facebook

செவ்வாய், ஜூலை 05, 2011

சவுதியும் - முஸ்தாக்பாயும்!!சவுதியும் -  முஸ்தாக்பாயும்!!

வீட்டு வேலைக்காகவும், வாகன ஓட்டிகளாகவும் வரும் இந்தியா
மற்றும் இதர நாட்டு நபர்களுக்கு ஓய்வு ஒழிச்சலற்ற வேலை
என்று பரவலாக கேள்வி பட்டிருக்கிறேன். அவர்களின் புலம்பல்
களை கேட்டுமிருக்கிறேன். இதில் ஒவ்வொருவரும் வந்து
சொல்லும் கதைகளையும் கேட்க மிகவும் பரிதாபமாகவே இருக்கும்.
இப்படி எக்குதப்பாக வந்து மாட்டிகிட்டாங்களே என்று யோசிக்க
வைக்கும்.


எண்ணூறு ரியால்களில் ஆரம்பித்து ஆயிரத்தி ஐநூறு ரியால்கள் வரையிலும் சம்பளம் வாங்கிக் கொண்டு சிலர் சொகுசாகவும், சிலர்
மிகுந்த கஷ்டங்களுடனும் வாழ்கிறார்கள். (ஒரு ரியால் என்பது
சுமாராக இந்தியா ரூபாய் 12- க்கு சமம்)

இங்கே முஸ்தாக் பாய் என்று ஒரு நண்பர் இருக்கிறார். இவர்
ஒரு கம்பெனியில் நல்ல வேலையில் இருக்கிறார். எப்பொழுதும்  
இவரோடு ஒரு நண்பர்  கூடவே வருவார். அவர் இங்கே ஒரு
அரபுகாரர் வீட்டில், வீட்டு பணிக்கு அமர்த்தப்பட்டிருக்கிறார். அவர்
பெயர் ஷாஜஹான் பாய்.   இவர்கள்  இருவரும் சென்னையை
பிறப்பிடமாக கொண்டவர்கள்.

மேற்படி ஷாஜஹான் பாய்  இங்கே வேலைக்கு சேர்ந்து பல வருடங்களாச்சு. இவர் வழக்கமாகவே எங்கள் வங்கி வழியாகத்-
தான் ஊருக்கு பணம் அனுப்புகிறார். இவர் எங்களைப் பார்க்க
வரும் நேரமெல்லாம் மனம் விட்டு பேச முடியாத அளவுக்கு கூட்டமிருக்கும். ஆகவே பணத்தை அனுப்பிவிட்டு போய்க்
கொண்டே இருப்பார்கள். சென்ற வாரம் அவர் இங்கே வந்திருந்த
போது மாத கடைசியில் கூட்டம் அவ்வளவா இருக்காது. முஸ்தாக்
பாய் நல்ல பழக்கம் என்பதால், ஷாஜஹான் பாயிடம் மெல்ல
பேச்சுக் கொடுத்தேன்.

"சவுதியில் உங்களை ரொம்ப காலமாகப் பார்க்கிறேனே, எப்படி
போகிறது உங்க வாழ்க்கை?"

"நல்லா இருக்கேன் சார், பிள்ளைகளெல்லாம் உயர்படிப்பு படித்துக் கொண்டிருக்கிறார்கள்"

"அப்படியா!! சந்தோஷம். சொந்தமா வீடு கட்டியாச்சா?"

"இல்ல சார். நான் சம்பாதித்து அனுப்புவது பிள்ளைகளின் படிப்பு செலவுக்கும், குடும்ப செலவுக்குமே சரியாக இருக்கின்றது. இதில்
சேமிக்க எந்த வழியுமில்லை!"

"நீங்கள் ஊரோடு போய் செட்டிலாகிவிடலாம் என்று சென்ற தடவை சொல்லிக் கொண்டு போனீர்களே, என்னாச்சு?"

"அப்படிதான் நினைத்துக் கொண்டு போனேன் ஆனால் ஊரில்
முரட்டுத் தனமாய் பெரியளவில் முதலீடு செய்து  வியாபாரம் செய்பவர்களிடையே நாம் போட்டிப் போட முடியாதென்று
தெரிந்து போனதால் திரும்பவும் இங்கேயே வேலைக்கு வந்து
விட்டேன்"

(இதுபோல் நிறையபேர் முடித்துக் கொண்டு ஊர் போவதும்
திரும்பவும் வேறு கம்பெனிக்கு வந்து பழைய அளவுக்கு
சம்பளம் கிடைக்காமல் அல்லாடுவதும் தொடர்கிறது. நல்ல
வேளை இவரை திரும்பவும் பழைய கம்பெனியே விசா
கொடுத்து அழைத்துக் கொண்டது)

"நீங்கள் வேலைப் பார்த்த கம்பெனிக்கே திரும்பவும் வந்து
விட்டதால் பழைய சம்பளமே தருகிறார்களா அல்லது குறைவாக ஏதும்....??"

"அப்படியில்லை. நான் திரும்ப வரணும் என்று சொன்னதும்
அவங்களே விருப்பப்பட்டு தான் என்னை அழைச்சிக்கிட்டாங்க. வருடாவருடம் சம்பளம் அதிகரித்தும் தர்றாங்க. அதைவிடவும்
அவங்க இந்த தடவை ‘உம்ரா’ (மெக்கா-மதீனா) செல்லும்போது
என்னையும் கூடவே அழைத்துப் போனாங்க!"

"அப்படியா ரொம்ப நல்ல விஷயமாச்சே...!! உங்கமேல் அளவுகடந்த நம்பிக்கை வைத்திருக்கிறார்களில்லையா? "

"ஆமா! ஆனா ஆரம்பத்தில் யாரையும் சட்டென்று நம்பிவிட
மாட்டார்கள்!"

"அது எல்லோருக்கும் உள்ள இயல்புதானே!"

"இவர்கள் சற்றே வித்தியாசமானவர்கள்"

"எப்படி ??"

"ஆரம்பத்தில், நான் சமைத்துக் கொண்டிருக்கும் போதோ அல்லது
வீட்டை சுத்தம் செய்துக் கொண்டிருக்கும் போதோ எனது கண் பார்வையில் படும்படி எதேச்சையாய் கிடப்பது போல் தங்கநகைகள்
கிடக்கும். எனக்கு பகீரென்று இருக்கும். எடுத்து வைத்திருந்து
அந்த வீட்டம்மாவிடம் கொடுப்பேன்!"

"ஓ..."

"சில நேரங்களில் அவர்கள் தரும் சம்பளத்தில் கூடுதலாய்
நம்மிடம் 500 ரியால் அல்லது ரெண்டு 500 ரியால்கள் சேர்ந்தே
வரும்."

"அதை என்ன செய்வீர்கள்?"

"உடனே அலறி அடித்துக் கொண்டு போய் கொடுத்து விடுவேன்"

"அப்படியா!!??"

"இப்படி சோதனை நடந்துகொண்டிருந்த காலகட்டத்தில் ஒரு
தடவை சம்பளம்தரும் போது கூடுதலாய் இருந்த 500 ரியாலை
திருப்பிக் கொண்டு அவர்களிடம் கொடுத்தபோது, அதை என்னிடமே
தந்து வைத்துக் கொள்ள சொல்லிவிட்டார்கள்"

"நிஜமாவா?"

"உண்மையிலேயே எனக்கு மனம் நெகிழ்வான தருணம் அது"

"ரொம்ப சரியாச் சொன்னீங்க"

"அதன் பின்னர் கடைகளுக்கு சென்று வீட்டு உபயோக சாமான்கள் வாங்கிவர அவர்கள் தரும் டிப்ஸ்கள் அபரிமிதமாய் இருக்கும்"

"ம்ம்ம் ...!!"

"சிலநேரங்களில் பக்கத்து பார்மஸிகளில் கிடைக்காத மெடிஸின்-
களை நான் அலைந்து திரிந்து எப்படியாவது எவ்வளவு தூரமாய் இருந்தாலும் சென்று வாங்கி வந்து விடுவேன். அதனால் அனைத்து மெடிசிலிப்ளும் என்னிடமே வரும்"

"ரொம்ப நல்லாவே நடந்துக்கிறீங்கன்னு சொல்லுங்க"

"அப்படியல்ல, அவர்கள் நம்மை வைத்து பேணுவதிலும் இருக்கு!"

"என்னான்னு?"

"ஒருதடவை ரொம்ப அத்தியாவசிய பணத் தேவை. பழகிய
நண்பர்கள் மற்றும் வெளியார் யாரிடமும் கேட்க எனக்கு மிகுந்த
தயக்கம். சட்டென்று இவர்களிடம் வாய் விட்டுக் கேட்டேன்.
"எனக்கு ஐயாயிரம் ரியால்கள் உடனடியாய் தேவை இருக்கு. மாதா
மாதம் என் சம்பளத்தில் பிடித்துக் கொள்ளுங்கள்" என்றேன். உடனே
தந்து, "மாதம் 500 சம்பளத்தில் பிடித்துக் கொள்வேன்" என்றார்கள்.
சரி என்று சொல்லிவிட்டேன். "அந்த நேரத்து பணத் தேவை மிகப்
பெரிய பாரம் குறைந்து விட்டது போன்ற திருப்தி"

"இருக்காதா பின்னே!"

"பிள்ளைகளுக்கு காலேஜ் படிப்புக்கு பணம் கட்டியாகணுமே!"
 
"அது அவசியான விஷயமாச்சே!"

"அடுத்த மாதம் அதற்க்கடுத்த மாதம் 500 - 500 என்று பிடித்துக் கொள்ளப்பட்டது"

"அப்புறம்"

"மூன்றாவது மாதத்தில் பழையபடியே முழு சம்பளமும் தந்தார்கள்.
எனக்கு ஆச்சர்யமான ஆச்சர்யம். கடன் வாங்கியிருக்கும் விவரம்
சொன்னேன். "பரவாயில்லை. நீயே வைத்துக்கொள் என்றார்கள்.
"நாம் எல்லாம் வேலைக்காரர்கள் தான் என்றாலும் இதைவிட
மனிதாபி மானமும், அங்கீகாரமும் வேறு எங்கிருந்து கிடைக்கும்.
நீங்களே சொல்லுங்க?"

"அடடா ரொம்ப நல்ல செய்தி சொல்றீங்களே!"

“இன்னும் இவர்களுடைய குணத்தைப் பற்றி எவ்வளவோ சொல்லிக் கொண்டே போகலாம். வீட்டில் வயதான பெரியவர்களும் குழந்தைகளும் என் மேல் காட்டும் பிரியம் அலாதி! இவைகள் என்னை மிகவும் கட்டிப் போடுகின்றன. ஊரில் எங்கள் குடும்பத்தினரோடு சேர்ந்து வாழும் உணர்வை ஏற்படுத்துகிறது”.

"சரி உங்களுகென்று சாப்பாடெல்லாம் இங்கேயே சாப்பிட்டுக் கொள்வீர்களா? நீங்கள் ரூமில் போய் சொந்தமாய் சமைத்துக் கொள்வீர்களா?

"இல்லை. இவர்களுக்கு என்ன வகையான உயர்ந்த உணவு
வகைகள் சமைக்கிறோமோ அதுவே இங்கு வேலைப் பார்ப்பவர்-
களுக்கும் சாப்பிட அனுமதி உண்டு.  அவர்களும் நாங்களும்
சாப்பிட்டது போக நிறைய உணவு வகைகள் மீதப்படும். அவை-
களை எல்லாம் நான்தான் எடுத்து செல்வேன். பக்கத்தில் சில கம்பெனிகளில் வேலை செய்யும் நமது நாட்டை சேர்ந்த
நண்பர்களுக்கு தினம் ஒரு கம்பெனி என்று கணக்கு வைத்து
அதை கொடுத்து விடுவேன். எதுக்கு வேஸ்ட்டாக்கி ட்ராஷ்
கூடையில் கொண்டு போய் கொட்டனும். ஏதோ நம்மாலும் ஆன உதவிகளை செய்யனுமில்லையா?

"ஆஹா.. அவர்களுடைய பெருந்தன்மையும், ஈகை குணமும்
உங்களையும் பற்றிக் கொண்டது அப்படி தானே?"

"உண்மையை சொல்வதானால்... அப்படி தான்" என்றார்
முத்தாய்ப்பாக!

ஷாஜஹான் பாய் பற்றியும் அரபுகாரர்களின் குணநலன்கள்  பற்றியும்  இங்கே  ஓரளவு   தெரிந்து கொண்டோம். ஆனால்... இந்த முஸ்தாக்
பாய் பற்றி சொல்லவில்லையே!

சரி. யாரிந்த முஸ்தாக்!

சிறிது காலத்திற்கு முன்பு திரு.பாக்கியராஜ் நடித்து "அந்த ஏழு
நாட்கள்" என்று ஒரு படம் வந்தது ஞாபகமிருக்கா? (இல்லை
யென்றால் பரவாயில்லை. ‘சன்’ டிவியில் இரண்டு மாதத்திற்கு
ஒரு முறை  போடுவார்கள். பார்த்துக் கொள்ளலாம்) அந்த
பாக்யராஜோடு சரிக்கு சமமாய் 'வாத்யாரே'.. 'வாத்யாரே' என்று
மூச்சுக்கு முன்னூறு தரம் சொல்லி நடித்தாரே  ஒரு குட்டி
நட்சத்திரம் அவர் பெயர் "ஹாஜா ஷரீப்". அந்த ஹாஜா ஷரீபின்
அண்ணன் தான் இந்த முஷ்தாக் பாய். இவரும் ஒரு சில பாக்யராஜ் படங்களில் நடித்துமிருக்கிறார். முன்பு அந்த போட்டோவெல்லாம்
என்னிடம் கொண்டு வந்து காட்டினார்.

இந்த கட்டுரையை  எழுதி வைத்துக்கொண்டு, "அந்த போட்டோவை
எடுத்து வாங்க. இங்கே பப்ளிஷ் பண்ணனும்" என்று அவரிடம்
கேட்டேன்.  கொண்டு வந்து தந்தபாடில்லை! பிறகு அவர் தரும்
போது வெளியிடுகிறேன்.

20 கருத்துகள்:

நாடோடி சொன்னது…

ஒருத்தருடைய பெயரை போட்டு, மற்றொருவரின் பதிவை எழுதியிருக்கீங்க.. கலக்கல்.. :))

ஹுஸைனம்மா சொன்னது…

//ஒருத்தருடைய பெயரை போட்டு, மற்றொருவரின் பதிவை//

அதானே!!

இருந்தாலும், அரபிகள் என்றாலே கொடூரர்கள் என்ற ’பொதுபுத்தி’ இமேஜை தகர்க்கும் விதத்தில் தந்த பதிவுக்கு நன்றி!!

Mohamed Faaique சொன்னது…

so, இன்னும் பதிவு ஆரம்பிக்கவே இல்லையா?????
நல்லாத்தான் போயிட்டிருக்கு....

சிநேகிதன் அக்பர் சொன்னது…

அருமையான பகிர்வு தல.

சவுதியில் வாழ்ந்து வரும் நம்மை போன்ற வெளிநாட்டவர்கள் இங்குள்ள வாழ்க்கைமுறையில் உள்ள நல்லது கெட்டதுகளை எழுதுவது ஒரு நல்ல முயற்சியாகும். நமது கடமையும் கூட.

இதன் மூலம் இதை படிக்கும் பலரும் பயன்பெறுவார்கள்.

இதுபோல் இன்னும் உங்கள் சவுதி அனுபவங்களை பகிருங்கள்.

athira சொன்னது…

அடடா... உங்கள் பதிவை நெஞ்சு திக்கு திக்கெனத்தான் படித்தேன், ஏனெனில் அரேபியர்கள் என்றால் ஹூசைனம்மா சொன்னதுபோல கொடுமைக்காரர் என்றே நானும் கேள்விப்பட்டிருக்கிறேன், அதனால் முடிவில் ஏதும் விபரீதம் சொல்லப்போறீங்களோ என பயந்தேன்..

நல்ல குடும்பத்தவர்கள்.

அந்த 7 நாட்களை மறக்க முடியுமோ? ஆனா படம் முழுசா நினைவில்லை.... விரைவில் போடுங்க.

athira சொன்னது…

இம்முறையும் படத்துக்கும் பதிவுக்கும் சம்பந்தமேயில்லை அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)))).

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்

முஸ்தாக்பாயை பற்றி கூறவேயில்லையே என்று நினைக்கும் போது யார் இந்த முஸ்தாக் என்று போட்டு, தொடர் பதிவாவது எழுதியிருக்கலாம். ஹி ஹி ... அப்படியே பழகிவிட்டது. அருமையான தருணங்கள். இங்கே ஷார்ஜாவில் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் இப்படித்தான் டெஸ்ட் வைத்து தொழிலாளிகளை கேஷ் கவுண்டர்களில் நிறுத்துவார்கள். அரபிகள் (அதிலும் சவுதி அரபிகள்) பற்றி இருந்த தப்பான அபிராயத்தை இந்த பதிவு குறைத்திருக்கிறது என்று சொன்னால் மிகையாகாது.

அழகான பகிர்வுக்கு நன்றி காதர் பாய்

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ நாடோடி கூறியது...

// ஒருத்தருடைய பெயரை போட்டு, மற்றொருவரின் பதிவை எழுதியிருக்கீங்க.. கலக்கல்.. :)) //

அந்த ஒருத்தருடைய பதிவு தான் மற்றொருவரின் பெயரைப் போட்டு பதிந்திருக்கிறேன். புரியுதா??

அன்பு ஸ்டீபன் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஹுஸைனம்மா கூறியது...

//ஒருத்தருடைய பெயரை போட்டு, மற்றொருவரின் பதிவை//
//அதானே!! //

அதில்லை!! அந்த ஒருத்தருடைய பதிவு தான் மற்றொருவரின் பெயரைப் போட்டு பதிந்திருக்கிறேன். புரியுதா??

//இருந்தாலும், அரபிகள் என்றாலே கொடூரர்கள் என்ற 'பொதுபுத்தி’ இமேஜை தகர்க்கும் விதத்தில் தந்த பதிவுக்கு நன்றி!! //

ரொம்ப நாளாய் மனதில் உறுத்தலாவே இருந்த விஷயம் ...

சகோ ஹுஸைனம்மா உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ Mohamed Faaique கூறியது...

// so, இன்னும் பதிவு ஆரம்பிக்கவே இல்லையா????? //

ஆரம்பித்தாலும் தலைப்பிலேந்து ஆரம்பிக்க மாட்டேன்.. பயந்துக்காதீங்க!!

அன்பு Mohamed Faaique உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ சிநேகிதன் அக்பர் கூறியது...

// இங்குள்ள வாழ்க்கை முறையில் உள்ள நல்லது கெட்டதுகளை எழுதுவது ஒரு நல்ல முயற்சியாகும். நமது கடமையும் கூட.//

அறிந்தவற்றை அளவோடு எழுத்துவோம். நீங்களும் தொடருங்கள் தல!

அன்பு சிநேகிதன் அக்பர் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ athira கூறியது

// ஏனெனில் அரேபியர்கள் என்றால் ஹூசைனம்மா சொன்னதுபோல கொடுமைக்காரர் என்றே நானும் கேள்விப்பட்டிருக்கிறேன், அதனால் முடிவில் ஏதும் விபரீதம் சொல்லப் போறீங்களோ என பயந்தேன்.. நல்ல குடும்பத்தவர்கள்.//

ஒருபடி மேலே சொல்லனு மெண்டா இதுபோல் நிறைய குடும்பங்கள் இருக்கு அதிஸ். இதை ஒரு முன்னுதாரணமாக எடுத்துக்க வேணும். மியாவ்!!

அன்பு athira உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ athira கூறியது...

// இம்முறையும் படத்துக்கும் பதிவுக்கும் சம்பந்தமேயில்லை அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)))). //

படத்துக்கும் பதிவுக்கும் சம்பந்த மேயில்லை எண்டாலும், எழுதிய எனக்கும் அந்த அரபுகாரங்களுக்கும் சம்பந்தமேயில்லை...அதான். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)))). மியாவ் மிட்சுபிஷி!! (அப்படி எண்டால் டோண்ட் ஒர்ரி என்று அர்த்தம்!! :-))))

அன்பு athira உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) கூறியது...

// அஸ்ஸலாமு அலைக்கும் //

வலைக்கும் சலாம்!!

// முஸ்தாக்பாயை பற்றி கூறவே யில்லையே என்று நினைக்கும் போது யார் இந்த முஸ்தாக் என்று போட்டு, தொடர் பதிவாவது எழுதியிருக்கலாம். ஹி ஹி ... அப்படியே பழகிவிட்டது//

அட இது நல்லா இருக்கே ஹாஜா மைதீன்!! சொல்லிட்டீங்கல்ல.. போட்டுடுவோம்!!

அன்பு அபு நிஹான் உங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

இமா சொன்னது…

//"கற்றோர்க்கு அழகு, கமெண்ட்ஸால் அடிப்பது"// ஆஹா! ;))

வேலைக்கு இருக்கிறவங்களை இப்பிடி எல்லாம் கூட டெஸ்ட் பண்ணுவாங்களா! ம்..

உரையாடல் மாதிரி எழுதிக் கொண்டு போன விதம் நன்றாக இருக்கிறது.

பாவா ஷரீப் சொன்னது…

ASSALAM SAGO
SUPER WRITING

ஜெய்லானி சொன்னது…

//மியாவ் மிட்சுபிஷி!! (அப்படி எண்டால் டோண்ட் ஒர்ரி என்று அர்த்தம்!! :-))))//

நீங்க எப்போ டோக் யோ போனீங்க பாஸ்..!!ஹா..ஹா.. :-))

ஜெய்லானி சொன்னது…

பாஸிட்டிவான கதை (ஸ்டோரி ) :-)

சக்தி சொன்னது…

salam. eid mubaraq

VANJOOR சொன்னது…

அன்புடையீர்,

அடியிற்க‌ண்ட‌ சுட்டியை சொடுக்கி ஸ்தம்பிக்க செய்யும் விடியோக்கள் காணுங்கள். விவரிக்க வார்த்தைகள் இல்லை.


//// ** அகிலமெங்கும் சீரிய(ஸான) ஒரே செயல். அரிதான விடியோக்கள். காண‌த்த‌வ‌றாதீர்க‌ள். எங்கேயும்! ஒவ்வொரு விநாடியும் !! எச்சூழ்நிலையிலும்!!! அகிலம் முழுவதிலும்!!!! “ மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், மலையிலும், சோலையிலும், பாலைவனத்திலும், மழையிலும், பனியிலும், வெயிலிலும், ஊணத்திலும், நலத்திலும், பாதையிலும், வீதியிலும், வீட்டிலும், படிக்கட்டுகளிலும், பிர‌யாண‌த்திலும், சண்டையிலும், சமாதான‌த்திலும், சிறையிலும், சுக‌போக‌த்திலும், ந‌ட்பிலும், ப‌கையிலும், வசந்தங்களிலும், பேரிடர்களிலும்…… /////
.
இப்பதிவு பலரை சென்றடைய தங்களின் வலைப்பூவில் நல்லிணக்கத்தோடு லின்க் கொடுத்து உதவிய / உதவும்
அனைத்து பதிவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.

ஒத்துழைப்புக்கு முன்கூட்டிய‌ ந‌ன்றிக‌ள்.