எப்போது ஷாப்பிங் போனாலும் என் நண்பர் ஷர்மாஜி தான் கூட
வருவார். சும்மா ஒரு பாதுகாப்பு பிளஸ் பேச்சு துணைக்கு தான்.
எனக்கு பாதுகாப்பா என்று விழி உயர்த்தாதீர்கள். நாடு இப்ப
ரொம்ப கெட்டு கிடக்கு! நடந்து போனாலே பர்ஸ் பிளஸ் செல்
போனை இழப்பது நிச்சயம்.
அந்த ஹைபர் மார்க்கெட்டில் நடந்து தேவையானவற்றை எடுத்து ட்ராலியில் நான் போட்டுக் கொண்டிருக்கும் போதே, ஷர்மாஜி
என்னிடம் பேச்சுக் கொடுத்தார்.
"லிபியாவைப் போல பஹ்ரைனிலும் கிளர்ச்சி அதிகரித்து
விட்டதே, அப்படி என்றால் இங்கே (சவுதியில்) என்னாகும்"
என்றார்.
"ஒன்றும் ஆகாது" என்றேன்
"எப்படி சொல்றீங்க"
"விக்கி லீக்ஸ் விஷயம் சென்ற மாதம் புயலாய் அடித்ததே ஞாபகமிருக்கா?"
"இல்லாமலா?"
"இப்ப அது என்னாச்சு? எல்லா அரபு நாடுகளிலும் கிளர்ச்சியை உண்டாக்குவது போல் ஒரு மாயையை உண்டாக்கி அவைகளை மறக்கடிக்கிற மாதிரி மறக்கடிச்சு, நிம்மதியாய் ஆள்பவர்களின்
மனதில் பீதியை உண்டாக்கிட்டாங்களே கவனிச்சிங்களா??
"அட ஆமா!!"
"அதுவுமில்லாம இப்ப மன்னர் 'ஃபேஸ் புக்கை' விலைபேசி
வாங்கப் போறதா வேற நியூஸ் அடிபடுது"
"ஓ..... இது வேறயா?"
"திடீர்னு தமிழக அரசு பெட்ரோல் விலைய கொறச்சுட்டாங்களே,
அதப் பத்தி சொல்லுங்க, கவர்ன்மெண்டுக்கு நஷ்டமாமே?"
"லாபம்னு சொல்லுங்க!"
"எந்த விதத்தில்?"
"அப்படி கேளுங்க?"
"இப்ப 1.38 பைசா கொறச்சதாலே, 10 லிட்டர் போட்டா ரூபாய் 13
முதல், 14 ரூபாய் வரை லாபம் என்னமோ நமக்கு தான், ஆனா
அவங்க கணக்கு ‘ஓட்டல்லவா’?"
"அது சரி!"
"பின்னரும் யார் ஜெயிச்சு வந்தாலும் லிட்டருக்கு மூன்று
ரூபாயோ, அஞ்சு ரூபாயோ ஏத்தத்தான் போறாங்க!"
"அம்மாடி!"
"இதுக்கே இப்படி சொல்றீங்களே, இந்தியாவுக்கு வருகிற ஒரு
லிட்டர் பெட்ரோலின் அடக்க விலையை இங்கே பாருங்க!"
"சரி தங்கத்தின் விலை குறைய வாய்ப்பிருக்கா?"
"நெத்திச்சுட்டியா போட்டா உயரும், கழுத்தில போட்டா தாழும்!"
"ஜோக்கடிக்காதிங்க?"
"பின்ன நானென்ன தங்கம் விலைய நிர்ணயிக்கிற அந்த
11 பேரில் ஒருத்தரா?"
"எல்லாம் தெரிஞ்சு வச்சிருக்கீங்களே? ஆமா இங்க அதுக்குள்ளே வெயிலடிக்க ஆரம்பிச்சுடுச்சே, குளிர் போயிடுச்சா?"
"அது சவுதி கிளைமேட், வரும் போவும்"
"அது சரி நாமெல்லாம் ஃபாரினில் இருந்தாலும், ஒட்டு போடும்
முறை இங்கே அறிமுகமாகியிருக்கே கவனிச்சிங்களா?"
"அப்படியா? அப்படி ஒரு சான்ஸ் கிடைச்சா மொத மொத
லைஃப்ல இப்ப தான் ஒட்டு போடப் போறேன்!!"
பேசிக் கொண்டே ஷர்மாஜி, ஆறேழு வயசு குழந்தைகள் யூஸ்
செய்யும் டூத் பிரஷ்களை செலக்ட் செய்து கொண்டிருந்தார்.
இவருக்கு தான் இன்னும் கல்யாணமாகலையே யாருக்கு
இவர் வாங்குகிறார்?
வெளியில் வருமுன் அவரிடம் "அந்த குழந்தைகள் பிரஷை
யாருக்கு வாங்குறீங்க?" என்று தெரியாதது போல் கேட்டேன்.
நாமும் தெரிஞ்சுக்கலாம்ல!
"அது எனக்குத் தான்"
"என்னது உங்களுக்கா? ஏன்?"
"அதொன்னுமில்லீங்க, எப்போதும் பெரியவர்கள் யூஸ் செய்யும்
பிரஷை தான் வாங்குவேன். ஆனா அது ஈறுகளை கிழிக்கிறது.
சிறிது நாளிலேயே அதன் குச்சங்கள் திருகிக் கொண்டு டான்ஸ்
ஆடுவது போல் நிற்கின்றன. ஆனா பாருங்க இந்த சின்ன
பிள்ளைங்க யூஸ் செய்ற பிரஷை கொண்டு பல் துலக்கினால், ஈறுகளையும் கிழிப்பதில்லை. குச்சங்களும் வளைவதில்லை"
என்றார்.
இது புது விஷயமா இருக்கே என்று கேட்டுக் கொண்டேன்.
அப்புறம் "பல் விளக்கிய பின் ஈறுகளை மெதுவாக தேய்த்துக் கொடுக்கணும். அப்ப தான் பற்கள் உறுதிபடும்" என்றார்.
இந்த விஷயம் ஏற்கனவே 'கவிப்பேரரசு வைரமுத்து' நமக்கு
கவிதையில் சொல்லிக் கொடுத்திருந்ததால், தெரிந்திருந்தாலும்
தெரியாதது போல் அதையும் கேட்டுக் கொண்டேன்.
"உங்க பதிவுலகத்தில் நிறைய பேர காணலியே ஏன் என்னாச்சு?!"
என்று ஒரு புகாரையும் வாசித்தார்.
என்ன சொல்றது??
"அடுத்தப் பதிவில் அதைப் பற்றி ஆராய்வோம்" என்றேன்.

