facebook

திங்கள், ஜூன் 27, 2011

கமெண்ட்ஸ் போடாத வாசகி!!

பஸ்ஸுக்கு காத்திருந்தபோது இரு அம்மணிகள் அளவலாவிக் கொண்டிருந்தாங்க!! அதை நான் உங்களுக்காக 'லாவிக்' கொண்டு
வந்து விட்டேன் !!

"என்னடி இவளே ஒரு மாதிரி இருக்கே, முழுகாம இருக்கியா?"

"இல்லக்கா இப்பல்லாம் அவரு டூட்டி முடிஞ்சு வந்ததுமே வெடு
வெடுன்னு விழுறாரு!"

"சரி இப்ப அதுக்கென்ன?"

"முந்திய மாதிரி என் மேல் அவருக்கு பிரியமில்லையோன்னு
மனசுக்கு தோணுதுக்கா?"

"இவ பெரிய இவ! கல்யாணமாகி வருஷம் ஒன்னு இன்னும்
முடியல! பிரியத்தைப் பத்தி ரொம்பதான் கண்டுட்டாளாக்கும்"

"அது வந்துக்கா...!!"

"அடியே இவளே..!! நாமெல்லாம் நடந்துக்குற முறையில தாண்டி
பிரியமும், பாசமும் நம் மேல வரும். நான் சொல்றேன் நல்லா
கேட்டுக்க!!

(பஸ்கள் நிற்பதும் போவதுமாய் இருக்க, நான் போக வேண்டிய
பஸ் இன்னும் வந்தபாடில்லை!!)

"சொல்லுங்கக்கா"

“காலையில் எழுந்ததிலிருந்து அவங்க ‘ஆப்பீஸ்’ போற
வரைக்கும் அந்த ஹரிபரி நேரத்தில் உன் மூஞ்சியையும்
(அது வேறு) முகத்தையும் (இது வேறு) காட்டிட்டீன்னா, இவங்க
'ஆப்பீஸ்' போய் நீ காட்டிய மூஞ்சியை நினைவில் வச்சிருந்-
தாங்கன்னு வச்சுக்கோ, ஆணி புடுங்க வேண்டிய இவரை, டேமேஜர்
பீஸ புடிங்கிடுவார். பொளப்பு என்னாகும். டப்பா டான்ஸ் ஆடிடும்.
புரியுதா?"

"புரியுதுக்கா!"

"அதனால எப்பவும் கொஞ்சம் சிரிச்ச மாதிரியே இரி! வேல
பாட்டுக்கும் வேல, கையும் கண்ணும் பார்த்துக்கிட்டிருக்க,
என்ன சங்கடமிருந்தாலும் கடையில் சேல்ஸ்மேன்கள்
மெல்லிதாய் சிரிச்சிக்கிட்டிருப்பாங்களே அதுமாதிரி!”

"அடடா விளக்கமெல்லாம் அழகா சொல்றீங்களேக்கா!"

"சரிடி பினாத்தாதே, கவனமா கேட்டுக்கோ!'

"ம்ம்ம்..."

"வாய்க்கு சுவையா ஆக்கிப் போடு!! எல்லாரும் ருசிக்கி
வயப்படுபவர்கள் தாம் புள்ள!"

"எனக்கு அத்தன வகையா சமைக்கத் தெரியாதேக்கா!"

"விடிஞ்சது போ! ஒன்னச் சொல்லியும் ஏதும் ஆகுறதில்ல. நம்மட அம்மாக்கள்ஸும் நமக்கு கல்யாணம் முடியுற வரைக்கும் 
செல்லம் கொடுத்தே அடுப்படி பக்கம் போக விட மாட்டாங்க.
அதனால டீ, காபி தவிர்த்து சுடுதண்ணி மட்டும் தான் நமக்கு
போட வரும். என்னா நா சொல்றது சரிதானா?".

"உண்மைதாக்கா"

"சரி அதனால ஒன்றும் பிரச்சின இல்ல!  இந்த பக்கம் நிறைய
தோழிகள், ப்ளாக்ஸ்பாட்டுல வகை வகையான சமையலைப்
பத்தியும், அவைகளை சமைக்கும் முறைப்பத்தியும் வண்ண
வண்ணமா படங்களைப் போட்டு அசத்துறாங்க!! அவைகளையும்
ஒரு முறைக்கு ரெண்டு முறை போயி படிச்சுப் பாரு. சந்தேக-
மிருந்தா அவங்களுக்கே கமெண்ட்ஸ் போட்டு விளக்கம் கேளு.
அழகா பதில் தருவாங்க! சும்மா லேப்டாப்பை தலகாணிக்கி
கீழே வச்சுக்கிட்டு தூங்காதே! சரியா?

"எல்லாம் சரீக்கா...ஆனா..க்கா ?"

"என்னடி ஆனாக்கா ஆவன்னாக்கா.. ?"

"அவரு டூட்டி முடிஞ்சு வந்த உடனே வெடுவெடுன்னு விழுறாரு!
அதுக்கு நீங்க எதுவுமே சொல்லலையே. அதாங்... க்கா!!”

"இரிடி...பறக்காதே! ஒன்னு ஒண்ணாத்தானே சொல்லணும். அவங்க
டூட்டி முடிஞ்சு சோர்ந்து போய் தான் வீட்டுக்கு வருவாங்க!
அப்பவும் கூட, உன்னோடு செல்லில் பேசி, வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டுதானே வராங்க!! அப்ப செல்லில் உன்னோடு பேசிய பிறகு, அவங்க வீட்டுக்கு வரும் நேரத்தை
கால்குலேட் செய்து மனதுக்குள் வச்சுக்க. இதுக்கு கம்ப்யுட்டர்
எல்லாம் தேவையில்லை!! (ஏஏஏ..யப்பா ரொம்ப படிச்சவங்களா
இருப்பாங்க போலிருக்கே!!) அதற்குள் காபியோ, டீயோ, டிஃபனோ,
அல்லது ஸ்ட்ரைட்டா சாப்பாடோ சாப்பிடுபவர்கள் என்றால்
அவைகளை ரெடி செய்து வைத்து விடு. குளித்து விட்டு சாப்பிட,
அவங்க மனசு சந்தோஷமா இருந்தா எவ்வளவு எலக்ட்ரிசிட்டி
ஷேவ் ஆகுதுன்னு நீயே பாரு!! சரியா??

"ஹி.. ஹி...சரீக்கா??"

"நா என்னத்த சொல்லிப்புட்டேன்னு இப்படி ஹி..ஹி..ன்னு
இளிக்கிரே! கவனமா கேளு புள்ளோய்!"

"சரீக்கா..சரீக்கா..!!"

"அத விட்டுபுட்டு அவங்க வர்ற வரைக்கும், டிவி தொடர், காமெடி
ஷோ பார்க்கலாம்னு உட்கார்ந்துட்டீன்னு வச்சுக்கோ, பிறகு நாம
காமெடிபீஸாகி விடுவோம். தெரிஞ்சுதா??"

"ஆமாக்கா, அதான் அவரு வெடுவெடுன்னு விழறாரா..!! இப்ப
தானே புரியுது. நீங்க மேலே சொல்லுங்கக்கா!"

“ஒன்னு மட்டும் மனசுல வச்சுக்கோ. புருஷா எல்லோரும்
குழந்தைங்க மாதிரி. நாம சிரிச்சா அவங்களும் சிரிப்பாங்க.
அவங்க சிரிச்சா நம்ம மனசும் வீடும் நிறைஞ்ச மாதிரி. அவங்க வரும்போது அழகா டிரஸ் பண்ணி கொஞ்சம் சிரிச்ச மாதிரி
முகத்த வச்சுக்கோ! வந்த உடனே எந்த கவலைப்படும் விஷயத்-
தையும் சொல்லிடாதே! நீ வாங்கி வரச் சொன்னதில் ஏதும்
மறந்து வந்துட்டாங்கன்னாலும், "போய் வாங்கிட்டு வாங்கன்னு
விரட்டாதே!", "பரவாயில்லிங்க, சமாளிச்சுக்கலாம்" என்று சொல்லி அட்ஜஸ்ட் பண்ணு" , புரியுதா?

"அச்சச்சோ... எம்பூட்டு விஷயம் அழகழகா சொல்றீங்க!"

“சரி சரி...மற்றதெல்லாம் ஒன்னற தோழிகளும் அம்மாவும்
சொல்லிக் கொடுத்திருப்பாங்க அதுபடி மனசில வாங்கி நடந்துக்க,
எல்லாம் சரியா வரும். என்னா புரியுதா..!!"

சிரித்துக் கொண்டே தலையை ஆட்டினாள்.

“சும்மா தலைய தலைய ஆட்டாதே!! காலையில் 'அவங்க' ஆப்பீஸ் போறதுக்கும், 'ஆணி' புடுங்கிட்டு வர்றதுக்கும், வாழ்க்கையின் அந்திம
நாள் வரைக்கும் அவங்களுக்கு உதவும்கரங்கள், என்றால் அது நாம
தான், இதில் எந்தவித மூன்றாம் நாலாம் கருத்துக்கும் இடமில்லை.
இப்ப நீ ஜாக்கெட்டில் காலர் வச்சிருந்தீன்னா ஒருதடவை  தூக்கி
விட்டுக்கோ. தப்பே இல்ல!!”

அம்மாடி... கொஞ்ச நேரத்துக்குள்ளார அவங்க பாட்டுக்கும் எவ்வளவு சொல்லிக்கிட்டே போய்ட்டாய்ங்க!!

அதற்குள்  நான் புறப்படவேண்டிய நாலாம் நம்பர் பஸ் வந்துடுச்சு. ஏறிட்டேன்.!! கண்டக்டர், “ரைட்.. ரைட்” விசில் கொடுத்தார்.


ஞாயிறு, ஜூன் 19, 2011

திட்டச்சேரி [[தொடர் பதிவு]]




“எங்க ஊரு நல்ல ஊரு” தொடர் பதிவிற்கு என்னை அழைத்த அன்பின் சகோதரி ஸாதிக்கா அவர்களுக்கு நன்றி!!


திட்டச்சேரி..!!!


1.
நான் பிறந்த ஊர் நாகை மாவட்டத்தில் உள்ள நாகூர் என்றாலும் பெரும்பாலான பிரபலஸ்தர்கள் பிறந்து வளர்ந்த ஊர் என்பதாலும்
நிறைய நண்பர்கள் எங்களூரைப் பற்றி எழுதி விட்டதாலும், நிறைய பேர்களுக்கு நாகூரைப் பற்றி தெரியும் என்பதாலும், நான் சற்றே
நகர்ந்து,  "என் கைத்தளம் பற்றி மனம் கவர்ந்த   துணையூர்"
'திட்டச்சேரி'யைப் பற்றி இங்கே எழுதுகிறேன்.

 நாகூரைப் பற்றி நாலு வார்த்தையாவது சொல்லியாக வேண்டும்.
அறிவின் வல்லமையால் நகைச்சுவையாய் பேசக் கூடியவர்கள்
என்றும், உணவு விஷயத்திலும் வக்கணையாய் நாச்சுவை அறிந்து உண்பதிலும், இவர்களை மிஞ்ச ஆளில்லை என்பதனையே அழகாய்
'நாகூர்' என்று சுருக்கமாய்  சொல்லி சிலாகிக்கிறார்கள் என்பது
என் எண்ணம்.

திட்டச்சேரி, நிரவி, புறாக்கிராமம், ஏனங்குடி, பாக்கம் கோட்டூர்,
போலகம், இல்லாமல் நாகூர் ஏது? சிக்கல், கீவளூர், கூத்தூர்,
பொரவாச்சேரி, மஞ்சக் கொல்லைக்காரர்கள் கோபிக்கவேண்டாம்;
அவர்களும் நாகூர் காரர்கள்தான்! அந்த வகையில் பார்த்தால்
திட்டச்சேரி, நாகூரில் இருந்து நீட்டிக்கப்பட்ட ஒரு கிளை நகரம்
என்றே கொள்ளலாம்.

நாகூரிலிருந்தும், காரைக்காலிலிருந்தும் கிட்டத்தட்ட எட்டு கிலோ
மீட்டர் தூரமே உள்ள ஊர் தான் இந்த திட்டச்சேரி, என்றாலும்
ஊரின் பெயரில் ‘சேரி’ என்ற சொல் ஒட்டியிருப்பதால் ஏதோ
குக்கிராமம் என்றும் நினைத்து விட வேண்டாம். நாகப்பட்டினம்
மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

2001-ம் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 8484 மக்கள்
இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள்
ஆவார்கள். திட்டச்சேரி மக்களின் சராசரி கல்வியறிவு 77% ஆகும்,
இதில் ஆண்களின் கல்வியறிவு 82%, பெண்களின் கல்வியறிவு
71% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5%
விட கூடியதே. திட்டச்சேரி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்-
குட்பட்டோர் ஆவார்கள். இது "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்
தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". என்று விக்கிப்பீடியாவில்
தொகுக்கப் பட்டிருக்கிறது. பத்து வருடத்துக்குப் பிறகு இப்பொழுது
(2011-ல்)  மக்கள் தொகையை டபுல் என்ன ட்ரிபுலாகக் கூட
கூட்டிக் கொள்ளலாம்.

இவ்வாறாக, மேற்படி கல்வியறிவு 77% என்பது இப்பொழுது சற்று கூடியிருக்கக் கூடும், என்றாலும் இது சற்றேறக்குறைய 70-80
ஆண்டுகளுக்கு முன்பே கல்வியைப் பற்றி விழிப்புணர்வோடு,
அடித்தளம் அமைக்கப்பட்டு இஸ்லாமிய பல்கலைக் கழகங்களில்
படித்தறிந்த கல்வியாளர்களால் வரையறுக்கப்பட்ட ஊர் திட்டச்சேரி. குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் தலைமை நீதிபதிகள், வழக்கறிஞர்கள், டாக்டர்கள், வாழும் ஊர் இது.

உள்ளூரில் அரசினர் மேல்நிலைப் பள்ளி இருந்தாலும், இங்கிலீஷ்
மீடியம் பயிலும் கான்வென்ட் சம்சுன்நஹர், ஜேஸி பள்ளிகள் இருந்தபோதிலும், காலை நேரங்களில் இங்கிருந்து புறப்பட்டு நாகூர்
கிரசண்ட், காரைக்கால் காவேரி, நிர்மலா ராணி, செயிண்ட் மேரிஸ்
பள்ளிக்கூடங்களுக்கு செல்லும் பஸ்களும் வேன்களுமே இந்த
ஊர் மக்கள் எந்த அளவுக்கு கல்வியில் ஆர்வம்  காட்டுகிறார்கள்   என்பதற்கோர் அத்தாட்சி!!

ஒரு குத்து மதிப்பாகச் சொல்லப் போனால் மூன்று மாவட்டங்கள்
அருகருகே காணக்கிடைப்பது இந்த பகுதியில்தான் என்று நினைக்
கிறேன். நாகை, திருவாரூர், காரைக்கால் (பாண்டிச்சேரி). காரைக்கால்
அருகே இருப்பதாலோ என்னவோ, பக்கத்தில் பனங்’குடி’, ஏனங்’குடி’
போன்ற ஊர்கள் சுற்றிலும் இருக்கின்றன. ஊர்காரர்கள் கோபிக்க
வேண்டாம்.

தென் தமிழகத்தில் முதன்முதலில் வெற்றிகரமாக பெட்ரோல் கிடைக்குமென்று அறியப்பட்டது இங்குள்ள பா.கொந்தகை
அருகே உள்ள பீமா தைக்கால் தான். அதுவே பின்னாளில்
அந்த பகுதிகளில் வளமிக்க பெட்ரோல் ஊற்றுகள் கண்டுபிடிக்க ஏதுவாக நரிமணம் - பனங்குடியில் ongc ப்ராஜெக்ட், சென்னை
பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (cpcl) துணையுடன், Rs.2800 கோடி
செலவில் நவீனப் படுத்தப்பட்டு, விரிவுபடுத்தப் பட்ட
ரிஃபைனரிஸ் உருவாக்கப்பட்டது.

2.

இந்த ஊர் மக்களின் உபசரிப்பும் கனிவும் கரிசனமும் சொல்லில்
அடங்காது. யாரவது வீட்டிற்கு   வந்து விட்டார்களென்றால் ஒரு
வாய் டீயோ, காபியோ, ஜூஸோ கொடுத்து சட்டென்று அவர்களை
அனுப்பி விடமாட்டர்கள். வீட்டில் செய்த பலகாரங்கள் தம்ரோட்,
நானஹத்தா, ஹஜூர் பணியாரம், முட்டைப் பணியாரம் போன்ற-
வைகளை Bபாஷன் என்று இங்கு அழைக்கப்படும் மரவைகளில்
வைத்து நம்மை சாப்பிடச் சொல்லி திக்கு முக்காட செய்து
விடுவார்கள். எதை சாப்பிடுவது எதை விடுவது என்று பல
சமயங்களில் இதுமாதிரி நிகழ்வுகள் அங்கே சகஜம்.

இங்கே மாலை நேரங்களில், நாகூரில் இருந்து வந்து அங்கேயே
உடனுக்குடன் தயார் செய்து சுடச்சுட சுட்டு விற்பனை செய்யும்
"வாடா" என்ற திண்பண்டம் ரொம்ப ஃபேமஸ்; அதன்சுவை அலாதி
யானது. ஊறவைத்து அரைத்த அரிசி, அரைத்த சோறு ஆகிய
வற்றை சரியான விகிதத்தில் கலந்து, வடைபோல் தட்டி, நடுவில்
ஒரு ஓட்டையும் விட்டு, அதன் மேல் ‘இறாலை’ சரி   பாதியாய்
பிய்த்து பொட்டு போல் அங்கொன்றும் இங்கொன்றுமாய் வைத்து, எண்ணையில் போட்டு பதமாய் பொன்னிறமாய் பொறித்து எடுக்கப் படுவதற்குப் பெயர் 'வாடா'. இப்படி பொறித்த வாடாவையே திரும்ப
வும் மாவில் ஒரு புரட்டு புரட்டி எடுத்து பொறித்தால் அதற்கு
பெயர் "பொறிச்ச வாடா"வாம்.  இந்த இரண்டு வகை மொறுமொறு  வாடாவின்   சுவையும்  மணமும் சிம்ப்லி டிலீஸியஸாக  இருக்கும்.
ஒரு தடவை சாப்பிட்டு பார்த்தீர்களென்றால் தான் நான் சொல்வ-
தன் அர்த்தம் புரியும். இதற்கு உலகம் முழுக்க ரசனையுள்ள
ரசிகர்கள் கூட்டம் [என்னையும் சேர்த்து] ஏராளம்!

அதற்கு தொட்டுக் கொள்ள, 'உள்ளடம்' என்கிற வெங்காயமும்,
மஞ்சளும், தேங்காய்ப்பூவும், உப்பும் போட்டு பிரட்டி, அவைகளை எண்ணையில் போட்டு வதக்கிய கலவையோடு சேர்த்து சாப்பிடும்
வாடாவின் டேஸ்ட் உன்னைப் பிடி என்னைப்பிடி என்று அள்ளிக்
கொண்டு போகும். இது கிடைக்காத (மழை) காலங்களில் இருக்கவே
இருக்கு ஸ்பெஷல் கொத்துப் பரோட்டா. அவர்களின் கனிவான
பேச்சாலும், உபசரிப்பாலும் இதுமாதிரி வகையான சாப்பாடு
களாலும் மனம் நிறைந்தது போல், வயிறும் நிறைந்து போவது
திண்ணம்.

இந்த ஊரின் ஸ்பெஷல் என்று சொல்லப் போனால் குவளைகேக்,
பகோடா பிஸ்கட், பொட்டி பணியம், ஈச்சகொட்டை பணியம்,
முட்டைப் பணியம், தம்ரோட், இஞ்சி கொத்து பணியம், முர்த்தபா
எனும் லாப்பை, ஜாலர் பாராட்டா + வட்டலாப்பம், ஜாலர் சமுசா
ஆகியவைகள் அடங்கும்.

பிரியாணி வகைகளில் மட்டன், சிக்கன், இறால், மீன், போன்றவை-
களும், *அஞ்சுவகைக்கறி நெய்ச்சோறு, குஸ்கா, போன்றவைகளும்,
சமீபத்தில் பிரபலமாயுள்ள சைனீஸ் ரைஸ், மீங்கோரி போன்ற
வையும் சுவையாய் இருக்கும். அந்தந்த வீட்டு மாப்பிள்ளை
மார்களின் உடலளவை வைத்து, வீட்டின் கைமணத்தை அறிந்துக் கொள்ளலாம் என்று சொல்வார்கள். (நீங்கள் குண்டா ஒல்லியா
என்று என்னை கேட்டு விடாதீர்கள். உடலவை குறைக்க (படாதபாடு படுபவர்களுக்காக) இரண்டு மூன்று பதிவு போட்ட என்னை குறைத்து மதிப்பிட்டு விட வேண்டாம்!! :-))

*மேற்படி அஞ்சுவகைக்கறி நெய்ச்சோறு என்பது நான்கு பேர்
உட்கார்ந்து சாப்பிடும் இந்த Bபாசன் சாப்பாடு, சாப்பிட்டு முடியும்
தருவாயில் சும்மா செறிமானத்திற்காக சாப்பிடும் சாப்பாடு தான்
இந்த 'சீனித்தொவை' சோறு. அதற்குரிய பக்குவத்தைப் பாருங்கள்

இந்த நெய்சோற்றுடன், தக்காளி பச்சடி, சீனித்தொவை, வாழைப்-
பழம், ஃபிரிணி ஆகியவற்றை (இதற்காக சிலர் பால்கோவாவை
பொட்டலம் போட்டு மடியில் கட்டிக் கொண்டும் வருவார்கள்!!)
போட்டு கஞ்சி மாதிரி பிசைந்து சாப்பிடும் சாப்பாட்டுக்கு பெயர்
தான் பால்சோறு. ஜெதப்பான சாப்பாடு இந்த ஏரியாக்களில் ரொம்ப
ஸ்பெஷல்! இப்பொழுது அதெல்லாம் வீட்டில் செய்து சாப்பிட்டா-
லன்றி கலரிகளில் அரிதாகிப் போச்சு. இந்த அவசர உலகில்
கல்யாணம், மற்ற விஷேஷங்களில் கூட ப்ளேட் சாப்படாகி,
மெடிக்கல் சாப்பாடென்ரெல்லாம் ஆகிப்போச்சு!

மாலை நேரங்களில் ஆட்டுதலை சூப் விற்பனை அமோகமாய்
இருக்கும். தலையிலுள்ள கண், நாக்கு, மூளை ஒவ்வொன்றுக்கும் தனித்தனி விலை! தலைகறிகள் விற்று தீர்ந்து போனாலும், சூப்பு
தண்ணியில் அவித்த முட்டையைப் போட்டு நடக்கும் வியாபாரம்
ஒரு சில கடைகளில் சூடு பறக்கும்.

அரபு நாடுகளில் மிகவும் விரும்பி சாப்பிடப்படும் புரோஸ்டட்
சிக்கன், ஷவர்மா போன்ற பிரசித்தி பெற்ற ஐட்டங்கள் தற்சமயம் காரைக்காலிலும் கிடைக்கிறது. டேஸ்ட் ....?? கொஞ்சம் முன்னபின்ன இருக்கலாம்.

அலியதரம், ஆட்டுக்கால் பணியாரம், 'போனவம்', போன்ற தீண்
பதார்த்தங்கள் போன இடம் தெரியவில்லை. இப்பொழுதெல்லாம்
இவைகளை வீடுகளில் செய்ய அலுப்புப்பட்டுக் கொண்டு கடை-
களில் ஆர்டர் செய்தே தருவிக்கிறோம். ஒரு காலத்தில் பாட்டி
மார்களும், வீட்டின் பெண்மணிகளும், சின்னச்சின்ன பெண்
குழந்தைகளும் வீடு முழுக்க விரவி உட்கார்ந்து பணியாரங்கள்
செய்கிறேன் என்று அடிக்கும் லூட்டிகள் பார்க்கவே கண்கொள்ளா
காட்சியாக இருக்கும். கூட்டுக்குடும்பங்கள் அரிதாகிப்போன
நிலையில், விசேஷ நாட்களுக்கு முன்கூட்டியே கடைகளில்
ஆர்டர் செய்து தருவித்து எல்லா விஷேசங்களையும், பண்டிகை நாட்களையும் கொண்டாடி திருப்திபட்டுக்  கொள்கிறோம்.நாகூரில்
ஹாரிஸ் கடையிலும், திட்டச்சேரியில் செல்லம்மா, மெஹர்
ஆகியோர் வீடுகளிலும் செய்து தருகிறார்கள்.

3.

பிரசித்திப் பெற்ற தற்காப்பு கலையை சீனாவுக்கே சென்று
கற்றவர்கள் இங்கே வாழ்ந்திருக்கிறார்கள். "சைனீஸ் டிஸாஸ்டர்"
என்ற அறியவகை கலையை கற்றவர்களில் முக்கியமானவர்கள்
'எல்லைக்கல்' யூசுப் மரைக்காயர், 'பூரான்' ஷரீப் ஆகியோர்களாவர்.

நண்பர் ஒருவரை வேலை நிமித்தம் ஓரிடத்திற்கு போகச் சொல்லி
விட்டு, திரும்பி வந்து பார்க்கும் சமயம் இருட்டிவிட்டதாகவும், அவர் போகாமல் இருட்டில் உட்கார்ந்திருக்கக் கண்டு எட்டி உதைத்ததாகவும், பிறகுதான் அவர் உதைத்தது ஊரின் எல்லைக்கல் என்றும், உதைத்ததில் அந்தக்கல் இரண்டு துண்டாய் உடைந்து போனதாகவும், அதனால் அவர்
பெயர் எல்லைக்கல் யூசுப் என்று பெயர் விளங்கக் காரணமாகியது என்கிறார்கள்.

இரண்டாமவர் குஸ்தி, கம்பு சுழற்றுதல், மற்றும் வீர விளையாட்டு
களில் படுசமத்தர். இவர் கம்பு சுழற்றும் போது பத்து பேர் எதிர்
நின்று எலுமிச்சை பழத்தை வீசினாலும் லாவகமாக தன்மேல்
படாமல் விர்ர்.. விர்ர்.. என்று கம்பு சுழற்றி அசத்துவார் என்று
அந்தக் கால பெரியவர்கள் சிலாகிக்கின்றனர்.

கவிஞர்கள் வரிசையில் வடக்குதெரு மர்ஹூம் ஆபிதீன், அதே
தெருவை சேர்ந்த இந்நாள் கவிஞர் அன்வர் மற்றும் அலிஹுசைன், முருகேசன் ஆகியோர்கள் அடங்குவர். இன்னும் அரசியல்,
இலக்கியம், இசை சார்ந்தவர்களும் நிறைய பேர் இருந்தாலும்,
தன்னடக்கம் காரணமாகவும், எனக்கு அவர்களின் பெயர்கள்
தெரியாததாலும், வாளா விடுகிறேன்.

கந்தூரி கொடியேற்றம், சந்தனக் கூடு, கச்சேரிகள் எந்த ஊரில்
நடந்தாலும் இவர்கள் கூடினால் தான் கலைக்கட்டும் என்று
சொல்வார்கள். அந்தக் காலத்தில் வில்வண்டியைக் கட்டிக் கொண்டு, கழுத்தில் மப்ளரை சுற்றிக் கொண்டு, டார்ச் லைட் சகிதம் ஒரு
குரூப்பே செல்வார்களாம். சொல்லக் கேட்டிருக்கிறேன். இப்ப கார்,
பைக் எடுத்துக் கொண்டு போய் அதகளம் பண்ணுகிறார்கள் போல!

பேச்சு வழக்கு என்று எடுத்துக் கொண்டால், வாலே, போலே,
சொல்லுதியலா, போனியலா போன்றவை நம் திருநெல்வேலி
சொல்லாடலை நினைவு படுத்தும். மற்றபடி நாகூரின் வாங்கனி,
போங்கனி, இக்கிது, பிக்கிது பாஷையை இவை அடிச்சுக்க முடியா-
தென்பேன்!

முன்பு இங்கிருந்த கீற்று சினிமா தியேட்டரை ஊரின் நிர்வாகம்
அப்புறப் படுத்திவிட்டது. கடைசி படம் நாடோடிமன்னன் என்கிறார்-
கள். மற்றபடி பொழுதுபோக்கு என்று எடுத்துக் கொண்டால் பக்கத்தி-
லுள்ள நாகூர் காரைக்கால் தான் சென்றாகணும். இங்கே தான்
சினிமா தியேட்டர், காலார நடக்க கடற்கரை இன்னபிற உயர்வகை ஹோட்டல்கள் அமைந்திருக்கின்றன. கடற்கரைகளில் வியாழன்,
வெள்ளிக் கிழமைகளில் நாகூரிலும், ஞாயிற்றுக் கிழமையில் காரைக்காலிலும் கூட்டம் அலையோடு அலைமோதும்.

மனதுக்கு நிறைவான அமைதி தரும் இந்த  ஊரைப் பற்றி
இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். பதிவின் விரிவஞ்சி
இத்தோடு முடிக்கிறேன். பிறகு வேறொருப் பதிவில் மற்றவை
களை பதிவிடுகிறேன்.

செவ்வாய், ஜூன் 07, 2011

உடல் பருமனை குறைக்க என்ன செய்யலாம்?


உடல் பருமனை குறைக்க  என்ன செய்யலாம்?

எப்படி எல்லாம் பாடுபட்டு வளர்த்த உடம்பை இப்படி பாடுபட்டு
எழுதி குறைக்க வழி சொல்லவேண்டியதா இருக்கு!! அவ்வ்வ்வ்.!!!

நாம் பயன்படுத்தும் துணிகளின் அளவு ஆண்களின் இடுப்பளவு
முப்பத்தி எட்டு இன்சுக்குக் குறைவாகவும், பெண்களின் இடுப்பளவு முப்பத்தி ரெண்டு இன்சுக்குக் குறைவாகவும் இருக்க வேண்டும்.
அந்த அளவுக்குள் இருந்தால் தான் ஆரோக்கியம். ஆனால்
இன்றைக்கு எக்ஸ்ட்ரா லார்ஜ், டபுள் எக்ஸ்ட்ரா லார்ஜ், ட்ரிபிள்
எக்ஸ்ட்ரா லார்ஜ் என கணக்கில்லாமல் போய்க் கொண்டிருக்கி-
றோம். இதெல்லாம் நோயில் கொண்டு போய்தான் முடியும். உடல்
எடை அதிகரிப்பால் மூட்டுவலி, இடுப்பு வலி இன்னபிற வியாதிகள்
நம் சொந்தமாகிப் போகும்.

நம்மில் பெரும்பாலானவர்கள் திருமணம் ஆகும் வரை ஒல்லியாக இருப்பார்கள். திருமணம் முடிந்ததும் குண்டாகி விடுவார்கள்.
இதற்கு 'மனைவி வந்த பூரிப்பு!'. 'வீட்டு சாப்பாடு' என்றெல்லாம்
நமக்கு நாமே சொல்லும் சமாதான காரணங்கள். வயிறு கெட்டு
விடும் என்று பார்த்துப் பார்த்து சாப்பிட்டவர்கள் அதிக அளவு
உண்பார்கள். இது தான் உடல் பருமனுக்கு முக்கிய காரணம்.

சென்டர் ஒபிசிட்டி:

கால்கள் கைகள் மார்பு பகுதி எல்லாம் சின்னதாக இருக்கும். வயிறும் பின்பக்கமும் வீங்கி பெருத்திருக்கும். இதற்கு ‘சென்டர் ஒபிசிட்டி’ என்று பெயர். நம் ஊரில் இப்படிப் பட்டவர்கள் எக்கச்சக்கமாக இருக்கிறார்கள். சமையல் எண்ணெய் ஒருமுறைக்கு மேல் பயன்படுத்துவது. அளவில்- லாமல் கண்டபடி சாப்பிடுவது, ஸ்டைலுக்காக சிகரெட், நண்பர்களோடு பார்டி என்கிற பெயரில் பீர் என்கிற பழக்கத்தை எல்லாம் விட்டுவிட வேண்டும்.

உணவுக் கட்டுப்பாடென்பது:

அறவே சாப்பிடாமல் வயிற்றை/வாயைக் கட்டுவதென்பதல்ல. மூன்றுவேளை சாப்பாட்டை ஐந்து வேலையாகப் பிரித்து மூன்று மணி நேரத்திற்க்கொரு முறை அளவோடு நம் உடலுக்கு ஜீரணமாகக் கூடிய உணவுகளை சாப்பிடனும். நான் ஆபீஸ் போறேன், வெளியே போறேன் அப்படி இப்படி என்ற காரண மெல்லாம் ரிஜெக்டெட். நம் உடம்புக்குத் தானே நாம் செய்கிறோம் என்ற அக்கறை மனசில் வேணும். சாப்பிடும் ஒவ்வொரு பொருளிலும் கலோரி, புரதம், கார்போஹைடிரேட், கொழுப்பு எல்லாம் எவ்வளவு இருக்கு என்று கால்குலேட் பண்ணியே சாப்பிடுங்க. ஒருதடவை உங்கள் அருகிலுள்ள டயடீசியனை அவசியம் கன்சல்ட் செய்துக் கொள்ளுங்க! பிரச்சினைகள் ஏதுமிருக்காது.

உடலுக்கு எல்லாவித சத்துக்களும் பேலன்ஸ்டா சேர்வது மாதிரி சாப்பிடுவது தான் நல்ல வழி. அதனால் சத்தான சாப்பாட்டை
எப்பவுமே மிஸ் பண்ணிடாதீங்க. சாப்பாட்டு நேரத்தை அடிக்கடி
மாற்றிக் கொண்டே இருப்பது நம் உடம்பை ரொம்பவே டிஸ்டர்ப் பண்ணும். எந்த நேரத்துக்கு என்ன சாப்பாடுன்னு பட்டியல் போட்டு
வெச்சு அதை ஸ்ட்ரிக்ட்டா கடைப் பிடிக்கணும். சத்தான உணவு
சரியான நேரம் இது தான் டயட் சீக்ரட்.

நாம் வாழும் முறை உண்மையிலேயே சரியானதாக ஆரோக்கிய
மானதாக இருக்கிறதா?

இது நம்மை நாமே கேட்டுக் கொள்ளவேண்டிய கேள்வி. இதயம்
சம்பத்தப் பட்ட நோய்களுக்கு பிளட் பிரஷர் + டயாபடிஸ் முக்கிய காரணிகளாக விளங்குகின்றன. சுகர் நோய் பரம்பரையாகத்
தொடரக் கூடியது என்றாலும் பலபேர் இந்த வகை நோய்களை
கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளாமல் கடைசிவரை
அலட்சியமாகவே இருக்கிறோம். (ஏதோ சொந்த பந்ததை விட்டுப்
பிரிந்து விடுவோமோ என்ற ஏக்கம் போல!)

அதே சமயம் டீன் ஏஜில் இருந்தே நம் லைஃப் ஸ்டைலை
முறைப் படுத்திக் கொள்ளவேண்டும்.

எப்படி? இது நல்ல கேள்வி?

ஆண்டுக்கு ஒருமுறை இதய நோய்களுக்குக் காரணமான BP + சுகர் பரிசோதனைகளைச் செய்து விடுங்கள். ஆறுமணி நேரமோ எட்டு
மணி நேரத்திற்கு மிகாமலோ தூக்கமும், நாற்பது நிமிடத்திலிருந்து அறுபதே அறுபது நிமிடநேர உடற்பயிற்சியுடன் கூடிய நடை
பயிற்சி அயற்ச்சியில்லா தேக ஆரோக்கியத்தைத் தந்து உடல்
எடையை கட்டுப் பாட்டுக்குள் வைத்திருக்கும். "இதற்கெல்லாம்
எங்கே சார் நேரம் இருக்கு?" என்று டேக்கா கொடுக்க
நினைக்காதீங்க!!

நீங்கள் நிச்சயமாய் ஆபீசுக்கோ மற்ற எந்த வேலைகளுக்காகவோ வெளியே தெருவே சென்று வருபவர்களாகத் தானிருப்பீர்கள். பஸ்
வேன் ஆட்டோவில் செல்பவர்களானால் இறங்க வேண்டிய
இடத்துக்கு இரண்டு கிலோ மீட்டரோ, அல்லது ஒரு கிலோ
மீட்டருக்கு (உங்களால் நடந்து வரக் கூடிய அளவுள்ள தூரத்துக்கு) முன்பாகவே இறங்கி நடந்தே ஆபீசுக்கோ மற்ற எந்த வேலை களுக்காகவோ போங்களேன். டூ வீலர் வைத்திருப்பவர்கள் நடந்து
போகிற தூரத்திற்கு நடந்தே போகலாமே!

ஆபீஸ் ரெண்டாவது மூன்றாவது மாடியிலோ இருக்கிறதா? அதற்காக பெருமூச்சு விடாதீர்கள்.மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு படிகளில் ஏறி இறங்குங்கள். டயர்டாக இருக்கிறதா? அதற்காகத் தான் மேலே சொன்ன சத்தான சாப்பாடு. இப்போது புரிந்திருக்குமே!

சார் உங்களால் மேலே சொன்ன எதையுமே செய்ய முடியா
விட்டால் தினமும் இருபது நிமிடம் நீச்சல், அல்லது முப்பது
நிமிட சைக்கிளிங் அல்லது நாற்பது நிமிட வாக்கிங்...இதில் ஏதாவதொன்றை வாரத்தில் ஐந்து நாட்கள் செய்யப் பழகினாலே
போதும்.

ரிமோட் உங்களின் எதிரி! எழுந்து போய் சேனலை மாற்றப்
பழகுங்கள். ரிமோட் பேட்டரியை கழற்றி விட்டால் உங்கள்
குடும்பத்துக்கே நல்லது செய்தவர்கள் ஆவீர்கள்!

இறுதியாக-

இதய நோய்கள் காஸ்ட்லி நோய்கள். இவற்றுக்கு அளிக்கப்படுகின்ற சிகிச்சைகளும் காஸ்ட்லி வைத்தியம் தான். இவற்றை அருகிலேயே சேர்க்காமல் தடுக்கின்ற இலவச மருந்துகள் தான் மேலே சொன்ன
பழக்க வழக்கங்கள். இதை புரிந்துகொண்டாலே போதும்! நஹீன்னா,
போங்க சார் உங்க கூட டூ... !!