மனதோடு மட்டும்..!!
இன்று இங்கே (சவுதி-தம்மாம்) வெயிலின் தாக்கம் ரொம்ப அதிகமாக இருக்கிறது. 108 டிகிரி . (Feels like 118 F என்கிறார்கள்) ஹியூமிடிட்டி என்கிற தகிப்பு தாங்க முடியலங்க. குளித்து விட்டு டீக்காக டிரஸ் பண்ணிக் கொண்டு வெளியில் நடந்து வரும் போதே இன்னொரு முறை குளித்துக் கொண்டே வருவது போல் ஒரு ஃ பீலிங்கா இருக்கு.
ஆபீஸ் வந்து பார்த்தால் டிரஸ் எல்லாம் தொப்பலாக நனைந்து உடம்போடு ஒட்டி, ஏசியின் குளிரில் திரும்பவும் உடம்பு குளிராகி விடுகிறது. இப்படியானால் உடம்புக்கு என்னாகும். நமது உடம்பை
விட்டுத் தள்ளுங்கள். வயதானவர்கள்??
பில்டிங் வேலைகள் பெரும்பாலானவைகள் பெரிய பெரிய விளக்குகளை எரிய விட்டுக் கொண்டு இரவில் நடைபெறுகின்றன. என்றாலும் என்னா ஒரு கிளைமேட். இந்த நோன்பு நாளின் அவஸ்தை சொல்லி மாளலை.
இது இவ்வாறிருக்க இதே வெப்பத்தினால் நேற்றும் அதற்கு முந்திய தினமும் இங்கே எங்கள் வங்கியில் நடந்த சம்பவத்தை பகிர்கிறேன்.
முந்திய தினம் நல்லக் கூட்டம். அவ்வளவு கூட்டம் உள்ளே
புகுந்தால் ஏசி உருப்படியாய் வேலை செய்யாது. மக்கள் வியர்வையால் வழிகிறார்கள். என்ன வென்று சொல்வது. அந்த சமயம் ஒருவர் மயக்கம் போட்டு விழுந்து விட்டார். பதட்டத்தில் எல்லோரும் கூட்டமாய் அவரை சுற்றி நின்றுக் கொண்டு காற்று கூட அவர் மேல் பட விடாமல். (என்னா ஒரு அக்கறை??) எல்லாரையும் சத்தம் போட்டு நகற்றி விட்டு அவர் முகத்தில் நீர் தெளித்து, சேரில் தூக்கி உட்கார வைத்து (தாகத்துக்கு நீர் கொடுக்கலாம் என்றால் (பகலில்) நோன்பா இருப்பாரோ என்ற ஒரு அச்சம் வேறு)
அங்கு நின்ற ஒரு அரபுக்காரர் சக்கரையை நீரில் கரைத்து வாயில் ஊற்று என்றார். நாங்கள் நோன்பு காரணத்தை சொன்னவுடன் அவர் அமைதியானாலும், மயக்கமுற்றவரை கேட்டு பார்ப்போமே என்று கேட்டோம். அவர் வேண்டாமென்று மறுத்து விட்டார். அப்படியே அவர் நோன்பில்லாவிட்டாலும், அவர் டயாபெடிஸ் பேஷண்டாக இருந்தால் என்ற கேள்வியும் எழுந்தது.
ஹாஸ்பிடலுக்கு அழைத்து அல்லது ஆம்புலன்ஸ் சொல்லலாம் என்றவுடன் அதையும் அவர் மறுத்து விட்டார். நெடுநேரம் உழற்றியபடியே உட்கார்ந்திருந்தார். பாவமாக இருந்தது. அவர் நம் இந்திய தேசத்துக் காரார்.
நேற்று இரவு இது மாதிரி ஒரு சம்பவம் வேறு மாதிரியாக. வங்கியில் கூட்டம் அலைமோதிய நேரம். கூட்டத்தை கடந்து கவுண்டரில் பணம் கட்டிவிட்டு வெளியே போக முனைந்த பிலிப்பைனி நாட்டை சேர்ந்த ஒருவர், சரேலென்று குப்புற விழுந்தார். நச்சென்று முகம் தரையில் அடித்து, மூக்கிலிருந்தும் வாயிலிருந்தும் ரத்தம் சிதறியது. பதறி விட்டோம். (என்ன இது பழம் பழுத்து விழுவது போல் மனிதர்கள் விழ ஆரம்பித்து விட்டார்கள் என்று மனதில் நினைவு ஓடுகிறது)
அதற்குள் துள்ளி வெளியே ஓடிவந்த எங்கள் வங்கி கேஷியர் (ஏமன் தேசத்து அரபுக்காரர்) அந்த நபரை ஆதரவா தூக்கி, அவர் வாயிலும் முகத்திலும் வழியும் ரத்தத்தை துடைத்து அவரை புத்துணர்ச்சி யாக்கி, தரையில் வழிந்திருந்த ரத்தத்தை துடைத்து, சிறிது நேரத்தில் அவ்வளவும் கண் முன்னே நடக்கிறது. மனிதர்களில் பலர் ரமளானின் நன்மைகளை எப்படியெல்லாம் சம்பாதித்துக் கொள்கிறார்கள்.
நமக்கு தெரிந்தே இவைகள் நடக்கும் போது, நமக்கு தெரியாமல் என்னென்ன நடந்திருக்கும். நினைக்கவே பயமா இருக்கு. இந்த
global warming ஐ நினைத்தால்....!!
இவ்வளவு கூட்டத்துக்கும் அலைமோதலுக்கும் நடுவேயும் பழகிய தெரிந்த முகங்கள் யாரவது வந்து விட்டால் பேசக் கூட வாய்ப்பில்லாது போகும் தருணம் உண்டு. அதுவும் நேற்றே நடந்தது. தல செ.சரவணக்குமார் வந்து தலை காட்டினார். (உண்மையான தலையை தான்!! தொப்பி போட்டு மறைக்காமல்!) நெடுநேரம் அவரோடு கனிவாய் பல விஷயங்கள் பேச நினைத்தாலும், இது மாதிரி சூழ்நிலைகள் தவிர்க்க முடியாததாகி விடுகிறது. இதை புரிந்து கொண்ட அந்த நல்ல உள்ளம் பிறிதொரு நாள் வருவதாக சொன்னது. இந்த ஆற்றாமையை அன்பு நண்பர்கள் ஸ்டார்ஜன், "சிநேகிதன்" அக்பரிடமும் தான் சொல்லி ஆற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது.
எத்தனையோ hyper market கள் இருந்தும் நோன்பு நாளில் பொருட்களின் விலை இங்கே சற்றே கூடுதலாகி விடுகிறது. அதில் பழங்கள் முதலிடத்தை வகிக்கிறது. எல்லாமே இரண்டு மடங்கு மூன்று மடங்கு. ஸீசன் பிசினெஸ் என்பது இது தானோ??





