facebook

வியாழன், ஏப்ரல் 28, 2011

இருபத்தியோராம் நூற்றாண்டில் இன்னுமொரு பெண்!!!


உண்மையை உரக்க சொல்கிறது இக்கவிதை… பெண்ணுக்கு
எதிரான குற்றங்களில் இந்தியாவிற்கு முதல் இடமாம், புள்ளி
விவரம் சொல்கிறது.

இருபத்தியோராம் நூற்றாண்டில் இன்னுமொரு பெண்

(கவிதை- முடவன்குட்டி)

இருட்குவியலாய்
கக்கூசில்
விழுந்து கிடப்பான் புருஷன்-
இன்னும் தெளியாத குடிபோதையில்.
அவனை அள்ளி
குளியறை போகையில்
“குழம்பா இது..தூ..”
எங்கோ பார்த்து காறித் துப்புவான்
நாலாவது முறையாய்
எஸ் எஸ் எல் சி எழுதிய கொழுந்தன்.


“உடுத்தி…. மினுக்கி ..ஆபீஸ் போறாளோ..
வேற எங்காச்சும் போறாளோ..”-
வீட்டோடு இருக்கும் நாத்தனார்
வெறுப்பு உமிழ்வாள்.

சன்னல் கம்பிகளூடே -பூட்டிய அறைக்குள்
எட்டிப்பார்ப்பாள்-குழந்தையை:
“பளா”-ரென சன்னல் கதவை
அறைந்து மூடி
“ஐயாயிரம்-ஆபீஸ் லோன் போடு”-
மாமியார் குரலில்
இரை தேடியலையும் மிருகமொன்று உறுமும்:


ஆபீஸ் லோனுக்குப் “பிணை”யாக
பூட்டிய அறைக்குள்
கைதியாய்க் கிடக்கும்
தன் கதி அறியாப் பேதைமகள்
அன்னைமுகம் பாராமலே
அன்றும் உறங்கிப் போவாள்.


அழுதழுது ஓய்ந்த
பிஞ்சுமகள் துயர முகம்
மறுபடி- மறுபடி
உயிரில் இடற-
இரு பஸ் மாறி
அடிவயிறு கனக்க-
மூச்சுத் தெவங்க -
அலுவலகம் சேர்வாள்-
அன்றும் தாமதமாய்:


“இன்னைக்காவது குழந்தையைப்
பாத்தியாடி…….”
“மாமியாரா…..அவ…ராட்சசி….”
“டைவர்ஸ் வாங்கு….”
“பாவம் பெண் குழந்தை இருக்கே….”
- கண்முன் உருகும்
சக ஊழியர் நேயம்
மெல்ல ஒதுங்கி
வம்பு பேச வாய் திறக்கும்:


“லோன் பணம் எங்க ஒளிச்சு வச்சிருக்க”
சேலை உரித்து..ப்ளவுஸ் கிழித்து…..
தாண்டவம் ஆடும்-
மாமியார் ரௌத்ரம் :
அப்பன் பாட்டனின் ஆதார குணமாய்
ஆழ்மனதில் பதுங்கிய பயமோ
சட்டென விழித்து – உயிர் கவ்வும்:


பாலுடன் விஷமுண்ட குழந்தை
வாய்நுரை தள்ளி விரைத்துக்கிடக்க-
கூரை மின்விசிறியில் முடிந்த சேலை
கழுத்தில் இறுகி
வெறும் உடலாய்த்தொங்குவாள்-
இவள்!


மகளிர் இடஒதுக்கீடு….


நகம் பேணுவது எப்படி..?


கட்டழகி நயன்தாரா அழகுக்குறிப்புகள்…


என…….


அதுபோக்கில் இயங்கும்


அன்றும் உலகம்..!

++++++ …………+++++++………+++++++………+++++++

"முடவன் குட்டி"

நன்றி: கடையநல்லூர்.org
நன்றி : கூகிள்

புதன், ஏப்ரல் 27, 2011

"வைரஸ் போயிடுச்சா?"
"வைரஸ் போயிடுச்சா..??"

“SUN LIKES THE SUNDAY
MOON LIKES THE MONDAY
BUT I LIKE ONEDAY
THATS YOUR BIRTHDAY”

இதை காதலிகளுக்கு அனுப்பினாலாவது சந்தோஷப் பட்டிருப்-
பார்கள். என் நண்பரின் பர்த்டேக்கு வந்த மெயிலை என்னிடம்
காட்டி புளங்காகித மடைந்துக் கொண்டிருந்தார். இது ரொம்ப பழசு
என்று சொன்னால் எங்கே மனசொடிந்து விடுவாரோ என்றெண்ணி,

"இது உங்க கேர்ள் ஃபிரெண்ட் அனுப்பியதா?" என்றேன்.

"ஹி.. ஹி.."

"இல்ல குளோஸ் ஃபிரெண்ட் அனுப்பியதா?"

"இது என் வீட்டுக்காரங்க அனுப்பியது" என்று மரியாதையாக
சொன்னார். (மறுபடியும்) ஹி.. ஹி...!! அப்பாடா என்ன ஒரு
மரியாதை!! என்ன ஒரு மரியாதை!! அப்படி தான் இருக்கணும்.
அவ்வ்வ்வ்....!!

கஸ்டமர் கேர் கவுண்டரில் உட்கார்ந்திருந்த எனக்கு இந்த கொசுத் தொல்லையில் இருந்து தப்பிக்க, யாரும் கிடைத்தால் போட்டு
கும்மலாம் என்று தோன்றியது.

அப்போது வெளியில் நின்றிருந்த செக்யூரிட்டி(அரபி) பணம்
அனுப்ப வந்த ஒரு "சிரியா" கஸ்டமரை அழைத்து வந்து, அவர்
பணம் அனுப்ப வழிமுறைகளை சொல்லும்படி கேட்டுக் கொண்டார்.
அந்த நேரம் உண்மையிலேயே 'சர்வர் ப்ராப்ளம்'.  என்றாலும் அதை
எப்படி அவருக்கு சொல்லி விளங்க வைப்பது?? சும்மா "வைரஸ்
ப்ராப்ளம்" என்று சொல்லி வைத்தேன். "அப்படியா?" என்று கேட்டுக்
கொண்டு போய் விட்டார். பிறகு நான் அதை மறந்தும் விட்டேன்.

அரைமணி நேரம் சென்றிருக்கும். திரும்பி வந்த அவர்,
"முஹம்மது ஃபைரூஸ் போயிடுச்சா?" என்று கேட்டார். எனக்கு
சட்டென்று விளங்கவில்லை. நான் வைரஸ் என்று சொன்னதை
தான் அவர் 'ஃபைரூஸ்' என்று புரிந்துக் கொண்டார் என்று அறிந்த
நான்.. கிர்ர்ர்ர்ர்… ஆனேன்.

+++++++++++++++………………………+++++++++++++++++…………………….

தகவலோ தகவல்:

இச்செய்தியினை மற்றவர்களோடும் பகிர்ந்து கொண்டால் பயன் பெற ஏதுவாயிருக்குமென நம்புகின்றேன்.

1) தமிழகத்தில் எங்கேனும் குழந்தைகள் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்துகிறார்கள் என்ற அவல நிலையைக் கண்டால் உடனே "RED Society" யின் 9940217816 என்ற எண்ணில் அழையுங்கள். அவர்கள் அக்குழந்தைகளின் கல்விக்கு வழி வகுப்பார்கள்.

2) பொறியியல் கல்வி படித்த மாணவர்கள் தங்களின் கல்வி விபரம் குறித்து http://www.campuscouncil.com/ என்ற தளத்தில் பதிந்து வைப்போமானால் குறிப்பிட்ட நாற்பது நிறுவனங்கள் நடத்தும் நேர்முகத் தேர்வில் எளிதாக கலந்து கொள்ள முடியும்.

3) மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச கல்வி, இலவச விடுதி குறித்து தகவலைப் பெற‌ 9842062501 & 9894067506 என்ற எண்களில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

4) தீ விபத்துக்களினாலோ அல்லது பிறக்கும் போதே வாய், காது , மூக்கு போன்ற உறுப்புக்களின் வளர்ச்சி குறைந்த நிலையில் இருந்தாலோஇலவசமாக ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்ள முடியும். PASAM Hospital , Kodaikanal மேலும் தகவல்களைப் பெற PASAM மருத்துவமனைக்கு 045420 240668,245732 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

5) வாகனம் ஓட்டும் உரிமை அட்டை, குடும்ப அட்டை, பாஸ்போர்ட், வங்கிக் கணக்குப் புத்தகம்... போன்ற முக்கிய ஆவணங்கள் ஏதேனும் கீழே கண்டெடுத்தால் அருகில் உள்ள அஞ்சற்பெட்டியில் இட்டுவிடுங்கள். அது தானாக உரியவரிடம் சேர்ந்து விடும். அதற்குரிய அஞ்சற்செலவுத் தொகையை சம்பந்தப் பட்ட நபரிடமிருந்து அஞ்சலகங்கள் பெற்றுக் கொள்ளும்.

6) அடுத்த 10 மாதங்களில் நம் பூமியின் வெப்ப நிலை கூடுதலாக 10டிகிரி உயர்ந்து இப்போதிருக்கும் வெப்பத்தை விட அதிகமான வெப்பம் இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றார்கள். நமது இமயமலையில் உள்ள பனிப் பாளங்கள் கொஞ்சம் கொஞ்சமாக உருக ஆரம்பித்து விட்டனவாம். ஆகையினால் நாம் புவி வெப்ப மயமாதலை எதிர்த்துப் போராட வேண்டிய தருணத்திலிருக்கின்றோம் என்பது நாமறிந்த செய்தியே!

அதனால் நம்மால் முடிந்த வரை

*மரங்களை நட்டு அதனைப் பேணிக் காக்கலாம்.

**நீரினையும், இன்ன பிற சக்திகளையும் (மின்சாரம் உள்பட) தேவையில்லாமல் செலவழிப்பதை நிறுத்திக் கொள்ளலாம்

***ப்ளாஸ்டிகை பயன்படுத்தாமலும் அவற்றின் கழிவுகளை எரித்து நாசம் செய்யாமலும் இருக்க முயற்சிக்கலாம்.

7) இப்போதிருக்கும் மனித இனம் ஆறு மாத காலங்களுக்கு சுவாசிக்கத் தேவையான பிராண வாயு தயாரிக்க 38 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும் என்று ஒரு ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இத்தனை சிரமம் இல்லாமல் நமக்காக பிராணவாயு அளிக்கும் மரங்களை நட்டு அவற்றிற்கும் மரியாதை செய்வோமே!!

8) கண் வங்கி, கண் தானம் குறித்து தகவல்களை அறிந்து கொள்ள சங்கர நேந்த்ராலயா கண் வங்கியின் சிறப்புத் தொடர்பு எண்களையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். தேவைப் படும் சமயம் நிச்சயமாக உதவும். 044 28281919 மற்றும் 044 282271616
மேலதிக விபரங்களுக்கும் எப்படி கண் தானம் செய்வது குறித்த தகவல்களுக்கும். http://ruraleye.org/

9) பத்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இருதய அறுவைச் சிகிச்சை வேண்டின் அதனை இலவசமாகப் பெற ஸ்ரீ வள்ளி பாபா இன்ஸ்டியூட் பெங்களூர் நிறுவனம் உதவி செய்கின்றது. மேலும் விபரங்கள் பெற 9916737471

10) இரத்தப் புற்று நோய்:

"Imitinef Merciliet" என்ற மருந்தின் மூலமாக இரத்தப் புற்று நோயை குணப்படுத்தலாம். இது அடையார் புற்றுநோய் ஆராய்ச்சி மருத்துவமனையில் இலவசமாகக் கிடைக்கின்றது.

மேலும் விபரங்களுக்கு

East Canal Bank Road, Gandhi Nagar,
Adyar Chennai - 600020
Land mark: மிக்கேல் பள்ளிக்கு அருகில்
தொலைபேசி இலக்கம் : 044 - 24910754, 044-24911526, 044-22350241

*
நன்றி : பண்புடன் குழுமம் ஜீவா.K.S + ஷாஜஹான்


புதன், ஏப்ரல் 20, 2011

30 கிலோ எடையை 60 நாட்களில் குறைப்பது எப்படி?30 கிலோ எடையை 60 நாட்களில் குறைப்பது எப்படி?

இது எனது அனுபவத்தில் நான் கண்ட பலன். உடல் எடை அதிகமிருக்கிறது என்று மருத்துவர் சொன்னதும், அதன் தொடர்ச்சியாக கார்போஹைட்ரேட் அதிகம் எடுக்காமல் டயட் உணவினை எடுத்துக் கொள்ளும்படியும் அறிவுறுத்தினார். 86 கிலோ இருந்தேன். தற்போது 56 கிலோ இருக்கின்றேன். உடற்பயிற்சி செய்வது இல்லை. ஆனாலும் உடல் பருமனைக் குறைத்தேன். எப்படி?

நான் தவிர்த்த உணவுகள்
========================

1) பால், தயிர் முற்றிலுமாக தவிர்த்தேன்.

2) புளியைத் தவிர்த்தேன்.

3) உப்பைக் குறைத்தேன். ஒரு நாளைக்கு ஒரு டீஸ்பூனுக்கும்
குறைவான  உப்பை பயன்படுத்தினேன்.

4) எண்ணெய் முற்றிலுமாக இல்லாமல் சாப்பிட்டேன்.

5) தினம் ஒரு கொடம்புளி கீற்றினை குழம்பில் இட்டு அதைச்
சாப்பிட்டேன்

6) இரவில் நான்கு துண்டுகள் பப்பாளி சாப்பிட்டேன்.

7) காலையிலும், மாலையிலும் கிரீன் டீ மட்டுமே குடித்தேன்.

8) இனிப்பை தொடுவதே இல்லை (எனக்குப் பிடிக்கவே பிடிக்காத சுவை இது)

9) காய்கறிகள் இரண்டு கப் என்றால் அரிசி சாதம்  ஒரு கப் எடுத்தேன்.

10) தேங்காயைத் தவிர்த்தேன்.

11) கிழங்கு வகைகள், பூமியின் அடியில் விளையும் காய்கறிகள்  தவிர்த்தேன்.

12) மட்டன், சிக்கன் தவிர்த்தேன்.

சாப்பிட்ட பொருட்கள்
==================

காலை (7.30 மணிக்கு)
==================

* கிரீன் டீ ஒரு கப் தினம் தோறும்.

* தோசை என்றால் மூன்று தொட்டுக்கொள்ள கத்தரிக்காய் கொத்சு.

* இட்லி என்றால் மூன்று, தொட்டுக்கொள்ள தக்காளி சட்னி.

* சப்பாத்தி என்றால் இரண்டு அதனுடன் காய்கறிக் குருமா(தேங்காய்,  எண்ணெய் சேர்க்காமல் செய்தது)

* ஒரு கப் சாதம்(சுடுதண்ணீர் சேர்த்தது) அத்துடன் இரண்டு கப் காய்கறிகள்

>> மேற்கண்டவற்றில் ஏதாவதொரு உணவு காலையில் எடுத்துக் கொள்வேன்.

* காலை பத்து மணியளவில்  சில மேரி (அ) எதாவது பிஸ்கட்டுகளுடன் கொஞ்சம் தண்ணீர்.

மதியம் ( 12.45க்கு)
================
கீரை, ஒரு கப் சாதம், இரண்டு கப் வெந்த காய்கறிகள், பருப்பு, முட்டையின் வெள்ளைக்கரு (வாரம் ஒரு தடவை மட்டும்), சாம்பார், குழம்புகள் இவற்றில் காரம் அதிகமிருக்காது. புளிக்குப் பதில் கொடம்புளி பயன்படுத்துவேன். கிழங்கு வகை காய்கறிகளைத் தொடவே மாட்டேன். நாட்டுக் காய்கறிகளுடன் பருப்பு வகைகள் சேர்த்துக் கொண்டேன்.

மாலை (4.00க்கு)
================
* ஒரு கப் கிரீன் டீயுடன், சில மேரி (அ) எதாவது பிஸ்கட்டுகள்.

இரவு(7.30க்கு)
===========
* தோசை என்றால் மூன்று தொட்டுக்கொள்ள கத்தரிக்காய் கொத்சு

* சப்பாத்தி என்றால் இரண்டு அதனுடன் காய்கறிக் குருமா(தேங்காய்,  எண்ணெய் சேர்க்காமல் செய்தது)

* அத்துடன் மதியம் மீதமான காய்கறிகள் கொஞ்சம்

படுக்கும் முன்பு
==============
* ஐந்தோ அல்லது ஆறோ துண்டுகள் நன்கு பழுத்த பப்பாளி.

* இரண்டு லிட்டர் தண்ணீரை  இடையிடையே பருகுவேன்.

மேற்கண்ட உணவினைச் சாப்பிட்டு வந்தேன். உடல் எடை 56 கிலோ வந்து விட்டது. தற்போது ஒரு மாதம் எண்ணெய் சேர்க்காமல் சாப்பிடுவேன். அடுத்த மாதம் எண்ணெய் சேர்த்துச் சாப்பிடுவேன். மட்டன், மீன், சிக்கன் மாதமொரு முறைச் சேர்த்துக் கொள்வேன். அவ்வளவுதான் உடல் எடை குறைந்து, உடல் லேசானது போல ஆகி விட்டது.

*முக்கியமாக கவனிக்க வேண்டியது:
நேரம் தவறாமல் சாப்பிட வேண்டும். அதுமட்டுமின்றி இரவு
பத்து மணிக்கு உறங்க சென்று விட வேண்டும்.

டாக்டர் என்னை ஆச்சரியத்துடன் பார்த்தார். உடலுக்குத் தேவையான உணவினை மட்டுமே சாப்பிட்டால் நோய் எதற்கு வருகிறது?

நன்றி : தங்கவேல், தமிழ்மன்றம்.
நன்றி : ஷாஜஹான்
 குறிப்பு : மேலதிக தகவல்களுக்கு உங்களுடைய 'டயடீசியன்'-
களின் பரிந்துரைகளை  கேட்டுத் தொடருங்கள்.      


ஞாயிறு, ஏப்ரல் 17, 2011

கோபம்கோபம்

இது  எத்தனை பெரும் விளைவுகளை ஏற்படுத்தி விடுகிறது. கோபத்தினால் பல நன்மைகளை இழந்தவர்கள் உண்டு. பல குடும்பங்கள் பிரிந்ததும் உண்டு. கோபம் மூலம் பலர் நண்பர்களை இழந்ததும் உண்டு. பல நண்பர்கள் கடும் விரோதிகளாக மாறியதும் உண்டு.

தாய், தந்தையர் தங்கள் பிள்ளைகளின் நலனுக்காக கோபிக்கிறார்கள். அதை அக்குழந்தைகள் புரிந்துகொண்டால், அவர்களின் வாழ்க்கை சிறப்பாக அமைகிறது. அக்கோபத்தை பிள்ளைகள் தவறாக புரிந்துகொண்டால், அங்கு பெற்றோர் மற்றும் பிள்ளைகளுக்கு மத்தியில் பாசம் பறிபோய்விடுகிறது.

அதேபோல் மனைவி தன் கணவன் மீது கோபம் கொள்கிறாள் அல்லது கணவன் தன் மனைவி மீது கோபம் கொள்கிறான். அது பொய் கோபமாக, ஊடலாக இருந்தால், அது இன்பமாக மாறிவிடுகிறது. அதே கோபம் உண்மையான கோபமாக இருந்தால் இருவரின் வாழ்க்கையும் நிம்மதியற்று போய்விடுகிறது. சில சமயம் அக்கோபம் புயலாக மாறி இருவரும் பிரிந்து வாழுதல் அல்லது பெரும் விவாகரத்து வரை அழைத்துச் செல்கிறது.

சில உடன்பிறந்த சகோதர சகோதரிகள் உப்புச் சப்பு இல்லாத விஷயங்களுக்காக குடும்ப உறவைத் துண்டித்து வாழ்கிறார்கள். மேலும் கோபத்தால் பலர் தங்களுடைய உடல் நலத்தையும் கெடுத்துக் கொள்கிறார்கள். இப்படி பல விளைவுகளை ஏற்படுத்தும் இந்த கோபத்தைப் பற்றி இஸ்லாம் என்ன கூறுகிறது என்பதைக் காண்போம்.

அல்லாஹ் தன் திருமறையில் 3:134 வசனத்தில் கோபத்தைப் பற்றி குறிப்பிடும் போது, (பயபக்தியுடையவர்கள்) கோபத்தை அடக்கிக்கொள்வார்கள். மனிதர்கள் செய்யும் தவறுகளை மன்னிப்பார்கள் என்று கூறுகிறான்.

ஒரு முறை ஒரு மனிதர் வந்து நபி (ஸல்) அவர்களிடம், 'எனக்கு உபதேசியுங்கள் என்று கேட்டார். கோபம் கொள்ளாதே என்று நபியவர்கள் பதில் சொன்னார்கள். அவர் மீண்டும், மீண்டும் பல முறை உபதேசியுங்கள் என்று கேட்டபோது அப்போதும் நபியவர்கள் கோபம் கொள்ளாதே என்றே பதில் சொன்னார்கள்.

(அபூஹுரைரா (ரலி) - புகாரி, திர்மிதீ, அஹ்மத்).

கோபம் கொள்ளாதே என்று நபியவர்கள் திரும்ப திரும்ப கூறியதிலிருந்து நாம் கோபத்தின் விளைவு எவ்வளவு பெரியது என்பதை விளங்கிக்கொள்ளலாம். சமுதாயத்தினரிடையே குழப்பம், உறவுகள் பிரிவு, உடல் நலக் கேடு என எல்லா வகையிலும் இந்த கோபம் முக்கிய ஆணிவேராக அமைகிறது.

யூதர்களில் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, அபுல்காசிமே! அஸ்ஸாமு அலைக்க (உமக்கு மரணம் உண்டாகட்டும்!) என்று சற்றே மாற்றி ஸலாம் கூறினர். நபி (ஸல்) அவர்கள், வ அலைக்கும் (நீங்கள் சொன்னது உங்களுக்கும் உண்டாகட்டும்!) என்று (பதில்) சொன்னார்கள். அப்போது அருகில் இருந்த ஆயிஷா (ரலி) அவர்கள், அவர்களை கோபப்பட்டு சபிக்கும் விதமாக, அலைக்குமுஸ்ஸாமு வத்தாமு (உங்களுக்கு மரணமும், இழியும் உண்டாகட்டும்!) என்று (பதில்) சொன்னார்கள்.

இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், ஆயிஷாவே! அருவருப்பாகப் பேசுபவளாக இருக்காதே! என்று கண்டித்தார்கள். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், அவர்கள் சொன்னதை நீங்கள் செவியுறவில்லையா? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், நான்தான் அவர்கள் சொன்னதற்கு, வ அலைக்கும் (நீங்கள் சொன்னது உங்களுக்கும் உண்டாகட்டும்!) என்று பதில் சொல்லிவிட்டேனே! (அதை நீ கவனிக்கவில்லையா?) என்று திருப்பிக் கேட்டார்கள்.

(ஆயிஷா (ரலி) - புகாரி, முஸ்லிம்).

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அந்த யூதர்கள் கூறியதற்கு, இப்படி கோபமாக பதில் சொன்னதற்கு நபி (ஸல்) அவர்கள் கண்டித்தார்கள். எதிரிகளிடமும் மென்மையான போக்கை கடைப்பிடித்து அவர்களை திருத்துவதே நபியவர்களின் அழகிய வழிமுறை. ஏன் நபி (ஸல்) அவர்கள் மென்மையான போக்கைக் கையாண்டார்கள்? காரணம், நிச்சயமாக அல்லாஹ் மென்மையானவன். அனைத்து விஷயங்களிலும் மென்மையை விரும்புகிறான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(ஆயிஷா (ரலி) - புகாரி, முஸ்லிம்).

அதேப் போல் ஒரு முறை பள்ளியில் சிறுநீர் கழித்த கிராமவாசி ஒருவரை நபித்தோழர்கள் கோபம் கொண்டு தாக்க முயன்ற போது, அவர்களைத் தடுத்து நிறுத்தி, சிறுநீர்பட்ட அந்த இடத்தை தம் கைகளால் தண்ணீர் ஊற்றி தூய்மை செய்தது நபியவர்களின் மென்மையின் உச்சக்கட்டம். இதேப் போல் ஹுதைபிய்யா உடன்படிக்கையின் போது இறைமறுப்பாளர்கள் கடுமையாக நடந்து கொண்டார்கள். அவர்களிடமும் கோபம் கொள்ளாமல் மென்மையான போக்கைக் கையாண்டு அந்த உடன்படிக்கையில் வெற்றிப் பெற்றது மென்மைக்குக் கிடைத்த வெற்றியேத்தவிர கோபத்தால் கிடைத்த வெற்றியல்ல. மென்மையை இழப்பவன் நன்மையை இழப்பான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

(ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி) - முஸ்லிம், அபூதாவூத், இப்னுமாஜா, அஹ்மத்).

பொதுவாக கோபம் கொள்பவர் தன் நிலையை இழந்துவிடுவார். அதனால்தான் அரபியில் ஒரு பழமொழி சொல்வார்கள்: கோபத்தின் ஆரம்பம் பைத்தியம், முடிவு வருத்தம் என்று சொல்வார்கள். இதேப் போல் ஆங்கிலத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள்: Anger is a short madness (கோபம் என்பது ஒரு அரைப்பைத்தியம்). உண்மையில் பைத்தியக்காரன் தான் என்ன செய்கிறோம், என்ன பேசுகிறோம் என்பதை அறியமாட்டான். கோபம் கொண்டவரும் அதேபோல் தான் என்ன செய்கிறோம், என்ன பேசுகிறோம் என்பதை அறியாமல் இருப்பார்கள். கோபத்தில் இருப்பவர்கள் கூறுவார்கள், “கோபம் வந்தா நான் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது என்று சொல்வார்கள்.

தமிழில் கூட கோபதைப் பற்றி ஒரு பழமொழி சொல்வார்கள்: கோபத்தோடு எழுந்தவன் நஷ்டத்தோடு உட்காருவான் என்று சொல்வார்கள். உண்மையில் கோபம் கொண்டு எழுந்து அதற்கான செயலில் ஈடுபடும் போது அநீதீ, அட்டூழியம், உறவுகள் பிரிவு சில சமயம் கொலைக் கூட செய்வார்கள்.

சிலருக்கு கோபம் வந்தால் அந்த கோபத்திற்கு காரணமான நபரைப் பார்த்து, அசிங்கமான கெட்ட வார்த்தைகளால் திட்டுவார்கள். அதுவும் தாயையும், அக்காவையும் விபச்சாரம் செய் என்று கருத்துப்பட உள்ள வார்த்தைகளை கூறுவார்கள். இது எல்லா சமுதாயத்தினரிடமும் சர்வசாதாரணமாக இருக்கிறது. திட்டுவதுதான் சண்டைக்கும், கொலைக்கும் முக்கிய காரணமாக அமைகிறது. கெட்டவார்த்தைகள் பேசுபவன் மீது அல்லாஹ் கோபம் கொள்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) - அஹ்மத், இப்னுஹிப்பான்)

மற்றொரு ஹதீஸில்: தன் நாவால் வெட்கம் கெட்ட விஷயங்களைப் பேசுபவனையும், கெட்டவார்த்தைகள் கூறுபவனையும் அல்லாஹ் மிகவும் வெறுக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபுதர்தா (ரலி) - திர்மிதீ).

திட்டக்கூடியவனாகவோ, சாபமிடுபவனாகவோ, கெட்ட செயல்கள் செய்யகூடியவனாகவோ, கெட்டவார்த்தை பேசுபவனாகவோ ஒரு மூமின் இருக்கமாட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(இப்னு மஸ்வூத் (ரலி) திர்மிதீ, அஹ்மத், இப்னுஹிப்பான்).

கெட்டவார்த்தைகளை சொல்பவர்கள் மீது அல்லாஹ் கோபம் கொள்கிறான், கெட்டவார்த்தைகளை சொல்பவர்கள் மூமின்களாக இருக்கமுடியாது என்றால் எந்த அளவுக்கு இந்த அசிங்கமான கெட்டவார்த்தைகளின் பாதிப்புக்கள் இருக்கும் என்பதை உணரவேண்டும்.

சிலர் கோபத்தினால் அதற்கு காரணமானவரை சபிப்பார்கள். சபிக்கும் போது என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல் சில நேரங்களில் சபித்துவிடுவார்கள். ஆனால் அது எவ்வளவு பயங்கரமானது, அதன் பின் விளைவு என்ன என்பதை பற்றிச் சிறிது கூட கவலைப்படுவதில்லை. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மற்றவரை ஒருவர் சபிக்கும் போது அந்து சாபம் வானத்திற்கு செல்கிறது. அங்கே வானத்தின் கதவுகள் மூடியிருக்கின்றன. பின்பு அது உலகத்திற்கே திரும்புகிறது. உலகத்திலும் கதவுகள் மூடியிருக்கின்றன. பின்பு அது வலது புறமும், இடது புறமும் அலைந்து திரிகின்றது. அங்கும் வழி கிடைக்காததால், அது சொன்னவரிடமே வந்து சேருகிறது.

(அபுதர்தா (ரலி) - அபூதாவூத்).

மற்றொரு ஹதீஸில், ஒருவர் மற்றவரை பாவி என்றோ, காபிர் என்றோ அழைத்தால், அவர் (உண்மையில்) அவ்வாறு (பாவியாக, காபிராக) இல்லையாயின், அது சொன்னவரிடமே வந்து சேருகிறது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(அபுதர் (ரலி) - புகாரி).

பொதுவாக கோபமும், பொறாமையும் உடன் பிறந்தவர்கள் என்று சொல்லலாம். காரணம் பொறாமையின் உச்சக்கட்டம்தான் கோபம். நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்:

உங்களுக்கு முன் வாழ்ந்த சமுதாயத்தினரைப் பிடித்த பொறாமை மற்றும் கோபம் ஆகிய வியாதிகள் உங்களையும் பீடித்துள்ளன. அவை (இரண்டும்) மழித்துவிடக்கூடியவை. முடியை மழிக்கும் என்று கூறமாட்டேன் எனினும் அவை மார்க்கத்தையே மழித்துவிடும் என்று கூறினார்கள்.

(ஸுபைர் பின் அவ்வாம் (ரலி) - திர்மிதீ, அஹ்மத்)

இந்த இரண்டு குணங்களான பொறாமை மற்றும் கோபம் ஆகியவற்றை கொண்ட சமுதாயத்தினர் சிறப்பாக வாழ்ந்ததாக வரலாறே கிடையாது. இருக்குமிடம் தெரியாமல் அழிந்தார்கள் என்பதே உண்மை. நபி யூஸுப் (அலை) அவர்கள் மீது பொறாமையும், கோபமும் கொண்டு, தன்னுடைய தம்பி என்றும் பார்க்காமல் பாழும் கிணற்றில் தள்ளினார்கள். இறுதியில் அவர்கள் தன் தம்பியிடம்தான் தஞ்சம் புகுந்தார்கள். இது பொறாமை மற்றும் கோபத்தால் விளையும் தீமையைப் பற்றி திருக்குஆன் கூறும் உண்மைச் சம்பவம்.

கோபம் வந்தால் நாம் என்ன பேசுகிறோம் என்று சிந்திப்பதில்லை. இப்படி கோபம் வந்து சிந்திக்காமல் பேசுவதால் எவ்வளவு பெரிய பாதிப்பு நமக்கு மறுமையில் ஏற்படும் என்பதை சற்று சிந்திக்க வேண்டும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

முன்னொரு காலத்தில் இரண்டு நண்பர்கள் இருந்தனர். ஒருவர் வணக்கசாலி, மற்றவர் அலட்சியவாதி. இந்த வணக்கசாலி எப்பொழுதும் மற்றவருக்கு உபதேசம் செய்து வந்தார். ஒரு நாள் அந்த அலட்சியவாதி இவரைப் பார்த்து என்னை கண்காணிப்பவனாக அல்லாஹ் உன்னை அனுப்பவில்லை. நீ உன் வேலையைப்பார் என்றார். இதைக் கேட்ட அந்த வணக்கசாலி, நிச்சயமாக அல்லாஹ் உன்னை மன்னிக்கமாட்டான் என்று கூறிவிட்டார். நாளை மறுமையில் அந்த இரண்டு பேரும் நிறுத்தப்படும் போது அல்லாஹ் அந்த அலட்சியவாதியை மன்னித்து, வனக்கசாலியைப் பார்த்து, நான் மன்னிக்கமாட்டேன் என்று கூற உனக்கு என்ன உரிமை இருக்கிறது? உன் அமல்களை நான் அழித்துவிட்டேன் என்று கூறி நரகுக்கு அனுப்பினான்

(ஜுன்துப் (ரலி) - முஸ்லிம்).

கோபத்தால் சிந்தனையில்லாமல் பேசப்படும் சிறு வார்த்தைக் கூட நம் மறுமை வாழ்வை சீரழித்துவிடும். கோபத்தால் சிந்திக்காமல் பேசப்படும் ஒரு வார்த்தையாக இருந்தாலும் அது நரகத்தின் எல்லைக்கே கொண்டுசெல்கிறது என்பதை உணரவேண்டும்.

சரி கோபப்படாமல் அந்தக் கோபத்தை அடக்கினால் என்ன நன்மை? நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தனது கோபத்தை செயல்படுத்த சக்தியிருந்தும் யார் அதை மென்று விழுங்குகிறாரோ அவரை மறுமை நாளில் மக்கள் முன்னிலையில் அல்லாஹ் அழைத்து, அவர் விரும்புகின்ற ஹுருல் ஈன் என்னும் கன்னியரைத் தேர்வு செய்ய அவருக்கு உரிமை வழங்குவான் என்று கூறினார்கள்.

(முஅத் இப்னு அனஸ் அல்ஜுஹ்னீ (ரலி) - திர்மிதீ, இப்னுமாஜா, அபூதாவூத்).

வீரன் என்று சொன்னால் பலத்தால் மற்றவர்களை அடக்குபவன் என்று நாம் அறிந்து வைத்திருக்கிறோம். ஆனால் நபி (ஸல்) அவர்கள் வீரனுக்கு இலக்கணம் கூறினார்கள்:

பலத்தால் வீழ்த்துபவன் வீரன் அல்ல. கோபத்தின் போது கட்டுப்படுத்திக் கொள்பவனே வீரன் என்று கூறினார்கள்.

(அபூஹுரைரா (ரலி) - புகாரி, முஸ்லிம்).

கோபத்தை எப்படி அடக்கமுடியும்? என்று தோன்றலாம். நபி (ஸல்) அவர்கள் கோபம் தணிவதற்கான வழிமுறைகளை சொல்லியிருக்கிறார்கள். ஒருவர் நின்று கொண்டிருக்கும் போது கோபம் வந்தால் உட்கார்ந்து விடவும், கோபம் போய்விட்டால் சரி, இல்லையென்றால் படுத்துவிடவும் என்று கூறியிருக்கிறார்கள்.

(அபூதர் (ரலி) - திர்மிதீ, அஹம்த்).

மற்றொறு ஹதீஸில்: கோபம் ஷைத்தானால் ஏற்படுகிறது. ஷைத்தான் நெருப்பினால் படைக்கப்பட்டவன். நெருப்பு தண்ணீரால் அணைக்கப்படுகிறது. எனவே கோபம் கொள்பவர் உளூச் செய்து கொள்ளட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(அத்தியா அஸ் ஸஅதீ (ரலி) - அபூதாவூத்).

மேலும் கோபம் வரும் போது அவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜிம் என்று கூறினால் கோபம் போயிவிடும் என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அப்படியானால், கோபம் கொள்ளவே கூடாதா? கோபமில்லாமல் மனிதனால் வாழ முடியுமா? என்று பல கேள்விகள் நமக்கும் எழும். கோபம் என்பது மனிதனின் பண்புகளில் ஒன்று. கோபம் வரவில்லையென்றால் அவன் மனிதன் கிடையாது. ஐந்து அறிவு உள்ள மிருகங்களுக்கே கோபம் வருகிறது என்றால், ஆறு அறிவுள்ள மனிதனுக்கு கோபம் வராமல் இருக்குமா? அத்தியாவசிய, அவசியத் தேவைகளுக்காக கோபம் ஏற்படுவது இயல்பு. அது அவ்வபோது ஏற்படுகிற ஒன்றுதான். அதை அடக்கிக் கொள்வதுதான் சரியான செயல்.

அதே வேளையில் கோபப்படவேண்டிய சந்தர்ப்பத்தில் கோபம் கொள்ளத்தான் வேண்டும். ஆனால் அந்தக் கோபம் நியாயமானதாக இருக்கவேண்டும். நம்முடைய கோபத்தில் நியாயம் உண்டு என்பதை யார் மீது கோபம் கொள்கின்றோமோ அவருக்குப் புரிய செய்ய வேண்டும். இதில்தான் நாம் தவறிவிடுகிறோம். அதனால் பல விளைவுகளைச் நாம் சந்திக்கின்றோம். நம்முடைய கோபத்தின் நியாயத்தை புரியவைத்துவிட்டால், அக்கோபம் நமக்கு நன்மையில் முடியும். இல்லையென்றால், பெரும் இழப்புக்கள் ஏற்படும்.

அல்லாஹ் தன் திருமறையில் தீமையைக் கண்டால் கோபம் கொள்ளுமாறு கட்டளையிடுகிறான். (20:85,86) வசனங்களில் அல்லாஹ் குறிப்பிடுகிறான்: உமக்குப் பின் உமது சமுதாயத்தை நாம் சோதித்தோம். அவர்களை ஸாமிரி வழி கெடுத்துவிட்டான் என்று (இறைவன்) கூறினான். உடனே மூஸா தமது சமுதாயத்திடம் கோபமாகவும், கவலைப்பட்டவராகவும் திரும்பினார் - என்று குறிப்பிடுகிறான். தன் சமுதாயத்தை வழிகெடுத்தவன் மீது மூஸா (அலை) அவர்கள் கோபம் கொள்கிறார்கள். இது நன்மைக்காக!!

கோபம் கொள்ளாதே என்று ஒரு நபித்தோழருக்கு உபதேசம் சொன்ன நபி (ஸல்) அவர்களே, சில சந்தர்ப்பங்களில் நன்மையான செயலுக்காக கடுமையாக கோபம் கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் ஹதீஸில் காணமுடிகிறது.

ஒரு தடவை குர்ஆனில் ஒரு வசனம் தொடர்பாக சண்டையிட்டுக் கொண்ட இருவரின் சப்தத்தைக் கேட்டு தமது முகத்தில் கோபம் தென்பட நபி (ஸல்) அவர்கள் வெளியே வந்து, உங்களுக்கு முன்னிருந்தோர் வேதத்தில் கருத்து முரண்பாடு கொண்டதால்தான் அழிந்துபோயினர் என்று கோபப்பட்டுக் கூறினார்கள்.

(அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) முஸ்லிம்.

உக்பா இப்னு ஆமிர் (ரலி) அவர்கள் அறிவிக்கும் புகாரியில் இடம்பெறும் மற்றொரு ஹதீஸில், நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, “இன்ன மனிதர் எங்களுக்கு தொழுகையை நீட்டி (நீண்ட நேரம் ஆக்குகிறார்). இதனால் நான் சுப்ஹுத் தொழுகையில் கலந்து கொள்ள பின் தங்கி விடுகிறேன் என்று கூறினார். (உடனே நபி (ஸல்) அவர்கள் கடும் கோபம் அடைந்தார்கள்). அவர்கள் அன்று கோபம் கொண்டதைவிட வேறோரு நாளில் அதுபோல் பார்த்ததில்லை. நபியவர்கள் கூறினார்கள்:

மக்களே! உங்களில் சிலர் வெறுக்க வைக்கக் கூடியவர்களாக உள்ளனர். மக்களுக்காக உங்களில் எவர் இமாமத் செய்தாலும் அவர் அதை சுருக்கமாக செய்யட்டும். அவரின் பின்னே (தொழும் மக்களில்) முதியவர், சிறியவர், தேவை யுடையவர் என உள்ளனர் என்று கூறினார்கள். மார்க்க  விஷயங்களிலும், அநீதிக்கு எதிராகவும் கோபம் கொள்வதில் இஸ்லாம் எப்பொழுதும் தடை விதிப்பதில்லை. ஆனால் நியாயமற்ற கோபம் எந்த இடத்திலும் ஏற்பட்டுவிடக் கூடாது என்றுதான் கட்டளையிடுகிறது.

ஆக்கம் : அபூவஸ்மீ (T.நெய்னா முஹம்மது, B.Sc., H.D.C.A.,)