(5 நிமிடக் கதை)
மீனாவை எனக்கு ரொம்பப் பிடிக்கும்!
அவள் ஸ்கர்ட் உடுத்தி துள்ளி துள்ளி என் கைப் பிடித்து
கூடவே ‘ரைமிங்’கும் சொல்லி கொண்டு ஸ்கூலுக்கு வரும்
போதும், வீட்டுக்கு வந்த பின்பு "அறஞ் செய்ய விரும்பு ;
ஆறுவது சினம்" என்று குறுக்கே கைக் கட்டிக் கொண்டு
ஆடி ஆடி சொல்லும் போதும்..
மீனாவை எனக்கு ரொம்பப் பிடிக்கும்!
அவள் பாவாடை உடுத்தி அழகாய் ரெட்டை ஜடைப் போட்டு
சைக்கிள் ஓட்ட கற்று கேட்ட போதும், மருதாணிய கையில்
வைத்து அது சிவக்கலையே என்று கவலைப் பட்டுக்
கொண்டிருந்தவளை, "அதுல கொஞ்சம் கோடாலி தைலத்த
மிக்ஸ் செய்து வை சிவக்கும்" என்று சொன்ன போது
'உய் உய்' என்று குதித்துக் கொண்டு ஓடிய...
மீனாவை எனக்கு ரொம்பப் பிடிக்கும்!
அவள் பத்தாம் வகுப்பு படிக்கும் போது ஸ்கூல் ஃபஸ்ட்டு
என்பதை யாரிடமும் முதலில் சொல்லாமல், என்னை தேடி
வந்து சொல்லி சந்தோஷப் பட்டு, சாக்லெட்டும் கொடுத்துட்டு
போனாலே அந்த..
மீனாவை எனக்கு ரொம்பப் பிடிக்கும்!
ஒவ்வொரு பிள்ளை பெற்ற போதும், மொத மொதல்ல தூக்கி
வந்து சந்தோஷமாய் என்னிடம் காட்டி, “சீரோடும் சிறப்போடும்
வாழட்டும்” என்று நான் சொன்ன பிறகே எடுத்துச் செல்வாளே..
மீனாவை எனக்கு ரொம்பப் பிடிக்கும்!
மற்றவர்களை பற்றி குறை சொல்லாமல், அதட்டிப் பேசாமல்,
பூமி அதிராமல் நடந்து போகும் அந்த பதவிசுக்காகவே..
மீனாவை எனக்கு ரொம்பப் பிடிக்கும்!
நகை வேணும் புடவை வேணும் என்று கேட்காம இப்படியே
இருக்கியேடி என்று கேட்டாலும், சிரிச்சிகிட்டே போவாளே..
மீனாவை எனக்கு ரொம்பப் பிடிக்கும்!
இதோ மலர்ந்த முகத்துடன் மௌனித்து மல்லாந்து கிடக்கிறாளே,
சொந்த பந்த மெல்லாம் சுமங்கலியாய் போய் சேர்ந்துட்டாலே
என்று மஞ்சளும் சந்தனமும் அவள் முகத்தில் தடவி, புதுப்
புடவை சாத்தி அழுகிறார்களே, அந்த...
மீனாவை எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிக்கும்! ஏன் அவள்
என் உயிரோடு ஒன்றிய மனைவி என்பதாலா??
இது எனது 50-வது பதிவு!!

