facebook

வெள்ளி, ஏப்ரல் 27, 2012

மரவள்ளிக் கிழங்குபடிக்கிற காலத்தில் நான் விரும்பி சாப்பிடும் ஐட்டங்களில் இந்த மரவள்ளிக் கிழங்கும் ஒன்று. கடைதெருவில் கூடைகளில் வைத்து விற்பவர்கள், கூடைகளின் மேல் ஒரு பலகையை வைத்து அழகாய் வெந்து வெடித்த கிழங்குகளை பார்வைக்கு வைத்திருப்பார்கள். பார்க்கும் போதே வாங்கிடனும் போல ஆசை வரும். வாங்கி விடுவேன். வீட்டில் கொண்டு வந்து கொடுத்தால், அம்மா அதை அழகாக தோலுரித்து, சிறிது சிறிதாக வெட்டி, சீனி, தேங்காய் பூ போட்டு பிளேட்டில் கொண்டு வந்து தருவார்கள். சாப்பிட சாப்பிட சுவையாய் இருக்கும்.


பின்னாளில் நான் ஊர் செல்லும்போதெல்லாம் அம்மா இதை நினைவு வைத்து, ஒரு கடமையாகவே எனக்கு வாங்கி வைத்திருப்பார்கள். அது ஒரு கனாக்காலம்.இப்பொழுது இங்கே கிடைக்கிற மரவள்ளிக் கிழங்குகளை வேக வைத்து சாப்பிட்டாலும், அம்மாவின் கைமணம் இல்லவே இல்லை. ஆனால் கடைகளில் விற்கும் கிழங்குகள் மட்டும் எப்படி அழகாய் வெந்து வெடித்திருக்கிறது என்று இன்று வரை புரியவில்லை.

கொஞ்சம் அதன் கதையை தெரிந்துக் கொள்வோம்

தமிழ்நாட்டில் இக்கிழங்கிற்கு மரவள்ளிக் கிழங்கு என்பது தவிர கப்பக் கிழங்கு, ஏலேலங் கிழங்கு (திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டம்) குச்சிக் கிழங்கு, குச்சிவள்ளிக் கிழங்கு என வேறு சில பெயர்களும் உண்டு.

வரலாறு :

தென் அமெரிக்காவையும் மேற்கு ஆப்பிரிக்காவையும் தாயகமாகக் கொண்ட இச்செடி இன்று ஆப்பிரிக்காவில் அதிகம் பயிர் செய்யப் படுகிறது, என்றாலும் அமேசானை பிறப்பிடமாகக் கொண்ட மரவள்ளிக் கிழங்கு இந்தியாவில் 17-ஆம் நூற்றாண்டில் கேரளாவில் போர்துகீசியர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. (கப்பலில் வந்ததால் “கப்பக் கிழங்கா” என்ற வரலாறு தெரியவில்லை அமைச்சரே!) கொலம்பசின் காலத்துக்கு முற்பட்ட அமெரிக்காக் கண்டத்தில் வாழ்ந்த மக்களின் முக்கிய உணவாக விளங்கிய மரவள்ளி அவர்களின் தாயக ஓவியங்களிலும் இடம் பெற்றது.


இதிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு மாவுப் பொருள் ஜவ்வரிசி ஆகும். இது உப்புமா, பாயாசம், கஞ்சி முதலியவை தயாரிக்கப் பயன் படுகிறது. மரவள்ளிக்கிழங்கு ஸ்டார்ச், குளுக்கோஸ், டெக்ஸ்ட்ரின், கோந்து, புரூக்டோஸ் சாறு ஆகியவை தயாரிக்கும் தொழில்துறை சார்ந்த தொழிற்சாலைகளில் ஒரு முக்கிய மூலப்பொருளாக பயன்படுகிறது.

மரவள்ளியைச் சமைக்கும்போது இஞ்சியைக் கலந்து சமைத்தல் அல்லது மரவள்ளி உணவுடன் இஞ்சி கலந்த உணவுப் பொருள்களை உட்கொள்ளல் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியது என அறியப்பட்டுள்ளது. தோலுரித்த மரவள்ளிக் கிழங்கை வெறுமனே அவித்து உண்பது உலகின் பல பகுதிகளிலும் பொதுவாகக் காணப்படுகின்றது.

இதனைத் துணைக் கறிகளுடன் ஒரு வேளை உணவாகப் பயன் படுத்துவதும் உண்டு. அவித்த கிழங்கை மிளகாய், உப்பு போன்ற பொருட்களுடன் சேர்த்து உரலில் இட்டு இடித்து உண்பதும் உண்டு. கிழங்கைக் குறுக்காக மெல்லிய சீவல்களாக வட்டம் வட்டமாகச் சீவி, எண்ணெயில் இட்டுப் பொரித்து உண்பதுண்டு.

இது பொதுவாக சிற்றுண்டியாகவே பயன்படுகின்றது. இப் பொரியலைப் பல நாட்கள் வைத்து உண்ண முடியும் என்பதால், இவற்றை நெகிழிப் பைகளில் (பிளாஸ்டிக் கேரி பேக்ஸ்'ங்க) அடைத்து விற்பதுடன் பிற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றது.

மரவள்ளிக் கிழங்கு புட்டு:

வழக்கமா மாவு வகைகள்லதான் புட்டுப் பண்ணுவோம். ஆனா, கிழங்குகளை வெச்சும் கிராமங்கள்ல புட்டு அவிக்கறதுண்டு. அந்த வகைல வர்ற இந்த மரவள்ளிக் கிழங்கு புட்டு சாப்பிட அத்தனை ருசியா இருக்கும்!

அரைக் கிலோ மரவள்ளிக் கிழங்கை அரை மணி நேரம் தண்ணீர்ல ஊற வெச்சு, அப்புறமா மண் போக கழுவிட்டு மேல இருக்கற பட்டைய உரிச்சுடுங்க. கிழங்கை சன்னமாத் துருவி, இட்லிப் பானைல பரவலாத் தூவி, பதினைந்து நிமிஷம் வேக வைங்க. வெந்ததும், சூட்டோட இருக்கறப்பவே ஒண்ணுலேர்ந்து ஒண்ணரைக் கப் அளவுக்கு சர்க்கரை, ஒரு டீஸ்பூன் ஏலத்தூள், ஒரு டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து கிளறி விடுங்க. அவ்வளவு தான் வேலை. புட்டு தயார்!

இதை அப்படியேயும் சாப்பிடலாம். சின்னச் சின்னதா உருண்டை பிடிச்சும் சாப்பிடலாம். கிழங்குத் துருவலை ஒரு டிரேல கொட்டி சமப்படுத்தி, அப்புறமா ஆவியில வேகவெச்சு எடுத்து, விரும்பின வடிவத்துல துண்டுகளா போட்டு, அதுமேல முந்திரி துண்டுகளை பதிச்சுக் கொடுத்தா… குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.

தகவல் + படங்கள் : விக்கிபீடியா.