேன். எல்லோரும் ரொம்ப பிஸியாய் இருந்தார்கள். பெருநாள் முடிந்து பார்க்கலாமே என்றார்கள். பேண்ட் தைக்க கொடுக்காமல் போனால் வீட்டில் லெப்ட் அண்ட் ரைட் தான். மணிக்கு தெரிந்த ஆட்கள் இருப்பார்களா?? எதுக்கும் தான் விசாரித்துப் பார்ப்போமே என்று, சொன்னேன். அப்படியா?? பார்க்கலாம் சார்,,, என்று வீட்டுக்கு வந்தார். பேண்ட் துணியையும் அளவையும் கொடுங்க என்று வாங்கிக் கொண்டு போனார். "பெருநாளைக்கு போட்ட மாதிரி தான்" என்று குரல் கேட்டது!!

மறு நாள் தைத்த பேண்ட்டை கொண்டு வந்து கொடுத்து "போட்டுப் பாருங்க சார் சரியா இருக்கான்னு பார்ப்போம்னு" ஆச்சர்யப் படுத்தினார். உடுத்தி வந்து "எப்படி... மணி" என்றேன். "எல்லாம் நாம தச்சது சரி இல்லாமலா போய்டும்" என்றார். "அட" பிரமிப்பாய் இருந்தது.

"இத எப்படி கத்துக்கிட்டீங்க" என்றேன்.

"டூட்டி முடிஞ்சு ரூமில் நேரம் போகல. ஒரு மெஷின் வாங்கி போட்டு கத்துக் கிட்டேன்"

பின்னொரு தடவை வீட்டில் வாஷிங் மெஷின் ஓடவில்லை. மணியிடம் சொல்லலாம் என்று ஆளனுப்பி சொன்னேன். அந்த நேரம் அவருடைய செல் நம்பரை எங்கோ மறந்து வைத்து விட்டேன். வந்தார். அக்கு வேறு ஆணி வேறாக பிரித்துப் போட்டு விட்டார். ஆட்டோமேடிக் வாஷிங் மெஷின். இதன் பாகமொன்று வேலை செய்யவில்லை. இந்த பார்ட்ஸ் மார்கெட்டில் கிடைக்குமா என்று அவரே கேட்டுக் கொண்டு, எதுக்கும் போய் பார்க்கலாம் என்று அவரே புறப்பட்டுப் போய் மெனக்கெட்டு வாங்கியும் வந்து விட்டார். பிரித்துப் போட்ட பார்ட்ஸின் கிட்ட கூட சென்று நான் எட்டிப் பார்க்கவில்லை. ஆனால்

என்னை அருகே கூப்பிட்டு காட்டினார். அதனுள்ளே வயர்கள் சுற்றி இருந்த பகுதியில் மிகப் பெரிய ஒரு வெயிட்டான கல் ஒன்று இருந்தது. "என்ன மணி இவ்வளவு பெரிய தபூக் கல் இருக்கு" என்று கேட்டேன். "அது தான் மெஷினை அங்கிட்டும் இங்கிட்டும் நகர்ந்து ஓடாமல் நின்ற இடத்திலேயே நின்று ஓட வைக்கும்" என்றார்.

"அப்படியா?"

நான் மணியை கொஞ்சம் ஹாலில் இருக்கச் சொல்லிவிட்டு பெருமையாய் இவங்களை கூப்பிட்டு அந்த கல்லை காட்டினேன். "ஆவு கெச்சேனு எம்புட்டு பெரிய கல்லு உம்மாடி..." ன்னாங்க. போய்ட்டாங்க.

எல்லாவற்றையும் இணைத்து ஓடவும் வைத்து விட்டார். மணியிடம் ஒரு பழக்கம் இருக்கிறது. நாம் என்ன வேலை சொன்னாலும் செய்துவிட்டு காசு கொடுத்தால் வாங்க மாட்டார். அதனாலேயே அவரை கூப்பிட்டு எந்த வேலை சொல்லவும் ஒரு சங்கோஜமாவே இருக்கும்.

மணி போன பின் இவங்களிடம்

"ஆவு கெச்சேனு, அப்படின்னா என்ன? ன்னு கேட்டேன்.

"ம்ம்ம்ம்... அதுவா பொம்பளைங்க பாஷை" ன்னாங்க!

ஒருவேளை 'வாவ்' என்பதை தான் இப்படி சொன்னாங்களோ, தெரியலை! ஆனா முன்பொருமுறை விமல் பெட்சீட் விளம்பரம் ஒன்றில், "பெண்கள் தங்கள் மனோபாவங்களை பல வழிகளில் வெளிப்படுத்துகிறார்கள் அவற்றில் இதுவும் ஒன்று" என்று ஒரு வரி எழுதி இருக்கும். அது போல் தான் இதுவும் என்று நினைத்துக் கொண்டேன்.

எதையோ சொல்ல வந்து விட்டு நானும் வேறெதையோ சொல்லிக் கொண்டிருக்கிறேன். ஆமா இந்த மணி இன்னும் எனென்ன வேலைகள் எல்லாம் கற்று வைத்திருக்கிறார் என்று நேரம் வரும்போது ஒன்னொன்னா கேட்கணும். இதுமாதிரி நண்பர்கள் அமைவது ரொம்ப அபூர்வம்.

இங்கே பிலிப்பைன்ஸ் நாட்டுகாரர்களைக் கூட பார்த்திருக்கிறேன். ஆபீசில் பெரிய போஸ்டிங்கில் இருப்பார்கள். ஆனால் தச்சு வேலை, பெய்ண்டிங் வேலை, ஏஸி மெக்கானிசம் எல்லாம் தெரிந்து வைத்திருப்பார்கள். எப்படி என்று கேட்டால், எங்களுக்கு தொழில் கல்வி கற்ற பிறகு தான், மற்ற படிப்புக்கு அலவ்ட் என்கிறார்கள்.

அந்த வகையில் நாம் எங்கே இருக்கிறோம் என்பதும் இப்போது புரிகிறது. 'மணி' போல் இன்னும் பலபேர் நமது நாட்டில் நிறைய வேலைகள் கற்றுக் கொண்டு உருவாக வேண்டும்.