

கோவையில் பரபரப்பாக, செழுசெழுப்பாக இனிதே நடந்து முடிந்தது செம்மொழி மாநாடு. எல்லோரும் தமிழ் பேசி, தமிழ் பாடி, தமிழிலேயே கையெழுத்தும் போட்டு அப்பப்பா. தாங்க முடியலைய்யா. ஐரோப்பிய, மற்றும் ஆசியா தேசங்களிலிருந்து வந்து, வித விதமா?? தமிழ் பேசியவர்களின் தமிழ்?? கேட்க கேட்க நெஞ்சு மட்டுமல்ல எல்லாமே குளிர்ந்து போச்சுங்க. செலவு எவ்வளவோ கோடிகளில் சொல்கிறார்கள் ஏதோ தெருக் கோடி மாதிரி. இருக்கிறவர்கள் செலவு செய்கிறார்கள். நம்முடைய கடன், மன உளைச்சல், நோய் நொடி, சண்டை பிணக்கு எல்லாமே தீர்ந்து போச்சுங்க. எப்படி எப்படி எல்லாமோ தமிழ் பேச வைக்க பாடு படுகிறோம் பாருங்கள். இப்ப மேலே படித்ததையெல்லாம் உங்கள் கைக்கொண்டு அழித்து விட்டு, சட்டென்று அடுத்தப் பாராவுக்குள் போய் விடுவோம் வாங்க!
என்னுடைய பாட்டி இருக்கே அது பேசாத தமிழா. நான் இந்த தடவை ஊர் போயிருக்கும் போது வீட்டுக்கு யாரோ விருந்தினர்கள் வந்திருக்குபோது, எல்லாரையும் விழுந்து விழுந்து உபசரித்து தேநீர் முதல் ஜூஸ் வரை தானே கைப்பட செய்து கொடுத்தது.
வந்திருந்தவர்களில் யாரோ வடை பஜ்ஜி எல்லாம் சாப்பிடவில்லை என்றதும் ஃபிப்டி ஃபிப்டி பிஸ்கட் வாங்க விட்டு, அதை அவங்க கிட்ட போய் உட்கார்ந்து பரிவாய் பிரித்து வைத்து, சாப்பிடும்மா "அம்பதுக்கு அம்பது" பிஸ்கட்மா (ஃபிப்டி ஃபிப்டிக்கு தமிழ்ங்க) நல்லா இருக்கும் சாப்பிடும்மா என்று தேனொழுக பேசி எல்லாத்தையும் சாப்பிட வைத்து தான் அனுப்பி வைத்தது.
எல்லோரும் புறப்பட்டு போனபின் பாட்டியை கிட்ட கூப்பிட்டு உச்சி மோந்து, எப்படி பாட்டி இப்படியெல்லாம் பேசுற என்றால், "அடப் போடா இவனே", என்று வெக்கப் பட்டு என் தலைமுடியை கோதி விடும்.(அன்புங்க அன்பு) எங்களை அவ்வளவு அருமைப் பெருமையாய் வைத்திருந்த பாட்டி எப்படியெல்லாமோ எங்களோடு இழையோடிய பாட்டி, நான் இங்கு வந்த பின்பு, சென்ற மாதம் இறந்து போய்டுச்சுங்க...
நான் பேச்சிலர்ஸ் பில்டிங்கில் தங்கி இருந்த காலம் சொர்க்கமான சொர்க்கம். அப்ப எங்களோடு ஒரு கேரளா நண்பரும் தங்கி இருந்தார். அவர் பெயர் வேண்டாம். கேரள நண்பர்கள் நம்மை எப்போதுமே “வா-போ” (இங்கேயும் அன்பு அன்பு) என்று தான் ஒருமையில் அழைப்பார்கள். அது அவர்களின் இயல்பு தான் என்றாலும் பிறர் நம்மை பார்க்க ரூமிற்கு வரும்போது அது உறுத்தலாவே இருக்கும். நான் பல முறை சொல்லிப் பார்த்துட்டேங்க. கேட்கிறானில்ல. இதற்கு என்ன செய்யலாம் என்று நிறைய நேரம் யோசித்திருக்கிறேன்.(நாமெல்லாம் அப்படி யோசிக்கிற ஆட்கள் தானே!ஒரு வழியும் புலப்பட்டதில்லை) ஹி..ஹி..
ரெண்டு ரூமில் உள்ள, நான்கு பேரும், ஆளுக்கு ஒரு நாள் என்று முறை வைத்து சமைப்பதாக எழுதாத உடன் படிக்கை. நல்லா சமைப்போம்ங்க. அந்த நாள் என்னுடைய முறை. சோறாக்கி, ரசம் வைத்து, மீன் பொரிக்கணும், எம்புட்டு வேலை பாருங்க...
ஒத்தையா நின்னு எவ்வளவு சமாளிப்பு. வேத்து விறுவிறுத்து செஞ்சு முடிசிடுவேங்க. எல்லாரும் ஒன்னா உட்கார்ந்து தான், கார்பெட்டில் பேப்பர் விரித்து கலமுலான்னு பேசிக்கிட்டு தான் சாப்பிடுவோம். அப்படி சாப்பிட்டா தான் சோறே இறங்கும். அப்படி ஒரு பக்குவமாய் இங்கே இருக்கப் பழகி விட்டோம்.
முதலில் பேப்பரை விரித்து, குடிக்க தண்ணி வைத்து, சோற்று சட்டியை கொண்டு வந்து வைத்து, பொறித்த மீனையும், ஊறுகாவையும் கொண்டு வந்து வைத்து விட்டு எல்லாரும் வந்து உட்கார்ந்தாச்சுங்க. உட்கார்ந்த பின் தான் தெரித்தது ரசத்தை எடுத்து வர மறந்துட்டேங்க.
அதன்பின் அவசர அவசரமாய் எழுந்து போய் எடுத்து வந்து வைக்கிற நேரத்தில் கை தவறி கேரளா நண்பர் உட்கார்ந்திருந்த முதுகுப் பக்கம் சட்டியோடு சரேலென்று விழ, "என்ன காதர் இப்படி பண்ணிட்டீங்க" என்றாரே பார்க்கலாம். இது எதார்த்தமா தான் நடந்ததுங்க. நம்புங்க.
எங்கிருந்து வந்தது மவனே இந்த மரியாதைத் தமிழ். எல்லாம் கொடுக்க வேண்டியதைக் கொடுத்தால் நடக்க வேண்டியது தன்னால நடக்கும் போல. இப்பல்லாம் அவர் எல்லாரையும் “வாங்க போங்க” என்றுதான் அழைக்கிறார். அதைவிடவும் ஒரு படி மேலே போய் பிளாட்களில் சும்மா சுற்றித் திரியும் கிடைத்ததை தின்னும் பூனைகளைக் கூட, “பூனை வர்றார், பூனை போறார்” என்று தான் சொல்வார் என்றால் சிரிப்பீங்களே! சிரிக்காதீங்க..
நாங்க தான் அவர் மேல் இரக்கப்பட்டு, பூனைக்கெல்லாம்
அவ்வளவு மரியாதை வேண்டாம் என்போம். இருந்தாலும் அவர் தன்னை மாற்றிக் கொள்ளவில்லை. இப்பல்லாம் அவர் "பூனை வர்ரான், பூனை போறான், பூனை சாப்பிடுறான்" என்று தான் சொல்கிறார். இப்படியாக ஜாலியாப் போனது அந்த காலக் கட்டங்கள்.
செலவே இல்லாம இப்படி எத்தனை பேருக்கு நாங்க தமிழ் சொல்லிக் கொடுத்திருக்கிறோம். கவர்மெண்ட் இப்படி எல்லாம் யோசிக்கதாங்க..!