ஒரு அமைச்சரிடம் அப்படியென்ன மற்றவர்கள் பார்வையில்
பளிச்சிடும் வெளிப்பாடுகள் இருக்கப் போகின்றது என்று
எண்ணும் ஒரு சிலருக்காக அல்ல, நம்மில் பலரும் கற்றுக்
கொள்ள வேண்டிய பாடங்கள் அண்மையில் மறைந்த
(Dr.Ghazi al Gosaibi) “டாக்டர் காஸி அல் கொஸைபி”யிடம் நிரம்பவே காணப்படுவதென்னவோ உண்மை.
அவரின் வெளிப்படையான பேச்சில் எப்போதும் உண்மையும்
கிண்டலும் தொனிக்கும். “ஒரு நூலில் திருடினால் அதற்குப்
பெயர் திருட்டு. பல நூல்களில் திருடினால் அதற்குப் பெயர்
ஆய்வு” என்று அவர் ஒரு முறை சொல்லியிருக்கிறார்.
அவரைப் பற்றி நீங்களும் கொஞ்சம் தெரிந்து வைத்துக்
கொள்ளுங்கள். இது கொஞ்சமல்ல.. கொஞ்சம் நீளம் அவ்வளவே!!
நன்றி : அஷ்ரஃப் சிஹாப்தீன் (நாட்டவிழி நெய்தல்)
நன்றி: “ஞானம்” - சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டுச் சிறப்பிதழ்
“திசைகள் தோறும் துலங்கிய நட்சத்திரம்”
“நான் பேராசிரியர் பதவி வகித்த நாட்களில் எந்தவொரு
குப்பையையும் ஆய்வு என ஏற்பதற்கு என்னிடமிருந்து ஒரு
மேற்கோளை எடுத்தாள்வதே போதுமானதாயிருந்தது.”
கேலிக்குரியதும் கேவலத்துக்குரியதும் அவ்வப்போது நடப்பது
மான மேற்குறிப்பிடப்பட்ட பல்கலைக் கழகப் பின்னணியைப்
பகிரங்கச் சொற்பொழிவில் தைரியமாகச் சொல்ல அண்மையில்
மறைந்த (Dr.Ghazi al Gosaibi) “டாக்டர் காஸி அல் கொஸைபி”யைப்
போல் வேறு ஒருவரை நாம் காண முடியாது.
பல்கலைக் கழகப் பேராசிரியராக இருந்த போது மட்டுமல்ல, பிரிட்டனுக்கான சவுதி அரேபியத் தூதுவாராகப் பணியாற்றிய
போதும் அந்தப் பதவியைத் தாண்டி அவர் இப்படித்தான் நடந்து கொண்டார். அயாத் அக்ராஸ் என்ற பலஸ்தீனியத் தற்கொலைதாரி இளைஞன் இஸ்ரேலிய பல்பொருளங்காடியில் தன்னை வெடிக்க
வைத்த போது “நீ ஓர் உயிர்த் தியாகி” என்று அவனுக்கு இரங்கல்
கவிதை எழுதினார் அவர். அந்தக் கவிதை பிரிட்டனின் சீற்றத்தைக் கிளறியது. முழு மத்திய கிழக்கு அரசியல் அரங்கிலும் அதிர்வை ஏற்படுத்தியது.
அந்த இளைஞனை ‘சுவர்க்கத்தின் மணவாளன்’, ‘கிரிமினல்களுக்கு
எதிராக எழுந்தவன்’, ‘புன்னகையுடன் மரணத்தை முத்தமிட்டவன்’ என்றெல்லாம் அக்கவிதையில் போற்றியிருந்தார் கொஸைபி.
அதேவேளை செப்டம்பர் 11 அமெரிக்க வர்த்தக மையத்
தாக்குதலை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. ‘வரம்பு மீறிய
கொடுமை’ என்று அதை வர்ணித்தார். அதுதான் கொஸைபி.
காஸி அல் கொஸைபி சவுதி அரேபியாவின் 'அல்ஹஸா'வில்
1940-ல் பிறந்தார். தந்தையார் ஒரு வணிகர். தாயார் மெக்காவில்
'காத்திப்' குடும்பத்தைச் சேர்ந்தவர். கொஸைபி ஒன்பது மாதக்
குழந்தையாக இருந்த போது தனது தாயை இழந்தவர். பிறகு
பாட்டியின் வளர்ப்பில் விடப்பட்டார். அவரது முதல் ஐந்து
வருடங்கள் ஹபுஃப் நகரில் கழிந்தது. அவரது கல்வி நலன்
கருதி பஹ்ரெய்னுக்கு எடுத்துச் செல்லப்பட்டார். அங்கிருந்து
1961-ல் கெய்ரோ சென்று சட்டக் கல்வி பயின்றார். பின்னர்
கலிபோர்னியாப் பல்கலைக் கழகத்தில் ஆங்கிலத்திலும் சர்வதேச உறவுகளிலும் முதுகலைப் பட்டத்தைப் பெற்றபின் லண்டன்
பல்கலைக் கழகத்தில் அரசியல் விஞ்ஞானத்தில் டாக்டர் பட்டம்
பெற்றார்.
“இளம் வயதிலிருந்து அல் கொஸைபியிடம் ஒரு கனவு இருந்தது. உலகத்தின் கண்ணீர் துடைப்பதும் அதைப் புன்னகைகளால்
நிரப்புவதுமே அது. அதற்காகத்தான் அவர் இயங்கினார். இதற்காக
நான்கு படிகளை அவர் வைத்திருந்தார். (1) திட்டமிடல் (2) ஏற்பாடு
செய்தல் (3) செயற்படுதல் (4) அதைத் தொடர்தல் ஆகியனவே அந்த நான்குமாகும். இதற்காக அவர் ஒரு திறவுச் சொல்லை வைத்திருந்-
தார். அந்தச் சொல் - ‘ஹோம்வேர்க்’. எந்த ஒரு பொறுப்பை
எடுத்துக் கொண்டாலும் அதற்காகத் தன்னைத் தயார்படுத்திக் கொள்வதிலும் அது குறித்து விசாலமாகத் தெரிந்து கொள்வதிலும்
அந்த வீட்டு வேலை - ‘ஹோம் வேர்க்’ அவருக்கு உதவிற்று”
என்கிறார் முகம்மது அல் அலி ஜிப்ரி.
1984 முதல் 1992 வரை பஹ்ரெய்னிலும் 1992-லிருந்து 2002-வரையில் பிரிட்டனிலும் சவுதி அரேபியாவின் தூதுவராகப் பணிசெய்த
கொஸைபி மரணிக்கும் வரை தொழிற்துறை அமைச்சராகக்
கடமை செய்தார். சவூதி இளைஞர்கள் இலகுவானதும் அதிக
பணம் கிடைக்கக் கூடியதுமான தொழில்களையே நாடுவதாகச்
சொன்ன கொஸைபி, 2008ம் ஆண்டு ஜித்தாவில் ஒரு "fast food"
கடையில் மூன்று மணிநேரம் வேலை செய்து காட்டினார்.
பொதுவாக சவுதியில் இவ்வாறான தொழில்களில் வெளி-
நாட்டவரே ஈடுபட்டு வந்திருந்தனர். அவரது இவ்வாறான நடவடிக்கைகளில் தடாலடிச் செயற்பாடோ அரசியல்
ஸ்டண்டோ இருப்பதில்லை என்பதுதான் சிறப்பு.
இறுக்கம் கொண்ட அரச ஆட்சியில் உள்ள சவுதி மக்களது
பிரச்சினைகள் எண்ணங்கள் குறித்து வெளிப்படையாகப் பேசும்
தன்மை அவரிடம் இருந்தது. இதனால் பரந்த அளவில் சிந்திப்பவர்
களாலும் படித்தவர்களாலும் மிகவும் விரும்பப்பட்ட மனிதராக
இருந்தார்.
அமைச்சராக, அரச நிறுவனங்களின் தலைவராக, இராஜ
தந்திரியாக, பேராசிரியராக என்றெல்லாம் அவரது வாழ்நாளில்
பெரும் பகுதி நிர்வாகம் செய்வதிலேயே கழிந்து போயிருக்கிறது.
இந்த அனுபவங்கள் குறித்து 300 பக்கங்களில் அவர் எழுதிய நூல்
தான் “வாழ்நாளெல்லாம் நிர்வாகம்.” நிர்வாகத்தை இரண்டு
விதமாக அவர் வகைப்படுத்தினார்.
ஒன்று சார்புப் பார்வையுடன் கூடியது. மற்றையது, எதிர்ப்பார்வை கொண்டது. அவர் எதிர்ப் பார்வை கொண்ட நிர்வாக முறையையே தேர்ந்தெடுத்தார். அதாவது எதிரிகளை உருவாக்குவதன் மூலம்
தன்னைக் கூர்மைப்படுத்திச் செயலூக்கத்தில் தள்ளுவது அவரது நோக்கமாக இருந்திருக்கலாம்.
முடிவெடுப்பது, நேரக்கட்டுப்பாடு ஆகியவற்றில் அவர் மிகவும் கறாரானவராக இருந்தார். “உங்கள் பிள்ளை வெளியே சென்று விளையாடுவதற்கு அனுமதி கேட்டால் 'ஆம்' அல்லது 'இல்லை'
என்று சொல்வதற்கு ஐந்து நிமிடங்கள் கூட நீங்கள் தாமதிக்கக்
கூடாது” என்கிறார் கொஸைபி.
அவர் அமைச்சராக இருந்த வேளை அவரைச் சந்திப்பதற்கு
வழங்கப்பட்ட நேரத்தை விட ஒரு மணி நேரம் தாமதமாக வந்த
ராஜாங்க வட்டாரத்தின் முக்கியஸ்தர் ஒருவர் அதற்காக மன்னிப்புக் கேட்கும் மனநிலையில் கூட இல்லாததை அவதானித்தார் கொஸைபி. கடைசியில் அவரது நோக்கம் நிறைவேறாமலேயே திரும்பிச் செல்ல நேர்ந்தது.
1965-ல் ரியாதிலுள்ள கிங் (SAUD) சவுத் பல்கலைக்கழகத்தில்
பொது நிர்வாகம் கற்பிப்பதற்கு கொஸைபி அழைக்கப்பட்டார்.
பொறுப்பேற்பதற்கு முன்னர் பிரின்ஸியிடம் அவர் வைத்த
வேண்டுகோள், ‘பாடத்தை ஒன்று நீங்கள் எடுக்க வேண்டும்
அல்லது நான் எடுக்க வேண்டும்’ என்பதுதான். நிர்வாகம் என்பது
ஒரு நாட்டின் நாடி நரம்பு. ஆளுக்காள் ஒவ்வொரு கருத்தைத்
திணித்து மாணவர்களைத் திணறடித்தால் அது நாட்டுக்குக் கேடு
என்பதை உணர்ந்தே அவர் இவ்வாறு சொல்லியிருக்க வேண்டும். கடைசியில் ‘நீங்களே படிப்பியுங்கள்’ என்று புன்சிரிப்புடன்
பிரின்ஸிபால் அனுமதி கொடுத்தார்.
1974-ல் சவுதி ரயில்வேயின் அமைச்சராக அவர் நியமிக்கப்
பட்டவுடன் அவர் செய்த முதற் காரியம் ஏற்கனவே அப்பதவி
வகித்த அமைச்சர்களைச் சந்தித்து விபரங்களைப் பெற்றுக் கொண்டதுதான். காரியாலயத்தில் ஏற்கனவே கூட்டங்களில்
எடுக்கப்பட்ட அனைத்துத் தீர்மானங்கள், குறிப்புகள் அனைத்தை
யும் அள்ளிக் கொண்டு வீட்டுக்குச் சென்று ‘ஹோம் வேர்க்’
செய்தார். தனிப்பட்ட யாருடைய நலன் குறித்தும் கவனம்
செலுத்தப்படக் கூடாது என்பதே அவரது பணிப்புரையாக
இருந்தது.
தொழிற்துறை மற்றும் மின்சாரத் துறை அமைச்சராக 1975-ல் பதவியேற்றார் அல்கொஸைபி. இரண்டு அமைச்சுப் பொறுப்புக்-
களை அவர் வகித்துக் கொண்டிருக்கும் போதே 1982-ல் பதில்
சுகாதார அமைச்சராகவும் நியமிக்கப்பட்டமையானது அவரது
செயற்திறமைக்கும் நேர்மைக்கும் நல்ல எடுத்துக்காட்டாகும்.
1984-ல் "வாங்கி விற்கப்பட்ட ஒரு பேழை" என்ற அவரது கவிதை
யொன்று நேரடியாக அரச மட்டத்தின் ஊழல்களை உடைத்-
தெறிந்தது. அது சவுதியில் ஒரு தீயைக் கிளப்பி விட்டது. அந்த
வேளை அவரிடம் மூன்று அமைச்சுக்கள் இருந்தன என்பது
குறித்துக் கொள்ளப்பட வேண்டியது.
சவுதி பாதுகாப்புத் துறையிலும் அவர் ஓர் ஆலோசகராக
விளங்கினார். 1965-ம் ஆண்டில் ஏமனில் நிலை கொண்டிருந்த
எகிப்தியப் படையினரோடு சுமுகப் பேச்சுவார்த்தை நடத்திய
சவுதி அரேபியக் குழுவின் ஆலோசகராக நியமிக்கப்பட்டவர்
கொஸைபி. கிட்டத்தட்ட ஏழு மாதங்கள் ரியாத், கெய்ரோ, சனா
ஆகிய நகரங்களுக்கிடையில் ஓய்வில்லாமல் ஓடித்திரிந்து
உள்ளார். எகிப்துக்கும் ஏமனுக்குமிடையிலான போர்ச்சூழலுக்குள்
துப்பாக்கி ரவைகளூடாக சமாதானத்தை ஏந்திச்சென்று பெரும் பணியாற்றினார்.
இவை எல்லாவற்றையும் விட மேலாக அரபுலகம் காஸி அல் கொஸைபியைக் கொண்டாடுவதற்குக் காரணம் அவர் தன்னிகரற்ற கவிஞராகத் திகழ்ந்தார் என்பதுதான். அவர் எழுதி வெளியிட்ட
நாற்பதுக்கு மேற்பட்ட நூல்களில் அநேகமானவை கவிதை
நூல்கள். அவர் மத்திய கிழக்கின் சிறந்த கவிஞராகவும் நாவலாசிரியராகவும் உலகம் முழுதும் அறியப்பட்டிருந்தார்.
எந்தப் பதவியை வகித்த போதும் அவ்வப்போது இலக்கியச் சொற்பொழிவுகளுக்காகப் பல்கலைக் கழகங்கள் அவரை
அழைத்துப் பயன்படுத்தி வந்தன.
கொஸைபி ஒரு பதவியிலிருந்து இன்னொரு பதவிக்கு மாறி
மாறி அனுப்பப்பட்டதையும் அந்தக் கால கட்டங்களையும்
பார்க்கும் போது அவர் ஒரு நேர்மையாளராக, மக்களினதும்
தேசத்தினதும் பக்கம் நின்று சிந்திப்பவராக இருந்திருக்கிறார்
என்பது புலனாகின்றது. அவரது எழுத்தினாலோ பேச்சினாலோ செயற்பாடுகளினாலோ உயர் மட்டத்தின் கருத்துக்கு மாற்றமான கருத்துடன் இருக்கிறார் என்று தெரிய வருகையில் வேறு ஒரு
பதவிக்கு மாற்றப்பட்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. ஆனால்
அவரை ஒழிக்கவோ தவிர்க்கவோ உயர் மட்டத்தினால் முடிய
வில்லை . இதுதான் கொஸைபியின் வெற்றி என்று சொல்ல
வேண்டும். மன்னராட்சி நிலவும் ஒரு தேசத்தின் அரசியலைப்
பொறுத்த வரை அரச குடும்பத்தில் பிறக்காத ஒரு தனிமனிதன்
தவிர்க்க முடியாத சக்தியாக ஆளுமை கொண்டிருப்பது அவ்வளவு எளிதான விடயமும் அல்ல.
சவுதியின் அரசின் அங்கமாக அவர் இயங்கிய போதும் அவரது
குரல் அவ்வப்போது தனித்துக் கேட்டது. அது நான் சுதந்திர-
மானவன், நான் கட்டுப்பாடுகளுக்குள் இல்லாதவன் என்பதைச்
சொல்லிக் கொண்டேயிருந்தது. அவரது கவிதைகளும்
நாவல்களும் இதைத்தான் பேசின. அதற்கு மேலாய் ஒரு
படைப்பாளியாக மட்டும் நின்று மத்திய கிழக்கின் அரசியல்,
மேற்குலகின் கபடத்தனங்கள், மத்திய கிழக்கு ஆட்சியாளர்களின் நாடகங்கள், பலஸ்தீனத்தின் துயர், சாதாரண மக்களின் வாழ்வு என்பவற்றையும் உரத்த குரலில் பேசின.
“ஒரு பெரிய நிறுவனத்தின் தலைவரை விட ஒரு மரக்கறி
வியாபாரி தன்னைச் சிறப்பானவனாக உணர வேண்டும். ஏனெனில் தொழிலாளர்கள்தாம் தேசத்தின் மிகப் பெரிய நம்பிக்கை. ஊடகங்கள் அவர்களுக்கு அழுத்தங்களை வழங்காமல் ஆதரவாகச் செயற்பட வேண்டும்” என்று அவர் கோரிக்கை விடுத்தார்.
அதிகார மட்டத்தில் அவர் செயற்பட்டுக் கொண்டிருந்த போதும்
அவரது கவிதை நூல்களில் ஒன்றிரண்டு அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டிருந்தது என்பது எத்தகைய வேடிக்கை. காஸி அல் கொஸைபியின் நூல்கள் மீதான தடை அவர் மரணிப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன்னர்தான் நீக்கப்பட்டது என்று Angry Arab News
சர்வீஸ்ஐச் சேர்ந்த லெபனானிய அமெரிக்கரான டாக்டர் அஸத்
அபூ கலீல் சொல்கிறார். அதாவது தடை நீக்கப்படும் போது
கொஸைபி மரணப்படுக்கையில் இருந்தார்.
கொஸைபி கடந்த வருடத்தின் (32-ம் வாரம்) அதாவது ஆகஸ்ட் பதினைந்தாம் தேதி ரியாத் - கிங் ஃபைஸல் விசேட ஹாஸ்பிடலில் காலமானார். மரணிக்கும் போது அவருக்கு வயது எழுபது. இந்த இழப்பானது அவரது மனைவிக்கும் அவரது ஒரே ஒரு மகளுக்கும்
மூன்று ஆண்பிள்ளைகளுக்கும் சவுதி மக்களுக்கும் மாத்திரமேயானது அல்ல.
உலகத்தின் பார்வையில் செல்வம் கொழிக்கும் தேசத்தில் களிப்பும் படாடோபமுமாய் வாழும் மனிதர்களுள் அறிவும் ஆழ் புலமையும்
பெற்றுச் சர்வதேச ராஜ தந்திரங்களை எதிர் கொள்ளும் வலிமை
யுடன் செயற்பட்டு வாழ்ந்து மறைந்த கொஸைபி உண்மையில் ஒரு மகானுபவர்தான். எந்தத் துறையில் அவர் காலடி எடுத்து
வைத்தாலும் அங்கு தேசத்தின் நலன், மக்களின் நலன், உலகத்தின்
நலன் என்கிற தனது முத்திரைகளைப் பதிப்பதில் அவர் வெற்றி
கண்டவர்.
சவுதி அரேபியாவைப் பொறுத்த வரை காஸி அல் கொஸைபியின் மரணத்துக்கும் இன்னொரு கொஸைபி உருவாவதற்குமான காலம்
மிக நீண்டதாக இருக்கப் போகிறது. புதிதாக உருவாகும் கொஸைபி-
களுக்கு மத்திய கிழக்கின் நலன், அங்கு அகதிகளாக அல்லல்படும் மனிதர்களது நலன் குறித்துச் சிந்திக்கவும் செயற்படவும் மேற்கத்திய நாடுகளுக்கு விலை போகாதிருக்கவுமான இதயத்தை வழங்குமாறு அவர்கள் பிரார்த்திக்க வேண்டும்.
அவரது மரணச் செய்திக்குப் பிறகு இணையத்தில் பலர் இரங்கல் குறிப்புக்களைத் தெரிவித்திருந்தார்கள். “எங்களது பரம்பரைக்கு
அரபுலகில் ஒரு நல்ல உண்மையான ரோல் மாடல் இல்லை-
யென்று நேற்றிரவு நான் எனது நண்பனிடம் சொன்னேன். அது
ரொம்பத் தப்பு. அந்தப் பெருமைக்குரியவர் இன்று நம்மை விட்டுச்
சென்று விட்டார்” என்று பஹ்ரெய்னிலிருந்து யாக்கூப் அல்
சிலைஸி என்ற நபர் குறிப்பிட்டிருந்தார்.
25 கருத்துகள்:
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.எம் அப்துல் காதர்.
மிகவும் வித்தியாசமான எதிர்பாராத பதிவு. இவர் பற்றி சென்ற நோன்பு சமயம் (இறந்த சமயம்) அரபிகள் நிறைய சொன்னார்கள்.
நம் சீனியர் எக்ஸ்பாட்றியாட்களும் ரொம்பவே சிலாகித்தனர். குறிப்பாக இவர் லேபர் மிநிஸ்டராக (கடைசி காலம்) இருந்த போது நிறைய நல்ல விஷங்களை எக்ஸ்பாட்றியாட்களுக்காக செய்திருக்கிறார்.
அப்புறம் மிகவும் பிரபலமான சாபிக் (SABIC) ராயல் கமிஷன் (ஜுபைல் & யான்பு) வெற்றிகரமாக உருவாக்கி செயல்பட இவரின் செயற்பாடு மிகவும் பாராட்டத்தகதாம். SADAF & YANPET நிறுவன ஊழியர்கள் இவரை மறக்கமாட்டார்கள். நல்ல மனிதர். இன்னாலில்லாஹி...
நல்ல பதிவு. நன்றி சகோ.
பகிர்வுக்கு நன்றிங்க...
புதிய தகவல்கள். பகிர்வுக்கு நன்றி.
அறிந்திராத புதிய தகவலுக்கு நன்றி .
Dr.Ghazi al Gosaibi, சவுதி அரேபியா ம்ன்னர் ஆட்சி இல்லாது மக்கள் ஆட்சியாக இருந்திருந்தால் ghaziயால் இன்னும் பல முண்ணேற்றம் கண்டிருக்கும்.
பகிர்வுக்கு நன்றி.
அபூர்வமாகக் காணப்படும் மனிதர்களில் ஒருவர். ”அரப் நீயூஸ்” செய்தித் தாளைப் படித்து வந்தால் இதுபோன்ற செய்திகள் கண்ணில் படும். பதிவெழுத வந்தபிறகு விட்டுப்போனவைகளில் அதுவும் ஒன்று. அச்செய்தித்தாளின் ஆசிரியரும் இவரைப் போல தன் கருத்துகளைத் தைரியமாக எழுதுபவர்தானே?
ஹுஸைனம்மா அரப் நியூஸ் சில செய்திகள் வாசிக்கும் போது ஆச்சரியமாக இருக்கும் மன்னர் ஆட்சியில் இது போல் தைரியமாக எழுதமுடியுமா என்று.
அவர் பிறந்த ஊரில் நாமும் வாசிக்கிறோம் என்பது மகிழ்ச்சிக்குரிய விசயம்.
பகிர்வுக்கு நன்றி. நல்ல பதிவு.
நானும் ஹபூபில்தான் உள்ளேன் இதுவரை அறிந்திராத பல தகவல்கள் பகிர்வுக்கு மிக்க நன்றியும் பாராட்டுக்களும்
அழகிய பதிவு! பல விஷயங்களைத் தெரிந்து கொண்டோம்.
மிக நல்ல பகிர்வு.பாராட்டுக்கள் சகோ.
டாகடர் காஸி அல் குஸைபி இன்னும் பல வருடங்கள் வாழ்ந்திருக்கலாம்.
@ வாங்க முஹம்மத் ஆஷிக் - நன்றி!!
@ வாங்க சித்ரா டீச்சர் - நன்றி!!
@ வாங்க கலாநேசன் - நன்றி!!
@ வாங்க ஸாதிகாக்கா - நன்றி!!
@ வாங்க ராஜவம்ஷம் - நன்றி!!
@ வாங்க ஹுசைனம்மா -
//பதிவெழுத வந்தபிறகு விட்டுப்போனவைகளில் அதுவும் ஒன்று.//
பிரபல பதிவர் ஆயிட்டாலே அப்படி தான் :-)) நன்றி!!
@ வாங்க சிநேகிதன் அக்பர் - நன்றி!!
@ வாங்க வானதி - நன்றி!!
@ வாங்க தங்கராசு நாகேந்திரன் - நன்றி!!
@ வாங்க சுவனப்பிரியன் நன்றி உங்களின் முதல் வருகைக்கு!!
@ வாங்க ஆசியா உமர் - நன்றி!!
@ முஹம்மத் ஆஷிக் நீங்கள் தந்த கூடுதல் தகவலுக்கு மிக்க நன்றி!!
இன்னா லில்லாஹி... ராஜிஊன் //அவரை ஒழிக்கவோ தவிர்க்கவோ உயர் மட்டத்தினால் முடியவில்லை//நல்லவங்களுக்கு எல்லா நாட்டிலும் இதே நிலைதானா? :( பதவிக்கு ஆசைப்படாமல் அவர் தேர்ந்தெடுத்த நடைமுறைகள்(ஹோம்வொர்க் செய்தது போன்றவை) ஆச்சரியப்படவைக்கின்றன... சௌதியைச் சேர்ந்த ஒரு அரசியல்வாதியைப் பற்றி இப்பதான் கேள்விப்படுகிறேன்...வெளிநாட்டவர்கள் இவ்வளவு தூரம் அவரை புகழும்போதே அவருடைய கடுமையான உழைப்பு புரிகிறது... பகிர்வுக்கு நன்றி...
கருத்துரையிடுக