facebook

சனி, நவம்பர் 26, 2011

ஹைப்பர் கொள்ளைகள்!!

பத்து நாள் வலைப்பூ பக்கம் வாராமல் போனால் "காணவில்லை" போர்டு 
மாட்டிடுராங்கைய்யா...!! மீ... நடந்தாலும் கடல் மேல் தான் நடந்துக் கொண்டிருப்பேன். அவ்வ்வ்வ்...


 
கல்யாணம் முடிந்தும் பேச்சிலர்ஸாக சமைத்துக் கொண்டிருந்த காலத்தில், இங்குள்ள மினி மார்கெட்களில் தான் பொருட்கள்களை வாங்குவோம். அப்பொழுதெல்லாம் குறைந்தபட்சமாக 25-லிருந்து 50- ரியால்கள் வரை வாங்கினால், ராஃபில் டிக்கட் ஒன்று தருவார்கள். மாதக் கடைசியில் பரிசு விழும் நம்பருக்கு, அவர்கள் பக்கத்திலேயே திறந்து வைத்திருக்கும் புடவைக் கடையில் ஒரு புடவை எடுத்துக் கொள்ளலாம். புடவையின் மதிப்பு சுமாராக ஐம்பது ரியாலுக்கு குறையாமல் இருக்கும். நல்ல டிசைனில், விலை அதிகமுள்ள புடவை வேணுமென்றால் நாம் மேற்கொண்டு பணம் கொடுக்க வேண்டும். மாதா மாதம் நண்பர்கள் நாங்கள் ஆளுக்கொன்று என்று கணக்கு வைத்து எடுத்துக் கொள்வோம்.

இது மாதம் முழுக்க (கிட்டத்தட்ட அறுநூறு ரியாலுக்கு மேல்) நாம் பணம் கொடுத்து வாங்கும் பொருட்களுக்கு, நம்மிடமே வாங்கிய பணத்தை, இப்படி புடவை என்ற பெயரில் அட்ராக்ஸனாக திருப்பி தந்து விடுவது. கஸ்டமர் களை கட்டிப் போடும் டெக்னிக்கும் இதுதான்! இதை எவ்வளவோ மேல் என்று இப்ப கூட ஒப்புக் கொள்ளலாம். ஆனால் -

இப்பொழுது புற்றீசல்கள் போல் தெருவுக்குத் தெரு பல ஹைப்பர் மார்க்கெட்கள் நம்மை எப்படி எல்லாம் கவர்ந்து கொள்ளையடிக்கின்றன என்றால் வாரா வாரம் ஆஃபர் மழை என்ற பெயரில் தான்.

கட்டுகட்டாய் புக்லெட்டுகளை எல்லா இடங்களிலும் கொண்டு வந்து வீசிவிட்டு போவார்கள். எப்படி என்றால் சாதரணமாக மினி மார்கெட்களில் வாங்கும் ஒரு பொருளின் விலையை ஐந்து ரியாலிலிருந்து பத்து ரியால்கள் வரை குறைத்துப் போட்டு நம் மனதில் சலனமேற்ப் படுத்து வார்கள். சரி, சலனமேற்ப்படுத்திய மனதை சமாதனப் படுத்தலாம் என்று நம் பர்சை தொட்டுப் பார்த்துக் கொண்டு அங்கே போனால், அந்த பிரமாண்டமான மார்க்கெட்களின் வாசல்களில் வகைக்கு ஒன்றாக அப்பொழுது தான் புதிதாக இறங்கிய கார்களின் அணிவகுப்பை நிறுத்தி வைத்து இருப்பார்கள். மனம் இப்ப ஒருவகை உவகைக் கொண்டு உள்ளே நுழைய அடியெடுத்து வைப்போம்.

சரி......

உள்ளே போயாச்சா?.....

போயாச்சு!!

இனிமேல் தான் நமக்கு கவனமோ கவனம் ரொம்ப தேவை. மறந்து விடாமல் அவர்கள் ஆஃபர் போட்டிருக்கும் ஒரு புக் லெட்டை நம் கையில் வைத்திருப்பது உத்தமம்.

நீங்கள் விருப்பப்பட்ட பொருட்களை எடுக்கும் போது செல்ஃபில் அதன் விலையையும், புக் லெட்டில் போட்டிருக்கும் விலையோடு ஒப்பிட்டு சரி பார்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் ஒவ்வொரு பொருளுக்கும் அதன் மேல் விலை குறிக்கப் பட்டு இருக்காது. தோராயமாக ஒரு பொருளுக்கும் இன்னொரு பொருளுக்கும் இடையே செல்ஃபிலேயே விலை குறிக்கப்பட்டு இருக்கும். இது தான் ஹைப்பர் மார்கெட்களின் ட்ரிக். ஆஃபரில் மதிமயங்கி எல்லா பொருட்களின் விலையுமே குறைவாகத் தானிருக்கும் அள்ளிக் கொண்டு போவர் பலர். அவர்களை உஷார் படுத்தவே இந்தப் பதிவு!!

விலை குறைக்கப்பட்ட ஒரு பொருளை வைத்துக் கொண்டு, பத்துப் பொருட்களில் பலமடங்கு விலை ஏற்றி வைத்திருப்பார்கள். மனதில் பட்டதை எல்லாம் ட்ராலியில் அள்ளிப் போட்டுக் கொண்டு, கவுண்டரில் போய் நின்றால், பார்கோடு நம்பரை வைத்து க்ளிக்கி கிடுகிடுவென்று சிலிப்பை கிழித்து கையில் கொடுத்து, பணத்தை வாங்கிக் கொண்டு நம்மை அங்கிருத்து நகர்த்தத்தான் பார்ப்பார்கள். அங்கே நின்று கொண்டு நாம் எடுத்த பொருளையும் விலையையும் சரி பார்த்துக் கொண்டிக்க முடியாது. கூட்டம் முட்டித் தள்ளும்.

கவனமாய் பொருட்களை தேடி எடுத்தாலும், இந்த கேஷியர் கவுண்டரில் பணம் கொடுக்கும் போது தான் ரொம்ப உஷாராய் இருக்கணும்.

சில நேரங்களில் சில ஹைப்பர் மார்க்கெட்களில் ஆஃபர் போட்ட விலையை கேஷியர் டேட்டாவில் என்ட்ரி செய்யாமல் வைத்திருப் பார்கள். நீங்கள் எடுத்த (ஆஃபர்) பொருளின் விலையை பார்கோடை வைத்து அடிக்கும் போது பழைய கூடுதல் விலையே பிரிண்ட் ஆகும் அபாயமும் இருக்கு! இப்படி தான் சென்ற வாரம் நான் வாங்கிய ஷாம்பூவில் கேஷியர் கவுண்டரில் விலை அதிகமாக ப்ரிண்டாகி வந்தது. கேட்டால் "அது வேறு நமுனா- (BRAND), இது வேறு நமுனா" என்கிறான். ரெண்டும் ஒன்று தான் என்று ஆஃபர் லீப்லெட்டை காட்டிய போது, ஏதேதோ சொல்லி நம்மை சமாளிக்கப் பார்க்கிறான். (நம்ம கிட்டேயேவா??) வேணாம் என்று அதை கேன்சல் செய்வதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது.

இதெல்லாம் ஒரு கண்கட்டு வித்தை மாதிரியே இப்பல்லாம் எல்லா இடங்களிலும் நடக்கிறது. கேட்பதற்கு வெட்கப்பட்டுக் கொண்டு சிலபேரும், மொழி தெரியாமல் எப்படி கேட்பது என்று பலபேரும், வாய் பேசாமல் அப்படியே வாங்கிச் செல்வதை பார்க்க முடிகிறது.

இறுதியாக -

இந்த மாதிரி ஹைப்பர்களில் இரண்டு வாரத்திற்க்கு ஒருமுறை ஆஃபர் போடுவதையே வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் போகும் போது ஆஃபர் போட்டிருக்கும் பாதி பொருட்களுக்கு மேல் அங்கே இருக்காது. கேட்டால் "விற்று தீர்ந்து போச்சு" என்பார்கள். ஆஃபர் போட்ட அன்றே போனால் கூட இதே கதை தான். ஏனெனில்  நீங்கள் விரும்பி வாங்கும் அந்த பொருட்களை அவர்கள் அங்கே வைப்பதே இல்லை. வெறுமனே புக்லெட்டில் மட்டும் தான் ஆஃபர் என்று பெயருக்கு இருக்கும். காரணம் உங்களை மால்களுக்கு வரவழைக்கவே! வந்தது தான் வந்தோம் வெறுமனே கைவீசிக் கொண்டு போக வேணாம் வேறு ஏதாவது வாங்கிக் கொண்டு போவோம்  என்ற உங்களின் நாடி துடிப்பு தான் அவர்கள் கையில்!

முடிவாக –

பணத்தை கொடுத்துக் கொண்டிருக்கும்போது, நாம் வாங்கிய பொருளை பையில் எடுத்துப் போட்டு, நம் கையில் கொடுக்கும் இந்தியர் ஒருவர் சொல்கிறார். "இங்கே எல்லாமே கோல்மால் வேலை தான் நடக்கிறது பய்யா(சகோதரா), நேற்று பம்பர் பரிசுக்காக பெட்டியில் போட்ட சீட்டுக் களை, நேற்றிரவே குப்பையில் தூக்கி கொட்டச் சொல்லி விட்டார்கள்" என்று ஹஸ்கியாய் என்னிடம் சொல்கிறார். அடப்பாவிகளா?? இந்தக் கொடுமையை நான் எங்கே போய் சொல்வது... உங்களைத் தவிர!!

அப்ப தினம்தினம் இப்படித் தானா??

கடைசி கடைசியாக -

நாம் சம்பாதித்த பணத்துக்கு, பணமும்   போய், கடைசியில்  'பல்பு' வாங்காமல் இருந்தால் சரி!! இதற்குமேல் ஒன்றும் சொல்வதிற்கில்லை!!

புதன், அக்டோபர் 26, 2011

சவூதி வாழ் இந்தியர்களுக்கு தூதர் வேண்டுகோள்

                                                           ரியாத் இந்திய தூதரகம்சவூதி வாழ் இந்தியர்களுக்கு தூதர் வேண்டுகோள் : ஆன்லைனில் தூதரகத்தில் பதிவு செய்க!

சவூதி அரேபியாவுக்கான புதிய இந்திய தூதராக பதவியேற்ற ஹமீத் அலி ராவ் அவர்களுக்கு சவூதி வாழ் இந்தியர்கள் சார்பில் கடந்த 20ம் தேதி வரவேற்பு விழா நடத்தப்பட்டது.

அந்த நிகழ்ச்சியில் தூதுரக அதிகாரிகள், 600-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தங்கள் குடும்பத்தாருடன் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய ரியாத் தமிழ்ச் சங்கத்தின் செயலாளர்
ஜனாப். இம்தியாஸ் கூறியதாவது,

சவூதி அரேபியாவில் 21 லட்சம் இந்தியர்கள் வேலை செய்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் குறைந்த சம்பளத்தில் வேலை பார்ப்பவர்கள். அவர்கள் ஏஜென்சிகளால் ஏமாற்றப்படுகிறார்கள், அடிப்படை வசதிகள் கூட இல்லாத இடங்களில் தங்க வைக்கப்படுகிறார்கள். பெரும்பாலன நேரங்களில் அவர்களின் நிறுவனத்தினரினாலேயே ஏமாற்றப்படுகிறார்கள், அவர்களுக்கு தூதரகம் உரிய உதவிகள் செய்யவேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடும் நோக்கில் இந்திய தூதரகத்தின் சமுதாய நலப்பிரிவில் கூடுதல் ஆட்களை பணியமர்த்த வேண்டும்.

சவூதி அரேபியாவில் இந்திய தூதுரகத்தின் சார்பில் நடக்கும் பள்ளிகளின் வருட வாடகை சுமார் 20 முதல் 25 மில்லியனாக உள்ளது. ஒவ்வொரு முறை ஒப்பந்தம் முடியும் பொழுதும் கட்டிட உரிமையாளர்கள் உயர்த்தும் வாடகையால் பள்ளிகளின் நிர்வாகம் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றது. எனவே, தூதர் அவர்கள் பள்ளி நிர்வாகம் மற்றும் சமுதாய ஆர்வலர் களையும் சேர்த்து ஒரு குழு அமைத்து அரசாங்க கடனுதவியுடன் முதல் கட்டமாக மூன்று முக்கிய பிராந்தியங்களிலும் நமக்குச் சொந்தமான பள்ளிக் கட்டிடத்தை கட்டுவதற்கு ஆவண செய்ய வேண்டும்.

சவூதி அரேபியாவில் வாழும் இந்தியர்கள் சந்திக்கும் பிரச்சனைகளுள் ஒன்று அவர்களின் பிள்ளைகளின் மேல்படிப்பு. பிள்ளைகளின் படிப்பு காரணமாக ஆண்கள் இங்கு வேலை செய்வதும், குடும்பம் இந்தியாவில் தனித்து இருப்பதுமாக அவதியுற நேர்கிறது. இதனை மனதில் கொண்டு தூதர் அவர்கள் பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளுக்கு இந்தியக் கல்வி நிறுவனங்களின் கூட்டு முயற்சியுடன் சவூதி அரேபியாவில் மேல்படிப்பு படிப்பதற்குண்டான கல்லூரிகள் தொடங்க ஆவண செய்ய வேண்டும் என்றார்.

மேலும் பலரும் கோரிக்கைகளுடன் தூதுவரை வாழ்த்தினார்கள். இதற்கு ஏற்புரை வழங்கிய இந்திய தூதர் ஹமீத் அலி ராவ் அனைவரின் கோரிக்கைகளையும் உரிய முறையில் பரிசீலிப்பதாக வாக்குறுதியளித்தார்.

மேலும், சவூதி அரேபியாவில் வாழும் இந்தியர்கள் தங்களை தூதரகத்தில் பதிவு செய்து கொள்ளும்படியும் அதற்காக தூதரகம் http://www.indianembassy.org.sa/ என்ற இணையதளத்தில் வசதிகள் செய்துள்ளதாகவும் அறிவித்தார்.

மேலும் அவர் கூறும்பொழுது இந்தியா-சவூதி இருவழி வர்த்தகம் கடந்த வருடம் 25 பில்லியன் அமெரிக்க டாலர்களை தொட்டதாகவும், கடந்த 15 வருடங்களாக இந்தியாவின் எண்ணெய்த் தேவையை 20 சதவீதம் சவூதி அரேபியா பூர்த்தி செய்வதாகவும் தெரிவித்தார். சவூதி அரேபியாவிற்கு இந்தியாவின் ஏற்றுமதி 4 பில்லியன் டாலராக உள்ளதாகவும், இந்தியா சவூதி அரேபியாவின் நான்காவது பெரிய வர்த்தக கூட்டாளியாக இருப்பதாக தெரிவித்த அவர் இந்தியர்களின் முதலீடு 2 பில்லியன் டாலராக உள்ளது என்றும் தெரிவித்தார்.

இந்தியர்களின் கண்ணியமும், கடின உழைப்பும், சட்டத்தை மதிக்கும் தன்மையும் இந்தியர்கள் அனைவருக்கும் பெரும் மதிப்பை பெற்றுத் தந்துள்ளது என்றும் கூறினார்.

நிகழ்ச்சியின் இறுதியில் தூதர் அவர்கள் அங்கு கூடியிருந்த அனைத்து இந்தியர்களையும் தனித்தனியாக சந்தித்து அவர்களுடன் கைகுலுக்கிக் கொண்டது இந்தியர்களின் மனதில் மக்களுக்காக அமர்த்தப்பட்ட தூதுவர் என்ற நம்பிக்கை விதையை விதைத்தது.

நன்றி : முத்துபேட்டை.orgவியாழன், அக்டோபர் 20, 2011

அவசரம்...!!
தமிழ்மணத்தை சவுதியில் மீட்க கை கோர்ப்போம் 


அஸ்ஸலாமு அலைக்கும்!!

சவுதியில் தமிழ்மணம் தடை செய்யப்பட்டுள்ளதாக செய்தி வந்துள்ளது.
எல்லோருடைய  பதிவுகளையும் படித்தவர்கள் தான் உணர்ச்சி வசப்பட்டு மெயில் அனுப்பி இருக்க வேண்டும். சவுதியில் unblock செய்ய வேண்டிய வேலையை பாருங்கள்.

நீங்கள் சவுதியில் இருக்கிறீர்களா? தமிழரா? இணைய வசதி இருக்கா?
தயவு செய்து unblock request கொடுங்கள்.

கிழேயுள்ள இந்த லிங்கில் கொடுக்கவும்.

http://www.internet.gov.sa/resources/block-unblock-request/unblock/

நானும் என்னை சார்ந்த நண்பர்களும் unblock-request கொடுத்து விட்டோம்.

குறைந்தது 25 நபர்களாவது இந்த பரிந்துரை கொடுக்க வேண்டும்

இன்னும் 24 மணிநேரம் தான் டைம் இருக்கு. ப்ளீஸ்!!!

திங்கள், அக்டோபர் 17, 2011

தமிழ் மணம்!!!


உங்கள்  அனைவர்களின்  மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக...!!

எனக்கு நட்பு வட்டங்களில் மிகப் பெரியது மாற்று மதசகோதரர்கள் தான். அவர்களே நான் சொல்லும் சலாத்தின் அர்த்தம் அறிந்து கொண்டு, என்னை சந்திக்க வரும் பல நேரங்களிலும் சலாம் சொல்லாமல் என்னை பார்க்க வருவதில்லை. அவர்களோடு பழக்க வழக்கங்களும் சொல்லில் சொல்ல முடியாதவை.

சமீபத்தில் தமிழ்மணம் பற்றி தமிழ்மணம் ஒரு பய(ங்கர) டேட்டா... என்ற பதிவு டெர்ரர் கும்மி தளத்தில் வந்தது. அதில் தமிழ்மணம் திரட்டியின் சமீப நிலைகளை நகைச்சுவையாக அல்லது நக்கலாக எழுதப்பட்டிருந்தது. அதில் பின்னூட்டமிட்ட பெயரிலி என்கிற இரமணிதரன் என்கிற தமிழ்மணத்தின் நிர்வாகி ஒருவர் அப்பதிவிற்கு ஆட்சேபனை செய்தார். அவர் ஆட்சேபனை செய்ததில் எந்த தவறும் இல்லை. ஆனால் அவர் பயன்படுத்திய வார்த்தைகள் தான் கண்டனத்துக்குரியது. சக பதிவர்கள் பலர் மீது அவர் பயன்படுத்திய கீழ்த்தரமான, கேவலமான வார்த்தைகள் இங்கு மேற்கோள்காட்டுவதற்காக கூட பிரசுரிக்க முடியாதவைகள். அந்த பதிவிற்கு சென்று நீங்களே அறிந்துக் கொள்ளுங்கள்.

மேலும், முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் சந்திக்கும் போது சொல்லிக்கொள்ளும் "சாந்தியும் சமாதானமும் தங்கள் மீது நிலவட்டுமாக" என்னும் முகமனை கேலி செய்யும் விதமாக "...சாந்தியும் அவ அக்கா சமாதானியும் உங்களுடன்கூடியே..சே! பதிவுத்தோஷம்.. கூடவேயிருப்பார்கள்..." என்று கொச்சைப் படுத்தியுள்ளார்.

இப்பொழுது வலைத்தளத்தை கேலி மற்றும் மனித மதங்களை (மனங்களை) புண்படுத்தும் ஒரு ஆயுதமாக  பயன்படுத்த தொடங்கி விட்டார்கள். தனது வக்கிரத்திற்காக மதங்களை பயன்படுத்திக் கொள்ளும் நபர்களை இங்கே வண்மையாய் கண்டிக்கிறோம்.

திங்கள், செப்டம்பர் 26, 2011

"நல்ல ஓஹுத்திரியமா தாம்மா இக்கிது....!!!"


நெருங்கிய நண்பரின் குழந்தைகளுக்கு பர்த்டேயாம்ரொம்ம்ம்ம்ப....  வற்புறுத்தினார்.   சாதரணமா இதுமாதிரி விழாக்களில் எல்லாம்
நாம் எப்பவுமே கவனம் செலுத்துவதில்லை. ஆனால் பிரியாணியாம்... அதுவும் இறால் பிரியாணி!! இன்னும் ஏதேதோ அய்ட்டங்களை எல்லாம் சொல்லிக் கொண்டே போனார். அதெல்லாம் காதில் விழவில்லை. விடுவமா ?? சாப்பாடு என்றால் தான்  எங்க வேணும்னாலும்  போவோமேஹி..ஹி. (ஆனா புளிய மர  உச்சிக்கி மட்டும் போக மாட்டோம்அவ்வ்வ்வ்.... அங்கே.. அங்கே.. நா சொல்லமாட்டேம்பா!!!!)  

பாருங்க நாம எவ்வளவு பொறுப்போடு  வளர்ந்திருக்கிறோம்.  

சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். பேச்சு சுவாரஸ்யத்தில் நான் கொஞ்சம் நிறையவே சாப்பிட்டு விட்டேன். (ஹா.. இது எப்போதும் நடக்கிற கதை தானே என்று நீங்க கேட்பதெல்லாம் இப்ப காதில் விழாது!) ஆச்சு முடிஞ்சுச்சு...!!  கல்லா கட்டியாச்சு.


அவருடைய மகள் பாயாசத்தை ஸ்பூன் ஸ்பூனாய் குடித்துக் கொண்டிருக்கும் போது 'கடக்'கென்று சப்தம் (கல்). அப்படியே வாயில் தண்ணீரை கட கடவென்று சப்தமிட்டு பக்கத்திலிருந்த குண்டானில் துப்ப..

"ஏன்?? என்னாச்சு??" (கேட்கனும்ல!)..கேட்டேன்.

"சாப்பிட்ட பாயாசத்தில் கல் இருந்துச்சு uncle..."

சொல்லி முடிக்கலை..

"கல் சாப்பிட்டா, கல் செறிக்கிற வயசு உனக்கு"- இது அவருடைய மகன்.

"அப்ப ஏன் சோறு சாப்பிடுறீங்க?" இது அவர் மகள்.

அறிவு.. அறிவு.. அவங்க வாப்பா மாதிரியே! (ஹி..ஹி..!!)

இவர்கள் பேச்சைக் கேட்டு நண்பர் நெளிந்தார்!!

இந்தக் காலத்து பிள்ளைகள் எப்படி எல்லாம் பேசிக்கிறார்கள், யோசிக்கிறார்கள். நாமும் தான் இக்கிறோமே!!

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
 
" பாட்சா"

இங்கே மங்களூரைச் சேர்ந்த மூன்று அண்ணன் தம்பிகள் இருக்கிறார்கள். அவர்களில் இருவர் மூத்தவர்கள். கடைசிப் பையன் இளையவன் (இதுக்கு மேலே நான் விவரிச்சா நீங்க அழுதுடுவீங்க!! ஹி..ஹி.!!) இவர்கள் என் கண் பார்க்க படிப்படியாய் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள்

எப்படி என்றால், இவர்கள் வேறு கம்பெனிகளிலோ, கடைகளிலோ வேலை செய்யவில்லை. மீன்களை குறைந்த விலைக்கு வாங்கி நல்ல விலைக்கு விற்பது. அதாவது சொந்தமாய் கடை ஏதும் வைக்காமல், வாங்கி வந்த வேனிலேயே ஒரு முட்டு சந்தில் வைத்து மீன்களை விற்று விடுவது. மூன்று பேரில் ஒருவர் விலை பேசி எடை போட்டு தந்துவிடுவார்.

மற்ற இருவரும் அதை வெட்டி சுத்தம் செய்து தந்துக் கொண்டி ருப்பார்கள். கடையில் வாங்குவதை விட, விலை மலிவாக இருப்பதால், இவர்களுக்கு நிறைய கஸ்டமர்கள். இரவில் ஒன்பது பத்து மணிக்கு மேல்தான் நிறைய பேருக்கு டூட்டி முடிந்து வருவதாலும், முனிசிபாலிட்டி (பலதியா) செக்கிங் இல்லாததாலும் இவர்கள் வியாபாரம் அமோகம்.

இப்படி சம்பாதித்துக் கொண்டிருந்தவர்களைப் பார்த்து கண் படுமா இல்லையா? பட்டது!! யாராவது முனிசிபாலிட்டிக்கு போட்டுக் கொடுப்பது போல் போட்டு மாட்டிவிடுவது. முனிசிபாலிட்டிகாரன் வந்து இவர்களையும், மீன்களையும் அள்ளிக் கொண்டு போய் விடுவான்கள். அப்படி மாட்டி ரெண்டு மூணு தடவை கப்பம் கட்டியும் வெளியே வந்திருக்கிறார்கள். முன்னேறுவதற்கு இந்த ஒரு அடையாளம் போதாதா??

கண் சிமிட்டும் நேரம் போல் ஒரு நல்ல நாளில், ஒரு இடத்தைப் பிடித்து, நட்ஸ் கடை திறந்து விட்டார்கள். நட்ஸ் என்றால் போல்ட் நட்ஸ் இல்லை. பாதாம் பிஸ்தா கடை. இன்ன பிற அரைத்த கிச்சன் மசாலா சாமான்கள் சில்லறையில் விற்பனை மற்றும் டெலிபோன் கார்ட்கள் மொத்தமாய் கொள்முதல் செய்து wholesale/ retail-லில் விற்பது. அச்சா பஹூத் அச்சா.

இப்பல்லாம் பிற மாநிலத்துக்காரர்களிடம் ‘மெட்ராஸ்காரங்க’ என்று சொல்லிப் பாருங்க!! அப்படி ஒரு படுகேவலமான பார்வையைப் பார்ப்பார்கள் பாமரர்கள் கூட. ஆனால் இவர்கள் அப்படியல்ல!!!

நான் எப்ப கடைக்கு போனாலும் "பாட்ஷா" படத்தை பற்றி ரொம்ப சிலாகித்துப் பேசுவார்கள். "ஏய் நீ என்ன பெரிய பாஷாவா? ஒரு ஆளை அடிச்சா நூறு பேரு செத்து போய்டுவாங்கலாமே? அப்படிம்பாங்க. தமாஷுக்கு தான். அவர்கள் பேச்சு (ததிங்கினத்தோம் தமிழில்) ஒரே சிரிப்பாய் இருக்கும். அப்பத்திலிருந்து அவர்களை நான் பாட்சா என்று அழைப்பதும் , அவர்கள் என்னை பாட்சா என்று அழைப்பதுமாய் போய்க் கொண்டிருந்தது. ஆனா என்பெயர் அவர்களுக்கு தெரியாது. அவர்கள் பெயரும் எனக்கு தெரியாது. மொத்தத்தில் பாட்சா.. பாட்சா.. தான்.

ஃபேமிலி வந்த பிறகு இவர்களையும் அழைத்துப் போய் எல்லாப் பொருட்களும் வாங்குவோம். அப்பவெல்லாம் மூத்தவர்கள் இரண்டு பேர் கடையில் எப்போதும் இருப்பார்கள். இளையவன் கடையில் எப்போதாவது தான் இருப்பான்.

ஒரு நாள் என்னிடம் ‘இவங்க’ ஏதோ வாங்கச் சொன்னங்க. நான் வேலை விஷயமாய் எங்கோ போவதாய் சொல்லி, பாட்சா கடையில் வாங்கிக்க சொல்லிவிட்டு போய் விட்டேன்.

இவங்க போயிருந்த சமயம் கடைசி தம்பி தான் இருந்திருக்கான். "பாட்சா இல்லையா" என்று இவங்க கேட்க, அவன் "பாட்சா என்று யாரும் இங்க இல்லையேக்கா" என்று சொல்லி இருக்கான். இவங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. வாங்க வேண்டியதை வாங்கிக் கொண்டு வந்துட்டாங்க! என் கிட்டேயும் அதைப் பற்றி கேட்கலை!!

பிறகொரு நாள் அந்தக் கடைக்கு போகும் போது, அந்த நேரத்தில் மூன்று பேருமே இருந்தாங்க. போன உடனேயே இவங்க கேட்டக் கேள்வி "உங்க மூணு பேர்ல யார் பாட்சான்னாங்க? ", அவர்கள் எல்லோருமே சிரிக்க, நானும் சிரித்தேன்.

நடுவன், "யக்கா இங்கே யாருமே பாட்சா கிடையாது. என் பெயர் சௌகத், அண்ணன் பெயர் அப்துல் ரஹ்மான், இளையவன் பெயர் நூருல்லாஹ்" என்று சொல்ல,

நானும் "என்னை அவங்க பாட்சான்னு கூப்பிடுவாங்க, நான் அவங்களை பாட்சான்னு கூப்பிடுவேன்" என்று சொல்ல..

ஙே...!!

"நல்ல ஓஹுத்திரியமா தாம்மா இக்கிது" (confusion) என்று இவங்க புலம்ப, ஒரே சிரிப்பு. (நோட் பண்ணிக்கோங்க இது புது வார்த்தை!!)

கூடுதலாய் தகவலுக்காக, இந்த சகோதரர்கள் தற்சமயம் வியாபாரம் செய்து வரும் கடை, நகை கடைகளை ஒட்டிய ஏரியா. இவர்கள் வியாபாரம் செய்து வரும் கடையும் முன்பு நகை கடை இருந்த இடம் தான். இவர்களும் நகைக் கடை திறக்க முயற்சி செய்து வருவதாக, வாய் வழிச் செய்திகள் காதுவழியாக புகைகிறது.

இப்பல்லாம் நான் அவர்கள் கடைக்குப் போனால் "பாட்சா..பாட்சா" என்று கூப்பிடுவதில்லை. "ராஸா, ராஸா" என்றே தான் கூப்பிடுறாங்க. ஏங்க...?? நல்லவேளை ஏதும் மொழிவாரியாக வேறு பெயர் சொல்லி கூப்பிடாமல் இருந்தால் சரிதான். அவ்வவ்வ்வ்வ்...

<><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><>
ஆஹா பக்கங்களின் இன்டலி பட்டையை யாரோ லூட்டடிச்சிகிட்டு போய்ட்டாங்க!! ஒரு மாசமா கவனிக்காட்டி இப்படியெல்லாம் கூட
ஆகுமா??

வெள்ளி, செப்டம்பர் 02, 2011

"ஆவு கெச்சேனு"ஆவு கெச்சேனு


மணி என்றால் பணமென்றும், நேரமென்றும், பெல் என்றும் எல்லோருக்கும் தெரியும். ஆனால் நம்ம நண்பர் மணியை, மணி என்றே எல்லோரும் அழைப்போம். இந்த மணிக்கு ஓர வஞ்சனை, நுனி வஞ்சனை ஏதும் தெரியாது. யார் எந்த வேலை சொன்னாலும் செய்து கொண்டே இருப்பார். அவர் இங்கே அமீர் ஆபீசில் ஏஸி ரெஃப்ரிஜிரேஷன் பணியில் இருக்கிறார்

ஒருமுறை முறை டாய்லெட்டில் பிளஷ்அவுட் வேலை செய்யலை. மணியிடம் பேசிக் கொண்டிருந்த போது "யாரவது தெரிந்த ப்ளம்பர் இருந்தா அனுப்புங்க" என்று சொன்னேன். 'சரி' என்று சொன்னார். மறுநாள் டூட்டி முடிந்து வெளியே வரும்போது அவர் தான் நின்றுக் கொண்டிருந்தார். “என்ன மணி?” என்றேன். “வாங்க வீட்டுக்கு போகலாம்” என்றார். “அப்ப ப்ளம்பர்?? என்றேன். “வாங்க பார்த்துட்டு போய் கூட்டி வரலாம்” என்றார். “சரி” என்று கூட்டி போனேன்.

மணியை கூட்டிப் போய் டாய்லெட்டில் உள்ள பிரச்சினையை காட்டிவிட்டு, மணிக்கு டீ போடுங்க என்று சொல்லிவிட்டு, யாரோ போனில் கூப்பிட்டார்கள் அவர்களோடு பேசிக் கொண்டிருந்த போது, "இப்ப வர்றேன்" என்று சொல்லி வெளியே போனார். சரி ப்ளம்பரை கூப்பிடத் தான் போகிறார் என்று நினைத்துக் கொண்டேன். போய் விட்டு பையில் எதையோ வாங்கி வந்தார். "என்ன மணி ப்ளம்பர் எங்கே?" என்று கேட்டேன்.

"இதோ இப்ப வந்துடுவார்" என்றார். "சரி நீங்க இங்க வாங்க இந்த டீ யையும் பிஸ்கட்டையும் சாப்பிடுங்க" என்றேன். "இதோ ஒரு நிமிஷத்தில் வருகிறேன்" என்று டாய்லெட்டினுள் திரும்ப போய் விட்டார்.

அஞ்சு நிமிஷத்தில் "சார் இங்க வந்து பாருங்க!" என்றார். பிளஷ்அவுட்டை அழுத்திப் பார்க்கச் சொன்னார். அழுத்தினேன். தண்ணீர் சர்ர்ர் என்று பிய்த்துக் கொண்டு அடித்தது. பிரமிப்புடன் மணியைப் பார்த்து "இந்த வேலைய எப்ப கத்துக் கிட்டீங்க" என்று கேட்டேன். "நேரம் போகாத நேரத்தில் இந்த வேலையையும் கத்துக்கிட்டேன்" என்றார்.

பெருநாள் நெருங்கி கொண்டிருந்த நேரம். வீட்டில், "புது பேண்ட் இன்னும் தைக்கக் கொடுக்கலியா" என்று தினம் கேட்டுக் கொண்டே இருந்தாங்க. இன்னும் பேண்ட் பிட்டே எடுத்தப் பாடில்லை. எப்ப நேரம் கிடைத்து எப்ப தைக்க கொடுக்கிறது.

பிறகு தான் டைலர்ஸயே போய் பார்த்தேன். எல்லோரும் ரொம்ப பிஸியாய் இருந்தார்கள். பெருநாள் முடிந்து பார்க்கலாமே என்றார்கள். பேண்ட் தைக்க கொடுக்காமல் போனால் வீட்டில் லெப்ட் அண்ட் ரைட் தான். மணிக்கு தெரிந்த ஆட்கள் இருப்பார்களா?? எதுக்கும் தான் விசாரித்துப் பார்ப்போமே என்று, சொன்னேன். அப்படியா?? பார்க்கலாம் சார்,,, என்று வீட்டுக்கு வந்தார். பேண்ட் துணியையும் அளவையும் கொடுங்க என்று வாங்கிக் கொண்டு போனார். "பெருநாளைக்கு போட்ட மாதிரி தான்" என்று குரல் கேட்டது!!

மறு நாள் தைத்த பேண்ட்டை கொண்டு வந்து கொடுத்து "போட்டுப் பாருங்க சார் சரியா இருக்கான்னு பார்ப்போம்னு" ஆச்சர்யப் படுத்தினார். உடுத்தி வந்து "எப்படி... மணி" என்றேன். "எல்லாம் நாம தச்சது சரி இல்லாமலா போய்டும்" என்றார். "அட" பிரமிப்பாய் இருந்தது.

"இத எப்படி கத்துக்கிட்டீங்க" என்றேன்.

"டூட்டி முடிஞ்சு ரூமில் நேரம் போகல. ஒரு மெஷின் வாங்கி போட்டு கத்துக் கிட்டேன்"

பின்னொரு தடவை வீட்டில் வாஷிங் மெஷின் ஓடவில்லை. மணியிடம் சொல்லலாம் என்று ஆளனுப்பி சொன்னேன். அந்த நேரம் அவருடைய செல் நம்பரை எங்கோ மறந்து வைத்து விட்டேன். வந்தார். அக்கு வேறு ஆணி வேறாக பிரித்துப் போட்டு விட்டார். ஆட்டோமேடிக் வாஷிங் மெஷின். இதன் பாகமொன்று வேலை செய்யவில்லை. இந்த பார்ட்ஸ் மார்கெட்டில் கிடைக்குமா என்று அவரே கேட்டுக் கொண்டு, எதுக்கும் போய் பார்க்கலாம் என்று அவரே புறப்பட்டுப் போய் மெனக்கெட்டு வாங்கியும் வந்து விட்டார். பிரித்துப் போட்ட பார்ட்ஸின் கிட்ட கூட சென்று நான் எட்டிப் பார்க்கவில்லை. ஆனால்

என்னை அருகே கூப்பிட்டு காட்டினார். அதனுள்ளே வயர்கள் சுற்றி இருந்த பகுதியில் மிகப் பெரிய ஒரு வெயிட்டான கல் ஒன்று இருந்தது. "என்ன மணி இவ்வளவு பெரிய தபூக் கல் இருக்கு" என்று கேட்டேன். "அது தான் மெஷினை அங்கிட்டும் இங்கிட்டும் நகர்ந்து ஓடாமல் நின்ற இடத்திலேயே நின்று ஓட வைக்கும்" என்றார்.

"அப்படியா?"

நான் மணியை கொஞ்சம் ஹாலில் இருக்கச் சொல்லிவிட்டு பெருமையாய் இவங்களை கூப்பிட்டு அந்த கல்லை காட்டினேன். "ஆவு கெச்சேனு எம்புட்டு பெரிய கல்லு உம்மாடி..." ன்னாங்க. போய்ட்டாங்க.

எல்லாவற்றையும் இணைத்து ஓடவும் வைத்து விட்டார். மணியிடம் ஒரு பழக்கம் இருக்கிறது. நாம் என்ன வேலை சொன்னாலும் செய்துவிட்டு காசு கொடுத்தால் வாங்க மாட்டார். அதனாலேயே அவரை கூப்பிட்டு எந்த வேலை சொல்லவும் ஒரு சங்கோஜமாவே இருக்கும்.

மணி போன பின் இவங்களிடம்

"ஆவு கெச்சேனு, அப்படின்னா என்ன? ன்னு கேட்டேன்.

"ம்ம்ம்ம்... அதுவா பொம்பளைங்க பாஷை" ன்னாங்க!

ஒருவேளை 'வாவ்' என்பதை தான் இப்படி சொன்னாங்களோ, தெரியலை! ஆனா முன்பொருமுறை விமல் பெட்சீட் விளம்பரம் ஒன்றில், "பெண்கள் தங்கள் மனோபாவங்களை பல வழிகளில் வெளிப்படுத்துகிறார்கள் அவற்றில் இதுவும் ஒன்று" என்று ஒரு வரி எழுதி இருக்கும். அது போல் தான் இதுவும் என்று நினைத்துக் கொண்டேன்.

எதையோ சொல்ல வந்து விட்டு நானும் வேறெதையோ சொல்லிக் கொண்டிருக்கிறேன். ஆமா இந்த மணி இன்னும் எனென்ன வேலைகள் எல்லாம் கற்று வைத்திருக்கிறார் என்று நேரம் வரும்போது ஒன்னொன்னா கேட்கணும். இதுமாதிரி நண்பர்கள் அமைவது ரொம்ப அபூர்வம்.

இங்கே பிலிப்பைன்ஸ் நாட்டுகாரர்களைக் கூட பார்த்திருக்கிறேன். ஆபீசில் பெரிய போஸ்டிங்கில் இருப்பார்கள். ஆனால் தச்சு வேலை, பெய்ண்டிங் வேலை, ஏஸி மெக்கானிசம் எல்லாம் தெரிந்து வைத்திருப்பார்கள். எப்படி என்று கேட்டால், எங்களுக்கு தொழில் கல்வி கற்ற பிறகு தான், மற்ற படிப்புக்கு அலவ்ட் என்கிறார்கள்.

அந்த வகையில் நாம் எங்கே இருக்கிறோம் என்பதும் இப்போது புரிகிறது. 'மணி' போல் இன்னும் பலபேர் நமது நாட்டில் நிறைய வேலைகள் கற்றுக் கொண்டு உருவாக வேண்டும்.

செவ்வாய், ஜூலை 05, 2011

சவுதியும் - முஸ்தாக்பாயும்!!சவுதியும் -  முஸ்தாக்பாயும்!!

வீட்டு வேலைக்காகவும், வாகன ஓட்டிகளாகவும் வரும் இந்தியா
மற்றும் இதர நாட்டு நபர்களுக்கு ஓய்வு ஒழிச்சலற்ற வேலை
என்று பரவலாக கேள்வி பட்டிருக்கிறேன். அவர்களின் புலம்பல்
களை கேட்டுமிருக்கிறேன். இதில் ஒவ்வொருவரும் வந்து
சொல்லும் கதைகளையும் கேட்க மிகவும் பரிதாபமாகவே இருக்கும்.
இப்படி எக்குதப்பாக வந்து மாட்டிகிட்டாங்களே என்று யோசிக்க
வைக்கும்.


எண்ணூறு ரியால்களில் ஆரம்பித்து ஆயிரத்தி ஐநூறு ரியால்கள் வரையிலும் சம்பளம் வாங்கிக் கொண்டு சிலர் சொகுசாகவும், சிலர்
மிகுந்த கஷ்டங்களுடனும் வாழ்கிறார்கள். (ஒரு ரியால் என்பது
சுமாராக இந்தியா ரூபாய் 12- க்கு சமம்)

இங்கே முஸ்தாக் பாய் என்று ஒரு நண்பர் இருக்கிறார். இவர்
ஒரு கம்பெனியில் நல்ல வேலையில் இருக்கிறார். எப்பொழுதும்  
இவரோடு ஒரு நண்பர்  கூடவே வருவார். அவர் இங்கே ஒரு
அரபுகாரர் வீட்டில், வீட்டு பணிக்கு அமர்த்தப்பட்டிருக்கிறார். அவர்
பெயர் ஷாஜஹான் பாய்.   இவர்கள்  இருவரும் சென்னையை
பிறப்பிடமாக கொண்டவர்கள்.

மேற்படி ஷாஜஹான் பாய்  இங்கே வேலைக்கு சேர்ந்து பல வருடங்களாச்சு. இவர் வழக்கமாகவே எங்கள் வங்கி வழியாகத்-
தான் ஊருக்கு பணம் அனுப்புகிறார். இவர் எங்களைப் பார்க்க
வரும் நேரமெல்லாம் மனம் விட்டு பேச முடியாத அளவுக்கு கூட்டமிருக்கும். ஆகவே பணத்தை அனுப்பிவிட்டு போய்க்
கொண்டே இருப்பார்கள். சென்ற வாரம் அவர் இங்கே வந்திருந்த
போது மாத கடைசியில் கூட்டம் அவ்வளவா இருக்காது. முஸ்தாக்
பாய் நல்ல பழக்கம் என்பதால், ஷாஜஹான் பாயிடம் மெல்ல
பேச்சுக் கொடுத்தேன்.

"சவுதியில் உங்களை ரொம்ப காலமாகப் பார்க்கிறேனே, எப்படி
போகிறது உங்க வாழ்க்கை?"

"நல்லா இருக்கேன் சார், பிள்ளைகளெல்லாம் உயர்படிப்பு படித்துக் கொண்டிருக்கிறார்கள்"

"அப்படியா!! சந்தோஷம். சொந்தமா வீடு கட்டியாச்சா?"

"இல்ல சார். நான் சம்பாதித்து அனுப்புவது பிள்ளைகளின் படிப்பு செலவுக்கும், குடும்ப செலவுக்குமே சரியாக இருக்கின்றது. இதில்
சேமிக்க எந்த வழியுமில்லை!"

"நீங்கள் ஊரோடு போய் செட்டிலாகிவிடலாம் என்று சென்ற தடவை சொல்லிக் கொண்டு போனீர்களே, என்னாச்சு?"

"அப்படிதான் நினைத்துக் கொண்டு போனேன் ஆனால் ஊரில்
முரட்டுத் தனமாய் பெரியளவில் முதலீடு செய்து  வியாபாரம் செய்பவர்களிடையே நாம் போட்டிப் போட முடியாதென்று
தெரிந்து போனதால் திரும்பவும் இங்கேயே வேலைக்கு வந்து
விட்டேன்"

(இதுபோல் நிறையபேர் முடித்துக் கொண்டு ஊர் போவதும்
திரும்பவும் வேறு கம்பெனிக்கு வந்து பழைய அளவுக்கு
சம்பளம் கிடைக்காமல் அல்லாடுவதும் தொடர்கிறது. நல்ல
வேளை இவரை திரும்பவும் பழைய கம்பெனியே விசா
கொடுத்து அழைத்துக் கொண்டது)

"நீங்கள் வேலைப் பார்த்த கம்பெனிக்கே திரும்பவும் வந்து
விட்டதால் பழைய சம்பளமே தருகிறார்களா அல்லது குறைவாக ஏதும்....??"

"அப்படியில்லை. நான் திரும்ப வரணும் என்று சொன்னதும்
அவங்களே விருப்பப்பட்டு தான் என்னை அழைச்சிக்கிட்டாங்க. வருடாவருடம் சம்பளம் அதிகரித்தும் தர்றாங்க. அதைவிடவும்
அவங்க இந்த தடவை ‘உம்ரா’ (மெக்கா-மதீனா) செல்லும்போது
என்னையும் கூடவே அழைத்துப் போனாங்க!"

"அப்படியா ரொம்ப நல்ல விஷயமாச்சே...!! உங்கமேல் அளவுகடந்த நம்பிக்கை வைத்திருக்கிறார்களில்லையா? "

"ஆமா! ஆனா ஆரம்பத்தில் யாரையும் சட்டென்று நம்பிவிட
மாட்டார்கள்!"

"அது எல்லோருக்கும் உள்ள இயல்புதானே!"

"இவர்கள் சற்றே வித்தியாசமானவர்கள்"

"எப்படி ??"

"ஆரம்பத்தில், நான் சமைத்துக் கொண்டிருக்கும் போதோ அல்லது
வீட்டை சுத்தம் செய்துக் கொண்டிருக்கும் போதோ எனது கண் பார்வையில் படும்படி எதேச்சையாய் கிடப்பது போல் தங்கநகைகள்
கிடக்கும். எனக்கு பகீரென்று இருக்கும். எடுத்து வைத்திருந்து
அந்த வீட்டம்மாவிடம் கொடுப்பேன்!"

"ஓ..."

"சில நேரங்களில் அவர்கள் தரும் சம்பளத்தில் கூடுதலாய்
நம்மிடம் 500 ரியால் அல்லது ரெண்டு 500 ரியால்கள் சேர்ந்தே
வரும்."

"அதை என்ன செய்வீர்கள்?"

"உடனே அலறி அடித்துக் கொண்டு போய் கொடுத்து விடுவேன்"

"அப்படியா!!??"

"இப்படி சோதனை நடந்துகொண்டிருந்த காலகட்டத்தில் ஒரு
தடவை சம்பளம்தரும் போது கூடுதலாய் இருந்த 500 ரியாலை
திருப்பிக் கொண்டு அவர்களிடம் கொடுத்தபோது, அதை என்னிடமே
தந்து வைத்துக் கொள்ள சொல்லிவிட்டார்கள்"

"நிஜமாவா?"

"உண்மையிலேயே எனக்கு மனம் நெகிழ்வான தருணம் அது"

"ரொம்ப சரியாச் சொன்னீங்க"

"அதன் பின்னர் கடைகளுக்கு சென்று வீட்டு உபயோக சாமான்கள் வாங்கிவர அவர்கள் தரும் டிப்ஸ்கள் அபரிமிதமாய் இருக்கும்"

"ம்ம்ம் ...!!"

"சிலநேரங்களில் பக்கத்து பார்மஸிகளில் கிடைக்காத மெடிஸின்-
களை நான் அலைந்து திரிந்து எப்படியாவது எவ்வளவு தூரமாய் இருந்தாலும் சென்று வாங்கி வந்து விடுவேன். அதனால் அனைத்து மெடிசிலிப்ளும் என்னிடமே வரும்"

"ரொம்ப நல்லாவே நடந்துக்கிறீங்கன்னு சொல்லுங்க"

"அப்படியல்ல, அவர்கள் நம்மை வைத்து பேணுவதிலும் இருக்கு!"

"என்னான்னு?"

"ஒருதடவை ரொம்ப அத்தியாவசிய பணத் தேவை. பழகிய
நண்பர்கள் மற்றும் வெளியார் யாரிடமும் கேட்க எனக்கு மிகுந்த
தயக்கம். சட்டென்று இவர்களிடம் வாய் விட்டுக் கேட்டேன்.
"எனக்கு ஐயாயிரம் ரியால்கள் உடனடியாய் தேவை இருக்கு. மாதா
மாதம் என் சம்பளத்தில் பிடித்துக் கொள்ளுங்கள்" என்றேன். உடனே
தந்து, "மாதம் 500 சம்பளத்தில் பிடித்துக் கொள்வேன்" என்றார்கள்.
சரி என்று சொல்லிவிட்டேன். "அந்த நேரத்து பணத் தேவை மிகப்
பெரிய பாரம் குறைந்து விட்டது போன்ற திருப்தி"

"இருக்காதா பின்னே!"

"பிள்ளைகளுக்கு காலேஜ் படிப்புக்கு பணம் கட்டியாகணுமே!"
 
"அது அவசியான விஷயமாச்சே!"

"அடுத்த மாதம் அதற்க்கடுத்த மாதம் 500 - 500 என்று பிடித்துக் கொள்ளப்பட்டது"

"அப்புறம்"

"மூன்றாவது மாதத்தில் பழையபடியே முழு சம்பளமும் தந்தார்கள்.
எனக்கு ஆச்சர்யமான ஆச்சர்யம். கடன் வாங்கியிருக்கும் விவரம்
சொன்னேன். "பரவாயில்லை. நீயே வைத்துக்கொள் என்றார்கள்.
"நாம் எல்லாம் வேலைக்காரர்கள் தான் என்றாலும் இதைவிட
மனிதாபி மானமும், அங்கீகாரமும் வேறு எங்கிருந்து கிடைக்கும்.
நீங்களே சொல்லுங்க?"

"அடடா ரொம்ப நல்ல செய்தி சொல்றீங்களே!"

“இன்னும் இவர்களுடைய குணத்தைப் பற்றி எவ்வளவோ சொல்லிக் கொண்டே போகலாம். வீட்டில் வயதான பெரியவர்களும் குழந்தைகளும் என் மேல் காட்டும் பிரியம் அலாதி! இவைகள் என்னை மிகவும் கட்டிப் போடுகின்றன. ஊரில் எங்கள் குடும்பத்தினரோடு சேர்ந்து வாழும் உணர்வை ஏற்படுத்துகிறது”.

"சரி உங்களுகென்று சாப்பாடெல்லாம் இங்கேயே சாப்பிட்டுக் கொள்வீர்களா? நீங்கள் ரூமில் போய் சொந்தமாய் சமைத்துக் கொள்வீர்களா?

"இல்லை. இவர்களுக்கு என்ன வகையான உயர்ந்த உணவு
வகைகள் சமைக்கிறோமோ அதுவே இங்கு வேலைப் பார்ப்பவர்-
களுக்கும் சாப்பிட அனுமதி உண்டு.  அவர்களும் நாங்களும்
சாப்பிட்டது போக நிறைய உணவு வகைகள் மீதப்படும். அவை-
களை எல்லாம் நான்தான் எடுத்து செல்வேன். பக்கத்தில் சில கம்பெனிகளில் வேலை செய்யும் நமது நாட்டை சேர்ந்த
நண்பர்களுக்கு தினம் ஒரு கம்பெனி என்று கணக்கு வைத்து
அதை கொடுத்து விடுவேன். எதுக்கு வேஸ்ட்டாக்கி ட்ராஷ்
கூடையில் கொண்டு போய் கொட்டனும். ஏதோ நம்மாலும் ஆன உதவிகளை செய்யனுமில்லையா?

"ஆஹா.. அவர்களுடைய பெருந்தன்மையும், ஈகை குணமும்
உங்களையும் பற்றிக் கொண்டது அப்படி தானே?"

"உண்மையை சொல்வதானால்... அப்படி தான்" என்றார்
முத்தாய்ப்பாக!

ஷாஜஹான் பாய் பற்றியும் அரபுகாரர்களின் குணநலன்கள்  பற்றியும்  இங்கே  ஓரளவு   தெரிந்து கொண்டோம். ஆனால்... இந்த முஸ்தாக்
பாய் பற்றி சொல்லவில்லையே!

சரி. யாரிந்த முஸ்தாக்!

சிறிது காலத்திற்கு முன்பு திரு.பாக்கியராஜ் நடித்து "அந்த ஏழு
நாட்கள்" என்று ஒரு படம் வந்தது ஞாபகமிருக்கா? (இல்லை
யென்றால் பரவாயில்லை. ‘சன்’ டிவியில் இரண்டு மாதத்திற்கு
ஒரு முறை  போடுவார்கள். பார்த்துக் கொள்ளலாம்) அந்த
பாக்யராஜோடு சரிக்கு சமமாய் 'வாத்யாரே'.. 'வாத்யாரே' என்று
மூச்சுக்கு முன்னூறு தரம் சொல்லி நடித்தாரே  ஒரு குட்டி
நட்சத்திரம் அவர் பெயர் "ஹாஜா ஷரீப்". அந்த ஹாஜா ஷரீபின்
அண்ணன் தான் இந்த முஷ்தாக் பாய். இவரும் ஒரு சில பாக்யராஜ் படங்களில் நடித்துமிருக்கிறார். முன்பு அந்த போட்டோவெல்லாம்
என்னிடம் கொண்டு வந்து காட்டினார்.

இந்த கட்டுரையை  எழுதி வைத்துக்கொண்டு, "அந்த போட்டோவை
எடுத்து வாங்க. இங்கே பப்ளிஷ் பண்ணனும்" என்று அவரிடம்
கேட்டேன்.  கொண்டு வந்து தந்தபாடில்லை! பிறகு அவர் தரும்
போது வெளியிடுகிறேன்.

சனி, ஜூலை 02, 2011

வெ‌ற்‌றிகரமான திருமண வா‌ழ்‌க்கை‌யி‌ன் ரக‌சிய‌ம்!


வெ‌ற்‌றிகரமான திருமண வா‌ழ்‌க்கை‌யி‌ன் ரக‌சிய‌ம்!

திருமண வா‌ழ்‌க்கையை எ‌ந்த ‌பிர‌ச்‌சினை‌யு‌ம் இ‌ல்லாம‌ல் வா‌ழ்‌ந்த
ஜோடிக‌ள் த‌ங்களது 25-வது ‌திருமண நாளை‌க் கொ‌ண்டாடினா‌ர்க‌ள்.

ஊரையே‌க் கூ‌ட்டி ‌விரு‌ந்து வை‌த்து த‌ங்களது ‌திருமணநாளை‌க் கொ‌ண்டாடிய த‌ம்ப‌தி‌யினரை‌ப் ப‌ற்‌றி அ‌றி‌ந்த அ‌ந்த ஊ‌ர் செ‌ய்‌தி-
யாள‌ர் ஒருவ‌ர், அவ‌ர்களை‌ப் பே‌ட்டி‌க் க‌ண்டு ப‌த்‌தி‌ரி‌க்கை‌யி‌ல் ‌
பிரசு‌ரி‌க்க ‌விரு‌ம்‌பினா‌ர்.

நேராக அ‌ந்த த‌ம்ப‌திக‌ளிட‌ம் செ‌ன்று, 25-ஆ‌ம் ‌திருமண நாளை‌ ஒ‌ற்றுமையாக‌க் கொ‌ண்டாடுவது எ‌ன்பது பெ‌ரிய ‌விஷய‌ம். இது
உ‌ங்களா‌ல் எ‌ப்படி முடி‌ந்தது. உ‌ங்களது ‌திருமண வா‌ழ்‌‌வி‌ன்
வெ‌ற்‌றி ரக‌சிய‌ம் எ‌ன்ன எ‌ன்று கே‌ட்டா‌ர்.

இ‌ந்த கே‌ள்‌வியை கே‌ட்டது‌ம், அ‌ந்த கணவ‌ரு‌க்கு தனது பழைய
தே‌னிலவு ‌நிக‌ழ்‌ச்‌சிக‌ள் ‌நினைவு‌க்கு வ‌ந்தது.

"நா‌ங்க‌ள் ‌திருமண‌ம் முடி‌ந்தது‌ம் தே‌னிலவு‌க்காக சிம்லா
செ‌‌ன்றோ‌ம். அ‌ங்கு எ‌ங்களது பயண‌ம் ‌சிற‌ப்பாக அமை‌ந்தது.
அ‌ப்பகு‌தியை சு‌ற்‌றி‌ப் பா‌ர்‌க்க நா‌ங்க‌ள் கு‌திரை ஏ‌ற்ற‌ம் செ‌ல்வது
எ‌ன்று ‌தீ‌ர்மா‌னி‌த்தோ‌ம்.

அத‌ற்காக இர‌ண்டு கு‌திரைகளை‌த் தே‌ர்‌ந்தெடு‌த்து, இருவரு‌ம்
ஆளுக்கொரு கு‌‌திரை‌யி‌ல் ஏ‌றி‌க் கொ‌ண்டோ‌ம். எ‌னது கு‌திரை ‌
மிகவு‌ம் அமை‌தியாக செ‌ன்று கொ‌ண்டிரு‌ந்தது. ஆனா‌ல் எ‌ன்
மனை‌வி செ‌ன்ற கு‌திரை ‌மிகவு‌ம் குறு‌ம்பு‌த்தனமானதாக
இரு‌ந்தது. ‌திடீரென ஒரு து‌ள்ள‌லி‌ல் எ‌ன் மனை‌வியை ‌அது
கீழே‌த் த‌ள்‌ளியது. அவ‌ள் ‌‌கீழே இரு‌ந்து எழு‌ந்து சுதா‌ரி‌த்து‌க்
கொ‌ண்டு அ‌ந்த கு‌திரை‌யி‌ன் ‌மீது ‌மீ‌ண்டு‌ம் ஏ‌றி அம‌ர்‌ந்து
கொ‌ண்டு, "இதுதா‌ன் உன‌க்கு முத‌ல் முறை" எ‌ன்று அமை‌தி-
யாக‌க் கூ‌றினா‌ள்..

‌சி‌றிது தூர‌ம் செ‌ன்றது‌ம் அ‌ந்த கு‌திரை ‌மீ‌ண்டு‌ம் அ‌வ்வாறே
செ‌ய்தது. அ‌ப்போது‌ம் எ‌ன் மனை‌வி ‌மிக அமை‌தியாக எழு‌ந்து
கு‌திரை‌யி‌ன் ‌மீது அம‌ர்‌ந்து கொ‌ண்டு "இதுதா‌ன் உன‌க்கு இர‌ண்டா‌ம்
முறை" எ‌ன்று கூ‌றியவாறு பய‌ணி‌க்க‌த் தொட‌ங்‌கினா‌ள்.

மூ‌ன்றா‌ம் முறையு‌ம் கு‌திரை அ‌வ்வாறே செ‌ய்தது‌ம், அவ‌ள்
வேகமாக அவளது கை‌த்து‌ப்பா‌க்‌கியை எடு‌த்து அ‌ந்த கு‌திரையை
சு‌ட்டு‌க் கொ‌ன்று‌வி‌ட்டா‌ள்!!!

இதை‌க் க‌ண்டு அ‌தி‌ர்‌ச்‌சி அடை‌ந்த நா‌ன் அவளை ‌தி‌ட்டினே‌ன்.
"ஏ‌ன் இ‌ப்படி செ‌ய்தா‌ய்? ‌நீ எ‌ன்ன மு‌ட்டாளா? ஒரு ‌வில‌ங்கை‌க் கொ‌ன்று‌வி‌ட்டாயே? அ‌றி‌வி‌ல்லையா?" எ‌ன்று கே‌ட்டே‌ன்.

அவ‌ள் ‌மிகவு‌ம் அமையாக எ‌ன்னை‌ப் பா‌ர்‌த்து, "இதுதா‌ன்
உ‌ங்களு‌க்கு முத‌ல் முறை" எ‌ன்றா‌ள்.

“பிறகென்ன... இப்பொழுதெல்லாம்  எ‌ங்களது வா‌ழ்‌க்கை ‌மிகவு‌ம் அமை‌தியாக செ‌ன்று கொ‌ண்டிரு‌க்‌கிறது” எ‌ன்றா‌ர் கணவ‌ர்.

---------------------------------------------------------------------------------------------------------

AMAZING FACTS :


MASJID  = is a 6 letters word


TEMPLE = is a 6 letters word


CHURCH = is a 6 letters word

Also...


QURAN  =  is a 5 letters word


GEETA   =  is a 5 letters word


BIBLE    =  is a 5 letters word


NAMES ARE DIFFERENT, BUT THEY ALL ARE TEACHES THE SAME....

(1) “HUMANITY”,

(2) “PEACE”,

(3) “UNITY”

பஸ்(buzz)ஸில் அனுப்பியது “சித்ரா” (வெட்டிப் பேச்சு சித்ரா அல்ல!!
இவங்க வேற சித்ரா.S!!)

நல்ல விஷயம் தானே!!

மேற்படி “ஆர-ஞ்சை” பெற்று விட்டாலும், கீழுள்ள “முக்கனி”
களை எப்பொழுது கைவர பெறப்போகிறோம். அனைவரும்
சற்றே சிந்திப்போம்!!

திங்கள், ஜூன் 27, 2011

கமெண்ட்ஸ் போடாத வாசகி!!

பஸ்ஸுக்கு காத்திருந்தபோது இரு அம்மணிகள் அளவலாவிக் கொண்டிருந்தாங்க!! அதை நான் உங்களுக்காக 'லாவிக்' கொண்டு
வந்து விட்டேன் !!

"என்னடி இவளே ஒரு மாதிரி இருக்கே, முழுகாம இருக்கியா?"

"இல்லக்கா இப்பல்லாம் அவரு டூட்டி முடிஞ்சு வந்ததுமே வெடு
வெடுன்னு விழுறாரு!"

"சரி இப்ப அதுக்கென்ன?"

"முந்திய மாதிரி என் மேல் அவருக்கு பிரியமில்லையோன்னு
மனசுக்கு தோணுதுக்கா?"

"இவ பெரிய இவ! கல்யாணமாகி வருஷம் ஒன்னு இன்னும்
முடியல! பிரியத்தைப் பத்தி ரொம்பதான் கண்டுட்டாளாக்கும்"

"அது வந்துக்கா...!!"

"அடியே இவளே..!! நாமெல்லாம் நடந்துக்குற முறையில தாண்டி
பிரியமும், பாசமும் நம் மேல வரும். நான் சொல்றேன் நல்லா
கேட்டுக்க!!

(பஸ்கள் நிற்பதும் போவதுமாய் இருக்க, நான் போக வேண்டிய
பஸ் இன்னும் வந்தபாடில்லை!!)

"சொல்லுங்கக்கா"

“காலையில் எழுந்ததிலிருந்து அவங்க ‘ஆப்பீஸ்’ போற
வரைக்கும் அந்த ஹரிபரி நேரத்தில் உன் மூஞ்சியையும்
(அது வேறு) முகத்தையும் (இது வேறு) காட்டிட்டீன்னா, இவங்க
'ஆப்பீஸ்' போய் நீ காட்டிய மூஞ்சியை நினைவில் வச்சிருந்-
தாங்கன்னு வச்சுக்கோ, ஆணி புடுங்க வேண்டிய இவரை, டேமேஜர்
பீஸ புடிங்கிடுவார். பொளப்பு என்னாகும். டப்பா டான்ஸ் ஆடிடும்.
புரியுதா?"

"புரியுதுக்கா!"

"அதனால எப்பவும் கொஞ்சம் சிரிச்ச மாதிரியே இரி! வேல
பாட்டுக்கும் வேல, கையும் கண்ணும் பார்த்துக்கிட்டிருக்க,
என்ன சங்கடமிருந்தாலும் கடையில் சேல்ஸ்மேன்கள்
மெல்லிதாய் சிரிச்சிக்கிட்டிருப்பாங்களே அதுமாதிரி!”

"அடடா விளக்கமெல்லாம் அழகா சொல்றீங்களேக்கா!"

"சரிடி பினாத்தாதே, கவனமா கேட்டுக்கோ!'

"ம்ம்ம்..."

"வாய்க்கு சுவையா ஆக்கிப் போடு!! எல்லாரும் ருசிக்கி
வயப்படுபவர்கள் தாம் புள்ள!"

"எனக்கு அத்தன வகையா சமைக்கத் தெரியாதேக்கா!"

"விடிஞ்சது போ! ஒன்னச் சொல்லியும் ஏதும் ஆகுறதில்ல. நம்மட அம்மாக்கள்ஸும் நமக்கு கல்யாணம் முடியுற வரைக்கும் 
செல்லம் கொடுத்தே அடுப்படி பக்கம் போக விட மாட்டாங்க.
அதனால டீ, காபி தவிர்த்து சுடுதண்ணி மட்டும் தான் நமக்கு
போட வரும். என்னா நா சொல்றது சரிதானா?".

"உண்மைதாக்கா"

"சரி அதனால ஒன்றும் பிரச்சின இல்ல!  இந்த பக்கம் நிறைய
தோழிகள், ப்ளாக்ஸ்பாட்டுல வகை வகையான சமையலைப்
பத்தியும், அவைகளை சமைக்கும் முறைப்பத்தியும் வண்ண
வண்ணமா படங்களைப் போட்டு அசத்துறாங்க!! அவைகளையும்
ஒரு முறைக்கு ரெண்டு முறை போயி படிச்சுப் பாரு. சந்தேக-
மிருந்தா அவங்களுக்கே கமெண்ட்ஸ் போட்டு விளக்கம் கேளு.
அழகா பதில் தருவாங்க! சும்மா லேப்டாப்பை தலகாணிக்கி
கீழே வச்சுக்கிட்டு தூங்காதே! சரியா?

"எல்லாம் சரீக்கா...ஆனா..க்கா ?"

"என்னடி ஆனாக்கா ஆவன்னாக்கா.. ?"

"அவரு டூட்டி முடிஞ்சு வந்த உடனே வெடுவெடுன்னு விழுறாரு!
அதுக்கு நீங்க எதுவுமே சொல்லலையே. அதாங்... க்கா!!”

"இரிடி...பறக்காதே! ஒன்னு ஒண்ணாத்தானே சொல்லணும். அவங்க
டூட்டி முடிஞ்சு சோர்ந்து போய் தான் வீட்டுக்கு வருவாங்க!
அப்பவும் கூட, உன்னோடு செல்லில் பேசி, வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டுதானே வராங்க!! அப்ப செல்லில் உன்னோடு பேசிய பிறகு, அவங்க வீட்டுக்கு வரும் நேரத்தை
கால்குலேட் செய்து மனதுக்குள் வச்சுக்க. இதுக்கு கம்ப்யுட்டர்
எல்லாம் தேவையில்லை!! (ஏஏஏ..யப்பா ரொம்ப படிச்சவங்களா
இருப்பாங்க போலிருக்கே!!) அதற்குள் காபியோ, டீயோ, டிஃபனோ,
அல்லது ஸ்ட்ரைட்டா சாப்பாடோ சாப்பிடுபவர்கள் என்றால்
அவைகளை ரெடி செய்து வைத்து விடு. குளித்து விட்டு சாப்பிட,
அவங்க மனசு சந்தோஷமா இருந்தா எவ்வளவு எலக்ட்ரிசிட்டி
ஷேவ் ஆகுதுன்னு நீயே பாரு!! சரியா??

"ஹி.. ஹி...சரீக்கா??"

"நா என்னத்த சொல்லிப்புட்டேன்னு இப்படி ஹி..ஹி..ன்னு
இளிக்கிரே! கவனமா கேளு புள்ளோய்!"

"சரீக்கா..சரீக்கா..!!"

"அத விட்டுபுட்டு அவங்க வர்ற வரைக்கும், டிவி தொடர், காமெடி
ஷோ பார்க்கலாம்னு உட்கார்ந்துட்டீன்னு வச்சுக்கோ, பிறகு நாம
காமெடிபீஸாகி விடுவோம். தெரிஞ்சுதா??"

"ஆமாக்கா, அதான் அவரு வெடுவெடுன்னு விழறாரா..!! இப்ப
தானே புரியுது. நீங்க மேலே சொல்லுங்கக்கா!"

“ஒன்னு மட்டும் மனசுல வச்சுக்கோ. புருஷா எல்லோரும்
குழந்தைங்க மாதிரி. நாம சிரிச்சா அவங்களும் சிரிப்பாங்க.
அவங்க சிரிச்சா நம்ம மனசும் வீடும் நிறைஞ்ச மாதிரி. அவங்க வரும்போது அழகா டிரஸ் பண்ணி கொஞ்சம் சிரிச்ச மாதிரி
முகத்த வச்சுக்கோ! வந்த உடனே எந்த கவலைப்படும் விஷயத்-
தையும் சொல்லிடாதே! நீ வாங்கி வரச் சொன்னதில் ஏதும்
மறந்து வந்துட்டாங்கன்னாலும், "போய் வாங்கிட்டு வாங்கன்னு
விரட்டாதே!", "பரவாயில்லிங்க, சமாளிச்சுக்கலாம்" என்று சொல்லி அட்ஜஸ்ட் பண்ணு" , புரியுதா?

"அச்சச்சோ... எம்பூட்டு விஷயம் அழகழகா சொல்றீங்க!"

“சரி சரி...மற்றதெல்லாம் ஒன்னற தோழிகளும் அம்மாவும்
சொல்லிக் கொடுத்திருப்பாங்க அதுபடி மனசில வாங்கி நடந்துக்க,
எல்லாம் சரியா வரும். என்னா புரியுதா..!!"

சிரித்துக் கொண்டே தலையை ஆட்டினாள்.

“சும்மா தலைய தலைய ஆட்டாதே!! காலையில் 'அவங்க' ஆப்பீஸ் போறதுக்கும், 'ஆணி' புடுங்கிட்டு வர்றதுக்கும், வாழ்க்கையின் அந்திம
நாள் வரைக்கும் அவங்களுக்கு உதவும்கரங்கள், என்றால் அது நாம
தான், இதில் எந்தவித மூன்றாம் நாலாம் கருத்துக்கும் இடமில்லை.
இப்ப நீ ஜாக்கெட்டில் காலர் வச்சிருந்தீன்னா ஒருதடவை  தூக்கி
விட்டுக்கோ. தப்பே இல்ல!!”

அம்மாடி... கொஞ்ச நேரத்துக்குள்ளார அவங்க பாட்டுக்கும் எவ்வளவு சொல்லிக்கிட்டே போய்ட்டாய்ங்க!!

அதற்குள்  நான் புறப்படவேண்டிய நாலாம் நம்பர் பஸ் வந்துடுச்சு. ஏறிட்டேன்.!! கண்டக்டர், “ரைட்.. ரைட்” விசில் கொடுத்தார்.


ஞாயிறு, ஜூன் 19, 2011

திட்டச்சேரி [[தொடர் பதிவு]]
“எங்க ஊரு நல்ல ஊரு” தொடர் பதிவிற்கு என்னை அழைத்த அன்பின் சகோதரி ஸாதிக்கா அவர்களுக்கு நன்றி!!


திட்டச்சேரி..!!!


1.
நான் பிறந்த ஊர் நாகை மாவட்டத்தில் உள்ள நாகூர் என்றாலும் பெரும்பாலான பிரபலஸ்தர்கள் பிறந்து வளர்ந்த ஊர் என்பதாலும்
நிறைய நண்பர்கள் எங்களூரைப் பற்றி எழுதி விட்டதாலும், நிறைய பேர்களுக்கு நாகூரைப் பற்றி தெரியும் என்பதாலும், நான் சற்றே
நகர்ந்து,  "என் கைத்தளம் பற்றி மனம் கவர்ந்த   துணையூர்"
'திட்டச்சேரி'யைப் பற்றி இங்கே எழுதுகிறேன்.

 நாகூரைப் பற்றி நாலு வார்த்தையாவது சொல்லியாக வேண்டும்.
அறிவின் வல்லமையால் நகைச்சுவையாய் பேசக் கூடியவர்கள்
என்றும், உணவு விஷயத்திலும் வக்கணையாய் நாச்சுவை அறிந்து உண்பதிலும், இவர்களை மிஞ்ச ஆளில்லை என்பதனையே அழகாய்
'நாகூர்' என்று சுருக்கமாய்  சொல்லி சிலாகிக்கிறார்கள் என்பது
என் எண்ணம்.

திட்டச்சேரி, நிரவி, புறாக்கிராமம், ஏனங்குடி, பாக்கம் கோட்டூர்,
போலகம், இல்லாமல் நாகூர் ஏது? சிக்கல், கீவளூர், கூத்தூர்,
பொரவாச்சேரி, மஞ்சக் கொல்லைக்காரர்கள் கோபிக்கவேண்டாம்;
அவர்களும் நாகூர் காரர்கள்தான்! அந்த வகையில் பார்த்தால்
திட்டச்சேரி, நாகூரில் இருந்து நீட்டிக்கப்பட்ட ஒரு கிளை நகரம்
என்றே கொள்ளலாம்.

நாகூரிலிருந்தும், காரைக்காலிலிருந்தும் கிட்டத்தட்ட எட்டு கிலோ
மீட்டர் தூரமே உள்ள ஊர் தான் இந்த திட்டச்சேரி, என்றாலும்
ஊரின் பெயரில் ‘சேரி’ என்ற சொல் ஒட்டியிருப்பதால் ஏதோ
குக்கிராமம் என்றும் நினைத்து விட வேண்டாம். நாகப்பட்டினம்
மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

2001-ம் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 8484 மக்கள்
இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள்
ஆவார்கள். திட்டச்சேரி மக்களின் சராசரி கல்வியறிவு 77% ஆகும்,
இதில் ஆண்களின் கல்வியறிவு 82%, பெண்களின் கல்வியறிவு
71% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5%
விட கூடியதே. திட்டச்சேரி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்-
குட்பட்டோர் ஆவார்கள். இது "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்
தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". என்று விக்கிப்பீடியாவில்
தொகுக்கப் பட்டிருக்கிறது. பத்து வருடத்துக்குப் பிறகு இப்பொழுது
(2011-ல்)  மக்கள் தொகையை டபுல் என்ன ட்ரிபுலாகக் கூட
கூட்டிக் கொள்ளலாம்.

இவ்வாறாக, மேற்படி கல்வியறிவு 77% என்பது இப்பொழுது சற்று கூடியிருக்கக் கூடும், என்றாலும் இது சற்றேறக்குறைய 70-80
ஆண்டுகளுக்கு முன்பே கல்வியைப் பற்றி விழிப்புணர்வோடு,
அடித்தளம் அமைக்கப்பட்டு இஸ்லாமிய பல்கலைக் கழகங்களில்
படித்தறிந்த கல்வியாளர்களால் வரையறுக்கப்பட்ட ஊர் திட்டச்சேரி. குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் தலைமை நீதிபதிகள், வழக்கறிஞர்கள், டாக்டர்கள், வாழும் ஊர் இது.

உள்ளூரில் அரசினர் மேல்நிலைப் பள்ளி இருந்தாலும், இங்கிலீஷ்
மீடியம் பயிலும் கான்வென்ட் சம்சுன்நஹர், ஜேஸி பள்ளிகள் இருந்தபோதிலும், காலை நேரங்களில் இங்கிருந்து புறப்பட்டு நாகூர்
கிரசண்ட், காரைக்கால் காவேரி, நிர்மலா ராணி, செயிண்ட் மேரிஸ்
பள்ளிக்கூடங்களுக்கு செல்லும் பஸ்களும் வேன்களுமே இந்த
ஊர் மக்கள் எந்த அளவுக்கு கல்வியில் ஆர்வம்  காட்டுகிறார்கள்   என்பதற்கோர் அத்தாட்சி!!

ஒரு குத்து மதிப்பாகச் சொல்லப் போனால் மூன்று மாவட்டங்கள்
அருகருகே காணக்கிடைப்பது இந்த பகுதியில்தான் என்று நினைக்
கிறேன். நாகை, திருவாரூர், காரைக்கால் (பாண்டிச்சேரி). காரைக்கால்
அருகே இருப்பதாலோ என்னவோ, பக்கத்தில் பனங்’குடி’, ஏனங்’குடி’
போன்ற ஊர்கள் சுற்றிலும் இருக்கின்றன. ஊர்காரர்கள் கோபிக்க
வேண்டாம்.

தென் தமிழகத்தில் முதன்முதலில் வெற்றிகரமாக பெட்ரோல் கிடைக்குமென்று அறியப்பட்டது இங்குள்ள பா.கொந்தகை
அருகே உள்ள பீமா தைக்கால் தான். அதுவே பின்னாளில்
அந்த பகுதிகளில் வளமிக்க பெட்ரோல் ஊற்றுகள் கண்டுபிடிக்க ஏதுவாக நரிமணம் - பனங்குடியில் ongc ப்ராஜெக்ட், சென்னை
பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (cpcl) துணையுடன், Rs.2800 கோடி
செலவில் நவீனப் படுத்தப்பட்டு, விரிவுபடுத்தப் பட்ட
ரிஃபைனரிஸ் உருவாக்கப்பட்டது.

2.

இந்த ஊர் மக்களின் உபசரிப்பும் கனிவும் கரிசனமும் சொல்லில்
அடங்காது. யாரவது வீட்டிற்கு   வந்து விட்டார்களென்றால் ஒரு
வாய் டீயோ, காபியோ, ஜூஸோ கொடுத்து சட்டென்று அவர்களை
அனுப்பி விடமாட்டர்கள். வீட்டில் செய்த பலகாரங்கள் தம்ரோட்,
நானஹத்தா, ஹஜூர் பணியாரம், முட்டைப் பணியாரம் போன்ற-
வைகளை Bபாஷன் என்று இங்கு அழைக்கப்படும் மரவைகளில்
வைத்து நம்மை சாப்பிடச் சொல்லி திக்கு முக்காட செய்து
விடுவார்கள். எதை சாப்பிடுவது எதை விடுவது என்று பல
சமயங்களில் இதுமாதிரி நிகழ்வுகள் அங்கே சகஜம்.

இங்கே மாலை நேரங்களில், நாகூரில் இருந்து வந்து அங்கேயே
உடனுக்குடன் தயார் செய்து சுடச்சுட சுட்டு விற்பனை செய்யும்
"வாடா" என்ற திண்பண்டம் ரொம்ப ஃபேமஸ்; அதன்சுவை அலாதி
யானது. ஊறவைத்து அரைத்த அரிசி, அரைத்த சோறு ஆகிய
வற்றை சரியான விகிதத்தில் கலந்து, வடைபோல் தட்டி, நடுவில்
ஒரு ஓட்டையும் விட்டு, அதன் மேல் ‘இறாலை’ சரி   பாதியாய்
பிய்த்து பொட்டு போல் அங்கொன்றும் இங்கொன்றுமாய் வைத்து, எண்ணையில் போட்டு பதமாய் பொன்னிறமாய் பொறித்து எடுக்கப் படுவதற்குப் பெயர் 'வாடா'. இப்படி பொறித்த வாடாவையே திரும்ப
வும் மாவில் ஒரு புரட்டு புரட்டி எடுத்து பொறித்தால் அதற்கு
பெயர் "பொறிச்ச வாடா"வாம்.  இந்த இரண்டு வகை மொறுமொறு  வாடாவின்   சுவையும்  மணமும் சிம்ப்லி டிலீஸியஸாக  இருக்கும்.
ஒரு தடவை சாப்பிட்டு பார்த்தீர்களென்றால் தான் நான் சொல்வ-
தன் அர்த்தம் புரியும். இதற்கு உலகம் முழுக்க ரசனையுள்ள
ரசிகர்கள் கூட்டம் [என்னையும் சேர்த்து] ஏராளம்!

அதற்கு தொட்டுக் கொள்ள, 'உள்ளடம்' என்கிற வெங்காயமும்,
மஞ்சளும், தேங்காய்ப்பூவும், உப்பும் போட்டு பிரட்டி, அவைகளை எண்ணையில் போட்டு வதக்கிய கலவையோடு சேர்த்து சாப்பிடும்
வாடாவின் டேஸ்ட் உன்னைப் பிடி என்னைப்பிடி என்று அள்ளிக்
கொண்டு போகும். இது கிடைக்காத (மழை) காலங்களில் இருக்கவே
இருக்கு ஸ்பெஷல் கொத்துப் பரோட்டா. அவர்களின் கனிவான
பேச்சாலும், உபசரிப்பாலும் இதுமாதிரி வகையான சாப்பாடு
களாலும் மனம் நிறைந்தது போல், வயிறும் நிறைந்து போவது
திண்ணம்.

இந்த ஊரின் ஸ்பெஷல் என்று சொல்லப் போனால் குவளைகேக்,
பகோடா பிஸ்கட், பொட்டி பணியம், ஈச்சகொட்டை பணியம்,
முட்டைப் பணியம், தம்ரோட், இஞ்சி கொத்து பணியம், முர்த்தபா
எனும் லாப்பை, ஜாலர் பாராட்டா + வட்டலாப்பம், ஜாலர் சமுசா
ஆகியவைகள் அடங்கும்.

பிரியாணி வகைகளில் மட்டன், சிக்கன், இறால், மீன், போன்றவை-
களும், *அஞ்சுவகைக்கறி நெய்ச்சோறு, குஸ்கா, போன்றவைகளும்,
சமீபத்தில் பிரபலமாயுள்ள சைனீஸ் ரைஸ், மீங்கோரி போன்ற
வையும் சுவையாய் இருக்கும். அந்தந்த வீட்டு மாப்பிள்ளை
மார்களின் உடலளவை வைத்து, வீட்டின் கைமணத்தை அறிந்துக் கொள்ளலாம் என்று சொல்வார்கள். (நீங்கள் குண்டா ஒல்லியா
என்று என்னை கேட்டு விடாதீர்கள். உடலவை குறைக்க (படாதபாடு படுபவர்களுக்காக) இரண்டு மூன்று பதிவு போட்ட என்னை குறைத்து மதிப்பிட்டு விட வேண்டாம்!! :-))

*மேற்படி அஞ்சுவகைக்கறி நெய்ச்சோறு என்பது நான்கு பேர்
உட்கார்ந்து சாப்பிடும் இந்த Bபாசன் சாப்பாடு, சாப்பிட்டு முடியும்
தருவாயில் சும்மா செறிமானத்திற்காக சாப்பிடும் சாப்பாடு தான்
இந்த 'சீனித்தொவை' சோறு. அதற்குரிய பக்குவத்தைப் பாருங்கள்

இந்த நெய்சோற்றுடன், தக்காளி பச்சடி, சீனித்தொவை, வாழைப்-
பழம், ஃபிரிணி ஆகியவற்றை (இதற்காக சிலர் பால்கோவாவை
பொட்டலம் போட்டு மடியில் கட்டிக் கொண்டும் வருவார்கள்!!)
போட்டு கஞ்சி மாதிரி பிசைந்து சாப்பிடும் சாப்பாட்டுக்கு பெயர்
தான் பால்சோறு. ஜெதப்பான சாப்பாடு இந்த ஏரியாக்களில் ரொம்ப
ஸ்பெஷல்! இப்பொழுது அதெல்லாம் வீட்டில் செய்து சாப்பிட்டா-
லன்றி கலரிகளில் அரிதாகிப் போச்சு. இந்த அவசர உலகில்
கல்யாணம், மற்ற விஷேஷங்களில் கூட ப்ளேட் சாப்படாகி,
மெடிக்கல் சாப்பாடென்ரெல்லாம் ஆகிப்போச்சு!

மாலை நேரங்களில் ஆட்டுதலை சூப் விற்பனை அமோகமாய்
இருக்கும். தலையிலுள்ள கண், நாக்கு, மூளை ஒவ்வொன்றுக்கும் தனித்தனி விலை! தலைகறிகள் விற்று தீர்ந்து போனாலும், சூப்பு
தண்ணியில் அவித்த முட்டையைப் போட்டு நடக்கும் வியாபாரம்
ஒரு சில கடைகளில் சூடு பறக்கும்.

அரபு நாடுகளில் மிகவும் விரும்பி சாப்பிடப்படும் புரோஸ்டட்
சிக்கன், ஷவர்மா போன்ற பிரசித்தி பெற்ற ஐட்டங்கள் தற்சமயம் காரைக்காலிலும் கிடைக்கிறது. டேஸ்ட் ....?? கொஞ்சம் முன்னபின்ன இருக்கலாம்.

அலியதரம், ஆட்டுக்கால் பணியாரம், 'போனவம்', போன்ற தீண்
பதார்த்தங்கள் போன இடம் தெரியவில்லை. இப்பொழுதெல்லாம்
இவைகளை வீடுகளில் செய்ய அலுப்புப்பட்டுக் கொண்டு கடை-
களில் ஆர்டர் செய்தே தருவிக்கிறோம். ஒரு காலத்தில் பாட்டி
மார்களும், வீட்டின் பெண்மணிகளும், சின்னச்சின்ன பெண்
குழந்தைகளும் வீடு முழுக்க விரவி உட்கார்ந்து பணியாரங்கள்
செய்கிறேன் என்று அடிக்கும் லூட்டிகள் பார்க்கவே கண்கொள்ளா
காட்சியாக இருக்கும். கூட்டுக்குடும்பங்கள் அரிதாகிப்போன
நிலையில், விசேஷ நாட்களுக்கு முன்கூட்டியே கடைகளில்
ஆர்டர் செய்து தருவித்து எல்லா விஷேசங்களையும், பண்டிகை நாட்களையும் கொண்டாடி திருப்திபட்டுக்  கொள்கிறோம்.நாகூரில்
ஹாரிஸ் கடையிலும், திட்டச்சேரியில் செல்லம்மா, மெஹர்
ஆகியோர் வீடுகளிலும் செய்து தருகிறார்கள்.

3.

பிரசித்திப் பெற்ற தற்காப்பு கலையை சீனாவுக்கே சென்று
கற்றவர்கள் இங்கே வாழ்ந்திருக்கிறார்கள். "சைனீஸ் டிஸாஸ்டர்"
என்ற அறியவகை கலையை கற்றவர்களில் முக்கியமானவர்கள்
'எல்லைக்கல்' யூசுப் மரைக்காயர், 'பூரான்' ஷரீப் ஆகியோர்களாவர்.

நண்பர் ஒருவரை வேலை நிமித்தம் ஓரிடத்திற்கு போகச் சொல்லி
விட்டு, திரும்பி வந்து பார்க்கும் சமயம் இருட்டிவிட்டதாகவும், அவர் போகாமல் இருட்டில் உட்கார்ந்திருக்கக் கண்டு எட்டி உதைத்ததாகவும், பிறகுதான் அவர் உதைத்தது ஊரின் எல்லைக்கல் என்றும், உதைத்ததில் அந்தக்கல் இரண்டு துண்டாய் உடைந்து போனதாகவும், அதனால் அவர்
பெயர் எல்லைக்கல் யூசுப் என்று பெயர் விளங்கக் காரணமாகியது என்கிறார்கள்.

இரண்டாமவர் குஸ்தி, கம்பு சுழற்றுதல், மற்றும் வீர விளையாட்டு
களில் படுசமத்தர். இவர் கம்பு சுழற்றும் போது பத்து பேர் எதிர்
நின்று எலுமிச்சை பழத்தை வீசினாலும் லாவகமாக தன்மேல்
படாமல் விர்ர்.. விர்ர்.. என்று கம்பு சுழற்றி அசத்துவார் என்று
அந்தக் கால பெரியவர்கள் சிலாகிக்கின்றனர்.

கவிஞர்கள் வரிசையில் வடக்குதெரு மர்ஹூம் ஆபிதீன், அதே
தெருவை சேர்ந்த இந்நாள் கவிஞர் அன்வர் மற்றும் அலிஹுசைன், முருகேசன் ஆகியோர்கள் அடங்குவர். இன்னும் அரசியல்,
இலக்கியம், இசை சார்ந்தவர்களும் நிறைய பேர் இருந்தாலும்,
தன்னடக்கம் காரணமாகவும், எனக்கு அவர்களின் பெயர்கள்
தெரியாததாலும், வாளா விடுகிறேன்.

கந்தூரி கொடியேற்றம், சந்தனக் கூடு, கச்சேரிகள் எந்த ஊரில்
நடந்தாலும் இவர்கள் கூடினால் தான் கலைக்கட்டும் என்று
சொல்வார்கள். அந்தக் காலத்தில் வில்வண்டியைக் கட்டிக் கொண்டு, கழுத்தில் மப்ளரை சுற்றிக் கொண்டு, டார்ச் லைட் சகிதம் ஒரு
குரூப்பே செல்வார்களாம். சொல்லக் கேட்டிருக்கிறேன். இப்ப கார்,
பைக் எடுத்துக் கொண்டு போய் அதகளம் பண்ணுகிறார்கள் போல!

பேச்சு வழக்கு என்று எடுத்துக் கொண்டால், வாலே, போலே,
சொல்லுதியலா, போனியலா போன்றவை நம் திருநெல்வேலி
சொல்லாடலை நினைவு படுத்தும். மற்றபடி நாகூரின் வாங்கனி,
போங்கனி, இக்கிது, பிக்கிது பாஷையை இவை அடிச்சுக்க முடியா-
தென்பேன்!

முன்பு இங்கிருந்த கீற்று சினிமா தியேட்டரை ஊரின் நிர்வாகம்
அப்புறப் படுத்திவிட்டது. கடைசி படம் நாடோடிமன்னன் என்கிறார்-
கள். மற்றபடி பொழுதுபோக்கு என்று எடுத்துக் கொண்டால் பக்கத்தி-
லுள்ள நாகூர் காரைக்கால் தான் சென்றாகணும். இங்கே தான்
சினிமா தியேட்டர், காலார நடக்க கடற்கரை இன்னபிற உயர்வகை ஹோட்டல்கள் அமைந்திருக்கின்றன. கடற்கரைகளில் வியாழன்,
வெள்ளிக் கிழமைகளில் நாகூரிலும், ஞாயிற்றுக் கிழமையில் காரைக்காலிலும் கூட்டம் அலையோடு அலைமோதும்.

மனதுக்கு நிறைவான அமைதி தரும் இந்த  ஊரைப் பற்றி
இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். பதிவின் விரிவஞ்சி
இத்தோடு முடிக்கிறேன். பிறகு வேறொருப் பதிவில் மற்றவை
களை பதிவிடுகிறேன்.

செவ்வாய், ஜூன் 07, 2011

உடல் பருமனை குறைக்க என்ன செய்யலாம்?


உடல் பருமனை குறைக்க  என்ன செய்யலாம்?

எப்படி எல்லாம் பாடுபட்டு வளர்த்த உடம்பை இப்படி பாடுபட்டு
எழுதி குறைக்க வழி சொல்லவேண்டியதா இருக்கு!! அவ்வ்வ்வ்.!!!

நாம் பயன்படுத்தும் துணிகளின் அளவு ஆண்களின் இடுப்பளவு
முப்பத்தி எட்டு இன்சுக்குக் குறைவாகவும், பெண்களின் இடுப்பளவு முப்பத்தி ரெண்டு இன்சுக்குக் குறைவாகவும் இருக்க வேண்டும்.
அந்த அளவுக்குள் இருந்தால் தான் ஆரோக்கியம். ஆனால்
இன்றைக்கு எக்ஸ்ட்ரா லார்ஜ், டபுள் எக்ஸ்ட்ரா லார்ஜ், ட்ரிபிள்
எக்ஸ்ட்ரா லார்ஜ் என கணக்கில்லாமல் போய்க் கொண்டிருக்கி-
றோம். இதெல்லாம் நோயில் கொண்டு போய்தான் முடியும். உடல்
எடை அதிகரிப்பால் மூட்டுவலி, இடுப்பு வலி இன்னபிற வியாதிகள்
நம் சொந்தமாகிப் போகும்.

நம்மில் பெரும்பாலானவர்கள் திருமணம் ஆகும் வரை ஒல்லியாக இருப்பார்கள். திருமணம் முடிந்ததும் குண்டாகி விடுவார்கள்.
இதற்கு 'மனைவி வந்த பூரிப்பு!'. 'வீட்டு சாப்பாடு' என்றெல்லாம்
நமக்கு நாமே சொல்லும் சமாதான காரணங்கள். வயிறு கெட்டு
விடும் என்று பார்த்துப் பார்த்து சாப்பிட்டவர்கள் அதிக அளவு
உண்பார்கள். இது தான் உடல் பருமனுக்கு முக்கிய காரணம்.

சென்டர் ஒபிசிட்டி:

கால்கள் கைகள் மார்பு பகுதி எல்லாம் சின்னதாக இருக்கும். வயிறும் பின்பக்கமும் வீங்கி பெருத்திருக்கும். இதற்கு ‘சென்டர் ஒபிசிட்டி’ என்று பெயர். நம் ஊரில் இப்படிப் பட்டவர்கள் எக்கச்சக்கமாக இருக்கிறார்கள். சமையல் எண்ணெய் ஒருமுறைக்கு மேல் பயன்படுத்துவது. அளவில்- லாமல் கண்டபடி சாப்பிடுவது, ஸ்டைலுக்காக சிகரெட், நண்பர்களோடு பார்டி என்கிற பெயரில் பீர் என்கிற பழக்கத்தை எல்லாம் விட்டுவிட வேண்டும்.

உணவுக் கட்டுப்பாடென்பது:

அறவே சாப்பிடாமல் வயிற்றை/வாயைக் கட்டுவதென்பதல்ல. மூன்றுவேளை சாப்பாட்டை ஐந்து வேலையாகப் பிரித்து மூன்று மணி நேரத்திற்க்கொரு முறை அளவோடு நம் உடலுக்கு ஜீரணமாகக் கூடிய உணவுகளை சாப்பிடனும். நான் ஆபீஸ் போறேன், வெளியே போறேன் அப்படி இப்படி என்ற காரண மெல்லாம் ரிஜெக்டெட். நம் உடம்புக்குத் தானே நாம் செய்கிறோம் என்ற அக்கறை மனசில் வேணும். சாப்பிடும் ஒவ்வொரு பொருளிலும் கலோரி, புரதம், கார்போஹைடிரேட், கொழுப்பு எல்லாம் எவ்வளவு இருக்கு என்று கால்குலேட் பண்ணியே சாப்பிடுங்க. ஒருதடவை உங்கள் அருகிலுள்ள டயடீசியனை அவசியம் கன்சல்ட் செய்துக் கொள்ளுங்க! பிரச்சினைகள் ஏதுமிருக்காது.

உடலுக்கு எல்லாவித சத்துக்களும் பேலன்ஸ்டா சேர்வது மாதிரி சாப்பிடுவது தான் நல்ல வழி. அதனால் சத்தான சாப்பாட்டை
எப்பவுமே மிஸ் பண்ணிடாதீங்க. சாப்பாட்டு நேரத்தை அடிக்கடி
மாற்றிக் கொண்டே இருப்பது நம் உடம்பை ரொம்பவே டிஸ்டர்ப் பண்ணும். எந்த நேரத்துக்கு என்ன சாப்பாடுன்னு பட்டியல் போட்டு
வெச்சு அதை ஸ்ட்ரிக்ட்டா கடைப் பிடிக்கணும். சத்தான உணவு
சரியான நேரம் இது தான் டயட் சீக்ரட்.

நாம் வாழும் முறை உண்மையிலேயே சரியானதாக ஆரோக்கிய
மானதாக இருக்கிறதா?

இது நம்மை நாமே கேட்டுக் கொள்ளவேண்டிய கேள்வி. இதயம்
சம்பத்தப் பட்ட நோய்களுக்கு பிளட் பிரஷர் + டயாபடிஸ் முக்கிய காரணிகளாக விளங்குகின்றன. சுகர் நோய் பரம்பரையாகத்
தொடரக் கூடியது என்றாலும் பலபேர் இந்த வகை நோய்களை
கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளாமல் கடைசிவரை
அலட்சியமாகவே இருக்கிறோம். (ஏதோ சொந்த பந்ததை விட்டுப்
பிரிந்து விடுவோமோ என்ற ஏக்கம் போல!)

அதே சமயம் டீன் ஏஜில் இருந்தே நம் லைஃப் ஸ்டைலை
முறைப் படுத்திக் கொள்ளவேண்டும்.

எப்படி? இது நல்ல கேள்வி?

ஆண்டுக்கு ஒருமுறை இதய நோய்களுக்குக் காரணமான BP + சுகர் பரிசோதனைகளைச் செய்து விடுங்கள். ஆறுமணி நேரமோ எட்டு
மணி நேரத்திற்கு மிகாமலோ தூக்கமும், நாற்பது நிமிடத்திலிருந்து அறுபதே அறுபது நிமிடநேர உடற்பயிற்சியுடன் கூடிய நடை
பயிற்சி அயற்ச்சியில்லா தேக ஆரோக்கியத்தைத் தந்து உடல்
எடையை கட்டுப் பாட்டுக்குள் வைத்திருக்கும். "இதற்கெல்லாம்
எங்கே சார் நேரம் இருக்கு?" என்று டேக்கா கொடுக்க
நினைக்காதீங்க!!

நீங்கள் நிச்சயமாய் ஆபீசுக்கோ மற்ற எந்த வேலைகளுக்காகவோ வெளியே தெருவே சென்று வருபவர்களாகத் தானிருப்பீர்கள். பஸ்
வேன் ஆட்டோவில் செல்பவர்களானால் இறங்க வேண்டிய
இடத்துக்கு இரண்டு கிலோ மீட்டரோ, அல்லது ஒரு கிலோ
மீட்டருக்கு (உங்களால் நடந்து வரக் கூடிய அளவுள்ள தூரத்துக்கு) முன்பாகவே இறங்கி நடந்தே ஆபீசுக்கோ மற்ற எந்த வேலை களுக்காகவோ போங்களேன். டூ வீலர் வைத்திருப்பவர்கள் நடந்து
போகிற தூரத்திற்கு நடந்தே போகலாமே!

ஆபீஸ் ரெண்டாவது மூன்றாவது மாடியிலோ இருக்கிறதா? அதற்காக பெருமூச்சு விடாதீர்கள்.மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு படிகளில் ஏறி இறங்குங்கள். டயர்டாக இருக்கிறதா? அதற்காகத் தான் மேலே சொன்ன சத்தான சாப்பாடு. இப்போது புரிந்திருக்குமே!

சார் உங்களால் மேலே சொன்ன எதையுமே செய்ய முடியா
விட்டால் தினமும் இருபது நிமிடம் நீச்சல், அல்லது முப்பது
நிமிட சைக்கிளிங் அல்லது நாற்பது நிமிட வாக்கிங்...இதில் ஏதாவதொன்றை வாரத்தில் ஐந்து நாட்கள் செய்யப் பழகினாலே
போதும்.

ரிமோட் உங்களின் எதிரி! எழுந்து போய் சேனலை மாற்றப்
பழகுங்கள். ரிமோட் பேட்டரியை கழற்றி விட்டால் உங்கள்
குடும்பத்துக்கே நல்லது செய்தவர்கள் ஆவீர்கள்!

இறுதியாக-

இதய நோய்கள் காஸ்ட்லி நோய்கள். இவற்றுக்கு அளிக்கப்படுகின்ற சிகிச்சைகளும் காஸ்ட்லி வைத்தியம் தான். இவற்றை அருகிலேயே சேர்க்காமல் தடுக்கின்ற இலவச மருந்துகள் தான் மேலே சொன்ன
பழக்க வழக்கங்கள். இதை புரிந்துகொண்டாலே போதும்! நஹீன்னா,
போங்க சார் உங்க கூட டூ... !!


செவ்வாய், மே 31, 2011

உங்களை நீங்களே தயார்ப் படுத்திக் கொள்ளுங்கள்!!உங்களின் இலட்சியம் என்ன?

நீங்கள் எப்போது மரணிப்பீர்கள் என்று உங்களால் கூற முடியுமா? நிச்சயமாக உங்களால் முடியாது! அடுத்த ஆண்டு மரணிக்கலாம்;
அடுத்த மாதம் அல்லது அடுத்த வாரம் அல்லது அடுத்த நிமிடம்
கூட நீங்கள் மரணிக்கலாம். ஆகவே அதற்குமுன்...

உங்கள் வாழ்வில் நீங்கள் என்ன அடைந்தீர்கள்? உங்களின் கனவு
மற்றும் இலட்சியம் என்ன?

உங்கள் வாழ்க்கைக்காக நீங்கள் போட்டுள்ள பெரிய பெரிய
திட்டங்கள் என்ன?

உங்கள் மரணத்துக்குப் பின் நீங்கள் எப்படி நினைவு கொள்ளப்
படுவீர்கள்? ஒரு மனிதனைப் பொருத்தவரை பிறந்தோம்;
வாழ்ந்தோம்; மரணித்தோம் என்ற வகையில் இவ்வுலகில் வாழ
முடியாது! அவ்வாறு எவ்வித இலட்சியமோ அதை அடைய
முயற்சியோ இல்லாத வாழ்க்கை என்பது வீணானதுதான்!

மரணத்துக்குப் பின் என்ன? என்பதைக் குறித்துத் திட்டமிட்ட
வாழ்வை எதிர்நோக்குவோர் மட்டுமே இவ்வுலகத்தின் முக்கியத்-
துவத்தை உணர முடியும். அவ்வாறான ஒரு திட்டமிடலோடு வாழ்பவர்களால் மட்டுமே இலட்சியத்தை அடைய முடியும்.

இவ்வுலகில் வாழ்பவர்கள், அவர்களின் இலட்சியமான
சுவர்க்கத்தை அடையவும் மரணத்திற்குப்பின் நினைவு
கூறப்படவும் எளிதான வழி உள்ளது. அதற்கு ஒவ்வொருவரும்
தம் மரணத்திற்கு முன் கீழ்க் காணும் 10 விஷயங்களைச் செய்து
முடித்து விட்டால் போதும். தயாரா நீங்கள் ??

1. கனவை நனவாக்குங்கள்

நல்லவற்றுள் எதையாவது நீங்கள் செய்ய விரும்புகின்றீர்கள்
எனில், அதனைப் பின்னர் என்று தள்ளிப்போடாமல் உடனே
செய்யத்துவங்குங்கள். சீனப்பெருஞ் சுவரை நடந்து கடக்க
வேண்டும் என்று விரும்புகின்றீர்களா?, பட்டதாரி ஆக வேண்டும்
என்று விரும்புகின்றீர்களா?, டாக்டரேட் செய்ய வேண்டும் என்று விரும்புகின்றீர்களா? வழக்கறிஞராக வேண்டும் என்று விரும்பு-
கின்றீர்களா? கலெக்டராக வேண்டும் என்று விரும்புகின்றீர்களா?
புத்தகம் ஒன்று எழுத வேண்டும் என்று விரும்புகின்றீர்களா? சீன, ஜப்பானிய, அரபி மொழிகளைக் கற்க வேண்டும் என்று விரும்புகின்றீர்களா? எதுவாக இருந்தாலும் உடன் செயல்பாட்டில் இறங்குங்கள். ஒருபோதும் வாழ்வில் செய்யத் துடிக்கும் நல்ல விஷயங்களைத் தள்ளிப் போடாதீர்கள். கனவை நனவாக்குங்கள்!

2. உங்கள் கடமைகளை நிறைவேற்றுங்கள்

படித்து முடித்ததும் வேலையில் சேர்ந்து சம்பாதிப்பதன் மூலம்
உங்கள் குடும்பத்திற்கு செய்ய வேண்டிய கடமைகளை நிறை
வேற்றுங்கள். அதுபோக உங்கள் சொந்தங்களில் உள்ள
ஏழ்மையான குடும்பத்தில் படிப்பதற்கு செலவழிக்க முடியாதவர்
களுக்கு உங்களால் ஆனா உதவிகளை செய்யுங்கள்.

3. பெற்றோர்களை மகிழ்வியுங்கள்!

நம் பெற்றோர்களே நமக்கு எல்லாம்! நமது மரியாதைக்கும்
அன்புக்கும் கீழ்படிதலுக்கும் அவர்கள் உரித்தானவர்கள்.
அவர்களுடன் தினசரி குறிப்பிட்ட நேரத்தைச் செலவழிக்க
முயலுங்கள். அவர்களுக்குப் பெருமை சேர்க்க முயலுங்கள்;
ஒருபோதும் அவர்களின் மனதை வேதனைப்படுத்தி விடாதீர்கள்.
ஒன்றை எப்போதும் நினைவில் வையுங்கள்: "பெற்றோர்களை
நாம் மகிழ்ச்சியாக வைத்திருந்தால் இறைவனும் நம்மை
மகிழ்ச்சியாக வைத்திருப்பான். பெற்றோர்கள் நம் மீது
கோபமாக இருந்தால், இறைவனும் நம் மீது கோபமாகவே
இருப்பான்" என்று என்று எல்லா மதங்களும் நமக்கு போதிக்கிறது.

ஆகவே, அவர்கள் மரணிக்கும்முன், அவர்களுக்குப் பெருமை
சேர்ப்பதோடு அவர்களை மகிழ்வாகவும் வைத்திருங்கள்.
அவர்களின் மரணத்திற்குப்பின் அவர்களை நினைவுகூருங்கள்; அவர்களுக்காகப் பிரார்த்தியுங்கள்; அவர்களின் இலட்சியம்
அல்லது நிறைவேற்ற நினைத்து அவர்களால் முடியாமலாகி
விட்ட கடமைகள் ஏதாவது இருப்பின் அதனை நிறைவேற்றுங்கள்.

4. உலகைப் பாருங்கள்

நீங்கள் இருக்கும் இருப்பிடத்தில் மட்டுமே உலகைக் காண்பதாக
இதற்கு அர்த்தம் கொடுக்காதீர்கள். இறைவனின் அற்புதமான படைப்புகளைக் கூர்ந்து கவனியுங்கள். இயன்றால் உலகிலுள்ள
ஏழு அதிசயங்கள், இன்னும் காணக் கிடைக்காத அரியபல
விஷயங்கள் பொதிந்துள்ள வரலாற்றை எடுத்தியம்பும் நாடுகளை
வலம் வாருங்கள். குறைந்தபட்சம் உங்களைச் சுற்றியுள்ள கிராம, நகரங்களையாவது வலம் வாருங்கள். நிச்சயமாக, அது உங்களுக்கு
ஒரு மகிழ்ச்சியான அனுபவமாக இருப்பதோடு, இறைவனின் படைப்புகளையும் அதில் உங்களின் பங்கையும் குறித்து உங்களுக்கு விளக்கித் தரும்.

5 வாழ்க்கையைப் படியுங்கள்; அதற்கு உயிர் கொடுங்கள்!

இந்த உலகில் நீங்கள் பிறந்ததற்கான காரணத்தையும் பிறப்பின்
பயனை அடைவதற்கான வழிகளையும் அறிந்து கொள்ளாமல்
நீங்கள் இந்த உலகத்தை விட்டுப் போய்விடக் கூடாது. அது பின்னர் உங்களுக்கே பேரிழப்பாக முடியும். ஆகவே வாழ்க்கையை
படியுங்கள். அதன் அடிப்படைகளை அர்த்தத்துடன் படியுங்கள்.
வாழ்ந்து மறைந்த பெரிய மனிதர்களின் வாழ்வைப் படியுங்கள்.
நாம் இந்த பூமியில் படைக்கப் பட்டிருப்பதற்கான அர்த்தம்
என்றால் என்ன என்பதை நீங்கள் அறிந்து கொண்டீர்களா?
என்பதை உறுதிப் படுத்துங்கள். அதனை உங்கள் தினசரி வாழ்வில் நடைமுறைப் படுத்துங்கள். இது ஒன்று மட்டுமே   உங்களுக்கு இவ்வுலகிலும் பாதுகாப்பாக இருக்கும்.

6. திருப்பிக் கொடுங்கள்

ஏதாவது வித்தியாசமானதாகவும் அற்புதமானதாகவும் செய்ய
முயற்சி செய்யுங்கள். ஒரு அனாதையின் வாழ்வாதாரத்துக்கு
உதவுதல், ஒரு மரத்தை நட்டு வளர்த்தல், ஏழைகளுக்கு உதவி
செய்ய ஃபண்ட் ஒன்று துவங்குதல், ஏழைகளுக்கு உணவளித்தல், தேவையில் இருப்போருக்கு இரத்தம் வழங்குதல், குழந்தை-
களுக்கும் முதியவர்களுக்கும் கற்றுக் கொடுத்தல், யாருடைய பிரச்சனைகளையாவது தீர்த்து வைத்தல், லைப்ரரி ஒன்று
உருவாக்குதல், வசதியற்ற மாணாக்கருக்குக் கல்வி கற்க
ஏற்பாடு செய்தல், வட்டியின்றித் தேவையுடையோருக்குக்
கடனுதவி செய்யக் குழு ஏற்படுத்துதல், சுற்றுப் புறத்தைத்
தூய்மையாக வைக்கப் பயிற்சியளித்தல், குடிநீர் இல்லாத
வீடுகளுக்குக் குடிநீர் கிடைக்க வசதி ஏற்படுத்துதல்.....

இப்படி எதையாவது நீங்கள் மரணிக்கும் முன்னர் இவ்வுலகுக்குத்
திருப்பிக் கொடுத்து விட்டுச் செல்லுங்கள். உங்களின் மரணத்துக்குப் பின்னர் நீங்கள் இவ்வுலகில் நேர்மறையாக நினைவு கூறப்
படுவதற்கு இது உதவும். உங்களின் நற்செயல்கள் இவ்வுலகில்
எத்தனை காலத்திற்கு நிலைநிற்கின்றதோ அத்தனை காலம்வரை
நினைவு கூறப்பட்டுக் கொண்டே இருக்கும். உங்களின் சுயநலமற்ற செயல்பாடுகள் நாளை வரும் தலைமுறையினருக்கு பயனுள்ளதாகப் பதிவு செய்யப்பட்டுக் கொண்டே இருக்கும்.

7. திருமணம்

இது எல்லா மதங்களிலும் வரையறுத்து கூறப்பட்ட ஒரு
தீர்மானமாகும். உங்களின் கனவுகளையும் இலட்சியங்களையும் உயிர்கொடுக்க தோள்கொடுக்கத் தயாராகுபவரோடு அவற்றைப்
பகிர்ந்து கொள்ளுங்கள். அவரைத் திருமணம் புரிந்து குழந்தை-
களைப் பெற்றுக் கொள்ளுங்கள். அது உங்களுக்குப் பெருமை
சேர்ப்பதோடு, நல்ல குழந்தைகளாக வளர்த்தால் அதற்காகவும்
நீங்கள் நன்மை வழங்கப் படுவீர்கள். உங்களின் மரபுவழி
நன்மைகளை வாழ வைப்பவர்களாகவும் தங்கள் நம்பிக்கையைச் செயல்படுத்துபவர்- களாகவும் மனிதாபிமானத்தோடு இறைவனின் படைப்புகளைக்காணும் நல்ல மக்களாகவும் அவர்களை
வளர்த்தெடுப்பது உங்களின் இலட்சியமாக இருக்கட்டும்.

8. மன்னிப்பு கேளுங்கள்

உங்கள் வாழ்வில் நீங்கள் செய்த தவறுகளை நினைவு கூர்ந்து,
உங்களைப் படைத்தவன் முன்னிலையில் சிரம்பணியுங்கள்.
ஒவ்வொரு இரவிலும் படுக்கைக்குச் செல்லும் முன், உங்கள்
தவறுகளை நினைத்து மனம் வருந்தி மன்னிப்புக் கேளுங்கள்.
நீங்கள் யாருடைய மனதையாவது வேதனைப் படுத்தியுள்ளீர்களா? மக்களுக்கிடையே பிரச்சனை ஏற்பட நீங்கள் காரணமாக இருந்துள்ளீர்களா? யாருக்காவது தவறு இழைத்துள்ளீர்களா? இன்றே அதற்காக அவர்களிடம் மன்னிப்புக் கேளுங்கள்.

நினைவில் வையுங்கள்: நீங்கள் தவறிழைத்தவர்கள் உங்களை மன்னிக்கும்வரை, இறைவன் உங்களை மன்னிப்பதில்லை!
வருத்தங்களைப் பொறுத்துக் கொள்ளப் பழகுங்கள். முன்னர் உங்கள் வாழ்வில் மற்றவர்களால் உங்களுக்கு நடந்த  தவறுகளையும்
மீட்டிப் பார்த்து அவற்றைப் பொறுத்துக் கொள்ளுங்கள். இறைவன் உங்களின் பாவங்களை மன்னிக்க வேண்டுமெனில்,
நீங்கள் மற்றவர்களின் தவறுகளையும் மன்னிக்க வேண்டும்
என்பதை நினைவில் நிறுத்துங்கள்.

9. கடன்களை அடையுங்கள்

நீங்கள் கடனாளி எனில், அது எத்துணைப் பெரிதாக இருந்தாலும்
சிறிதாக இருந்தாலும் அவற்றைத் திருப்பிக் கொடுக்க இப்போதே திட்டமிடுங்கள். ஒரு நிமிடமும் இதற்காகத் தாமதிக்க வேண்டாம்!
கடன் என்பது ஒரு வலி; அது ஒரு சுமையும் கூட! அதனை நிறை- வேற்றவில்லையேல் அதற்காக மிகப்பெரிய பலனைத் திருப்பிக்
கொடுக்க வேண்டியிருக்கும்.

10. முன்னுதாரண மனிதராகுங்கள்

ஆமாம்! உங்கள் குடும்பத்தினருக்கு, நண்பர்களுக்கு, உறவினர்-
களுக்கு, என அனைவருக்குமாக நீங்கள் நல்ல குணங்களுக்குச் சொந்தகாரரான ஒரு முன்னுதாரண மனிதராகுங்கள். அனைவரும் மரியாதையுடன் பார்க்கும் படியான மனிதராகுங்கள். மனிதர்கள்
தங்களின் தேவைகளுக்காக உங்கள் பக்கம் திரும்ப வைக்கும்-
படியான நல்ல மனிதராகுங்கள். உங்கள் மரணத்துக்குப் பின்னரும்
நல்ல காரணத்திற்காக நீண்ட காலம் மக்கள் நினைவு
கூறும்படியான   நற்பண்புகளுக்குச் சொந்தக்காரராக மாறுங்கள்.

இந்தப் பத்து விஷயங்களையும் உங்கள் மரணத்துக்கு முன் செயல்படுத்துங்கள். இவ்வுலக வாழ்க்கை என்பது மிகக் குறுகியது;
எனவே இவற்றை உடனடியாகச் செயல்படுத்த ஆரம்பியுங்கள்.
நேரத்தை ஒருபோதும் வீணாக்காதீர்கள். செய்யும் செயலை அர்த்தமுள்ளதாகவும் ஒருபோதும் வருத்தப்படுத்தாததாகவும்
செய்யுங்கள். மிக முக்கியமாக, உங்கள் செயல்களை இவ்வுலகிலும்
மறு உலகிலும் ஒன்று போல் வெற்றிக்குரியனவாகத் தேர்ந்து செய்யுங்கள்.

எனவே, வெற்றிக்கான இந்தப் படிகளை உங்கள் மரணத்துக்கு
முன்னர் செயல்படுத்த இப்போது உங்கள் முறை! இவற்றை
இன்றே, இப்போதே ஆரம்பித்து வெற்றியாளர்களாகத் திகழுங்கள்.

(நன்றி : Therevival.co.uk என்ற ஆங்கிலத் தளத்தில் வெளிவந்த
"Ten Things To Do Before You Die" என்ற கட்டுரையின் தமிழாக்கம்.)


திங்கள், மே 23, 2011

உணவில் கலக்கும் விஷ(ய)ம்..!!


வலைப்பூவில் படிப்பதற்க்கென்றே வலம் வரும் நமக்கு, நிறைய செய்திகளும், கட்டுரைகளும் படிக்கப் படாமலேயே போகின்றன.
 'சுஹைப்' உடைய இந்த பூச்சரத்தில் உங்களுக்கு  படிக்கப் பிடிக்காதது என்று எதுவுமே இல்லாமல் போகலாம்.

உணவில் கலக்கும் விஷ(ய)ம்..!!

பள்ளிகள் கல்லூரிகளில் உள்ள வேதியல் ஆய்வுக்கூடங்கள் பார்த்திருப்பீர்களே! அது போலத்தான் இன்றைய நவீன சமைய-
லறைகள் மாறி விட்டன. இயற்கை உணவுகளை கொஞ்சம்
கொஞ்சமாக மறந்து விட்டோம்.

சூப்பர் மார்கெட் ஷெல்ஃப்களில் குவிந்து கிடக்கும் உணவுப்
பொருட்கள் எல்லாவற்றிலும் சுவைக்காவும், நிறத்திற்காகவும்,
கெடாமல் வைத்திருக்கவும் பலவித ஆபத்தான இரசாயணப்
பொருட்கள் சேர்க்கப்படுகிறது.

இது பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் விளம்பரங்கள்
சொல்லும் பச்சைப் பொய்களின் கவர்ச்சியில் மயங்கி வாய்க்குள்
அள்ளித் திணித்து கொள்கிறோம்.

உணவுப்பொருட்களில் உண்டான வியாபாரப் போட்டியின்
விளைவு இன்றைக்கு 100% தரமான இயற்கையான உணவு
உண்பது என்பது குதிரைக் கொம்பு தான்.

உணவில் சுவை கூட்டும் ரசாயனப்பொருட்களில் எந்த
விதமான ஊட்டசத்தும் இல்லை. இவைதேவையற்றது, ஊட்ட
சத்து சேர்க்கப்பட்டவை என கூறப்படும் உணவும் உண்மையில்
பல இயற்கையான ஊட்டச் சத்துகள் நீக்கப்பட்டு சில ரசாயணங்கள் சேர்க்கப்பட்டது தான். பல உணவுப்பொருட்களில் இயற்கையான பொருட்களுக்கு பதில் அது போன்ற சுவை தரும் செயற்கையான சுவையூட்டிகள் மட்டுமே உள்ளன.

வெனிலா கலக்கப்படும் உணவு வகைகளில் பேன்களைக் கொல்ல
பயன் படுத்தப்படும் 'பைப்பர் ஹோல்' என்ற இராசயனப் பொருள் சேர்க்கப்படுகிறது.

டின்களில் அடைக்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட பழங்களில்
துணிகளையும் தோல்களையும் கழுவப் பயன்படுத்தப்படும்
பென்சி அஸிடெட், எதில் அசிடெட், அமில் அசிடெட் முதலியன சேர்க்கப்படுகின்றன. இது உடலுக்கு அதிகம் கேடானது.

கடைகளில் கிடைக்கும் பலவகை ஆப்பிள் பழங்களின் தோலை
நகத்தால் சிறிது நெருடிப்பார்த்தால் அதிலிருந்து மெழுகு உதிர்ந்து
வரும். ஆப்பிள் கெடாமல் இருக்க தோலில் மெழுகு தடவி பேக் செய்கிறார்கள். நாம் அதை அப்படியே உண்கிறோம்.

கேக்குகளில் எண்ணெய் உறையவைக்க சோடியம் அலுமினியம் சேர்க்கப்படுகிறது. இந்த எண்ணெய் உண்பதற்கு ஏற்றது அல்ல.
மாவை வெண்மையாகவும் உப்ப வைக்கவும் பிளீச்சிங் பவுடரும்,
பிற பவுடர்களும் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றால் உடல்
நலத்திற்குத் தீமையே!

வெண்ணெய் நீக்கப்பட்ட பால் அடர்த்தியாக இருக்க வேண்டும் என்பதற்காக சில பால் நிறுவனங்கள் கலக்கும் ரசாயனப் பொருள் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடியது என்று ஆய்வுகள் எச்சரிக்கின்றன.

விவசாயிகள் தங்கள் பயிர்களை பாதுகாக்க பல வித ஆபத்தான
ரசாயன பூச்சிக்கொல்லிகள் உபயோகிக்கிறார்கள். இதன் விளைவாக
நாம் உண்ணும் அரிசி, பருப்பு, காய்கறிகளிலும் கேன்சர், மலட்டுத்
தன்மை உருவாக்கும் பூச்சிமருந்து எச்சங்கள் இருக்கின்றன.
பழங்களை பழுக்க வைக்க கூட ரசாயனங்கள் உபயோகிக்கிறார்கள். இயற்கையான பூச்சி ஒழிப்பு முறையில் இயற்கையான உரம் இட்டு வளர்ந்த உணவுப்பொருளே சிறந்தது. இதற்கான திட்டங்களையும் ஊக்குவித்தல்களையும் பயிற்சியையும் அரசு விவசாயிகளுக்கு வழங்கி இயற்கையான உணவு எங்கும் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

ஜெனெடிக் என்ஜினீயரிங் மூலம் பெறப்படும் புது விதமான உணவுப் பொருட்கள் மனித உடலில் உண்டாக்கும் பாதிப்புகளை
அறிய பல காலமாகலாம். சரியான ஆராய்ச்சி முடிவுகளை அறியாமலேயே அவற்றை சந்தைப் படுத்துவது காசு கொடுத்து
வாங்கி உண்ணும் மக்கள உடலிலேயே உணவுப் பொருள்
தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் சோதனைகளை நிகழ்த்துவதாகிறது.

பொதுவாக உணவுப்பொருளில் சேர்க்கப்படும் மோசமான
பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய சில பொருட்கள்:

330 and E330 Citric Acid: இயற்கையான சிட்ரிக் ஆசிட் கெடுதல்
இல்லை. ஆனால் செயற்கையாக தயாரிக்கப்படும் சிட்ரிக் ஆசிடில்
அதன் தயாரிப்பு முறையின் போது அதிலிருந்து Sulfur மற்றும்
Sulfites முழுமையாக நீக்கப்படா விட்டால் ஆஸ்த்மா, அலர்ஜி
உண்டாக வாய்ப்புள்ளது. சிட்ரிக் ஆசிட் கலந்த பானம் அதிகம்
அருந்துவது பற்களுக்கு கேடு. 924 & E924 Potassium Bromate (Agent used
 in Bleaching Flour): நரம்பு மண்டலம், சிறுநீரகம், அஜீரணம், மற்றும்
புற்றுநோய்க் காரணி.

407 & E407 Carrageenan (Thickening & Stabilizing Agent) : இவை ஆஸ்த்மா,
அல்சர், கேன்சர் போன்றவற்றை உருவாக்ககூடும்.

Sucralose (Splenda): 40%thymus gland ஐ சுருங்கச்செய்வதாக சோதனை
முடிவுகள் சொல்கின்றன. சிறுநீரகம் மற்றும் ஈரல் வீக்கம், மற்றும்
ஈரலில் சுண்ணாம்பு சத்தை படியச்செய்கிறது. உண்ணத்தகுந்ததல்ல.

கேசரிப் பவுடர் உடல் நலத்திற்கு நல்லதல்ல. வீட்டில் செய்யும்
எந்த உணவிலும் நிறத்திற்காக கேசரிப்பவுடர் அல்லது புஷ் பவுடர் சேர்க்காதீர்கள்.

குளிர் பானங்கள் மிட்டாய்களில் சேர்க்கப்படும் பல வித
கவர்ச்சியான வண்ணங்கள் புற்று நோய், மூளைக்கட்டி, தைராய்ட், அட்ரீனல் மற்றும் சிறுநீரக பாதிப்புகளுக்கு வழிவகுக்கும்.

சாயங்கள்: 104 & E104 Quinoline Yellow, 107 & E107 Yellow 2G, 110 &
E110 Sunset Yellow, 122 & E122 Azorubine, Carmoisine, 123 & E123 Amaranth,
124 & E124 Ponceau, Brilliant Scarlet, 127 & E127 Erythrosine, E128 Red 2G,
129 & E129 Allura Red AC, E131 Patent Blue, 132 & E132 Indigotine,
இண்டிகோ கார்மினே 133 & E133 ப்ரில்லியன்ட் ப்ளூ 151 &
E151 Activated Vegetable Carbons, Brilliant Black154 Food Brown, Kipper Brown,
Brown FK155 & E155 Chocolate Brown HT, Brown HT போன்ற சாயப்
பொருட்கள் ஹைப்பர் ஆக்டிவிட்டி, ஆஸ்த்மா, புற்று நோய் உருவாக்ககூடும்.

120 & E120 Carmines, Cochineal, 142 & E142 Acid Brilliant Green, Green S,,
160b & E160b Bixin, Norbixin, Annatto Extracts 143 Fast Green போன்ற சாயப்
பொருட்கள் ஹைப்பர் ஆக்டிவிட்டி, ஆஸ்த்மா போன்றவற்றை உருவாக்ககூடும்.

150 & E150 Caramel இது ஹைப்பர் ஆக்டிவிட்டி உருவாக்கும்.

பென்சோயேட்ஸ் (Benzoates) : பதனீட்டுப் பொருள். ஆஸ்துமா நோய் உள்ளவர்களிடையே நெஞ்சில் இறுக்கமான உணர்வை ஏற்படுத்தும். தொண்டையில் அரிப்பு அல்லது புண் ஏற்படலாம். Butylated
Hydroxyanisole (BHA), Butylated Hydroxytoluene (BHT) : காற்று புகாமலிருக்க பயன்படுத்தப்படும் பொருள்-பொதுவாக குழந்தை உணவுகள்
சுவிங்கம், தாவர எண்ணெய் ஆகியவற்றை கெடாமல் வைத்திருக்-
கிறது். இது கான்சர் காரணி மற்றும் சிலரிடையே தோல் எரிச்சலை ஏற்படுத்தலாம்.

எப்.டி. & சி (FD & C dyes) : வர்ணங்கள்-இது சிலரிடையே அரிப்பை ஏற்படுத்தலாம். குழந்தைகளின் நடத்தையில் மாற்றத்தை
ஏற்படுத்தலாம்.

Monosodium Glutamate (MSG) : தலைவலி, குமட்டல், வயிற்றுப்போக்கு,
வியர்வை, நெஞ்சில் இறுக்கம், கழுத்துக்குப் பின்னால் எரிச்சல்,
ஆஸ்துமா நோயாளிகளிடையே அதிக ஆஸ்துமாவை
ஏற்படுத்தும். குறிப்பாக விளையாட்டு வீரர்கள் திடீரெனெ இதய
நோய் தாக்குதலுக்குள்ளாவதில் இதன் பங்கு இருப்பதாக கூறப்
படுகிறது. நைட்ரேட் (Nitrates) : பதனீட்டுப் பொருள்-தலைவலி.
பாராபென் (Parabents) : பதனீட்டுப் பொருள்-கடுமையான தோல்
நோய், வீக்கம் அரிப்பு.

சல்பைட் (Sulfites) : பதனீட்டுப் பொருள்-வைட்டமின் B1 ஐ
அழிக்கிறது. நெஞ்சில் இறுக்கம், வயிற்று வலி, வயிற்றுப்போக்கு,
குறைந்த இரத்த அழுத்தம், பலஹீனம், சிறு அளவு கூட சிலரி-
டையே ஆஸ்துமா நோயை ஏற்படுத்தும், மோசமாக்கும்.

Propyl Gallate: இது எண்ணெய் மற்றும் கொழுப்புப் பொருட்கள்
கெடாமல் வைத்திருக்க உதவும். தாவர எண்ணெய், பதப்படுத்தப் பட்டஇறைச்சி, உருளைக்கிழங்கு சிப்ஸ், சிக்கன் சூப்பேஸ் மற்றும்
சுவிங்கம் ஆகியவற்றில் பயன் படுத்துகிறார்கள். இது புற்று நோய் உருவாக்ககூடும்.

Potassium Bromate: ரொட்டிகளில் சேர்க்கப்படும் இந்தப்பொருள் புற்று
நோய் ஏற்படுத்தலாம்.

Aspartame (Equal, Nutra Sweet): இது டயட் சோடா மற்றும் டயட்
உணவுகளில் சர்க்கரைக்குப்பதில் பயன்படுத்தப்படும் செயற்கை
இனிப்பு. இது மூளையில் டியூமர் கட்டியை உருவாக்கும் என அறியப்பட்டது. மிக குறைந்த அள்வு உட்கொள்ளுவது கூட
Lymphomas மற்றும் Leukemi நோயை உருவாக்ககூடும். சிலருக்கு
தலைவலி, மந்தம், மனக்குழப்பம், மத்திய நரம்பு மண்டல பாதிப்பு, மாதவிடாய் பாதிப்பு, கருவில் மூளைப்பாதிப்பு உருவாக்கக்கூடும்.

Neotame: இது Aspartame போன்றது ஆனால் அதை விட அதிக
நச்சுடையது.

Acesulfame-K: சர்க்கரையை விட 200 மடங்கு இனிப்பான இப்-
பொருள். கேக்குகள், சுவிங்கம், ஜெல்லி, மற்றும் குளிர் பானங்-
களில் சேர்க்கப்படுகிறது. இது கேன்சர், தைராய்ட் பாதிப்பு
உண்டாக்கலாம்.

Olestra: இது ஒரு செயற்க்கைக் கொழுப்பு. உடலால் உறிஞ்சப்-
படாதது, வயிற்றோட்டம், வயிற்று வலி போன்ற பல
பாதிப்புகளை உண்டாக்கும்.

Sodium Nitrite (Sodium Nitrate): இறைச்சி பதப்படுத்தவதில் உபயோகப்-
படுகிறது. இது கான்சர் காரணியான Nitrosamine ஐ உருவாக்குகிறது.

Hydrogenated Vegetable Oil: இவ்வாறு பதப்படுத்தப்பட்ட தாவர
எண்ணெய்கள் Trans Fat ஐ உருவாக்குகிறது. இது இதய நோய்
மற்றும் நீரிழிவுக்கு வழி வகுக்கும்.

Brominated Vegetable Oil : பிறவிக்குறைபாடு, உடல் உறுப்பு வளர்ச்சி-
யின்மைக்கு காரணமாகும்.

Blue 1 and Blue 2: குளிர்பானங்கள் மற்றும் மிட்டாய்களில் உபயோகப்-
படும் சாயப்பொருள். இது கான்சர் மற்றும் ட்யூமர் உருவாக்-
கூடும்.

Red 3: மிட்டாய் மற்றும் செர்ரியில் பயன்படும் வண்ணப்பொருள்
இது தைராய்ட் மற்றும் ட்யூமர் உருவாக்கக்கூடும்.

Yellow 6: கேக்குகள், மிட்டாய்கள், ஜெல்லிக்கள், சாசேஜ் ஆகியவற்றில்
பயன் படுத்தப்படுகிறது. அட்ரீனல், சிறுநீரகக்கட்டி, மற்றும் கான்சர் உருவாக்கக் கூடியது.

அப்பப்பா …பயங்கரம் ..சில கம்பனிகளின் பொருளாசைக்கு
பலியாகி எத்தனை விதமான வடிவத்தில் ரசாயனபொருட்களை
நமது உணவில் கலந்து உள்ளே தள்ளுகிறோம். இனியாவது எந்த
உணவுப் பொருள் வாங்கினாலும் அதன் “INGREDIENTS” அல்லது
“CONTENTS” என்று இட்டிருப்பதை ஒருமுறை வாசித்துப்
பார்த்துவிட்டு புற்றுநோய் போன்ற பேராபத்துகளை விலை
கொடுத்து வாங்க வேண்டுமா? பிள்ளைகளுக்கு தரலாமா?
என்றெல்லாம் ஒன்றுக்கு இரண்டு யோசித்து வாங்குங்கள்.

பெரியவர்களைப்போல் குழந்தைகள் உடல் உணவில் கலந்துள்ள
இந்த விஷப் பொருட்களை விரைந்து வெளியேற்ற இயலாது.
ஆனால் துரதிஸ்ட வசமாக அனேக குழந்தை உணவுகளே
விஷம் மலிந்து கிடக்கிறது.

சர்க்கரை, உப்பு, எண்ணெய் அதிக அளவு உட்கொள்வது
உண்ணும் மூளையின் இயற்கையான ரசாயன சமநிலையை
பாதித்து, உணவில் அதிக ஆர்வம் உண்டாக்கி அத்தகைய
உணவுகளுக்கு அடிமையாக்கிவிடும்.

ஹோட்டல்கள், ரெஸ்டாரெண்ட்களில் சாப்பிடுவதை அடியோடு தவிர்க்கவும். முடிந்தவரை உணவுப்பொருட்களை அதன்
அடிப்படை பொருளாகவே அவ்வப்போது வாங்கி ஃப்ரெஷ்
ஆகவே உண்ணுங்கள். அதற்கேற்ப உணவுப் பழக்கத்திலும்
மாற்றம் செய்து கொள்ளுங்கள். பணத்தையும் மிச்சப்படுத்துங்கள்.

நன்றி : சுஹைப் (கடலோரம்)