facebook

புதன், அக்டோபர் 27, 2010

சாண்ட்லியர்ஸ் ஏன்?


“சாண்ட்லியர்ஸ்  ஏன்?? ”

எவ்வளவு லட்சம் கோடிகள் செலவு செய்து வீடு கட்டினாலும்,
இந்த சாண்ட்லியர்ஸ் ஒன்றை தலைக்கு மேல்தொங்க விடாமல்,
ஆடம்பர 'டெகோர்'கள் செய்யாமல்  வீட்டுக்குள் காலடி எடுத்து
வைத்து நம்மவர்கள் குடிபுக மாட்டேனென்கிறார்கள் ஏன்??

வீடு கட்ட ஒரு சாதாரண மிடில் கிளாஸ் குடும்பத்தின் பட்ஜெட் பத்திலிருந்து பதினைந்து லட்சம் (பத்தாது தான்) என்று வைத்துக் கொண்டாலும், இந்த மாதிரி ஆடம்பர 'டெகோர்'களில் ஒரு குறிப்பிட்ட தொகை புகுந்து வீண் விரயமாகும் வாய்ப்புள்ளது. புத்திசாலிகள் இந்த செலவினங்களை தவிர்க்கப் பார்ப்பார்கள்.

வீட்டை கட்டும் போதே இதற்கும் சேர்த்து அச்சாரம் போடப்படும்.
“அந்த வீட்டில் தொங்குற மாதிரி வேணும் ; இந்த வீட்டில் உள்ள
மாதிரி வேணாம்” என்றெல்லாம் வகைக்கு ஒன்றாய் காட்டி, அதற்கு தகுந்தாற் போல் ”ஏதாவது TV தொடர்களில் எந்த வீட்டிலாவது
தொங்கும் லைட்டை காண்பித்து”, தொங்க ஆரம்பிப்பார்கள்.

கடனே என்று மேலும் லோனை வாங்கி போட்டு இவர்கள்
ஆசையை நிறைவேற்றி விடுவோம். ஆனால் கடன்கள்?? “அதை பாத்துக்கலாம்” என்று இவர்கள் பக்கத்தில் நின்று சொல்லும்
போது ஒரு தைரியம் வரும். உண்மை!! ஆனால் பாடாய் படப்
போவது நாம் தான் என்று அப்பொழுது இந்த மண்டைக்குள்
உறைக்காது. இத்தனைக்கும் புத்திசாலி தனமாய் நம் கூட
உட்கார்ந்து பட்ஜெட் போடும் யாரும் இதற்கு விதி விலக்கில்லை.

கடையினுல் நுழைந்த உடனேயே ஏதாவது ஒரு சாண்ட்லியர்சை
பார்த்த உடன் நம்ம sweet hearts களும் "ஸ்ஸ்ஸ் ஆஆஆ" என்று
ஒரு சவுண்டு விடுவார்கள் பாருங்க (“ஊறுகாயை நுனி நாக்கில்
எடுத்து வைத்த மாதிரியோ, பச்சை மிளகாயை கடித்த மாதிரியோ”)
அப்ப தொலைந்தது தான் நம் பர்ஸின் கணம்.

இதை தெரிந்து கொண்ட கடையின் வியாபார நுணுக்கங்களை
கற்று தேர்ந்த முதலாளிமார்களும், மிக விவரமாய் நம் ‘தங்ஸ்’
களிடம் "இது இப்ப வந்த லேடஸ்ட் டிசைன்" என்று காட்டி
வியாபாரம் பேச ஆரம்பிப்பார்கள்.

இந்த கடை காரர்கள் பேசும் பேச்சில் எப்படி மடிகிறார்கள் என்பது இன்னமும் புரியாத புதிராய் இருக்கு? அவர்கள் போடும் ஏஸி யில் இல்லை என்றாலும், வாங்கி கொடுக்கும் ஜூஸிலா??

அதனால் தான் சொல்கிறேன் தைரியமாய் பேரம் பேசுங்கள். சர்வ சாதரணமாய் ஒரு சாண்ட்லியர்ஸுக்கு குறைந்த பட்சம் 300 %
முதல் 500 % வரை லாபம் வைக்கப்படும். எவ்வளவுக்கெவ்வளவு
பேரம் பேசி (நீங்க தான் 'அடித்து' பேசுவீங்களே ஹி..ஹி..) வாங்குகிறீர்களோ அவ்வளவும் உங்களுக்கு லாபம் தான்.

இதை ஏன் இங்கே குறிப்பிடுகிறேன் என்றால் சில கடைகளில் சாண்ட்லியர்ஸுக்கு கீழே விலை கட்டி தொங்க விட்டிருப்பார்கள்.
அப்படி இல்லாத கடைகளில் உஷாரா இருக்கணும். நாம் 'உச் உச்' சவுண்டுக்கு தக்க கணிசமாய் விலை உயர வாய்ப்பிருக்கு!

பல லட்சங்கள் செலவு செய்து கட்டிய வீட்டை விட்டுட்டு
கணவனும் மனைவியும் ஒரு சேர வெளியூரில் இருப்பார்கள்.
பிள்ளைகள் வெளி நாட்டில் படித்துக் கொண்டோ அல்லது
கல்யாணமாகி வாழ்ந்துக் கொண்டோ இருப்பார்கள். கட்டிய வீடு
கறுக்கு மாறாமல் அப்படியே பூட்டப் பட்டிருக்கும். அல்லது
வாடகை, ஒத்தி, பெந்தகம் என்ற பெயரில் யார் யாரோ
குடியமர்த்தப் பட்டிருப்பார்கள்.

அவர்களுக்கெப்படி தெரியும் நம் வாழ்நாளின் கற்பனை வீட்டின்
அருமை?? அவர்கள் நம் வீட்டை எப்படியெல்லாம் உபயோகிக்
கிறார்கள் என்பதை நம் கண்ணும் பார்க்காது. ஆனால் திரும்ப
ஊர் வந்து பார்க்கும் போது அழுது வடியும். நம் மனமும் தான்!!

குடிபுகும் அன்று எல்லாமே ஜோடனையாய், கண்ணுக்கழகாய்
செய்து எல்லோரும் பார்த்து "ஆஹா ஓஹோ" சொல்லிவிட்டால்
போதும் என்று மட்டும் தான் நினைக்கிறோம்.

இருபது, இருபத்தைந்து ஆயிரத்திலிருந்து ஆரம்பிக்கும் ஒரு
சாண்ட்லியர்ஸின் விலை சில லட்சங்கள் வரை போகும்.
குடிபுகுந்த அன்று அதை கவனித்த பின்னர், மற்ற நாளில்
மாதம் ஒரு முறையாவது  அதை சுத்தம் செய்வோம் என்ற
அக்கறை யாருக்கும் இருப்பதாய் தெரியவில்லை.

அந்த இருபத்தைந்தாயிரத்தை ரொக்க பணமாய்  சீலிங்கில்
கட்டி  தொங்க விட்டுப் பாருங்கள். நம் கண்கள் அடிக்கடி அங்கே
போகிறதா இல்லையா என்று?? (அவ்வ்வ்வவ்) எதுக்கு எது மாதிரி உதாரணம். அல்லது டெபாசிட்டில் போட்டு வையுங்களேன். யார் வேணாங்றா? உங்களுக்கு பின்னொரு நாளில் உதவாதா??

 நான் பார்த்த வகையில், ஐம்பது லட்சம் செலவு செய்து கட்டிய
எனக்கு தெரிந்த ஒரு வீட்டில் ரெண்டு மூணு வருஷம் கழித்து
சென்று பார்க்கையில், அந்த சாண்ட்லியர்ஸின் அழகு பொலி
விழந்து, ஏதோ 'முட்டை விளக்கு' ஏற்றி வைத்த மாதிரி அதன்
'கோல்டன் பிளேட்' தோலுரிந்து காணப்பட்டது. இது தேவையா??

அது போலவே மற்ற 'டெகோர்' களிலும் கவனம் செலுத்தினால்
நிரம்பவே செலவினங்களை தவிர்க்கலாம் என்பது என் எண்ணம்.

கொஞ்ச காலம் இந்த மாதிரி பிஸினெஸிலும் நான் இருந்தேன்.
அதனால் தான் இவ்வளவு சொல்லுகிறேன். இப்படி சொல்லுவதால்
சகோ. யாரும் வருத்தப்பட்டுக் கொள்ளாதீர்கள். இத்தனையையும் என் கண்கள் பார்த்தாதல் தான் எழுதுகிறேன்.

டிஸ்கி : கல் மண் ஜல்லி இரும்பு சிமெண்ட் கட்டுமான பணிக்கான
கூலி ஏறி விட்டதென்று கூவுகிறோமே தவிர இதற்கெல்லாம் யார்
குரல் கொடுப்பது. எவ்வளவு விலையானாலும் மாய்ந்து மாய்ந்து
வாங்கி தொங்க விட்டுட்டு, நாமும் விழி பிதுங்கி நிற்கிறோமே.
அது தான் நானும் ஒரு கூவு கூவி விட்டேன்.

16 கருத்துகள்:

Chitra சொன்னது…

அழகிய படங்கள்..... ஒரு முறை, special Lighting Stores போய்விட்டு, அவற்றை ரசிக்க மட்டும் செய்தேன். விலையை பார்த்ததும் ஓடி வந்து விட்டேன். ஹா,ஹா,ஹா,ஹா,ஹா....

முஹம்மது ஆரிப் சொன்னது…

நீங்கள் சொல்வதும் வாஸ்தவம் தான். ஆனால் யார் இதை யோசிப்பது?? அழகான ஜோடனை ஒரு பக்கம், ஆசை ஒரு பக்கம் இருந்தால் மனம் ஊசலாடத் தானே செய்யும். கடனை பிறகு பார்த்துக்கலாம் தான். அவதி நமக்கு தான்.

ஹுஸைனம்மா சொன்னது…

//குடிபுகும் அன்று எல்லாமே ஜோடனையாய், கண்ணுக்கழகாய் செய்து எல்லோரும் பார்த்து "ஆஹா ஓஹோ" சொல்லிவிட்டால் போதும் என்று மட்டும் தான் நினைக்கிறோம். //

நீங்கள் சொல்வது மிகச்சரி. இப்பவெல்லாம் வீடு பால்காய்ச்சுதல் என்ற நிகழ்ச்சி, கல்யாணத்திற்கு நிகரான செலவுடன் நடத்தப்படுகிறது.

/எவ்வளவு விலையானாலும் மாய்ந்து மாய்ந்து வாங்கி தொங்க விட்டுட்டு, நாமும் விழி பிதுங்கி நிற்கிறோமே.//

கல், மணல், ஜல்லி விலையுயர்வு நம் கையில் இல்லை. நம்மால் கட்டுப்படுத்தக்கூடிய செலவினங்களையாவது கட்டுப்படுத்த வேண்டும்.

அதுசரி, எல்லாத்துக்குமே தங்ஸ்கள்தான் காரணம் என்பதுபோலவே எழுதியுள்ளீர்க்ளே? ஏன்? வழக்கம்போல, பெண்களே செலவாளி என்று தவறாகக் கூறுகிறீர்களே!! :-(

10 வருடம் முன் கட்டிய எங்கள் வீட்டில், கட்டில், ஃப்ரிட்ஜ், சோஃபா வரை எல்லாமே என் மாமியாருடையதுதான். புதிது எதுவுமே வாங்கவில்லை. தற்போது வருடத்திற்கு 2-3 வாரங்கள் மட்டுமே தங்கும் வீட்டிற்கு ஏன் வீண் செலவு என்று தவிர்த்ததில் பெரும்பங்கு எனக்குத்தான். இதற்கு என்ன சொல்கிறீர்கள்?

ஹுஸைனம்மா சொன்னது…

follow-up

மோகன்ஜி சொன்னது…

ரொம்ப நியாயமான கருத்து காதர் ! ஒரு சிலர் வீட்டில்,இதை அதிகவிலைக கொடுத்து வாங்கி மாட்டிவிட்டு,வருடக் கணக்கில் அதை துடைத்து சுத்தம் செய்யாமல் ஒட்டடையும் அழுக்குமாய் வைத்திருப்பார்கள் ..
பலருக்கும் வாங்குவதில் உள்ள வேகம் பராமரிப்பில் இருக்காது. படம் ரொம்ப அழகாய் இருக்கு காதர்.

vanathy சொன்னது…

என்னைப் பொறுத்த வரை இதெல்லாம் வேஸ்ட். wall paper இப்படி ஏதாச்சும் ஒட்டினால் அழகாக இருக்கும் என்பதே என் கொள்கை. நல்லா இருக்கு உங்கள் பதிவு.

ஹூசைனம்மாவை நானும் வழி மொழிகிறேன். எங்க வீட்டில் நான் ஒரு செலவு செய்வதாக இருந்தால் ஆயிரம் தடவை யோசிப்பேன்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஹுஸைன ம்மா :

// அதுசரி, எல்லாத்துக்குமே தங்ஸ்கள் தான் காரணம் என்பதுபோலவே எழுதியுள்ளீர்க்ளே? ஏன்? வழக்கம்போல, பெண்களே செலவாளி என்று தவறாகக் கூறுகிறீர்களே!! :-( //

@!@ வானதி கூறியது :

// ஹூசைனம்மாவை நானும் வழி மொழிகிறேன்.//

தங்களை போன்ற படித்த புரிந்தவர் களுக்காக எழுதப்பட்டதல்ல இது. நீங்களும் இதை தவறுதலாக புரிந்திருக்கிறீர்கள். உங்களை போன்றவர்கள் எடுத்து செல்ல வேண்டிய விஷயத்தை தான் இங்கே நான் குறிப்பிட்டிருக்கிறேன். உங்களை போன்று வலை பூக்கள் எழுதும் பெண்கள் எல்லோருமே எல்லா விவரமும் தெரிந்தவர்கள் தான். பெண்கள் கை நீட்டி இந்த செலவு வேண்டாம் என்று சொன்னால் ஏன் இவ்வளவு செலவு இழப்புகள் ஏற்படுகின்றன?

குறைவாகவே சம்பளம் வாங்கும் பல பேர் இங்கே கஷ்டப்படுவது எதனால்? "இப்பவெல்லாம் வீடு பால்காய்ச்சுதல் என்ற நிகழ்ச்சி, கல்யாணத்திற்கு நிகரான செலவுடன் நடத்தப்படுகிறது." என்று நீங்களே குறிப்பிட்டிருந்தீர்கள். அவை யாருடைய வற்புறுத்தலால்
நடைபெறுகின்றது. நீங்களே சொல்லுங்கள். இங்கிருத்து கஷ்டப்பட்டு சம்பாதித்து கொண்டு செல்பவனா இவ்வளவு ஆடம்பர செலவு செய்ய சொல்கிறான்? இல்லை மற்றவர்கள் ஆடம்பரமா செய்வதை பார்த்து தானும் செய்யணும் என்று நினைக்கும் பாமர பெண்களா? இதை நாலு பேருக்கு புரிய வைத்து பண் படுத்தவேயன்றி, புண் படுத்தனும் என்ற நோக்கில் எழுதிய எண்ணமல்ல!!

எம் அப்துல் காதர் சொன்னது…

// ஹுசைனம்மா கூறியது..

10 வருடம் முன் கட்டிய எங்கள் வீட்டில், கட்டில், ஃப்ரிட்ஜ், சோஃபா வரை எல்லாமே என் மாமி யாருடையது தான். புதிது எதுவுமே வாங்கவில்லை. தற்போது வருடத்திற்கு 2-3 வாரங்கள் மட்டுமே தங்கும் வீட்டிற்கு ஏன் வீண் செலவு என்று தவிர்த்ததில் பெரும்பங்கு எனக்குத்தான். இதற்கு என்ன சொல்கிறீர்கள்? //

// வானதி கூறியது....

எங்க வீட்டில் நான் ஒரு செலவு செய்வதாக இருந்தால் ஆயிரம் தடவை யோசிப்பேன்.//

உங்களை போல் நிறைய பேர் யோசித்தாலே இவ்வளவு கஷ்டமும், வேதனையும், கடனும் வராதே. அது போல் யார் செய்கிறார்கள்?? சொல்லுங்கள். நானும் பலருடைய வேதனைக்கு ஆறுதலும், அவசரத்திற்கு கடனும் கொடுத்த் கொண்டு தானிருக்கிறேன். பிரச்சினை தீர்ந்த பாடில்லையே??

எம் அப்துல் காதர் சொன்னது…

ஓகே!! நீங்கள் இருவரும் இப்படி கருத்தெழுதி கேட்டவரை எனக்கு சந்தோசம் தான். அது சரி..!! நாமறிந்த விபரங்களை கொண்டு போய் சேர்ப்பவர்களான (எழுதும்) நமக்குள்ளேயே, புரிதல் இல்லாதிருந்தால் யார் தான் இதுமாதிரியான செய்திகளை முன்னெடுத்து செல்வது,, நீங்களே சொல்லுங்கள்!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ Chitra கூறியது...

// ஒரு முறை, special Lighting Stores போய்விட்டு, அவற்றை ரசிக்க மட்டும் செய்தேன். விலையை பார்த்ததும் ஓடி வந்து விட்டேன். ஹா,ஹா,ஹா,ஹா,ஹா....//

உண்மையிலேயே அவைகள் ஆடம்பர பிரியர்களுக்கும் உயர்ந்த பணக்காரர்களுக்கு மட்டுமே!!.

நன்றி சித்ரா மேடம் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ முஹம்மது ஆரிப் கூறியது...

// நீங்கள் சொல்வதும் வாஸ்தவம் தான். ஆனால் யார் இதை யோசிப்பது?? அழகான ஜோடனை ஒரு பக்கம், ஆசை ஒரு பக்கம் இருந்தால் மனம் ஊசலாடத் தானே செய்யும். கடனை பிறகு பார்த்துக்கலாம் தான். அவதி நமக்கு தான்.//

நிறைய பேர் புரிந்தும் புரியாத மாதிரி இருக்கிறார்கள் சார். வீட்டில் எல்லோரும் நலமா??

நன்றி முஹம்மது ஆரிப் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ மோகன்ஜி கூறியது...

// ஒரு சிலர் வீட்டில், இதை அதிக விலைக கொடுத்து வாங்கி மாட்டிவிட்டு, வருடக் கணக்கில் அதை துடைத்து சுத்தம் செய்யாமல் ஒட்டடையும் அழுக்குமாய் வைத்திருப்பார்கள். பலருக்கும் வாங்குவதில் உள்ள வேகம் பராமரிப்பில் இருக்காது. //

இந்த மாதிரி சங்கடத்தை நாம் விலை கொடுத்து வாங்கனுமா?? அது தான் இப்போதைய கேள்வி ஜி??

நன்றி மோகன்ஜி உங்கள் வருகைக்கும் கருத்து பகிர்தலுக்கும்.

ஹுஸைனம்மா சொன்னது…

//பெண்கள் கை நீட்டி இந்த செலவு வேண்டாம் என்று சொன்னால் ஏன் இவ்வளவு செலவு இழப்புகள் ஏற்படுகின்றன? குறைவாகவே சம்பளம் வாங்கும் பல பேர் இங்கே கஷ்டப்படுவது எதனால்? ... இங்கிருத்து கஷ்டப்பட்டு சம்பாதித்து கொண்டு செல்பவனா இவ்வளவு ஆடம்பர செலவு செய்ய சொல்கிறான்? இல்லை மற்றவர்கள் ஆடம்பரமா செய்வதை பார்த்து தானும் செய்யணும் என்று நினைக்கும் பாமர பெண்களா? //


ஒட்டுமொத்தமாகப் பெண்கள்தான் காரனம் என்று மறுபடியும் சொல்ல வருவதைப் போலவே இருக்கு. ஒரு இடத்துல படிச்சேன், “குழந்தைகளுக்கான விதவிதமான, கலர்கலரான் விளையாட்டுப் பொருட்களைப் பெற்றோர் வாங்குவதற்குக் காரணம், குழந்தைகள் அவற்றை விரும்புகின்றன என்பது மட்டுமல்ல; பெற்றோர்களின் அடிமனதிலும் அதன்மீது ஆசை இருபப்தால்தான்!!”

அது இந்த மாதிரி விஷயங்களிலும் உண்மைதான். மனைவி விரும்புகிற எல்லா விஷய்த்தையுமே கணவன் செய்துவிடுகிறானா என்ன? தனக்கு உடன்பாடில்லாத மற்ற விஷயங்களில் செய்ய மறுக்க, தான் “ஆண்” என்ற அதிகாரத்தைப் பயன்படுத்தும் கணவர்கள், இம்மாதிரி விஷயங்களில் செய்யலாமே?

நிஜத்தில் சொல்லுங்கள், வெளிநாடுகளில் குறைவாகச் சம்பாதித்தாலும், ஊருக்குச் சென்று தான் என்னவோ பெரிய டேமேஜர் போல ஃபிலிம்காட்டுவது யார் தப்பு? மனைவியிடம்கூட இம்மாதிரி பார்ட்டிகள் பெரும்பாலோனோர் தம் உண்மையான வருமானத்தைச் சொல்லுவதில்லை.

பாமரப் பெண்ணாகவே இருந்தாலும், உங்களின் வேலை நிலவரங்கள், வருமானம், செலவுகள், எதிர்காலத் திட்டங்கள், தேவைகள் எல்லாவற்றையும் குறித்து அவளோடு கலந்து செய்தால், உங்களுக்குமுன் அவளே இவ்வநாவசியச் செலவுகளைத் தடுத்து நிறுத்துவாள்!! அதற்கும் மீறிப் போனால், தாராளமாக ஆண் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தலாம், தவறேயில்லை!!

ஜெயந்தி சொன்னது…

தேவையில்லாத செலவுகளை தவிர்க்கறதே நல்லது. விளம்பரங்கள பாத்து ஆடம்பரத்துல விழக்கூடாது. நீங்கள் சொல்வது சரி.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஹுஸைனம்மா கூறியது

// நிஜத்தில் சொல்லுங்கள், வெளிநாடுகளில் குறைவாகச் சம்பாதித்தாலும், ஊருக்குச் சென்று தான் என்னவோ பெரிய டேமேஜர் போல ஃபிலிம்காட்டுவது யார் தப்பு? பாமரப் பெண்ணாகவே இருந்தாலும், உங்களின் வேலை நிலவரங்கள், வருமானம், செலவுகள், எதிர்காலத் திட்டங்கள், தேவைகள் எல்லா வற்றையும் குறித்து அவளோடு கலந்து செய்தால், உங்களுக்குமுன் அவளே இவ்வநாவசியச் செலவு களைத் தடுத்து நிறுத்து வாள்!! //

நீங்கள் சொல்வதும் உண்மைதான் ஹுசைனம்மா. சில பேர்...!! சிலபேர் மட்டும் தான் அது மாதிரி
நடந்து கொள்கிறார்கள். அவர்களுக்கு நீங்கள் சொன்ன ஃபிலிம்காட்டுவது இயல்பிலேயே இருக்கும் போல! விடுங்க, எல்லா தரப்பு மக்களையும் உஷார் படுத்துவது நம் கடமை தான். சொல்வதை சொல்லி விடுவோம். சரியா??

// அதற்கும் மீறிப் போனால், தாராளமாக ஆண் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தலாம், தவறே யில்லை!!//

அதிகாரம் எதுக்கு? அன்பு ஒன்றே போதாதா? அதற்கு வீழாதவர்கள் யார்??
((என் எழுத்தை பாராட்டியும், அதே சமயம் எழுத்தில் 'பிசிறடிக்கும்' போது அதை 'மோல்டும்' செய்கிறீர்கள் என்பது எனக்கு நன்கு விளங்குகிறது. அதற்கு ஒரு ஸ்பெஷல் நன்றி ஹுசைனம்மா வுக்கு!!))

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஜெயந்தி கூறியது...

// தேவையில்லாத செலவுகளை தவிர்க்கறதே நல்லது. விளம்பரங்கள பாத்து ஆடம்பரத்துல விழக்கூடாது. நீங்கள் சொல்வது சரி. //

மிகச் சரியாய் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் சகோதரி!

நன்றி ஜெயந்தி உங்கள் வருகைக்கும், கருத்து பதிவுக்கும்.