facebook

சனி, ஆகஸ்ட் 28, 2010

நேற்று நடந்தது??

                                                                                   

நேற்று நடந்தது??


வாரா வாரம் வியாழன் ஆனால் ஒரு ஆரவாரம் தான். மறு நாள்  வெள்ளிக்கிழமை எல்லோருக்கும் லீவாச்சே. அதை நினைத்து ஒரு சந்தோசம். அது மாதிரி தான் ஒரு நண்பரின் தேவை விஷயமாய் இன்னொரு நண்பரை பார்த்து விட்டு வரும்போது அந்த நண்பர் சொன்னார் இன்னிக்கி நைட் அல் கோபார் போலாம். பின்னிரவு சொற்பொழிவு நடக்கும் அதைக் கேட்டு விட்டு சஹர் சாப்பாடு (காலைப் பொழுது விடிவதற்கு சற்று முன் வரை) அங்கேயே சாப்பிட்டு விட்டு வந்து விடலாம் என்று சொன்னார். சாப்பாடாச்சே விடலாமா ?? விடக் கூடாது. போய் விட்டேன். என்ன பார்க்கிறீங்க நாமெல்லாம் அப்படி தான்!!

போய்ப் பார்த்தால் உருதுவில் சொற்பொழிவு நடந்துக் கொண்டி ருந்தது. அட வெளங்காதவனே அத மொதல்லேயே சொல்லி இருக்கக் கூடாது என்று நண்பனை திட்டி விட்டு (என்னையும் தான்), ஆனாலும் புரிந்த மாதிரி உட்காராவிட்டால் தமிழ் கூறும் நல்லுலகுக்கு இழுக்காச்சே, உட்கார்ந்து விட்டேன்!! அப்ப தான் எனக்கு நன்கு பரிட்சையமான குடும்ப நண்பர் ஒருவர் அங்கு அவருடைய பரிவாரங்களோடு வந்திருப்பது கண்டு அப்படியே சொற்பொழிவின் சப்தமில்லாத பகுதிக்கு அவரை அழைத்துச்
சென்று பேசிக் கொண்டிருந்தேன். அப்ப தான் அந்த செய்தியை சொன்னார். அது இது.

நேற்று பிற்பகல் (3 30 மணி) அசர் தொழுது விட்டு சற்று கண்ண சரலாம் என்று படுத்து சிறிது நேரமே உறங்கி இருப்பேன். அப்ப எனக்கு ஒரு அலை பேசி வந்தது. அதை எடுத்துப் பேசும் போது ஒரு அரபு காரன் பேசினான். என்னுடைய அலை பேசி நம்பரைச் சொல்லி "இது யார் நம்பர்" என்று கேட்டான். என்னுடையது தான் என்றேன். பெயரென்ன என்றான். நான் என் பெயரைச் சொன்னேன். எத்தனை வருஷமா யூஸ் பண்ணிக் கிட்டிருக்கே என்று கேட்டான். பத்து வருஷமா என்றேன். அப்படியா என்று நிறுத்தி "இந்த நம்பருக்கு லக்கி ப்ரைஸ் அடிச்சிருக்கு என்றான். எனக்கு தூக்கம் கலஞ்சுடுசுங்க. என்னது என்று சொல்லி பட்டென்று எழுந்து உட்கார்ந்து விட்டேன்.

ரெண்டு லட்சம் ரியால் (இந்திய ரூபாய் மதிப்பு 25 லட்சம்) கார் உனக்கு உன் செல் நம்பருக்கு லாட்டரி அடிச்சிருக்கு. கார் வேணுமா அல்லது கேஸா வேணுமா என்றான். நான் கேஸாவே கொடு கார் வேணாம் என்று சொன்னேன். (இந்த சப்தம் கேட்டு வீட்டில் மனைவி பிள்ளைகள் அனைவரும் என் முன் குழுமி விட்டனர்) அப்படியா என்று சொல்லி, இந்த நம்பரை நோட் பண்ணிக்கோ என்று சொன்னான் ( 8996601 ) பண்ணிக் கொண்டேன். உடனே உன் சிம்மை கழட்டிப் பாரு அந்த நம்பர் இருந்தா அந்த ப்ரைஸ் உனக்கு தான். நீ செக் பண்ணிட்டு சரியா இருந்தா எனது செல்லுக்கு திரும்ப பேசு என்று சொல்லி கட் பண்ணிட்டான்.

கட கட வென்று செல்லை ஓபன் பண்ணி சிம்மை கழட்டிப் பார்த்தா அந்த நம்பர் இருக்கு. எங்களுக்கு சந்தோஷத்தில் கையும் ஓடல காலும் ஓடல. இங்கு வீட்டில் ஆளாளுக்கு ஏதேதோ பேசிக் கொண்டிருக்க, நான் திரும்ப அந்த அரபுக்காரனுக்கு செல் பண்ணினேன். அவன் தான் எடுத்தான். பார்த்தியா இருக்கா என்றான்; இருக்கு என்றேன். அப்ப உனக்கு கேஷ் தான் வேணுமா? அப்படியானால் ஒரு குறிப்பிட்ட பேங்க் பெயரைச் சொல்லி அங்க வந்து தான் கலக்ட் பண்ணிக்கணும் சரியா என்றான் ; சரி என்றேன். திரும்பவும் உனக்கு பேங்கில் அக்கவுண்ட் இருக்கா என்றான்; இல்லை என்றேன்.

நான் உடனே கலக்ட் பண்ரதுக்குள்ள "சீக்ரட் கோட் நம்பர்" ஏதேனும் இருக்குமே அதைக் கொடு என்றேன். அப்ப தான் அவன் சொன்னான். அது வேணும்னா நீ ஒரு காரியம் பண்ணனும் என்றான் ; என்ன?? என்றேன். 300 ரியால் மதிப்புள்ள sawa  டெலிபோன் கார்டு 4  வாங்கி என்னுடைய மொபைல் நம்பருக்கு top up பண்ணு தருகிறேன் என்றான். உஷாராகி விட்டேன்.

என்னிடம் அவ்வளவு பணமெல்லாம் இல்லை ; நான் சாதா கூலி தொழிலாளி என்றேன். அவன் விடாப் பிடியாக, இல்லையென்றால் உனக்கு பரிசு கிடைக்காது என்றான்.

இதற்கிடையே வீட்டில் என் பிள்ளைகள் மனைவி உள்பட நான்கு பேரும் அவரவர்களுடைய செல்லை ஓபன் செய்து சிம்மை கழட்டிப் பார்க்கையில் அத்தனையிலும் மேற்படி குறிப்பிட்ட நம்பர் இருப்பதை ரகசியமாக என்னிடம் தெரிவித்தார்கள். (அந்த நம்பருக்கு பக்கத்தில் டேஷ் போட்டு 48000 என்று சில நம்பர்கள் இருக்கும் என்பது வேறு விஷயம்)

நான் அந்த அரபுக்காரனுக்குப் பிடி கொடுக்காததால், செல் கை மாறி ஒரு பாகிஸ்தானியிடம் போனது. அவன் "இந்த ரமலான் நேரத்தில் அல்லாஹ் உனக்கு மிகப் பெரிய ரஹ்மத்தும் பரக்கத்தும் செய்திருக்கிறார் சகோதரா! அதனால நீ கொஞ்சம் கூட தாமதிக்காது அந்த அரபுக்காரர் சொன்னதை செய். உனக்கு மிகப் பெரிய தொகை கிடைக்க இருக்கிறது" என்றான்.

(இதற்கிடையே என்னிடம் பேசிகொண்டிருக்கும் போதே ஒவ்வொரு விவரமும் கம்பியூட்டரில் சரி பார்ப்பது போல் கீ போர்ட் சப்தம் வருவது மாதிரி  பிரமையை உருவாக்கி கொண்டிருந்தான்கள்)

நான் ரூட்டை மாற்றினேன். "ஒன்று வேணும்னா செய்யலாம், அதாவது எனக்கு கிடைக்கும் தொகையில் ஐயாயிரம் ரியால் வேணும்னா கழித்துக் கொள்ளுங்கள்" என்றேன். டக்கென்று அவன் சுருதி குறைந்தது. ரெண்டு 300 ரியால் கார்டாவது வாங்கி ஃபார்வர்ட் பண்ணு என்றான். பத்தாயிரம் ரியால் வேணும்னாலும் கழித்துக் கொண்டு கொடு, என்னிடம் பைசா காசு இல்லை என்றேன். டக்கென்று செல்லை கட் பண்ணி விட்டான்கள்.

என்னங்க இது!  முன்பு   இன்டர்நெட்டில் வந்து தான் நைஜீரியாக் காரன்கள் கொள்ளையடிப்பதாக கேள்விப் பட்டிருக்கிறேன். இது ரொம்ப மோசமாவுல தெரியுது.

டிஸ்கி : மக்களே உஷாரா இருங்கள்!! எல்லோரையும் உஷார்ப்
படுத்துங்கள்!  இது நமது பொறுப்பான கடமையும் கூட..!

 

புதன், ஆகஸ்ட் 25, 2010

திரவியம் தேடு!!!

       
திரவியம் தேடு
என்று சொல்லி  நம்மை வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்து விட்டார்கள்.  அனுப்பி வைத்த சொந்தங்களை  நாம்  பார்க்க ஆசைப் படாவிட்டாலும், அவர்கள் நம்மைப் பார்க்க ஆசைப் பட மாட்டார்களா?? அதற்காக மனைவி யையும், பிள்ளைகளையும் சொந்தங்களையும் பிரிந்து  வாடத்தான் வேண்டுமா? இது கேள்வி. பல நேரங்களில் இது மாதிரி எண்ணங்கள் மனதில் தோன்றி மறைந்தாலும் விடை தெரியாத வகையில் தானிருக்கிறது

இங்கே சம்பாதிக்க வந்திருக்கும் பல பேர் குடும்ப சூழ்நிலைகளினாலோ  அல்லது கடன் சுமையாலோ இன்னும் சில பேர் சம்பாதித்து சொத்து சேர்ப்பதற்க்கென்றே (குடும்பத்தை பிரிந்திருந்தாலும் பரவாயில்லை என்று) வந்திருப்பவர்களை நாம் சந்தித்து பேசும் போது ரெண்டு வருடமாச்சு, மூணு வருடமாச்சு, அஞ்சு வருடமாச்சு என்று சர்வ சாதாரணமாகச் சொல்கிறார்கள். சிலர் பத்து வருடமாகக் கூட ஊருக்கே போகாமல் இங்கே இருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

ஏன் இப்படி  இவர்கள்  என்று நம் முன் ஒரு கேள்வி எழுந்து நிற்கிறது???

எனக்கு தெரிந்த ஒரு நண்பர் கல்யாணம் செய்துக் கொண்டு இங்கே
வந்தவர் ஐந்து வருடம் ஊருக்கே போகலை. இவருடைய செயல்கள் என்ன வென்றால் நன்றாக சம்பாதிப்பது நண்பர்களுக்கு செலவு செய்ய வேண்டியது ஊருக்கு குறிப்பிட்ட ஒரு தொகையை அனுப்ப வேண்டியது இரவில் லேசாக வாய்வழி போதை ஏற்றிக் கொள்ள வேண்டியது.

இப்படியே அவருடைய காலங்கள் போய்க் கொண்டிருக்கிற வேளையில் அமைதியா இருந்த அவருடைய மனைவி உஷாராகி கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டது. “ஊருக்கு வர்றீங்களா இல்லையா” என்பது தான்?? நியாயம் தானே.

ஊருக்கு சென்ற யாரோ அவர் மனைவியிடம் அவரைப் பற்றி ஏதேதோ போட்டுக் கொடுக்க,, அவரோடு பழகிய நம்மைய நாட்டாமையாக்கி புட்டாய்ங்க. அடப் அடப்பாவிகளா!! ம்ம்.. நமக்கு வேண்டியது தான் என்று நம் நிலையை நினைத்துக் கொண்டேன்.

அப்ப நான் ஊரில் இருந்தேன். கல்யாணம் முடிந்து ஒரு மாசமே இருந்து விட்டு போன மனிதர் ஐந்து வருடமாகியும் ஊர் வரலை என்றால், ஒரு மனைவியின் ஆதங்கம் எப்படி இருக்கும்?? நீங்களே சற்று யோசித்துப் பாருங்கள். இதற்கிடையே இவர் சம்பாதித்துத் தான் அந்த  குடும்பம் ஓடனும் என்ற அவசியமில்லை. சொந்த அத்தைப் பொண்ணு தான். ஓரளவு வசதியாக உள்ளவர்கள்.

நான் இங்கு வந்த உடன் அவரிடம் அன்பாய் சொல்லிப் பார்த்தேன், அதட்டி சொல்லிப் பார்த்தேன், மிரட்டி சொல்லியும் பார்த்தேன். (நாம நாட்டாமன்னா என்ன பெரிய ரௌடிக் கூட்டமா?? பச்ச மண்ணுங்க) காரியம் நடக்கலை...

திடீரென்று அந்த பொண்ணு இன்னொரு குண்டை தூக்கிப் போட்டது. ஒன்று அவர் ஊர் வரணும் இல்லை என்றால் எதையாவது குடித்து  என்னை மாய்த்துக் கொள்வேன் என்று. மனிதர் லேசாக அசைந்த மாதிரி இருந்தது பிடித்துக் கொண்டேன். டூட்டி முடிந்து போகும் போதும் வரும் போதும் மனிதரை மெல்ல மெல்ல அசைத்துக் கொண்டிருந்தேன்.

அவர் சொந்தமாக கடை வைத்திருந்த படியால் சரியான ஸ்பான்சர் அமையாதலால் மனிதர் மதில்மேல் பூனையாகிக் கொண்டிருந்தார். இப்படியாக நாளும் பொழுதும் ஓடி ஆறு மாதத்திற்கு மேலாகி விட்டது.

இவரே என்னிடம் காசுக் கொடுத்து இவர் மனைவியிடம் போனில் பேசச் சொல்வார். இவர் முன்னாடியே இவர் சொல்லச் சொன்னதை சொல்வேன். ஏனென்றால் இவர் பேச்சை அது நம்புகிற மாதிரி தெரியவில்லை.

கடைசி அஸ்திரம் போட்டது பாருங்கள், நான் திருச்சபையில் சேர்ந்து கன்யாஸ்திரி ஆகப் போகிறேன் என்று சொல்லி ஊரிலிருந்து புறப்பட்டு சென்னைக்கு அவங்க அக்கா வீட்டுக்கு வந்து விட்டது. மனிதர் மிரண்டு தான் போனார். நானும் கரையாய் கரைத்த கரைப்புக்கு பலன் இருந்தது.

பிறகு ஊருக்குப் போனார் - இருந்தார் - வந்து விட்டார்.

நான் இந்த தடவை நான் ஊருக்குப் போய் இருந்த போது (எங்க ஊருக்கு பக்கம் தான் அவர் ஊரும்)  எங்கள் வீட்டில் ஒரு விசேஷம், அதற்கு அழைக்கப் போய் இருந்தோம். அப்ப தான் அவர் மனைவியை முதல் முதல் பார்க்கிறேன். நீங்க ஊருக்கு போன உடனே “நீங்க ஊருக்கு போனவுடனே மாமாவ வரச் சொல்லுங்க” என்றது. கேட்க நம் மனசுக்கே பாவமா தெரிந்தது.

ஆச்சுங்க ஏழு வருஷம் போனது தெரியல. பெண் குழந்தை பிறந்து வளர்ந்து அழகாய் ஸ்கூலுக்கு போய்க் கொண்டிருக்கிறது.அந்த குழந்தையைக் கூட இன்னும் போய் பார்த்த பாடில்லை.அவருக்கா ஆர்வம் வர வேண்டாமா?? கடந்த இரண்டு வருடமாக ஊருக்குப் போவதாக சொல்லி எடுத்த பேச்சு இதோ அதோ என்று காலம் கடத்திக் கொண்டிருக்கிறார். போன பாடில்லை!! என்னச் சொல்வது??

மதங்களை போதித்துச் சென்ற மாமனிதர்கள் கூட பிரிந்து வாழச் சொல்ல வில்லை. சேர்ந்து வாழும் தத்துவத்தை தான் சொல்லி விட்டு சென்றார்கள்.

பாடம் என்பது படித்து தான் வரணும் என்பதல்ல. அனுபவத்திலும் வரலாம் என்பதற்காகவே இதை உங்கள் பார்வைக்கு கொண்டு வந்தேன். இப்படியும் மனிதர்கள் வாழ்கிறார்கள். இருக்கிறார்கள். நீங்களும் தெரிந்துக் கொள்ளுங்கள்.



ஞாயிறு, ஆகஸ்ட் 22, 2010

கவனமின்மை இதுவே உண்மை!!


                                                                                                                                                                                                    

கவனமின்மை இதுவே உண்மை!!

குழந்தைகளை கண்ணுக்கு கண்ணாக பள்ளிக் கூடங்களில் கொண்டு போய் சேர்ப்பித்து திரும்பவும் அழைத்து வரும் பொறுப்பு வேன் மற்றும் பஸ் டிரைவர்களின் தலையாயக் கடமை ஆகும். டிரைவர்களின் பொறுப்பு என்பது ரோட்டில் வண்டியை விரைவில்லாமல் மெதுவாய் கவனமாய் ஓட்டுவதில் மட்டுமல்ல மற்றதிலும் பொறுப்பு வேண்டும் என்பது தான்.

பள்ளிக்கூடத்திற்கு அனுப்பும் தன்னுடைய குழந்தைகளை பராமரித்து அனுப்புவது பெற்றோர்களின் கடமை மட்டுமல்ல. அதை ஒரு பொறுப்பான பஸ் அல்லது வேன் நிர்வாகியிடம் ஒப்படைத்து விட்டு நம் கடமை முடிந்து விட்டது என்று அலட்சியமாக இருந்து விடக் கூடாதே என்பதற்காவே பதற வைக்கும் இந்தப் பதிவு.

இப்படி தான் கடந்த மாதத்திற்கு முந்திய மாதம் பள்ளிக்கூடம் சென்ற 5 வயது பச்சிளம் தளிர் மரணித்து போனது இங்குள்ள (சவுதி)  தம்மாம் மாவட்டத்தில் அனைவரிடமும் அதிர்வலையை ஏற்படுத்தியது. ஸ்கூலுக்கு வேனில் போன குழந்தை மரணித்தது எப்படி??

வேனில் சென்ற குழந்தை வேனை விட்டு இறங்க வில்லை. உடல் அசதியோ, இல்லை தூங்கிக் கொண்டிருந்ததோ தெரியவில்லை, மற்றக் குழந்தைகள் இறங்கி கிளாசுக்கு போன பின்,  இது கடைசி சீட்டிலேயே படுத்திருந்தது போலும். டிரைவரும் வண்டியை ஒரு முறைக்கிருமுறை நோட்டமிட  தவறி  ஓரிடத்தில் பார்க் செய்து பூட்டி விட்டு வேறெங்கோ சென்று விட்டார்.

வெயில் சூட்டின் தாக்கமும், ஏசி வண்டி யாதலால் லாக் செய்யப் பட்டிருந்த கதவை தள்ளித் திறக்க (தெரிய/முடிய) வில்லை. இது தான் நடந்திருக்க வேண்டும். மூச்சு திணறல் ஏற்ப்பட்டு குழந்தை கத்தி இருக்கக் கூடும். பூட்டிய கதவுகளால் அது வெளியில் நின்றவர்களுக்குக் கூட கேட்டிருக்க வாய்ப்பில்லை. காரணம் -

ஸ்கூலுக்கு சற்று தூரத்தே பார்க் செய்யப் பட்டிருந்ததாலும் யார் கண்ணிலும் பட வாய்ப்பில்லாமல் போய்விட்டது எனலாம். வெளி சுவாசக் காற்று கிடைக்காததால், குழந்தை தன் சுவாசத்தை நிறுத்திக் கொண்டது. பார்த்த நெஞ்சு அனைத்தும் பதைப் பதைத்து போனது தான் நிஜம்.


                                                                                                                      
  
இது போன்றே இன்னொரு சம்பவமும் பின் பனிக் காலத்தில் நடந்தது. காரில் கூட்டி வந்த குழந்தை அது தானே கீழே இறங்கி கதவை சாத்தியதும், டிரைவர் காரை சற்று முன்னெடுத்து ரிவர்ஸ் எடுத்திருக்கிறார். அவ்வளவுதான் "வீல்" என்ற சப்தம். குழந்தை காலி. எப்படி?? கீழே இறங்கியக் குழந்தை பென்சில் பாக்ஸிலிருந்து ஏதோ தவறி விழ, உட்கார்ந்து எடுத்துக் கொண்டிருந்தது, டிரைவருக்கு தெரியவில்லை. அவ்வளவு தான்.

நான் ஏதோ கதை சொல்லிக் கொண்டிருக்கிறேன் என்று இதைப் படிக்காதீர்கள். ஏனிந்த தவறுகள் எப்படி நடை பெறுகின்றன??.

பெறும்பாலான தவறுகள் பெற்ற நம்மிடம் தான் இருக்கின்றன என்பது கணிப்பு.  எப்படி??  கல்வி நிர்வாகத்தினால் நடத்தப்படும் அல்லது கவர்ன்மெண்ட்டால் நிர்வகிக்கப் படும் பஸ்சிலோ வேனிலோ குழந்தைகளை அனுப்பாமல், பிரைவேட் வேனில் அனுப்புகிறோம் என்பது குற்றச்சாட்டு.  ஏன்??  விலை மலிவு என்று சிம்பிளாகச் சொன்னாலும், நமது வேலை பரபரப்பில் இவற்றை எல்லாம் உட்கார்ந்து சிந்திக்க தவறி விடுகிறோம் என்பதே உண்மை. பொறுப்புள்ள பெற்றோர்களாகிய நாம் இவைகளை பற்றி சிந்திக்க கடமைப் பட்டிருக்கிறோம்.

பொறுப்பான வேன் டிரைவர் என்றால் வண்டியில் உள்ள அனைத்துக் குழந்தைகளும் இறங்கி விட்டதா என்று பார்த்து, அத்தனையும் அழைத்து சென்று (கைபிடித்து, முடியாவிட்டால் வழி காட்டி) ஸ்கூலில் விட்டப் பின்பே இவர் வண்டியை நோக்கி  வர வேண்டும். அது மாதிரி ஸ்கூல் முடிந்ததும்  பொறுப்பாய் அழைத்து வந்து வீட்டில் விட வேண்டும். எங்கே நடக்கிறது இது மாதிரி யெல்லாம்??  தனிக் காரில் அழைத்து வரப் படும் குழந்தைகள் கூட இது மாதிரி பார்த்து பார்த்து கையாளப் படுவதில்லை என்பதே உண்மை.

ஒரு சில டிரைவர்கள் அது மாதிரி செய்கிறார்கள் என்றால் நீங்களே அவர்களை நாலு பேர்கள் முன்னிலையில் கௌரவியுங்கள். அப்ப தான் ஒரு விழிப்புணர்வு ஏற்படும்.  இனி இந்த மாதிரி செய்திகள் நம் கண்ணில் படாமல் இருந்தாலே நாம் பாக்கியம் செய்தவர்கள் என்று நினைத்துக் கொள்ள தோன்றுகிறது.


1) Sense of Responsibility.
2) Not Letting A Child Walk in Front of the Van or Bus
3) Making sure that All Children are off the Vehicle at the time of Drop Off.
4) Driving Slowly
5) Not allow Tinted Windows.
6) Not allow children to peek out of the windows when the vehicle is moving.
7) Maintain their vehicles and make sure that the Air Condition Works Fine.


Dear All: Please add to the above list and let us educate.

LET US MAKE SURE THAT WE NEVER HAVE TO READ SUCH NEWS AGAIN.

செவ்வாய், ஆகஸ்ட் 17, 2010

மனதோடு மட்டும்..!!

                                                                           


                                                           




மனதோடு மட்டும்..!!


ன்று இங்கே (சவுதி-தம்மாம்) வெயிலின் தாக்கம் ரொம்ப அதிகமாக இருக்கிறது. 108 டிகிரி . (Feels like 118 F என்கிறார்கள்) ஹியூமிடிட்டி என்கிற தகிப்பு தாங்க முடியலங்க. குளித்து விட்டு டீக்காக டிரஸ் பண்ணிக் கொண்டு வெளியில் நடந்து வரும் போதே இன்னொரு முறை குளித்துக் கொண்டே வருவது போல் ஒரு ஃ பீலிங்கா இருக்கு.

ஆபீஸ் வந்து பார்த்தால் டிரஸ் எல்லாம் தொப்பலாக நனைந்து உடம்போடு ஒட்டி, ஏசியின் குளிரில் திரும்பவும் உடம்பு  குளிராகி விடுகிறது. இப்படியானால் உடம்புக்கு என்னாகும். நமது உடம்பை
விட்டுத் தள்ளுங்கள். வயதானவர்கள்??

பில்டிங் வேலைகள் பெரும்பாலானவைகள் பெரிய பெரிய விளக்குகளை எரிய விட்டுக் கொண்டு இரவில் நடைபெறுகின்றன. என்றாலும்  என்னா ஒரு கிளைமேட். இந்த நோன்பு நாளின் அவஸ்தை சொல்லி மாளலை.

இது இவ்வாறிருக்க இதே வெப்பத்தினால் நேற்றும் அதற்கு முந்திய தினமும் இங்கே எங்கள் வங்கியில் நடந்த சம்பவத்தை பகிர்கிறேன்.

முந்திய தினம் நல்லக் கூட்டம். அவ்வளவு கூட்டம் உள்ளே
புகுந்தால் ஏசி உருப்படியாய் வேலை செய்யாது. மக்கள் வியர்வையால் வழிகிறார்கள். என்ன வென்று சொல்வது. அந்த சமயம் ஒருவர் மயக்கம் போட்டு விழுந்து விட்டார். பதட்டத்தில் எல்லோரும் கூட்டமாய் அவரை சுற்றி நின்றுக் கொண்டு காற்று கூட அவர் மேல் பட விடாமல். (என்னா ஒரு அக்கறை??) எல்லாரையும் சத்தம் போட்டு நகற்றி விட்டு அவர் முகத்தில் நீர் தெளித்து, சேரில் தூக்கி உட்கார வைத்து (தாகத்துக்கு நீர் கொடுக்கலாம் என்றால் (பகலில்) நோன்பா இருப்பாரோ என்ற ஒரு அச்சம் வேறு)

அங்கு நின்ற ஒரு அரபுக்காரர் சக்கரையை நீரில் கரைத்து வாயில் ஊற்று என்றார். நாங்கள் நோன்பு காரணத்தை சொன்னவுடன் அவர் அமைதியானாலும், மயக்கமுற்றவரை கேட்டு பார்ப்போமே என்று கேட்டோம். அவர் வேண்டாமென்று மறுத்து விட்டார். அப்படியே அவர் நோன்பில்லாவிட்டாலும், அவர் டயாபெடிஸ் பேஷண்டாக இருந்தால் என்ற கேள்வியும் எழுந்தது.

ஹாஸ்பிடலுக்கு அழைத்து அல்லது ஆம்புலன்ஸ் சொல்லலாம் என்றவுடன் அதையும் அவர் மறுத்து விட்டார். நெடுநேரம் உழற்றியபடியே உட்கார்ந்திருந்தார். பாவமாக இருந்தது. அவர் நம் இந்திய தேசத்துக் காரார்.

நேற்று இரவு இது மாதிரி ஒரு சம்பவம் வேறு மாதிரியாக. வங்கியில் கூட்டம் அலைமோதிய நேரம். கூட்டத்தை கடந்து கவுண்டரில் பணம் கட்டிவிட்டு வெளியே போக முனைந்த பிலிப்பைனி நாட்டை சேர்ந்த ஒருவர், சரேலென்று குப்புற விழுந்தார். நச்சென்று முகம் தரையில் அடித்து, மூக்கிலிருந்தும் வாயிலிருந்தும் ரத்தம் சிதறியது. பதறி விட்டோம். (என்ன இது பழம் பழுத்து விழுவது போல் மனிதர்கள் விழ ஆரம்பித்து விட்டார்கள் என்று மனதில் நினைவு ஓடுகிறது)

அதற்குள் துள்ளி வெளியே ஓடிவந்த எங்கள் வங்கி கேஷியர் (ஏமன் தேசத்து அரபுக்காரர்) அந்த நபரை ஆதரவா தூக்கி, அவர் வாயிலும் முகத்திலும் வழியும் ரத்தத்தை துடைத்து அவரை புத்துணர்ச்சி யாக்கி, தரையில் வழிந்திருந்த ரத்தத்தை துடைத்து, சிறிது நேரத்தில் அவ்வளவும் கண் முன்னே நடக்கிறது. மனிதர்களில் பலர் ரமளானின் நன்மைகளை எப்படியெல்லாம் சம்பாதித்துக் கொள்கிறார்கள்.

நமக்கு தெரிந்தே இவைகள் நடக்கும் போது, நமக்கு தெரியாமல் என்னென்ன நடந்திருக்கும். நினைக்கவே பயமா இருக்கு.  இந்த
global warming ஐ நினைத்தால்....!!

இவ்வளவு கூட்டத்துக்கும் அலைமோதலுக்கும் நடுவேயும் பழகிய தெரிந்த முகங்கள் யாரவது வந்து விட்டால் பேசக் கூட வாய்ப்பில்லாது போகும் தருணம் உண்டு. அதுவும் நேற்றே நடந்தது. தல செ.சரவணக்குமார் வந்து தலை காட்டினார். (உண்மையான தலையை தான்!! தொப்பி போட்டு மறைக்காமல்!) நெடுநேரம் அவரோடு கனிவாய் பல விஷயங்கள் பேச நினைத்தாலும், இது மாதிரி சூழ்நிலைகள் தவிர்க்க முடியாததாகி விடுகிறது. இதை புரிந்து கொண்ட அந்த நல்ல உள்ளம் பிறிதொரு நாள் வருவதாக சொன்னது. இந்த ஆற்றாமையை அன்பு நண்பர்கள் ஸ்டார்ஜன், "சிநேகிதன்" அக்பரிடமும் தான் சொல்லி ஆற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது.

எத்தனையோ hyper market கள் இருந்தும் நோன்பு நாளில் பொருட்களின் விலை இங்கே சற்றே கூடுதலாகி விடுகிறது. அதில் பழங்கள் முதலிடத்தை வகிக்கிறது. எல்லாமே இரண்டு மடங்கு மூன்று மடங்கு. ஸீசன் பிசினெஸ் என்பது இது தானோ??
                                        
                                      
                                 
                   
 
                       

ஞாயிறு, ஆகஸ்ட் 15, 2010

வியாழக் கிழமையானா வரும் ஜுரம்! !

                                                                          

கல்யாணமாகியும் வெளிநாடுகளில், மனைவி மக்களை விட்டு தனித்து வாழும் இளைஞர்கள் அனைவர்களும் பேச்சிலர்கள் தான். என்றாலும் வியாழக் கிழமை வந்து விட்டால் எப்ப வேலை முடியும் என்ற ஒரு ஆர்வம். வேலை முடிந்து அவரவர் ரூமில் போய் ரெஸ்ட் எடுத்து விட்டு, இரவு வரும் போது இருக்கும் ஆரவாரம். ரெக்ரியேசன்களில், ஜிம் களில், கூட்டம் கூட்டமாய்...! DVD கேம் களில் ஒரு கும்மாளம். சினிமாப் படங்கள் பார்த்துக் கொண்டு திரியும் ஒரு ரசிக்கும் பட்டாளம்.

அது மாதிரியே எங்கள் ரூம்களிலும் சில நண்பர்கள், ஊர்காரர்கள் எல்லாம் ஒன்று கூடும் நேரம் அந்த மாதிரி வியாழக் கிழமை இரவுகளில் தான். பேச்சுக்கும் அரட்டைக்கும் பஞ்சமிருக்காது. ஒரு குரூப் சீட்டாடிக் கொண்டிருக்கும். ஒரு குரூப் படம் பார்த்துக் கொண்டிருக்கும். நாங்களெல்லாம் உலக ஞானங்கள் (??) அதிலும் கேள்வி ஞானங்கள் மிக்கவர்களாயிற்றே (??) ஏதாவது சப்ஜெக்டைப் பற்றி பேசி அக்கு வேறு ஆணி வேறாய் அலசி காயப் போடும் வரை ஓய மாட்டோம்னா பார்துங்களேன்.

அன்று பேய்களைப் பற்றி ஒரு டாபிக். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமானப் பேய்களைப் பற்றி பேசி விவாதம் வேற.

ஒவ்வொருவர் சொன்ன பேயும் அப்ப தான் நாம் உலகத்திலேய மொத மொத கேள்வி படுகிற மாதிரி உள்ள பேய்களைப் போல் பேச ஆரம்பித்து விட்டார்கள் சில விஷயங்களை தான் நாம் குருட்டாம் போக்கில் நம்பி விடுவோமே. அது மாதிரி தான் இந்த பேய்களின் விஷயங்களும். இதில் வீர தீரமாய் பேசுபவர்களுக்குக் கூட பேய்கள் என்றால் ஒரு அரட்டி தான்போல. நாம மட்டும் எம்மாத்திரம்??

அங்கங்கே டிவி பார்த்துக் கொண்டும், சீட்டாடிக் கொண்டிருந்த வர்களும், டீப் போட்டுக் கொண்டிருந்தவர்கள் கூட ஆர்வக் கோளாறில் (அல்லது பயந்துக் கொண்டு) எங்களோடு வந்து ஐக்கிய மாகி விட்டார்கள்.

பேச்சு சுவாரஸ்யத்தில் எங்களுக்கெல்லாம் நேரம் போனதே தெரிய வில்லை. அவரவர்கள் தூங்கு வதற்குரிய நேரம் போய் இரவு மணி இரண்டுக்கு மேலாகி விட்டது. அவரவர் தத்தம் ரூமுக்கு புறப்பட்டு போய் சிறிது நேரமாகி யிருக்கும்.

சிறிய முனகலுடன் மெல்ல ஒரு சப்தம். "இர்ர்ர்ரர்ர்ர்ர் கேய்ய்யய்யி" மெல்லிய ஹஸ்கி வாய்ஸில் ஆரம்பித்தது, போகப் போக “உறர்ர்ர்ரர்ர்ர்ர் ஆஆஆஆஆ” என ஹை பிட்ச் அளவுக்கு போக குளிர் நாள் ஆதலால் எல்லா ரூமிலும் ஏசி ஏதும் ஆன் செய்யபடாமல் இருந்ததால் அந்த சப்தம் எங்களை பீதியில் ஆழ்த்தி குலை நடுங்க வைக்க ஆரம்பித்தது. அப்படியே உறைந்துப் போய் நின்றோம். ஒருவருக் கொருவர் பேசக் கூட திராணி யில்லை. அப்படி...!!                                                                
                                                                                                                         
வயிற்றிற்க்கும் தொண்டைக்கும் இடையில் ஏதோ உருண்டு வந்து அடைத்துக் கொண்டது போன்ற ஒரு திகைப்பு. முதுகந்தண்டில் ஜிலீரென்று ஏதோ ஊர்வதைப் போல் ஒரு அவஸ்தை..!

கதவை திறந்தால் ஏதுமாகி விடுமோ என்று பயம் வேறு. என்ன இது,, இப்படி எப்பவும் ஆனாதில்லையே என்று மனதை தைரியப் படுத்திக் கொண்டு, நானும் எனது நண்பரும் கதவை திறந்துக் கொண்டு வெளியே வந்தோம். வெளியே யாரையும் காணோம். சப்தம் வந்த திசையை மெல்ல யூகித்து திரும்பினோம்!!

அங்கே கண்டக் காட்சி.....!

எங்களை இன்னும் நிலை குலைய வைத்தது. எங்கள் ரூமில் பேய்க் கதைக் கேட்டு கொண்டிருந்த ஒரு நண்பர், இன்னொரு பாகிஸ்தானியின் குரல்வலையை பிடித்துக் கொண்டிருக்க, அந்த பாகிஸ்தானி இவருடைய குரல் வலையைப் பிடித்துக் கொண்டிருந்தார். ஆனால் சப்தம் மட்டும் மேலே சொன்னது மாதிரி வந்துக் கொண்டே இருந்தது. விட்டால் ஒருவரை ஒருவர் மாய்த்துக் கொள்வார்களோ என்ற பயம் வந்து, உடனே சற்றும் தாமதிக்காமல் இருவருடைய குரல் வலையிலிருந்தும் கைகளை பிரித்து எடுத்து ஆசுவாசப் படுத்தினோம். ஆனால் எங்கள் நண்பர் மட்டும் ஓய்ந்தவராகவில்லை. சப்தமும் உறுமலும் அவருடைய கண்கள் வெளியே தள்ளியபடி பார்க்கவே ரொம்ப கிலியாக இருந்தது. அம்மாடியோவ்...! பய புள்ளைக என்னா  ஒரு அக்குரும்பு!!

அந்த பாகிஸ்தானி ஏதேதோ சொல்லி புலம்பிக் கொண்டிருந்தார். அவரை சமாதானப் படுத்தி அவருடைய ரூமுக்கு அனுப்பி வைத்து விட்டு, இவரை கை தாங்கலாக ரூமுக்கு அழைத்து வந்து படுக்கையில் சாய்த்து உட்கார வைத்து முகத்தில் நீர் தெளித்து, தெளிய வைத்தோம். இருந்தாலும் கையெல்லாம் முறுக்கிக் கொண்டு மனுசர் ஓய்ந்தவராகத் தெரிய வில்லை. பிறகு டீ ஊற்றிக் கொடுத்து, ஸ்நாக்ஸ் எல்லாம் கொடுத்து அவரை ஓரளவு நிலைக்கு கொண்டு வந்தோம். அப்ப்பாடா...!! தெளிந்து விட்டார். இப்ப கேட்டா செய்தி கிடைக்குமென்று மெல்ல பேச்சுக் கொடுத்தோம்.

"இங்கேருந்து வெளியே போனேனா. அந்த பக்கமெல்லாம் லைட் வெளிச்சம் பத்தாம லேசா இருட்டாவே இருந்துச்சு. அப்ப Dormitari கிட்ட எதுத்தாப்ல ஏதோ ஒரு உருவம் குதித்து வந்தது. கொல்லி வாய் பிசாசு மாதிரி வாயில வெளக்கேத்திக் கொண்டு...! எனக்கா பயமாப் போச்சு. இந்தப் பக்கம் திரும்பி பின்னாடி ஒங்க ரூமுக்கு ஓடியாந்தா எங்கே என் பொரடியிலே அடிச்சிடுமோன்னு, அந்த பேய நானே கழுத்தை பிடித்து நசித்து கொன்றுடலாம்னு"... திரும்பவும் கைகளை முறுக்கிக் கொண்டு எங்களை நோக்கி வந்தார். யாப்பா.. என்ன சொல்வது. மனுசர் ஆடித்தான் போய்ட்டார் போலிருக்கு.. பாவம்.

இவர் வெளியே போன சமயம் அந்த அப்பாவி பாகிஸ்தானி one bath room போக வெளியே வந்திருக்கிறார். குளிர் நேரமாதலால் blanket டை தலையிலிருந்து உடம்பு வரைப் போர்த்தி, வாயில் ஒரு சிகரெட்டையும் பத்த வைத்துக் கொண்டு, (நம்ப நண்பர் இவர் பின்னாடி வரும் சப்தம் கேட்டு) அவர் சற்றே திரும்பிப் பார்க்க.... பேய்க் கதைக் கேட்ட பீதியில் போய்க் கொண்டிருந்த நம்மாளு,, ஆஹா போய்க் கொண்டிருப்பது பேய் தானென்று, டபாரென்று பாய்ந்து விட்டார் கழுத்தைப் பிடிக்க..

நடந்தது இது தாங்க....! நம்புங்க...!!

                                                                       
                                                                                              
                                                                                        

செவ்வாய், ஆகஸ்ட் 10, 2010

ஈகை..!!


ஈகை!!

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு, சேரன் மஹாதேவி ஏரியாவைச் சேர்ந்த எங்கள் நண்பர் ஒருவர் VACATION போய் விட்டு திரும்பி வரும் போது, அங்கே பள்ளிவாசல் ஒன்று கட்டிக் கொண்டிருப்ப தாகவும், அதற்கு நம்மால் ஆன பொருளுதவி செய்யணும் என்று கோரிக்கை ஒன்றையும் வைத்தார். பள்ளிவாசலில் கொடுத்த ஸிலிப்பையும் கூடவே கொண்டு வந்திருந்தார்.

நாங்கள் இங்கே ரெண்டு மூணு நண்பர்கள் இருப்பதால் ஆளுக்கு கொஞ்சம் தொகையைப் போட்டு அனுப்பி விடலாம் என்று திட்டம் போட்டுக் கொண்டோம். மற்றவர்களிடமும் சொல்லி கலக்ட் செய்து கூடுதலாக அனுப்பலாமே என்று நண்பர்கள் யோசனை சொன்னபோது சற்று சங்கோஜமாக இருந்தது. அது மாதிரி யாரிடமும் போய் கேட்டு நின்றதில்லை ஆதலால் ஏதும் நினைத்துவிடுவார்களோ என்ற கோட்பாடுகளை மீறிய தயக்கம்.

பக்கத்து ரியல் எஸ்டேட் ஆபீசில் வேலைப் பார்க்கும் புதுக்கோட்டையை சேர்ந்த நண்பர் ஒருவர் பணம் அனுப்ப எங்களிடம் வர, அவரிடம் மேற்படி விஷயத்தை நாசூக்காக சொல்லி அவரையும் எங்களோடு இணைந்துக் கொள்ள சொன்னோம். உடனே சம்மதித்த அவர், போயிட்டு அரை மணியில் திரும்பி வந்து, " எங்க மொதலாளியும் ஒரு நல்ல தொழுகையாளி மனுசர் தான். உங்களுக்கு தான் தெரியுமே இது மாதிரி விஷயங்களுக்கெல்லாம் நிச்சயம் உதவுவார். நாம அவரிடம் போய் பேசிப் பார்ப்போமே" என்றார்.
அப்படி சொல்லு என் மகராசா என்று அவரை மெச்சி விட்டு, ஒரு பிரேயர் டைம் முடிந்து அந்த மொதலாளி அமைதியாய் அமர்ந்திருந்த ஏகாந்த பொழுதில் எங்களை அவர் ஆபீசுக்குள் அழைத்துச் சென்றார்.

பொதுவான நலம் விசாரித்தலைத் தொடர்ந்து, "என்ன விஷயமாய் என்னை காண வந்திருக்கிறீர்கள்" என்று வினவினார். நாங்கள், "இப்படி இப்படி இது இது" என்று மெல்லமாய் விவரித்தோம். கொஞ்ச நேரம் எங்களையே பார்த்துக் கொண்டிருந்த அவர், எவ்வளவு எதிர் பார்க்கிறீர்கள் என்றெல்லாம் கேட்காமல் யாருடைய பெயரில் செக் வேணும் என்று கேட்டார்.

எங்களுக்கு சட்டென்று எதுவும் சொல்ல தோன்ற வில்லை. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம். ரியாலாய் எடுத்துக் கொடுப்பார் என்று வந்திருந்த எங்களுக்கு, இப்படி கேட்டவுடன், என்னுடைய இக்காமாவை (Identy card) எடுத்துக் கொடுத்தேன். விறு விறு வென்று எழுதி செக்கில் கையெழுத்திட்டு சரக்கென்று கிழித்துக் கொடுத்தார். அவரையே பார்த்துக் கொண்டிருந்த நாங்கள் கொடுத்ததை வாங்கிப் பார்த்து இன்னும் பிரமித்துப் போய் நின்றோம்.

"இது போதுமா" என்று அவர் கேட்ட போது தான், நாங்கள் மறு நினைவுக்கே திரும்ப வந்தோம். மிகப் பெரிய சுக்ரனை (நன்றியை) சொல்லிவிட்டு வெளியில் வந்த எங்களில் யாருக்கும் பேச்சு எழவில்லை.

எப்படிங்க, சர்வ சாதரணமாக ஊர் காசுக்கு, கிட்டத்தட்ட ரூபாய் 50-60 தினாயிரம் மதிப்பிலான 5000 சவுதி ரியால்களைக் எடுத்துக் கொடுத்த அந்த மா மனிதரைப் பற்றி என்ன வென்று சொல்ல முடியும்ங்க! பிறகு வேறு யாரிடமும் வசூல் செய்யாமல் ஒரு பெரிய தொகையை பள்ளி வாசல் நிதியாக அனுப்பி வைத்தோம்.

இப்ப இதை ஏன் உங்களோடு பகிர்ந்து கொள்கிறே
னென்றால், ரமலான் நெருங்கி வரும் இவ்வேளையில்,
அன்பு நண்பர்களே அருமை சகோதரிகளே, ஈகையைப்
பற்றி இப்பவே (எப்பவும்) சிந்திக்க ஆரம்பித்து விட வேண்டும் என்பதற்க்காகவே !!
GREETINGS TO ALL
"RAMADAN KAREEM"
                                                                              
                                                                             

ஞாயிறு, ஆகஸ்ட் 08, 2010

காலம்பர வாங்க..!

                                                                   

                                                                            


காலம்பர வாங்க..!

பேசும் பேச்சில், சில சொல் வழக்குகள் நம்மை யோசிக்க வைக்கும். சில சிந்திக்க வைக்கும் (ரெண்டும் ஒன்னு தானோ!!!!) சிலவைகள் நம்மை குழப்பும் அப்படிப் பட்டவைகளை இப்ப நாம் இங்கே பார்த்து யோசிப்போம்!!


எங்க வீட்டில் பேசும் தமிழ் மொழியின் பேச்சு வழக்கு ஒரு மாதிரியாகவும், அவுக வீட்டில் பேசும் பேச்சின் வழக்கு வேறு மாதிரியாகவும் இருக்கும் (உம்: எங்க வீட்டில், இக்கிரஹா, போரஹா, வர்ரஹா..இவ்வாறாக ) (அவுக வீட்டில் : இரிலே போலே, வாலே.. என்று)

இது இவ்வாறிருக்க --

கல்யாணம் முடிந்த புதிதில்...

மாலையில் அவங்க வீட்டுக்கு போனா, காலையிலேயே எங்க வீட்டுக்கு திரும்பி வந்து விடும் பழக்கமுள்ள நான், ஒரு தடவை அவங்க வீட்டிலிருந்து புறப்பட்டு வாசல் வரை வந்து விட்ட சமயம், அவங்க பாட்டி குடு குடு வென்று கிட்ட ஓடியாந்து "தம்பி போயிட்டு காலம்பர வந்துடுங்கன்னு சொன்னாங்க", அடப் பாவத்த ராத்திரிக்கி வரக் கூடாதான்னு, யோசித்துக்கொண்டே, "சரி" என்று சொல்லிவிட்டு எங்க வீட்டுக்கு வந்து விட்டேன்.

வீட்டுக்கு வந்தவுடன் அம்மாவோடு, பகலில் இருந்து சாப்பிட்டு விட்டு, மாலையில் நண்பர்கள் எல்லோரையும் பார்த்து விட்டு, அங்கங்கே சுற்றியும் விட்டு, இரவில் அவுக வீட்டுக்கு போகாமல், எங்க வீட்டுக்கே வந்து விட்டேன்.

எங்க அம்மா வந்து என்னிடம் "தம்பி கடைசி பஸ் போய்டுமே, இன்னும் அங்க புறப்பட்டு போகாம இக்கிரீங்களே" என்றாங்க. அதுக்கு நான், " இப்ப நான் அங்க போவலம்மா. அவங்க என்னை காலையில் வரச் சொல்லிட்டாங்க" என்று சொன்னேன்.

"அப்படியா?? அப்படி யெல்லாம் சொல்ல மாட்டங்களே" என்று அவங்க குழம்பியபடி உள்ளே சென்று, எங்க அக்காவிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தாங்க. அவங்க ஏதோ சொல்ல பதட்டத்துடன் என்னிடம் ஓடியாந்து, “என்னான்னு சொன்னாங்க” என்று திரும்பவும் கேட்டாங்க. ‘காலம்பர வாங்கன்னு’ சொன்னாங்கன்னு சொன்னேன். அதுக்கு அவங்க சிரிச்சுட்டு சொன்னங்க,

"தம்பி காலம்பர வாங்கன்னா, சீக்கிரமா புறப்பட்டு வந்துடுங்கன்னு அர்த்தமாம். அவங்க ஊர்ல அப்படி தான் பேசிக்கி வாங்கலாம்”
நீங்க சீக்கிரமா புறப்பட்டு போங்கன்னு“ சொன்னாங்க!

ஏங்க, இங்கிட்டும் அங்கிட்டும் கூட்டி கழித்துப் பார்த்தா ஏழு கிலோ மீட்டர் தூரம் கூட இல்லை. அங்கேயே தமிழில் சொல் வழக்குகள் இப்படி மாறி நிற்கும் போது, பிறகு இலங்கை மலேசியா சிங்கபூர் போன்ற மற்ற தமிழ் பேசும் உலக நாடுகளில் எப்படி எப்படி எல்லாம் சொல் வழக்குகள் மாறி நிற்கும்??

இப்ப எங்க தாயாரும், அவுக பாட்டியாரும் எங்களோடு இல்லா விட்டாலும் அவர்கள் பேசிய நினைவுகள் சமயங்களில் வரத்தான் செய்கின்றன!

நினைவுகளை பகிர்ந்து கொண்ட மாதிரி, மெயிலில் வந்த ஒரு செய்தியையும் இங்கே பகிர்ந்து கொள்வோம்
                         
                                   @@@@@@@@@@

வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து உலகின் எந்த பகுதியில் இருந்தும் உதவிக்கி அழைக்க, இந்திய அரசு 12X7 Help Line ஐ அறிமுகப்படுத்தியுள்ளது: குறித்து வைத்துக் கொள்ளுங்கள் உதவும். அல்லது யாருக்கேனும் நாம் கொடுத்ததும் உதவலாம்.

தொலை பேசி எண்:


1800113090
911140503090


                                                                     

விருதுகள் :

அமீரகத்திலிருந்து இது எனக்கு இரண்டாவது விருது! (1) தல ஜெய்லானி, இப்ப (2) சகோ.ஆசியா உமர்.

எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. இவர்கள் எல்லோருடைய பதிவையும் படித்து விட்டு கமண்ட்ஸ் போட்டுக் கொண்டிருத்த காலம். அப்ப இவர்களெல்லாம் விருதுகளை வாரி வழங்கிக் கொண்டிருந்த நேரம். பார்க்க ஆர்வமா இருக்கும். நாமெல்லாம் பதிவுலகை படித்து வலம் வரும் சின்னஞ் சிறுசு தானே.

அப்ப நான் கூட வேடிக்கையா, "கமண்ட்ஸ் போடுறவங்களுக்கு விருது ஏதும் கிடையாதான்னு” கேட்டேன். இந்த தல ஜெய்லானி இருக்கே ரொம்ப உஷார். மொதல்ல வலைப்பூ ஆரம்பிகன்னு சொன்னுச்சு. அதாவது நாம எழுத ஆரம்பிக்கனுமாம், மாட்டிகிட்டு முழிக்கனுமாம். சின்ன gape கெடச்சாலும் எதையாவது சொல்லி நம்ம தல மேலேயே அடிக்கும். (அதாவது மற்றவர்களை எழுத தூண்டி ஆர்வப் படுத்துவதென்பது அதன் பொருள்.) நல்ல பொறுப்புள்ள பாசகார புள்ள..!

அடுத்து மேடம் ஆசியா உமர். இவர்களை தினமும் சந்தித்துக் கொள்ளலாம். ஏதாவது மெனுவோடு கண்ணைக் கவரும் வண்ண வண்ண படங்களோடு. இவர்களின் வலைப்பூவை பார்த்து தான் கமெண்ட்ஸ் போடக் கற்றுக் கொண்டோம். இவர்கள் போடும் இடுகைகளை பார்த்து மிரண்டு போனது கூட உண்டு. என்ன ஒரு ஸ்பீட். அதில் ஒரு தனித்துவம் மிளிரும்.

இவர்கள் கமெண்ட்சில் வந்து நாசூக்காய் சொல்லிவிட்டு போகும் விஷயம் மாணவர்கள் நூற்றுக்கு நூறு வாங்க வேண்டும் என்கிற டீச்சரின் அடையாளம். சமீபத்தில் இவர்கள் எழுதிய முஸ்லிம் சத்திரமும் முட்டை பஜ்ஜியும்” தனி ரசனையோடு எழுதப் பட்ட ஒரு இடுகை! எழுத்து நடை மிகப் பிரமாதமாக இருந்தது.

நான் கூட யோசித்த துண்டு. இவர்கள் இதுமாதிரி வாரம் ஒன்னு ஏன் எழுதக் கூடாது? சமையலையே தான் போடணுமா?? வலைப்பூவை சமைத்து அசத்தலாம் என்று வைத்து விட்டு மற்றவைகளை எழுதக் கூடாதா என்ன?? சிரித்து அசத்தலாம், பயணக் கட்டுரை எழுதி அசத்தலாம். தினம் ஒன்றை செய்து அசத்தலாமே மேடம். நூறு பதிவுக்கு மேல் போட்டவர்களுக்கு இதெல்லாம் புரியாதா என்ன??

கடைசியாக ஒன்னு! இப்படி வாரி வாரி விருது வழங்கும் மக்களெல்லாம், தலை முறை தலை முறையாய் மன்னர் பரம்பரையில் வந்தவர்களோ?? மனம் ரொம்ப சந்தோசமா இருக்கு என் அருமை நேசங்களே! இனிமேலும் எல்லோரும் ஒன்று கூடி எங்களை எழுத ஆர்வப் படுத்திக் கொண்டே இருங்கள்.

                                                             
                         

புதன், ஆகஸ்ட் 04, 2010

மாநகரக் காவல்..!

                                                                              



மாநகரக் காவல்



எங்களூர் மெட்ரோ பாலிட்டன் சிட்டி. நான் வாக்கப்பட்டு போன ஊர் காஸ்மோ பாலிட்டன் சிட்டி. ஊர் பேர சொன்னா எங்கே கண்டுபிடிச்சுடு வீங்களோன்னு இந்த ஏற்பாடு. அதனால அது ஒரு அழகிய சிற்றூர்ன்னு வச்சுக்குவோமே!

இந்த ஊரை காவல் காப்பதற்காக நேபாளில் இருந்து ஒரு கூர்க்கா பிரெஷ் ஆகா இறக்குமதி செய்யப் பட்டிருந்தார். பேரென்ன?? பகதூர்.

அவருக்கு சம்பளம் + அலவன்ஸ் + இதெல்லாம் எப்படி?

சம்பளம் = வீட்டுக்கு இவ்வளவு என்று தொகை நிர்ணயிக்கப் பட்டிருந்தது.

அலவன்ஸ் = வீட்டுக்கு வீடு அலைந்து அவரே அதை வசூல் செய்துக் கொள்வது.

நிர்வாகம் கொடுத்த தென்னவோ ரெண்டு செட் டிரஸ்ஸும், மூன்றடி நீளமுள்ள ஒரு குச்சியும் (அதன் நுனியில் ஒரு துளை யிட்டு கயிறு கட்டி, அவர் தோளில் மாட்டி தொங்க விட்டுக் கொள்வதற்கு வசதியாக) + டார்ச்சும் தான் போலும்.

அப்ப நான் இங்கிருந்து ஒரு VACATION போய் இருந்த சமயம்.. ஊரில் தான் ரோடு லைடெல்லாம் பளீரென்று எரியுமே! நானும் என் மைத்துனரும், இன்னுமிரு நண்பர்களும் வெளியூர் போய் விட்டு கொஞ்ச நேரம் மிச்ச மிருந்ததால், செகண்ட் ஷோ சினிமாவையும் பார்த்து விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தோம். நாங்கள் லேட் நைட் பஸ்ஸை விட்டு இறங்கி கொஞ்ச தூரம் நடந்து போகையில் பின்னாடியே "பீங் பீங்” என்று விசில் சத்தம்.

யாராய் இருக்கும்... ஒருவேளை போலீஸோ?? அதுவும் இந்த ஊருக்கா..? ச்சே..கற்பனையை முடிக்கு முன்னே,

சைக்கிளில் வந்த பகதூர், எங்கள் கிட்ட வந்தவுடன் தொபீரென்று குதித்தான்...

அந்த நேரம் ரோட்டில் யார் நடந்தாலும் விசாரிக்கணும் என்று கூர்க்காவுக்கு உத்தரவு போலும். எங்கள் எதிரில் வந்தவன் எங்கள் மூஞ்சி மேல் டார்ச்சடித்தான்.

என் மச்சினரைப் கண்டவுடன் ஒரு சல்யூட் அடிச்சான் (நாட்டமையோட மச்சினராச்சே) மற்ற மூவரும் ஏற்கனவே அவனுக்கு அறிமுகமானவர்கள், நான் அவனுக்கு புதிது போல. என் மேலும் டார்ச்சடித்தான். உடனே மச்சினர் "அவர் என் மச்சான்டா" என்று சொல்லவும், பகதூர் விளங்கிக் கொண்டான்.

ரோடெல்லாம் திட்டுத் திட்டாய் இருட்டு. அவன் சைக்கிளில் ஏறி கொஞ்ச தூரம் போய்க் கொண்டிருக்கும் போது, என் நண்பனில் ஒருவன், "டேய் இவன் வீர பகதூரா, இல்ல டுபாகூரா இப்ப செக் பண்றேன் பாரு" என்று சொல்லி, ரோட்டில் கிடந்த உடைந்த ஓட்டை எடுத்து, நாம் குளத்துத் தண்ணீரில் தத்தி தத்தி போவது போல் கல்லெறிவோமே, அது மாதிரி ரெண்டு மூணு உடைந்த கல்லோட்டை தட்ட...ட்ட்ட்....டென்று, தரையோடு தரையாக உரசிக் கொண்டு போகும்படி வீசினான்.

அது அந்த அமானுஷ்யமான இரவில், இருட்டில் ஏதோ வரக்கூடாத ஜந்து ஒன்று சத்தத்தோடு அவனை பின் தொடர்வதைப் போன்ற பிரமையை அவனுக்கு ஏற்படுத்தி இருக்க வேண்டும். “அய்யய்யோ... வென” அலறிய பகதூர், சைக்கிளிலிருந்து துள்ளிக் குதித்து கீழே சரிந்து விழுந்தான். சைக்கிளும் அவன் மேல் புரண்டு விழுந்தது.

"டேய் என்னடா இப்படி பண்ணிப் புட்டே" என்று நாங்கள் சற்றும் தாமதிக்காமல் அவனை தூக்கலாம் என்று ஓடினோம். அதைவிட நாங்கள்  “திமு திமு” வென ஓடிய சத்தமும், அவனை இன்னும் உலுக்கி இருக்க வேண்டும். அவன் மேலும் அரண்டு விட்டானோ என்னமோ தெரியலை. விழுந்துக் கிடந்த அவன் திரும்பவும் எழுந்து சைக்கிளைத் தள்ளிக் கொண்டே ஓட ஆரம்பித்து விட்டான்.

அப்படியே பேசிக் கொண்டு தத்தமது வீட்டுக்குப் போனவுடன், அந்த விஷயத்தை நாங்கள் சுத்தமாக மறந்தும் விட்டோம். ரெண்டு மூணு நாள் சென்று ஊரிலுள்ள குளத்தில் மீன்ப் பிடி ஏல குத்தகை விடும் செய்தி கேள்விப் பட்டு அங்கே போனோம்.

போகிற வழியில் தான் அந்த பகதூரின் வீடு இருக்கிறது. அந்த வீட்டைக் கடந்து போகும் போது, அவருடைய மனைவி வாசலில் நிற்பது கண்டு சும்மா விசாரித்து விட்டுப் போகலாமென்று, அவரையும் பகதூரையும் நலம் விசாரித்தோம். அந்த அம்மணிக்கு கொஞ்சம் தமிழ் தெரியும்.

"அவருக்கு ஜுரமா இருக்குங்க. எதுவுமே பேச மாட்டேங்கிறார். என்னன்னே தெரியல". என்றார். "எப்பத்திலிருந்து" என்று கல் வீசிய நண்பன் கேட்டான். "முந்தா நாள் நைட்லேந்து" என்றார்.