facebook

புதன், செப்டம்பர் 29, 2010

கூந்தலிலே நெய் தடவி...


                                                                                 


கூந்தலிலே நெய் தடவி...

நாலு தெருவை அடைத்த மாதிரி இருந்த, ஆடம்பர மனிதர்கள் வந்து 'ஷாப்பி' செல்லும் அந்த மிகப் பெரிய  ‘ஹைபர் மாலில்’ 'ஏசி' யின் உச்ச குளிரை அனுபவிப்பதற்க்கென்றே சிலரும், வாயில் நுழையாத 'கப்புச்சினோ'வை (வாயில் வைத்தாலும் அப்படிதான்) 'ஷீப்பி' குடித்து பெருமை அடிக்கவென்றே சிலரும், சுற்றிலும் உள்ள DVD கடைகளில் ‘கும்’மும் இசையருவியை ரசிக்கவென்றே  இளைஞர்களின் ஆர்ப்பரிக்கின்ற கூட்டமும் உலவி வந்த அந்த வேளையில்..

அங்குள்ள ஒரு கடையில் மட்டும் "கூந்தலிலே நெய் தடவி குளிர் விழியில் மை தடவி.." என்று ஒரு பாட்டு, ஒலித்துக் கொண்டிருந்தது. இந்த "மாலில்" இப்படி ஒரு பாட்டா, வழிந்தோடிய வழியே விழி தூக்கி பார்த்தால் அட அது நம்ம நண்பன் கடை.

என்னங்கடாது அவ்வளவு காஸ்ட்லியான பொருளை தலையிலா தடவிக்குவாங்க ('நெய்யை சொன்னேங்க') என்று மனம் போன போக்கில்  நினைத்துக் கொண்டே கடையின் உள்ளே நுழைந்தேன்.

என்னைக் கண்டவுடன் பயபுள்ள டபக்குன்னு ஸ்பீக்கரை ஆஃப்
பண்ணிட்டு (நாம கிண்டலடிப்போமாம்..!)  ஹெட் போனை எடுத்து மாட்டிக்கிச்சு, நாமெல்லாம் ஆபீஸ்ல தீவிரமா ஆணி புடுங்குற மாதிரி முகத்தை வச்சுக்கிட்டு ஆனா புடுங்க மாட்டோமே, அது மாதிரி உட்காந்திருக்கான். ங்கொய்யாலே நம்ம கிட்டயேவா !!...

இந்த பய இருக்கானே மஹா கில்லாடிங்க. ஊரில் இருக்கும் போதும் ஆடியோ கட வச்சு 'செலக்டட் சாங்ஸா' எடுத்துக் கொடுத்து கல்லா கட்டிகிட்டிருந்தது. இங்க வந்தும் DVD படங்கள் ரிக்கார்டிங் என்று பொளப்பு நடத்திக்கிட்டிருக்கு. சரி உடுங்க பொளச்சு போகட்டும். விட்டுடுவோம். நாம வந்த வேலைய கவனிப்போம்!!

"எப்படி இருக்கே நண்பா" என்றேன் கேஷுவலாக..”

"டேய் நீ என்னையவா பார்க்க வந்தே" என்றான் புரிந்துக் கொண்டு..(கெட்டிக் காரான் நம்ம ஃபிரெண்டாச்சே ஹி..ஹி..)

"பின்ன எதுக்கு இம்புட்டு தூரம் வந்திருக்கம்" கேப்போம்ல..

"டேய் நீ என்னை பார்க்கவும் வரல விசாரிக்கவும் வரல"

"சரி கேட்க வந்தேன்னு வச்சுக்கயேன்...!! "

'என்ன' என்பது போல் பார்த்தான்.

"ஒன்னுமில்லடா நண்பா ‘எந்திரன்’ DVD எப்ப வரும்??"

“ஏண்டா படமே இன்னும் ரிலீசாகல, அதுக்குள்ளே உனக்கென்னடா அவசரம்...?”

(நாங்கள்லாம் ரிலீசே ஆகாத பல படங்கள பார்த்தவங்களாச்சே !!...
ச்சே... இவன நம்ம ஃபிரெண்டுன்னு சொல்லிக்கவே லாயக்கில்ல!! இத போயி இவங் கிட்ட சொல்லிக்கிட்டா இருக்க முடியும். விடுங்க!!)

என்னை ஏற்ற இரக்கமாய் பார்த்தான்.

ஒருவேளை நாம மனசில  நெனச்சிக்கிட்டிருந்ததை  இவன் வாசனை பிடிச்சிருப்பானோ?? ஹி..ஹி..  அப்படிப் பட்டவன் இல்லையே நம்ம நண்பன்!!  இல்ல அவன் கேட்டுக் கிட்டிருந்த 'பாட்டை' டிஸ்டர்ப் பண்ணிட்டோமோ ?? இருக்காது நாம எவ்வளவு டீசண்டு ஹி..ஹி..அது நமக்கே தெரியும்!!

திடீரென்று ஞாபாகம் வந்தவனாய்,,,

"ஆமா ஏம்பா நீ காசு கொடுத்தெல்லாம் DVD வாங்குவியா" என்றான்.

நக்கலு..!!

ச்சே... இந்த ஒலகம் என்னை இன்னும் மதிக்கவே மாட்டேங்குதே, இதுக்காவது இந்த DVD யை காசு கொடுத்து வாங்கனும்னு நெனச்சுக்கிட்டு..பேச்சை மாற்ற..

"சரி நண்பா நா உள்ள வரும்போது ஒரு பாட்டு ஓடிக்கிட்டிருந்ததே அது என்ன படம்" என்றேன்.

"இப்பவும் அந்த பாட்டு தான் ஓடிக்கிட்டிருக்கு கேளு" என்று ஸ்பீக்கரை 'ஆன்' பண்ணினான். பாட்டு பாதிக்கு மேல் ஓடி பெண் குரல் “சித்தப்பாஆஆ...” என்று வழிந்துக் கொண்டிருந்தது..!

"ஏன் நண்பா இந்த மாதிரி பழைய பாட்டெல்லாம் கேட்பியா?"
(நாம தான் சகஜமா இப்படியெல்லாம்  கேட்போமே..!)

" பின்னே, இது எங்க பாட்டிக்கி ரொம்ப பிடிக்கும் "

(நான் சற்று திரும்பி பார்த்துக் கொண்டேன்)

"அவங்க தான் செத்துட்டாங்களே"

"இல்ல அவங்க உயிரோட இருக்கச்சே இந்த பாட்ட தான் விரும்பி கேட்பாங்க. ஒரு நா எங்கிட்ட சொன்னாங்க. நான் செத்துட்டாலும் நீ இந்த பாட்டை தான் நிறைய தடவை கேட்கணும் அப்ப தான் என் 'ஆத்மா' சாந்தியடையும் ன்னாங்க. பாட்டின்னா தான் எனக்கு உஷுராச்சே" என்று செத்த பாட்டியை உயிர்பித்துக் கொண்டிருந்தான்.

அடப்பாவி...!!

"என்னங்க இவன் எந்த ஜெனரேசனில் இருக்கான்??"

(ஒரு குறுப்பு சொன்னா உங்களுக்கு பிடிபடும். இதற்கு முந்திய பதிவில்,  புள்ளைய அடிக்கிறதுக்கு பதிலா பொண்டாட்டி "என்னைய" அடிக்கிறான்னு வந்து புலம்பிக்கிட்டிருந்தானே அந்த பயபுள்ளதாங்க இவன்!! 'பாய்ண்டை' புடிச்சீங்களா!!)

சரி விடுங்க..!!

அவன்கிட்ட பேசிக்கிட்டிருந்த பேச்சு சுவாரஸ்யத்தில் மேற்படி பாட்டு எந்த படத்தில் வருதுன்னு கேட்க மறந்து போனேன்.
(யார்ட்ட  கேட்கிறது..!!)  

திங்கள், செப்டம்பர் 27, 2010

கண்களினால் காண்பதெல்லாம்...!!!

                                                                               

கண்களினால் காண்பதெல்லாம்...!!!


இன்னமும் மழை விட்டாலும் தூவானம் விடலை என்று சொல்வார்களே அதுமாதிரி வெயில் இந்த வருஷம் போட்டு தாக்கிக் கொண்டு தானிருக்கிறது. ஆனாலும் கன்ஸ்ட்ரக்ஷனில் வேலை பார்க்கும் நம் மக்கள் படும் அவதி சொல்லி மாளாது.

எங்கள் ஆபீசுக்கு எதிரே சுத்தமாய் ஒரு பில்டிங்கை இடித்து தரை மட்டமாக்கி விட்டு, புது கட்டிடம் கட்டும் வேலை நடந்து கொண்டிருக்கிறது.

அதில் எல்லோருமே நம் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்களும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் மட்டுமே வேலைப் பார்க்கிறார்கள். மேஸ்திரி மட்டும் எகிப்தை சேர்ந்தவர்கள். பில்டிங் ஓரளவு எழுந்து மேற்தளம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு தேவையான கான்க்ரீட் சிமெண்ட் ஜல்லி கலவைகள் கலந்த டிரக், பின் பக்கம் யானைப் போல் ஒன்று வருமே, அது வந்து நின்றால் போடும் சப்தம் டுர்ர்ர்ர் தான்.

அன்றைக்கு அப்படி தான் அந்த டிரக் வந்து நின்றது. அந்த டிரக்கை சரியாக பார்க் செய்து நிறுத்தி விட்டு, பசி போலும் அதன் டிரைவர் பக்கத்தில் இருந்த ஹோட்டலுக்கு சாப்பிட போய் விட்டார். அதனோடு வந்த உதவியாளரோ 'கிளி'யோ அங்கே நின்றுக் கொண்டிருந்தார். கட்டிடப் பணிக்கு அந்த கான்க்ரீட் கலவை என்ன அவசர தேவையோ தெரியலை. அங்கே இங்கே டிரைவரை தேடிவிட்டு அவர் வரலை என்றவுடன் கூட வந்தவரிடம் சொல்ல அவரும் ஏதோ விவரம் தெரிந்தவர் போல்,

கலவையை கொட்ட வேண்டிய பைப்பை கொண்டு போய் பில்டிங் மேற்க் கூரைப் பக்கம் நிலை நிறுத்தி பிடிக்கு முன்னே சுவிட்சை ஆன் செய்ய, கண் சிமிட்டும் நேரம் தான்..அதன் ஃபோர்ஸ் திறனில் அந்த பைப் ஒரு ட்விஸ்ட் அடித்து திரும்பி..

கலவை பீரிட்டு எங்கள் ஆபீஸ் கண்ணாடி விளம்பர லோகோ
வாசலில் நின்றிருந்த கார் மற்றும் நடந்து கொண்டிருந்த
மனிதர்கள் ஒரு சேர அடிக்க, கருங்கல் ஜல்லி கண்ணாடியில் பட்டு அடித்த சப்தம் எந்த ‘டெசிபலில்’ சொல்வதென்று எனக்கு தெரியலை.

நாம் படங்களிலெல்லாம் பார்த்திருக்கிறோமே போர் நடக்கு
மிடங்களில் துப்பாக்கியால்  சரமாரியாய் டுட்டுட்டுட்டுட்டுட்...
சடசடசடசட என்று சுடுவார்களே அது மாதிரியான டிஜிட்டல்
சர்ர்ரவுண்டு சவுண்டில்,, அம்மாடியோவ்வ்வ்வ் ஒரு கணம்
அந்த சப்தத்தை கொஞ்சம்  நினைத்துப் பாருங்கள். எல்லாப்
பக்கமும் திடீரென்று அதிர எல்லோருக்கும்  குலை நடுங்கிப்
போனது. அந்த இடமே கொஞ்ச நேரம் அமளி துமளிப் பட்டுப் போனது.

எல்லாமே இவர்களுக்கு அவசரம் தான். இப்ப நினைப்பதை இப்பவே முடிக்கணும். நல்லவேளை யாருக்கும் எந்த பாதிப்பு மில்லை. நிதானம் என்பது பில்டிங் வேலைப் பார்ப்பவர்களுக்கு அதிகமாய் வேண்டும் சொல்வார்கள்.

அங்கங்கே நின்றிருந்த காரில் பீறிட்டு அடித்த கலவையையும், எங்க ஆபீஸ் கண்ணாடிகளில் பட்ட சிமெண்ட் கறைகளையும் உடனே அவர்களே ஆட்களை அனுப்பி கிளீன் செய்து தந்தார்கள். ஆனால் மேலே இருக்கும் விளம்பர லோகோ மட்டும் அந்த சம்பவம் நடந்ததற்கு சாட்சியாய் கரைகள் படிந்ததாய் இன்னும் அப்படியே....!!!


 
                                          

வெள்ளி, செப்டம்பர் 24, 2010

"ரங்ஸ்"களின் ஆ‘தங்ஸ்’!!!

                                                                  
"ரங்ஸ்"களின் ஆ‘தங்ஸ்’!!!


என் நண்பர் ஒருவர் தன் மனசில் உள்ள ஆ'தங்ஸ' ...ச்சே.. ஆ'ரங்கஸ' சொல்லிக் காட்டிக் கொண்டிருந்தார்.

..........என்னன்னு

“எம் பொண்டாட்டி என்ன ஒரு பைசாவுக்கு மதிக்க மாட்டேங்குறா?

"நீதான் சொல்லுவியே அவங்க உன்ன ஆஹா ஓஹோ ன்னு வச்சுக்குராங்கன்னு"

"அதெல்லாம் அப்ப"

" இப்ப என்னா"

"பையன் கால் மேல கால் போட்டுக்கிட்டு படிச்சிக்கிட்டிருந்தாம்பா
அதுக்கு அடிக்கிறாப்பா"

"பையனைத் தானே"

"என்னை"

"என்னது..தூ..தூ?"

"ஆமாப்பா ஆமா"

"விளக்கமாச் சொல்லு?"

""முன்பெல்லாம் பையன் அது மாதிரி செஞ்சா, "அப்பா மாதிரியே புள்ள கால் மேல கால் போட்டுக்கிட்டு படிக்கிறான்னு" பெருமையா சொல்லுவா."

"சரி இப்ப?"

"பயபுள்ள கால் மேல கால் போட்டுக் கிட்டு படிக்கிது
வெளங்குமான்னு,, கால்லேயே அடிக்கிறாப்பா"

"சரி விடுப்பா குழந்தைகள கொஞ்சம் அடிச்சு வளத்தா தப்பில்ல"

"அட நீ வேற,, அவன் எந்த கால மேல தூக்கிப் போட்டு படிச்சானோ, அதே மாதிரி எனது வலது கால்லேயே அடிக்கிறாப்பா....!! அப்ப தான் அவன் திருந்துவானாம்"

ஙே..?

சரி அதெல்லாம் விடு...

"பொம்புள புள்ளப்பா தூங்கிக்கிட்டிருந்தா அதுக்கு அடிக்கிறாப்பா"

"என்னா...தூ தூங்குற புள்ளைய அடிக்கிறாங்களா??

"இல்ல ... என்னைப்பா..."

“இல்ல இப்பவும் வெளங்கல..விளக்கமாச் சொல்லு..!!”

"ஏண்டா நான் சொல்றத புஞ்சிக்கவே மாட்டேங்கிறீங்க..ஆஆஆஆ ஆஆஆஆஆ?"

"சரி.. சரி.. கூல் டவுன் சொல்லு "

""முன்னெல்லாம் கொழந்த தூங்கிக் கிட்டிருந்தா, "பாரு அப்பா மாதிரி என்னா ஸ்டைலா, படா ஜோரா நெத்தியில கைய வச்சுக்கிட்டு தூங்குறா"...ம்பா""

"சரி"

"கேட்க கேட்க ஜிவ்வுன்னு இருக்கும்"

"பின்ன இப்ப என்ன?"

"அன்னிக்கி அது மாதிரி தாம்பா புள்ள எங்கிட்ட படுத்து தூங்கிக் கிட்டிருந்தா, “பொளேர்” ன்னு என்ன அரஞ்சுப்புட்டு, நெத்தியில இருந்த புள்ளைடா கைய்ய எடுத்துப் போட்டுட்டு, "என்னா நெனப்புல தூங்குதோ" ன்னு சொல்லிக்கிட்டே தூக்கிட்டு போறா.. பதறிடுச்சு புள்ள "

"புள்ள பதறுனுச்சா... நீ பதறுனியா....??"

"நண்பனாடா நீ?"

"அப்ப எங்கிட்ட வந்து ஏன் சொல்றே?"

"பின்னே பான்-கீ-மூன் கிட்டயா போய் சொல்ல முடியும்?"

போய்ட்டான்.....

நான் : கிர்ர்ரர்ர்ர்ர்ர்ர்ர்

கிஸ்கி : இதெல்லாம் ‘என்னை’ நானே நண்பனாய் கற்பனை
செஞ்சுகிட்டு எழுதினதான்னு யாரும் எதிர் கேள்வி கேட்கப் படாது??

கேட்டா... (அசரீரீ)

பிச்சுப்ப்.. புடுவேன்.. பிச்ச்ச்சு..... ஆமாஆஆஆஅ ....!!


வியாழன், செப்டம்பர் 23, 2010

மெக்காவுக்கு போவோம் வாரியளா??


                                                                                         

மெக்காவுக்கு போவோம் வாரியளா??

மெக்காவில் நிறைய மாற்றங்கள். முன்பு வந்து விட்டு போனவர்கள் வந்தால் இந்த மாற்றங்களை உணர்வார்கள்.  (அவற்றை படத்தில் காண்க) இந்நிலையில்  சமீபத்தில் ஒரு முறை  மெக்காவுக்கு  விசிட்  அடித்தோம்.  அதைப் பற்றி கொஞ்சம் விரிவாகவே தெரிந்துக் கொள்வோம்.

முன்பெல்லாம்  ஒரு தடவை உம்ரா  போய் வர முன்னூறில் இருந்து முன்னூற்றைம்பது ரியால்கள் வரை செலவு செய்ய வேண்டி வரும். அதன் பிறகு மற்ற சிலவுகள். சாதரணமாக சொற்ப சம்பளம் வாங்குபவர்களுக்கு இது ஒரு எட்டாக் கனி!! அதெல்லாம் ஒரு காலம். 

இப்ப இங்கு சவுதி (தம்மாமில்) எங்கள் ஆபீசுக்கும் தங்கி இருக்கும் வீட்டுக்கும்   பக்கத்து தெருவில் தான் இருக்கிறது "மன்னர் பஹத்"  பள்ளிவாசல். தம்மாமில் மிகப் பெரிய பள்ளிவாசலும் கிட்டத்தட்ட பத்தாயிரம் பேர் ஒரே நேரத்தில் நின்று தொழக் கூடியதுமாய் அமைந்திருக்கிறது.

இதை சுற்றி ஏராளமான உம்ரா ஹஜ் சர்வீஸ் ஏஜென்சிகள் இருக்கின்றன. வாரத்தில் புதன் & ஞாயிற்றுக்   கிழமையானால் மாலை அசர் தொழுகை க்குப் பிறகு உம்ராவுக்கு புறப்படும் பஸ்கள் ஜே ஜே வென்று  ஏதோ நமது ஊரில் நிற்பது போன்ற பிரமையை ஏற்படுத்தும்.  பார்க்க பார்க்க ஆவலாய் இருக்கும். நாமும் உம்ரா  செல்ல மாட்டோமா என்ற ஏக்கத்தை ஏற்படுத்தும். அப்படி யாரும்  ஏங்கி  விடக்  கூடாதென்பதற்க் காகவே  சில சலுகைகளும்   மாற்றங்களும்  சவுதி அரசால்  அறிவிக்கப்பட்டு நடை முறைப் படுத்தப் பட்டிருக்கிறது..   

வியாழன் வெள்ளி என்பது இங்கே வார விடுமுறை யாதலால் அதை அனுசரித்தே இந்த டூர் ப்ரோகிராம்கள் அமைகின்றனபுதன் மாலை புறப்பட்டால் சனிக்கிழமை காலையில் டூட்டிக்கு போகிற மாதிரி  திரும்பி வந்து விடலாம்.  இது தம்மாமில் இருந்து  புதன்  மாலை  புறப்பட்டு வியாழன் அதிகாலை மெக்காவை  அடைந்து (உம்ரா முடித்து விட்டு, அன்று இரவே புறப்பட்டு மதினா போய் தங்கி ஜியாரத் முடித்து விட்டு,  வெள்ளி ஜும்மா தொழுகைக்குப்  பிறகு புறப்பட்டு திரும்ப  தம்மாம்  வந்தடையும்.)

இது மாதிரியே ஞாயிற்றுக் கிழமை ப்ரோகிராமும், இது வல்லாமல் தனியாக மதீனா ஜியாரத் மட்டும் போகக் கூடிய மூன்று நான்கு நாட்கள் பேக்கேஜ்களும் இருக்கின்றன.

இதை ஏன் இவ்வளவு விவரனையாய் சொல்கிறேனென்றால், எப்ப மனசில் உம்ரா போகணும் என்று நினைத்து  விட்டீர்களோ, அதைத்  தள்ளிப் போட்டு விடக் கூடாத  வகையில் தான் எல்லா டூர்களும் அமைந்திருக்கின்றன.

சரி போய் வர செலவு என்ன கட்டுப் படியாகுமா?

கொஞ்சம் பொறுங்க. அதைச் சொல்லத்தானே இந்தப் பதிவு. சீசன் இல்லாத நேரங்களில் (ஹஜ் மாதம், ரமலான் தவிர்த்து)  எல்லா   சர்வீஸ்  சென்டர்களிலும்  ஒரே ஆஃபர் மயம்  தான். 90 முதல் 55 ரியால்கள் வரை  தான். சீசன் உள்ள நேரங்களில் சீட்  கிடைப்பதும்  சிரமம். விலை 125 முதல் 200 ரியால்கள் வரை இருக்கும். ஒரு  மாதத்திற்கு முன்பே புக்கிங்
போட்டு வைக்கணும்.

(என்னுடைய சொந்தங்கள் நிறைய பேர் அமீரகத்தில் இருக்கிறார்கள். அவர்கள் குடும்பத்துடன் உம்ரா  வந்து  போவதற்கு   2500 லிருந்து 3500 ரியால்கள் வரை  செலவு ஆகிறது  என்று புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.  இந்த விபரத்தைப் பார்த்தால் இன்னும் திகைத்துத் தான் போவார்கள்)

நெருக்கடி மிகுந்த நேரங்களில் ஃபேமிலியோடு போய் வருவதும்செலவும்சிரமத்தை அதிகம் தரும் என்பது என் கணிப்பு. ஆனாலும் நிறைய பேர் குடும்பத்துடன் போய் வந்துக் கொண்டு தானிருக்கிறார்கள்.

இந்த மாதிரி ஆஃபர் எல்லாம் எப்படி கொடுக்கிறார்கள்? அவர்களுக்கு எப்படி கட்டுப் படியாகிறது? இது கேள்வி?

நிறைய ஏஜென்சிகளுக்கும் பஸ் கம்பெனிகளுக்கும் கவர்மெண்டால் சில நேரங்களில் மானியம் வழங்கப்படுகிறது. அப்படியும் இல்லாத நேரங்களில் பெரிய பெரிய செல்வம் மிகுந்த மனிதாபிமானிகள் இந்த மானியங்களைக் கொடுத்து அல்லாஹ்வின் கிருபையையும் ரஹ்மாத்தையும் பெறுகிறார்கள் என்பது கூடுதல் தகவல்.

இதற்கிடையே தாவா சென்டர்களிலிருந்தும், தவ்ஹீத் ஜமாத் திலிருந்தும் பஸ்கள் ஏற்பாடு  செய்யப்பட்டு, உணவுதங்குமிடம் மற்றும் விளக்கம் சொல்லி கூட்டிச் செல்ல  தமிழ்  பேசும் இமாம் களை நியமித்தும்  அழைத்துப் போய் வருகிறார்கள்.

பஸ்ஸில் டிக்கெட் புக்கிங் போடும் போதே நம்முடைய இக்காமா (ஐடென்டி கார்டு) புதுபிக்கப் பட்டிருக்கிறதா, குடும்பத்துடன் செல்பவர்கள் போதுமான பாதுகாப்பான நபருடன் வருகிறார்களா போன்றவற்றை தெளிவு படுத்திக் கொள்கிறார்கள்.

பஸ் புறப்படும் முன், எல்லோரும் சீட்டில் ஏறி அமர்ந்த பின்,  ஒரு தடவை அந்த நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர் எல்லோருடைய  இக்கமாவையும்  சரி பார்க்கிறார். அதன் பிறகு  எந்த  செக்  போஸ்டிலும்  எந்த வித  செக்கிங் கும் அதிகாயில்லை. ஏனெனில்  இந்த நிறுவனங்களை  நம்புகிறார்கள். 

இன்னொரு விஷயம் நாம் இங்கிருந்து  போகும் போதே எஹ்ராம் டிரஸ்   எனும்  நாம் உடுத்திக் கொள்ளும் உடை, இடுப்புக்கு அணியும் பெல்ட், காலுக்கு வேண்டிய செருப்பு ஆகியவற்றை வாங்கி தூக்கி சுமக்க வேண்டியதில்லை. ஏனென்றால் நாம் அந்த டிரஸ் உடுத்த வேண்டிய எல்லையில் உள்ள பள்ளிவாசல் வளாகங்களியே நல்ல தரமான அனைத்து சாதனங்களும் இங்கு நாம் வாங்கக் கூடிய விலையிலேயே விற்கப் படுகின்றன.

இன்னொரு விஷயமும் சொல்லி விடுகிறேன். நாம் போகும் அதே பஸ் திரும்பி வரும்போது அந்த ஏஜென்ட் ஆபீஸ் வாசலில் தான் நிறுத்தப் பட்டிருக்கும். அந்த ஆபீசிலேயே கேலன் கேலனாய் "ஜம் ஜம்" தண்ணீரை விற்பனை செய்கிறார்கள். இதன் விலை SR 10 தான். நீங்கள் பத்து ரியாலுக்கு வெறும் காலி கேலன்களை வாங்கி, சின்ன சின்ன பாட்டில்  தேடிஜம் ஜம் குளிர்  தண்ணீர்  நிரம்பி  இருக்கும்  கூலரிலிருந்து பிடித்து சிரமப்பட்டு சுமந்து வரக் கூடாதே என்பதற்க்காகவே இந்த விஷயத்தையும்  இங்கே குறிப்பிடுகிறேன்.   

அதே டிராவல் ஏஜென்ட்கள்  அங்கிருந்து பிடித்து வந்த ஜம் ஜம் தண்ணீரை இங்கு தம்மாமிலும் கேலன்  SR 20 ரியால்  என்று விற்கிறார்கள். நாம் ஊருக்கு எடுத்துப்  போவதென்றாலும்   இங்கேயே  விலை கொடுத்து வாங்கிக் கொள்ளலாம். நம் சிரமத்தை எவ்வளவுக்கெவ்வளவு குறைத்துக் கொள்ள முடியுமோ அவ்வளவுக்கவ்வளவு உதவுகிறார்கள். வேறென்ன நீங்களும் ரெடியாகுங்களேன். ஒரு முறை உம்ராவுக்குப் போய் மனம் மகிழ்ந்து திரும்பி வாங்களேன்.

ஹஜ்ஜை  இரண்டு  தடவையும்  உம்ராவை  எண்ணிக்கை இல்லாமலும் போய் வந்துக் கொண்டிருக்கிறோம்.  இனி மேலும் போய் வருவோம். (அல்ஹம்துலில்லாஹ்!!)  துஆ  செய்ங்க.

(அல்லாஹ்  தான்  விரும்பியவர்களை  தமது விருந்தாளியாக அவனது இல்லத்திற்கு அழைத்துக் கொள்கிறான்  என்கிறது ஹதீஸ். ஒருவர் உங்களுக்கு பிடித்தவராக இருந்தால் தானே உங்கள் வீட்டுக்கு விருந்துக்கு அழைப்பீர்கள். அந்த வகையில் நீங்கள் அவனுக்கு உகப்பாகி ஏன் அவன் விருந்தாளியாகக் கூடாது. முயற்சி செய்யுங்கள். இன்ஷா அல்லாஹ்! அவன் நிச்சயம் உங்களையும் அழைப்பான். ஆமீன்! )  


                                       







திங்கள், செப்டம்பர் 20, 2010

அன்புள்ள நண்பனுக்கு..!!

                                                                    









அன்புள்ள நண்பனுக்கு...!!!


சொத்து பத்து சேர்க்க வென்றே சொந்தங்களை பிரிந்தாயே

சொந்தமாய் வீடு வேண்டும்; கார் வேண்டும் என்றாயே

வாங்கினாயா?? இல்லை... அவைகளை விற்றாயா?? விற்றுவிட்டு

வெளிநாடு சென்றதெல்லாம் திரும்ப மீட்காப் பொருளாச்சு.


சேர்ந்த மாதிரி உன் மனைவியோடு எத்தனை நாள்; வருஷம்

வாழ்ந்தாய்; சந்தோசித்தாய்; இன்னமும் பெற்ற குழந்தைகளெல்லாம்

மச்சினிகளோடு சேர்ந்து உன்னை மச்சான் என்று கூப்பிடுவதாகச்

சொன்னாயே, உண்மையா?


வந்த கடனை அடைக்கு முன்னே வெகேஷன் வந்தாச்சு

அதற்கும் சேர்த்து ஒரு வட்டிக் கடன் வாங்கியாச்சு !


இடையே பேசிய அலைபேசியில் இல்லாள்                              

கேட்ட நகையும் இல்லை என்று சொல்லாமல்,

மகளும் மகனும் கேட்டதையும், சொந்தங்களை

மகிழ்விக்க கேட்ட பொருள்களும் வாங்கியாச்சு!


உன் அம்மாவுக்கு எதேகிலும் வாங்கினாயா?? சொல் நண்பா !!

யாரறிவர் பெற்ற துயர் நீ யன்றோ உணர வேண்டும்!


எத்தனை நாள் இங்கிருப்போம் என்ற வரம் வாங்கி வந்தோம்

சொல்லிக் கொள்ள ஏதுமில்லை; சொல்ல வழி தோனவில்லை.


இந்தியா பட்ட கடனை விடவா உன் கடன்?

அதுவே வல்லரசாகும் போது

ஒன்றிக் கொள்ள ஒரு வீடும், உடுத்திக் கொள்ள ஓருடையும்

வயிறார உண்ண உணவும் நீ பிறந்த பூமியிலா கிடைக்காது?


யோசி!! ஒவ்வொரு முறை நீ திரும்பி வெளிநாடு

போகும் போதும் நீ உடுத்தி இருக்கும் உடைகள் கூட

உனக்கு மிஞ்சாது; நீ போட்டிருக்கும் சட்டை உனதா

என்ற கேள்வி எழும்.                                                                                


நல்லதோ கெட்டதோ ஒன்று உன் மனைவி

பிள்ளைகளை உன்னோடு அழைத்துக் கொள்;

இல்லையேல் நீ அவர்களோடு போய் இருந்துக் கொள்.


நீ எங்கு வேணும்னாலும் வாழ் ; இப்ப

என் சொல் பேச்சை கேள்.

.



 
 
 
 
 
 

வெள்ளி, செப்டம்பர் 17, 2010

விருந்துக்கு வாங்க!!











இது "ஈத்" (ரமலான்) ஸ்பெஷல்!!

இது எங்க "தங்ஸ்க்கு"  அவுக மெயிலில் வந்தது. போடச்
சொன்னாங்க. அட்டகாசமா  போட்டாச்சு.  உங்களுக்கு என்ன
இஷ்டமோ "கண்களால்" சாப்பிட்டு விட்டு, எமக்கு இன்ட்லியிலும்
தமிழ் மணத்திலும் ஒட்டு போட்டுட்டு, இது நாங்க, உங்க 
எல்லோருக்கும் மகிழ்வுடன் தந்த "ஈத்" (ரமலான்) விருந்து என்று
மனதில் நினைத்து கொள்ளவும். ஹா.. ஹா..

அடுத்தப் பதிவில் திகட்ட திகட்ட படிக்கப் படிக்க எழுதுகிறேன்!!